ஓர் ஊரில் ஒரு வண்டு இருந்தது. அரண்மனைத் தோட்டத்தில் சும்மா பறந்துகொண்டிருந்த அதற்கு ஒரு நாள் ஒரு ஆசை ஏற்பட்டது. நம்மை யாருமே கவனிக்கமாட்டேன் என்கிறார்களே, இப்படி அனாமதேயமாக வாழ்க்கை வாழ்கிறோமே என்று எண்ணி, ஏதாவது செய்ய திட்டமிட்டது.
ஒருநாள் ராஜகுமாரன் தூங்கிக்கொண்டிருந்தபோது அவனைக் கொட்டியது. அவன் அலறினான். ராஜாவும் ராணியும் ஓடி வந்தார்கள். அவர்களையும் ஒரு கொட்டு கொட்டிவிட்டு பறந்தது. 'ஐயோ' என்று அலறினார் ராஜா. உடனே சேவகர்கள் ஓடிவந்தார்கள். அவர்களையும் கொட்டியது. அவர்களுடைய அலறல்களைக் கேட்டு மந்திரிகள் ஓடிவந்தார்கள். அவர்களையும் கொட்டியது.
தளபதிகள் வந்தார்கள். அவர்களுக்கும் அதேகதிதான். ராஜா, வலி தாங்காமல் குதிக்க, குதிக்க.. அவரை தோளில், மார்பில், மூக்கில், காதில், காலில், கையில் என்று கொட்டிக்கொண்டேயிருந்தது. ராணியும் ராஜாவும் அலற... வண்டைப் பிடிக்க முயன்ற ஒவ்வொருவரும் அதனிடம் கொட்டுப்பட்டார்கள்.
அரண்மனை மொத்தமும் அல்லோலகல்லோலப்பட்டது. ஊரெங்கும் செய்தி பரவ கூட்டம் கூட்டமாக மக்கள் அரண்மனைக்கு ஓடிவந்தார்கள். ஊரே ஸ்தம்பித்தது. நிர்வாக வேலைகள் நின்றன. குழப்பம் கூத்தாடியது.
கடைசியில் ஒருவழியாய் அந்த வண்டைப் பிடித்து, அடித்துக் கொன்றார்கள். சாகுமுன் அது தனக்குத்தானே சொல்லி க்கொண்டது. பிறவி என்றால் இப்படி ஏதேனும் செய்துவிட்டு சாகவேண்டும். எல்லோரும் என்னைப் பற்றி பேசும்படி பண்ணிவிட்டேன் உயிர் போனால் போகட்டும்.
No comments:
Post a Comment