Tuesday, 17 March 2026

ஜா


கடந்த 75 ஆண்டுகளில் மனித சிந்தனை‌ முறையை மாற்றிய 5 முக்கியமான உளவியல் கருத்துகள்:

1. அடையாளம் என்பது நடத்தையால் உருவாக்கப்படுகிறது (Identity is built by behavior) பி.எஃப். ஸ்கின்னர் (1950):
நீங்கள் எப்படிப்பட்ட நபராக மாற விரும்புகிறீர்களோ, அப்படி ஆவதற்காகக் காத்திருக்க வேண்டாம். நீங்கள் அப்படிப்பட்டவராகவே நடந்துகொள்ளத் தொடங்குங்கள். அது உங்கள் இயல்பாக மாறும் வரை அதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு செயலும் உங்களின் எதிர்காலத்தை நோக்கி நீங்கள் வைக்கும் ஒரு அடியாகும்.

2. மக்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கவில்லை (People aren’t thinking about you) சவிட்ஸ்கி (1999):
இதனை ஸ்பாட்லைட் விளைவு என்பார்கள். மக்கள் உங்கள் தவறுகளையோ அல்லது தோற்றத்தையோ அதிகமாகக் கவனிக்கிறார்கள் என்று நீங்கள் தவறாக மதிப்பிடுகிறீர்கள். ஆனால் உண்மையில் உங்களைப் போலவே அவர்களும் தங்களைப் பற்றியே கவனம் செலுத்துகிறார்கள். இதை உணர்ந்து கொண்டால் மனச் சுதந்திரம் கிடைக்கும்.

3. வளர்ச்சி என்பது போராட்டத்திலிருந்தே வருகிறது (Growth comes from struggle) கரோல் ட்வெக் (2006):
திறமை வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. உங்களின் நம்பிக்கை தான் தீர்மானிக்கிறது. உங்களால் வளர முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நிச்சயமாக வளர்வீர்கள். உங்களின் தொடர் முயற்சியானது திறமையை மேம்படுத்துகிறது. அதுவே 'வளர்ச்சி மனப்பான்மையின்' சக்தியாகும்.

4. தொடர்ச்சியான அனுபவங்களே சிந்தனையை வடிவமைக்கின்றன (Exposure shapes cognition) பாண்டுரா, (1977):
நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தரநிலை (standard) ஆகியவை நாம் எவற்றை தொடர்ச்சியாக, திரும்பத்திரும்ப பார்க்கிறோமோ அவற்றால் ஏற்படுகின்றன. நீங்கள் தினமும் எதைப் பார்க்கிறீர்களோ, அது காலப்போக்கில் சாதாரணமானது என்று நம்பத் தொடங்கிவிடுகிறீர்கள்.‌ இன்றைய டிஜிட்டல் சூழல், ஏஐ போன்றவை ஆரம்பத்தில் வியப்பளித்தாலும் கொஞ்ச நாட்களில் அது சாதாரணமாக தெரிகிறது. இந்த மனநிலை நம்‌ மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். 

5. நாம் உச்சக்கட்ட தருணத்தையும் இறுதியையுமே நினைவில் கொள்கிறோம் (We remember the peak and the end) டேனியல் கான்மேன் (1993):
நாம் நமது அனுபவங்களைச் சரியாக, முழுமையாக மதிப்பிடுவது கிடையாது. ஒரு நிகழ்வின் மிக முக்கியமான தருணத்தையும், அது எப்படி முடிந்தது என்பதையும் தான் நாம் நினைவில் வைத்திருக்கிறோம். எனவே நாம் என்ன எழுதினாலும், விவாதித்தாலும், கலைப்படைப்பை அல்லது விளக்கக்காட்சி உருவாக்கினாலும் அதனை‌ சிறப்பான முறையில் முடியுங்கள்; மேலும் மக்களுக்கு மறக்க முடியாத ஒரு உச்சக்கட்ட தருணத்தைக் கொடுங்கள்.

