Wednesday, 25 September 2024

கொகுல் பிரசாத்


‘1983’ என்றொரு மலையாளப் படம். ரமேஷனாக நிவின் பாலி நடித்தது. ரமேஷனுக்குப் பயங்கர கிரிக்கெட் பைத்தியம். உள்ளூர் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக ஆடிக்கொண்டிருக்கிறான். அதே பள்ளியில் படிக்கும் மஞ்சுளா மீது காதல் இருக்கிறது. அதீத கிரிக்கெட் மோகத்தால் படிப்பில் கோட்டைவிடுகிறான். அதனால் காதலியும் வெளிநாட்டு மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு இவனைக் கைவிடுகிறாள். 

சரியான வேலை, வருமானமில்லாமல் சச்சின் என்றால் யாரென்றே தெரியாத ஒரு தற்குறியை வேறுவழியின்றி மணம் செய்துகொள்கிறான். வாழ்க்கை அவனைப் பந்தாடத் தொடங்குகிறது. தந்தையின் எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்துகொண்டே வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் கிரிக்கெட ஆடுவதற்கு அவன் தவறுவதில்லை. மனம் முழுக்க விளையாட்டு ஆக்கிரமித்திருக்க, பிழைப்புக்காக விருப்பமில்லாத வேலையைச் செய்யவேண்டிய திரிசங்கு நிலை. 

1983ஆம் ஆண்டு கபில்தேவ் அணி உலகக்கோப்பையை வென்றபோது இந்தியாவெங்கும் கிரிக்கெட் மைதானங்கள் உருவாகின. பொடியன்களுக்கும் இளைஞர்களுக்கும் அந்த வெற்றி தந்த உற்சாகமும் விதைத்த கனவுகளும் அளப்பரியது. பதினொரு பேர் ஆடும் குழுவில் சேர்வதற்கு லட்சக்கணக்கான மனங்கள் அடித்துக்கொண்டன. அதில் ஒருவன்தான் ரமேஷன். ஒருகட்டத்தில், தனது லட்சியம் நிறைவேறாது என்பதை அவன் உள்ளூர அறிந்தே இருப்பான். ஆனாலும், விளையாட்டின் மாயக்கரம் அவனை இழுத்துப் பிடித்திருக்கும். வீட்டின் வசவுகள், பொருளாதாரச் சிக்கல்கள், ஊரின் கேலிகள் என எதுவும் அவனைத் ‘திருத்தாது’. 

அவன் எதற்காக விளையாடுகிறான்? விளையாட்டுக்காக மட்டும்தான். பணம், புகழ் போன்ற கற்பனைகள் வடிந்த பின்னும் வாழ்க்கை புரட்டிப்போட்ட பிறகும் ஆட்டத்தின் பிடி இளகாது அவனைப் பற்றியிருக்கும். தனது அடையாளம், ஆளுமை ஆகியவற்றை ஆட்டத்தைச் சுற்றியே அவன் கட்டமைத்திருப்பான். எல்லாவற்றுக்கும் மேலாக, எதோவொரு பொற்கணத்தில் ஆட்டமும் அவனும் ஒன்றாகும் தருணத்துக்காக அவன் விளையாடுகிறான். அவமானங்கள், தோல்விகள், ஏக்கங்கள் யாவும் அந்தப் பொற்கணத்தில் இல்லாமலாகின்றன. அவனும் ஆட்டமும் மட்டும் அந்தரங்க வெளியில் தனித்திருக்கும் சிலிர்ப்புக்காக அவன் ஆடுகிறான். 

அவனுக்கு வயதாகிறது. நாற்பதுகளின் மத்தியில் இருக்கிறான். ஆனாலும் அவனது ஆட்டத் திறமையினால் தங்களது அணியில் இளவல்கள் அவனைச் சேர்த்துக்கொள்கிறார்கள். வேறு எதோ ஊருக்காக ஆடச்செல்கிறான். ஒலிபெருக்கியில் அவனது பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்டு கூட்டத்தில் இன்னொரு ஆள் எட்டிப்பார்க்கிறான். எப்போதோ பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருவரும் எதிரெதிர் அணியில் விளையாடியவர்கள். அந்த ஆட்டத்தில் அரைச் சதத்தைக் கடந்து சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக ரமேஷன் வெளுத்து வாங்குவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறான். ‘இன்னமும் பழைய தீ குறையல இல்ல?’ என்று அசந்துபோகிறான். 

ஆட்டத்தின் முடிவில் ரமேஷன் ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருக்கிறான். ஆட்டத்துக்குத் தலைமையேற்று விருது வழங்க வந்தவர், ‘இந்த மேட்ச்லகூட ஒரு நடுத்தர வயது ஆள் நல்லா ஆடினார். இப்படி எத்தனையோ திறமைசாலிகள் உரிய அங்கீகாரம் இல்லாம, வாய்ப்புகள் கிடைக்காம காணாம போயிட்டாங்க’ என்று விசனப்படுகிறார். கூச்சத்துடனும் மெல்லிய புன்சிரிப்புடனும் ரமேஷன் புளகாங்கிதம் அடைகிறான். இந்தக் காட்சியை நினைக்கும்போதெல்லாம் புல்லரிப்புடன் அச்சமும் சேர்ந்தே பரவுகிறது.

எத்தனை எத்தனை பேர் கிரிக்கெட்டுக்காகத் தங்களது வாழ்க்கையைத் தொலைத்திருப்பார்கள்? எது அந்த குன்றாத ஈடுபாட்டைத் தக்க வைக்கிறது? ஒருகாலத்தில் தீவிர வேட்கையாக, வாழ்க்கை நோக்கமாக, ஊனும் உயிரும் கனவுமாக இருந்த விளையாட்டு மெல்ல மெல்ல இளைப்பாறலாகவும் ஆசுவாசமாகவும் மாறத் தொடங்குகிறது. மைதானத்தையே தாங்கள் வென்றெடுக்கும் வாழ்க்கைக் களமாகக் கருத ஆரம்பிக்கிறார்கள். ஒரு சிக்ஸ் அடிக்கும்போது வானத்தை எட்டிப் பிடித்துவிட்ட தாளாத உற்சாகம். லௌகீக வாழ்வில் கிட்டாத வெற்றிக் களிப்பு.

விளையாட்டும் கலையும் அப்படித்தான். ஒருமுறை அந்தப் போதை ஏறிவிட்டால் சாகும்வரை கைவிடாது.

No comments:

Post a Comment