Saturday, 14 March 2026

ஆறு சொல்லவே இல்லைநீரின் எந்த ரகசியத்தையும்.நீர் சொல்லவே இல்லைஆற்றின் மீது எந்தப் புகாரையும்.'உப்புச் சப்பற்ற வாழ்க்கை'அலுத்துக் கொள்கிறது படித்துறை.~ வண்ணதாசன் ~

வழக்கமான வழியில் அமைதியாக ஓடும் நதியென்று எதுவுமே இவ்வுலகில் இல்லை-கரன் கார்க்கி

book-16


#Reading_Marathon2026
#26RM009

Book No:16/150+
Pages:-152

நெருப்பில் வளர்பவை
-பா.திருச்செந்தாழை

படைப்பு மனநிலை உச்சத்தில் இருக்கும் போது.. கதை ஓட்டத்திற்கு வந்து விழுகின்ற வார்த்தைகள் யாவுமெந் கருத்துசெறிவுடனும், அழகியலுடனும் சொற்கள் துடுப்பு போல கதைகளை முன்னோக்கி நகர்த்தும்.அப்படித்தான் திருச்செந்தாழையின் கதைகளில் ஒவ்வொரு சொற்களும் மின்னும்.
யதார்த்த உண்மைகளை,வாழ்வியல் சிக்கல்களுடன் தரும் போது நல்லதொரு வாசிப்பு அனுபவமாகிறது.

பொதுவாக காக்கை ஒளிவீசும் பொருட்களை விரும்பி எடுத்துச் செல்லும் அல்லது மதிப்பில்லாத பொருளை மதிப்புள்ள பொருளை எண்ணும்.காக்கைப் பொன் கதையில் வரும் மையக் கதாபாத்திரமான மஞ்சுவும் இதுபோலத்தான்..சற்குணத்தின் அன்பை அறிய முற்படுகிறாள் என்பதை பல நுட்ப வரிக்ளால் நெய்திருப்பார். /வீடு முழுக்க மதிய நேரத்தின் இருள் இறங்கியிருந்தது/

/அறிவுரைகள் பதற்றத்தின் நீர்ச்சுழிப்பில் கலந்து மறைந்தன/

உரசிக்கிழித்த தீக்குச்சியின் பெரும்பிழம்பொன்று மெல்ல மெல்ல ஒரு துளியாகி வடிகின்ற வெளிச்சமும் கதவிடுக்கில் விழுந்தது எனும் சிறுகதைக்கான சரியானபாதை இறக்கத்தில் இறங்கும் விமானம் போல் மஞ்சுவை போல் நாமும் ஆயாச மடைகிறோம்.

வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் வீழ்ச்சியை கதையில் சொல்லி முடியாது. அப்படித்தான் சகுந்தலா-தினகரனின் குடும்ப வீழ்ச்சியால் பத்து வயதான சிவபாலனின் உழைப்பை காலம் வட்டியாக கேட்டிருக்கிறது."கரனை கரனையான அவனது புஷ்டிக் கட்டுகள் மீது சணல் சாக்குகளின் பிசிறுகள் இன்னமும் அப்பிக்கிடப்பதை பார்த்தால்.. வாசிக்கும் நமக்கும் தாய் போல்ச் இதயம் கனப்பதை கட்டுப்படுத்த முடியாது.தன் எழுத்துக்களின் வழியே அகத்தை தொட்டிருப்பார்.

கட்டி வச்சதோட வேலை முடிஞ்சிருச்சு..என்னையும் அக்காவையும் வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு அம்மாவுக்கு. எப்போதும் நெருப்புடனேயே வாழப் பழகியவள்.ஓடிப்போன கணவனை நினைக்காது..வைராக்கியத்துடன் குடும்பத்தை நடத்துகிறாள். பெரியவனாகி திருமணம் முடித்து சுரண்டல் லாட்டரியால் ஜெயிலுக்கு போய் திரும்பும் மகனின்  பார்வையில் கதை நகர்கிறது. வெளிச்சத்திற்கு தான் ஆயிரம் உபகரணங்கள் தேவை இருளுக்கு? எனும் வரியில் தங்கள் வாழ்வு குறித்த சுய புராணம் சொல்கிறார்.

குளிர்ச்சியான கற்களும் வெளிச்சத்தை அனுமதிக்காத இருளும் நிரம்பியிருந்த வீட்டினுள் தன்னுடைய நண்பன் சுதாகரன் சட்டகத்திற்குள் சிரித்துக் கொண்டிருந்தான். துக்கம் விசாரிக்கப் போன சுதன் வெளிச்சம் நீங்க்கிவிட்ட வீட்டையும் அம்மாவையும் பார்த்தான். நிராதரவான சூழலில் ஏதெனும் ஆறுதல் மொழி கூறுபவர்கள் தெய்வத்தின் தூதுவர்கள். நிராதரவாய் விட்டுச் செல்லாமல் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். எங்கேயும் செல்லமுடியாத தடுப்பு வேலியாக இருக்கும் இருளை விரட்டும் வெளிச்சம் போல் வந்தவனைப் பற்றி தாயின் அகம் பற்றிய கதை இது.

ஒரு அரசு ஊழியரின் மனநிலையும் அவரை நாடி வரும் அப்பாவி மக்களின் நாடியையும் பிடித்துப் பார்ப்பது போல மனநிலையை ஒரு பருக்கை பதமாக உணர்த்துகிறது.

/அத்தனை பேர்களது அசமந்தத்தின் நடுவே பற்றி எரிகின்ற காகிதம் போல ஒரு மனிதன் அலைவதை நான் எனக்குள் மிக நெருக்கமான ஞாபகப்படுத்தலாக உணர்ந்தேன். என்னை அறியாமல் அவரை நோக்கி, "இப்படி உட்காருங்க" என்றேன்.

அவரது பதற்றத்தைத் தணிக்கும் விதமான எவ்வித உத்தரவையும் வழங்குவதற்கான அதிகாரம் எனக்குக் கிடையாது. ஆனால் குறைந்தபட்சமாக அந்த அவதியோடு கைகோர்க்கத் துடித்தெழுந்த
ஒன்று உள்ளுக்குள் இருந்தது. அவர் என்னை அதே வினோதமான கண்களோடு பார்த்தார். அவரால் அவரது சுத்தல்களால் ஒருபோதும் உள்நுழைய முடியாத பிரம்மாண்ட கட்டிடத்தின் ஒரு சிறிய ஜன்னல் திறப்பைப் போல எனது குரலை அவர் உணர்ந்திருக்க வேண்டும்./

ஒரு நல்ல காட்சிக்கு பொருத்தமான வசனம் என்பது மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் அந்த காட்சியின் தன்மையை அந்த வசனங்கள் தான் பிரதிபலிக்கும். ஒரு சில வார்த்தைகள் அந்த கதைகளின் ஒட்டுமொத்த கருவையும் ஒரு சொற்களில் சொல்ல வைக்க முடியும். ஆனால் அந்த சொற்களை தேடுதலில் தான் அந்த எழுத்தாளனின் முயற்சி உள்ளது. அந்த வகையில் 

/நீரில் விழுந்து விட்ட எண்ணெய் துளியை போல கலக்கவும் முடியாமல் விலகவும் இயலாமல் நின்று கொண்டிருந்த அவனது அவஸ்தையும், பதை பதைப்புமான முகத்தை பார்த்தபடி/ என்று ஒரு வரி ஒரு பிடி வெளிச்சம் கதையில் வருகிறது. இதை சாதாரணமாக படித்தால் கூட ஒரு இலக்கிய தரமாக இருக்கிறது. கதையோடு ஒன்றி வரும் போது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை இன்னும் மெருகூட்டுகிறது.

காலி செய்யப்பட்ட வீட்டினுள் அல்லது புதிதாக கட்டிய வீட்டினுள் நுழைந்து உள்ளீர்களா? எந்த பொருளும் இல்லாமல் இருக்கும் பேரமைதி வீட்டில் இருக்கும். அந்த அமைதியை நான் பலமுறை ரசித்துள்ளேன் நான் ரசித்ததை அப்படியே கேமராவில் பதிவு செய்வது போல சொற்களில் கொம்பு கதையில் வடித்துள்ளார்...

/கிழவன் வீட்டைத் திறந்தான். பொருட்களை எல்லாம் எடுத்துவிட்ட பிறகு வெற்று அறைகளில் நிறையும் ஆயாசத்திற்கும் மௌனத்திற்கும் வேறொரு வாழ்க்கை இருப்பது போலக் கிழவனுக்குப் படும். சாதாரண மனிதர்களால் வாழ முடியாத ஒரு வாழ்க்கை. இந்த வெறுமைக்குள்ளும் அமைதிக்குள்ளும் மிக மிக மெதுவாக நகர்கின்ற காலத்திற்குள்ளும் பேசிக்கொள்ளத் தேவையற்று சிலைகளைப் போல வாழ்கின்ற ஒரு வாழ்க்கை. பொருட்கள்தான் எவ்வளவு அசிங்கத்தைச் சேர்த்து விடுகின்றன இந்த வாழ்வின் மீது. கிழவன் ஒரு குழந்தையைப் போல் அந்த வீட்டின் தூசி படிந்த அமைதி மீது மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தான். எப்போதாவது இப்படி இடிபடப்போகின்ற வீட்டில் தனியே இருக்கக் கிடைக்கும் வாய்ப்பு வந்தால் கிழவன் தவறவிட மாட்டான். அப்படியான வீட்டில் இருந்தபடி குடிக்கின்ற பீடித்துண்டுகளுக்குள் உச்சமான போதை நிரம்பி விடும்/
நல்ல ஒரு அழகியல் நிகழ்வை இந்த கதைகளில் சொல்லியிருப்பார்.

திருவிழாவின் இரைச்சல் சத்தங்கள் இப்போதும் தொலைவாக எங்கோ காற்றில் துணி வீழ்வதைப் போல கசிந்து கொண்டிருந்தன. எனும் நிறைசூலி கதையின் துவக்க வரி நல்ல ஒரு கவித்துவ உணர்வைத் தருகிறது.

ஒரு தருணத்தை, சுவாரஸ்யமான கவித்துவ சொற்களில் காட்சிப்படுத்துவதென்பது மிகவும் சவாலானது.கதை முடிவுகளைக் காட்டிலும் கதையின் போக்கில் கவனித்து செல்வது மலை ரயிலில் போன்ற மெல்லிய உணர்வை தருகிறது.ஒரு படைப்பு படைப்பாளன் என்ன நோக்கத்தில் எழுதுகிறானோ அந்நோக்கத்தை வாசிப்பாளனையும் அடைய வைக்கிறார். "நாற்பதாண்டு கால பணிக்காலத்தில் கடிகாரத்தோடு போட்டியிட்டு கொண்டு வேலை செய்யும் முத்தையாவுக்கு தனக்கு வயதாவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.முடிக்கி டை அடிப்பது போல காலத்தை நகர விடாமல் பின்னோக்கி இழுக்கப் பார்க்கிறார். தனக்கு வயதாவதை விட நிறுவனத்திற்காக உழைக்க மேலும் மெனக்கெடுக்கிறார். இந்த உளவியல் போராட்டம் தான் நெகிழும் சித்திரம் கதை.நான்கு பக்கங்களே உள்ள கதையில் அந்த நபரை பற்றி முழுமையாக உணர வைத்திருப்பார்.

நெருப்பில் வளர்பவை என்றால் துன்பங்களிலும் போராட்டங்களிலும் உருவாகும் மனித உறுதியையும் வாழ்க்கை உண்மையையும் குறிக்கிறது.இக்கதைகள் ஒவ்வொன்றும் சொற்களால் நெய்யப்பட்ட அழகிய ஆடையாகும். அதனை வாசித்து முடிக்கும் போது புத்தாடை அணிந்த இன்பத்தை மனம் சுரக்கிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 11 March 2026

ஜா-34


வாழ்க்கைக்கு ஹைக்கூ 34:

"உள்ளபடியே அவையவை,
அப்படியே இருப்பது நல்லது.
உதிர்ந்த இலைகளைப் 
பெருக்கிக் கொண்டே..."

- சந்தோகா டனேடா

ஜப்பானியத் துறவியும் கவிஞருமான சந்தோகா டனேடா (Santoka Taneda) என்பவரால் எழுதப்பட்ட இந்த ஹைக்கூ மிகவும் எளிமையான, ஆழமான வாழ்வியல் தத்துவத்தைக் கொண்டது.

இந்தக் கவிதை ஒரு சாதாரணச் செயலான "இலைகளைப் பெருக்குதல்" என்பதன் மூலம் ஒரு பெரிய உண்மையை விளக்குகிறது.

மரம் இலைகளை உதிர்ப்பது இயற்கையானது. அதை மாற்ற முடியாது. இலைகள் விழுந்து கொண்டே இருக்கும், நாம் பெருக்கிக் கொண்டே இருப்போம். "விஷயங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே இருக்கட்டும்" என்று ஏற்றுக்கொள்ளுதலே நிறைவான வாழ்வின் அடிப்படை.

இலைகள் மீண்டும் விழும் என்று தெரிந்துமே ஒரு நபர் அதைச் சலிக்காமல் பெருக்குகிறார். பலனைப் பற்றி கவலைப்படாமல் தற்போதைய தருணத்தில் முழுமையாக ஈடுபடுவதையே இது குறிக்கிறது.

இந்தக் கவிதை "அங்கீகாரம்" (Acceptance) மற்றும் "தற்போதைய தருணத்தில் வாழ்தல்" (Mindfulness) பற்றிய அடிப்படைப் பாடத்தை நமக்குக் கற்பிக்கிறது.

1. தேவையற்ற போராட்டத்தைத் தவிர்த்தல்:
வாழ்க்கையில் பல விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அவற்றை மாற்ற முயன்று நம் நிம்மதியை இழக்கிறோம். நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வது மன பாரத்தைக் குறைக்கும்.

உதாரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளும்போது பதற்றப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. "இப்போது இதுதான் நிலை" என்று ஏற்றுக்கொண்டு, அந்த நேரத்தில் ஒரு நல்ல பாடலைக் கேட்பது, மனதுக்குள் ஒரு இனிய நினைவை கொண்டுவருவது அல்லது அமைதியாக இருப்பதுதான் நிறைவான வழி.

2. முடிவை விடச் செயலில் கவனம்:
இலைகளைப் பெருக்கி முடித்ததும் மீண்டும் இலை விழும். அது ஒரு முடிவில்லாத வேலை. ஆனால் அந்த வேலையைச் செய்யும் போது கிடைக்கும் அமைதிதான் முக்கியம்.

ஒரு மாணவர் தேர்வின் முடிவைப் பற்றி எப்போதும் கவலைப்படாமல், இன்று தான் படிக்க வேண்டிய பாடத்தில் மட்டும் முழு கவனத்தைச் செலுத்துவது. செயல் சரியாக இருந்தால், முடிவு தானாக அமையும்.

3. எளிய வாழ்க்கையின் அழகு:
வாழ்க்கை எப்போதும் சிக்கலானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகச் சாதாரணமான வேலைகளைச் செய்வதிலும் ஒரு திருப்தி இருக்கிறது என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது.

உதாரணமாக வீட்டில் பாத்திரம் கழுவுவது அல்லது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது போன்ற எளிய வேலைகளை எதோஎ ஒரு கடமைக்கு செய்யாமல், ஒரு தியானம் போல ஈடுபாட்டுடன் செய்வது மனதிற்குப் பெரிய அமைதியைத் தரும்.

Tuesday, 10 March 2026

tea-24


#மனசுக்கு_ஒரு_தேநீர்_24

Failure to Finish Syndrome

மனித வாழ்க்கையில் பலர் புதிய செயல்களை ஆர்வத்துடன் தொடங்குகின்றனர். ஆனால் அந்த செயல்களை இறுதி வரை கொண்டு செல்ல முடியாமல் பாதியில் நிறுத்திவிடுகின்றனர். இந்த மனநிலையே Failure to Finish Syndrome.

 தொடங்கும் உற்சாகம் இருப்பினும், அதை நிறைவு செய்யும் பொறுமை மற்றும் உறுதி இல்லாத நிலைதான் இதன் அடிப்படை.
வாழ்க்கையில் ஒரு செயலை தொடங்குவது எளிதானது. ஆனால் அதை முடிக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்வது சாதனை. புத்தாண்டில் பலரும் செய்த தீர்மானங்களுக்கு ஏறக்குறைய கல்லறை கட்டியிருப்போம் அல்லது கட்டும் தருவாயில் இருப்போம்

 பலருக்கு புதிய விஷயங்கள் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் அந்த ஆர்வம் குறுகிய காலமே நீடிக்கும்.தொடர்ச்சியின்மை காரணமாக கைவிடுகிறோம். புதிய யோசனை வந்தவுடன் பழைய முயற்சியை கைவிடுகிறோம்.ஒரு வார இதழை வாங்கிவிட்டு படிக்கவில்லையெனில் அந்த வார இதழை வாங்காமல் இருப்பபரின் உணர்வுதான் நமக்கும் வரும்.
வாங்கிவிட்டு கூட படிக்கைவில்லையே எனும் ஆதங்கமும வரும்

ஒவ்வொரு புத்தாண்டிலும் பலரும் புத்தகம் படிக்கத் தொடங்குவதைப் பார்க்கலாம்.ஆரம்பத்தில் சில பக்கங்களை ஆர்வத்துடன் படிக்கிறோம். பிறகு மற்றொரு புத்தகத்தைப் பார்த்ததும் அதில் ஆர்வம் கொள்கிறோம். இதனால் பல புத்தகங்கள் தொடங்கப்பட்டிருக்கும்; ஆனால் ஒன்றும் முழுமையாக முடிக்கப்பட்டிருக்காது. உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும்
 சோம்பல் அல்லது வேறு காரணங்களால் நிறுத்திவிடுவதைப் பார்க்கிறோம்.

ஒருநாள் நிறுத்தினாலும் மீண்டும் துவங்க முயற்சிக்க வேண்டும். அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
கடினமானதை செய்ய முயற்சிப்பது, முக்கியத்துவத்தை புறக்கணிக்காமல் இருப்பது, இன்றைய வேலையை ஒத்திப்போடாமல் குறைந்தபட்சமாவது மேற்கொள்ள உறுதி செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் பெரிய சாதனைகள் அனைத்தும் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக உருவாகின்றன. 
“Genius is one percent inspiration and ninety-nine percent perspiration.”
என்று தாமஸ் எடிசன் கூறுகிறார்.

“Well begun is half done.”
ஆனால் உண்மை என்னவென்றால்:
“Well finished is fully done.”
ஆரம்பிப்பதை விட
முடிப்பதே உண்மையான சாதனை.

என்ன செய்யவேண்டும் என்பதில் செலுத்தும் கவனத்தை, என்ன செய்யக்கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்தினால் தீர்மானங்கள் வெற்றி பெறும் என்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

லதா


பிறருக்கு கொடுப்பது தான் பெருமை கொண்ட செயல் என்றும், பிறரிடமிருந்து பெறுவது தாழ்ந்த செயல் என்றும் நாமெல்லாம் போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறோம். 

அதனால் தான் நாம் எதையும் மற்றவர் கொடுக்கும் வேளை அதை graceful ஆக பெற்றுக்கொள்ளகூட கற்கவில்லை. பெறுவது என்பதே ஏதோ சங்கடமான செயலாக நினைக்கிறோம்..

உண்மையில் அப்படியல்ல. கொடுப்பது நற்செயல் தான். ஆனால் பிறர் கொடுப்பதை பெற்றுக்கொள்வது ஒன்றும் இழி செயல் இல்லை. 

ஒரு பாராட்டைக்கூட நம்மால் சங்கடமில்லாமல் ஏற்க முடிவதில்லை. ஒன்று நெளிந்து வளைந்து வெட்கத்துடன் ஏற்கிறோம், இல்லையெனில் தலை கனத்திருந்தால், நீ என்னடா என்னை பாராட்டுவது, எனக்கே என் தகுதி தெரியும்டா என்ற அளவில் செயல்படுகிறோம்.

இது பாராட்டுக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்குமே பொருந்தும். நாம் கொடுப்பதை பெருமையாகவும் பெறுவதை இழிவாகவும் நினைக்கும் மனநிலை மிகவும் மோசமானது, முட்டாள்தனமானதும் கூட. பெறுவதற்கு மனிதர்கள் இல்லையெனில், கொடுப்பவருக்கு எங்கிருந்து பெருமை வரும்? ஒரு பகிர்தலில் ஒரு பக்கம் நல்லதும் ஒரு பக்கம் கெடுதலும் எப்படி இருக்க இயலும்? 

பெரிய உதாரணம் எல்லாம் வேண்டாம். ஒரு சாதாரண நன்றியை கூட சட்டென அழகாக ஏற்றுக்கொள்ள கூசும் மனங்களை வளர்த்து வைத்திருக்கிறோம் நாம். நன்றி என்ற சொல் ஏதோ தீண்டத்தகாத வார்த்தைப்ப்போல், ஒருவர் நம்மிடம் சொல்லுபோது அப்படியே ஒரு அதிர்வு ....ஐயையோ எதுக்குங்க இதுக்கெல்லாம் நன்றி சொல்றீங்க? ஏங்க இவ்ளோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க? ஏங்க நட்புக்குள்ள நன்றியெல்லாம் சொல்லி தள்ளி வைக்கிறீங்க? இவை தானே பெருபாலும் நாம் ஒரு சாதாரண நன்றியை எதிர்கொள்ளும் லட்சணம்? 

நாங்கள் வளர்ந்த காலகட்டத்தில் யாரும் thank you என்று சொன்னால், பதிலுக்கு no mention please என்று தான் சொல்லவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கப்பட்டவர்கள். அப்படியென்றால், உங்க நன்றி எல்லாம் எங்களுக்கு தேவையே இல்ல என்று பதுவிசாக சொல்வது. ஆனால் சில வருடங்களில் இது தவறு என உணர்ந்த ஆங்கிலம் பேசும் யாரோ ஒருவர் welcome அல்லது most welcome என்று (வரவேற்கிறேன் அல்லது மிகவும் வரவேற்கிறேன்) சொல்வதை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். பிறகு இது இன்று வரை most welcome இல் நிற்கிறது. 

ஒருவர் ஒன்றை மனதார கொடுக்கும்போது, பேசும்போது, அன்பு செலுத்தும்போது,  அதையும் இயல்பாக ஏற்று அதே போல் இயல்பாக பெற்றுக்கொள்ளும் தகுதியை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

கொடுப்பது பெருமை எனவும், வாங்குவது இழிவு எனும் நிலையில் தான்  மனிதர்களிடையே பகிர்தல் என்பது தொலைந்து போய் பல விரிசல்கள் ஏற்படுகின்றன, ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகள் பெருகுகின்றன. 

பெறுவதற்கு யாரும் இல்லையேல், இங்கு அளிப்பவனுக்கு வேலையே இல்லை. இயல்பாக செய்வோமே எதை செய்தாலும். 

இங்கு அடித்து பிடுங்க கூட அஞ்ச மாட்டோம். ஆனால் அளிப்பதை அழகாக ஏற்றுக்கொள்ளத் தான் நமக்கெல்லாம் தெரியாது. 

பி.கு.  "என் கதை'யில் கமலாதாஸ் ஓர் இடத்தில் கூறி இருப்பார். "நான் அன்பு எனும் பிச்சையை வைத்துக்கொண்டு, அதை ஏந்திக்கொள்வதற்கான  பாத்திரங்களை தேடிக்கொண்டிருந்தேன்" என. இங்கு பிச்சை என்பதையும் தவறான பொருளில் பார்க்க வேண்டியதில்லை. அவர் சொல்ல வந்தது, என்னிடத்தில் அள்ளிக்கொடுக்கும் அளவுக்கு அன்பு பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அதை சரியாக வாங்குவதற்கு தான் மனிதர் ஒருவர் கூட கிடைக்கவில்லை என்று.

-லதா-

Monday, 9 March 2026

Book-15


#Reading_Marathon2026
#26RM009

Book No:15/150+
Pages:-112

கபர்
-கே.ஆர் மீரா

கே ஆர் மீராவின் புத்தகங்கள் அனைத்தும் தனித்துவமானவை. நாம் புனிதம் என்று கருதுபவை அனைத்தையும் பகடி செய்பவர். உண்மைக்கு மிக நெருக்கமாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். அவருடைய எழுத்துக்களிலும் அதனை காணலாம்.நுட்பமான அவருடைய கதைகளில் வரும் எழுத்துக்கள் அனைத்தையும் வசீகரமானவை, எதிர்பாராத நேரத்தில் திருப்புமுனை உண்டாக்குபவை, அறிவார்ந்த தளத்தில் உளவியல் சிந்தனைகளை புள்ளிகள் வைத்து இறுதியில் கோலமிட்டு முடிப்பது போல அவருடைய எழுத்துக்கள் இருக்கும்.

 கபர் என்னும் இப் புத்தகம் மதம் சார்ந்த புத்தகம் அல்ல, மனித மனங்களின் மாற்றம் சார்ந்த புத்தகம் என்று நாம் சொல்லலாம். நமக்கான கல்லறைகள் அதிகமானவை. நாமே அதில் நம்முடைய எண்ணங்கள் ஆசைகளை அடக்கம் செய்து கொண்டு வெளிவர முடியாத சூழலில் உலவி கொண்டிருக்கிறோம் ஒருவரின் பணிவிடைகளுக்கு இன்னொருவர் கொடுக்கிற கைமாறல்ல அன்பு, அது ஒருத்தர்  இன்னொருவரின் மீது கண்டடைகிற பூரணத்துவம் தான் என்பது கதையின் அடிநாதமாக உள்ளது. காதலுக்கு மணம் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் எட்வர்ட் ரோஸ் மலர் என்று சொல்லக்கூடிய அந்த வகையில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இந்த பூக்களின் நறுமணம் நம்மை உணர வைக்கும்.

 கதையின் நாயகி பாவனா மாவட்ட நீதிபதியாக உள்ளார். தன் சுதந்திரம் தனக்கான நீதியை தன்னிடத்தில் தேடிக் கொண்டிருப்பவர். ஏழு அத்தியாயங்கள் உடையது. முதலாவதாக கபர் என்னும் சமாதி உள்ள இடத்தின் மீதான உரிமை கோருதல் வழக்கு ஒன்று வருகிறது. அந்த வழக்கினை விசாரித்து கொண்டிருக்கும்போது அமானுஷ்ய சக்தி போல தம்மை ஆட்கொள்வதை பாவனா உணர்கிறார். மயக்கம் அடைகிறார். மருத்துவமனையில் சேர்கிறார். தொடர்ந்து இரண்டு முறை இவ்வாறு நடைபெற்றதால் அந்த வழக்கினை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எண்ணுகிறார்.தன்னுடைய திறமைக்கு கிடைத்த சவாலாக இதனை பார்க்கிறார். 

முதல் அத்தியாயத்திலேயே யோகேஸ்வரன் மாமா எனும் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அவர்களின் குடும்பத்தில் வயதானவர்கள் அனைவரும் காசி செல்வதை வழக்கமாய் கொண்டு இருப்பார்கள். அவ்வாறு காசி செல்பவர்கள் திரும்பி வர மாட்டார்கள். ஆனால் யோகேஸ்வரன் மாமா வரும்போது இரண்டு அழகிய தேவதை போன்ற பெண்களுடன் வருகிறார். அமானுஷ்ய தன்மையை கொண்டதாக இருக்கும் அப்பகுதி சிறுவயதில் இருந்து அவருக்கு ஒரு அச்சத்தை தோற்றுவிக்கிறது. அது இந்த வழக்கினை விசாரிக்கும் போது குறுக்கும் நெடுக்குமாக நினைவில் வந்து கொண்டிருக்கிறது. 

பாவனாவின் திருமணம் காதல் திருமணம்.பிரமோத் என்பவரை மணந்து கொள்கிறார்.பாவனாவின் வளர்ச்சி குறித்த தாழ்வு மனப்பான்மை காரணமாக இவரின் மீது வெறுப்பு கொள்கிறார். மகன் அத்வைத் ஹைபர் ஆக்டிவ் ஆட்டிசத்தால் குறைபாடுடன் பிறந்ததால்.. பிரிந்து சென்று இன்னொரு திருமணத்திற்கு தயாராகிறார். பாவனாவின் தந்தையும் தாயும் 36 வருடங்களுக்குப் பிறகு பிரிந்து இருக்கின்றனர்.அவர்களுடைய பின்னணியும் விளக்கப்படுகிறது.

யோகேஸ்வரன் மாமாவின் இறப்பு குறித்த கதைகள் இவரை மெய்சிலிர்க்க வைக்கிறது. அடுத்ததாக மந்திர சக்தி கொண்ட மனதினை படித்து தெரிந்து கொள்ளும் கயாளுதின் தங்ஙளுடைய கதாபாத்திரம் குறித்த அறிமுகம் வருகிறது. அவருடைய அமானுஷ்ய சக்தியின் காரணமாகத்தான் ஒவ்வொரு முறை தீர்ப்பு சொல்ல வரும்போதும் ஏதேனும் ஒரு இடையூறு வருகிறது. ஒரு வழியாக இந்த வழக்கின் தீர்ப்பினை தடை விதிக்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்கிறார்.

தீர்ப்பு கூறிய மகிழ்ச்சியில் அன்று மாலை மகனுடன் திரைப்படத்திற்கு செல்லும் போது அங்கும் காக்க சேரி வருகிறார். பேச்சினால் மயக்கி அல்லது பாவனாவே உடன் வருவதாக கூறி இருவரும் ஒரு இடத்துக்கு செல்கின்றனர் .பின்பு தான் தெரிகிறது அதுதான் சர்ச்சைக்குரிய இடமான கபர் இருக்கும் இடம். அதற்கு பிறகு கபர் குறித்த பாவனாவின் எண்ணங்கள் மாறுகிறது. தனக்குள்ளேயே ஒரு பூரணத்துவத்தை அவர் கண்டறிய முயல்கிறார். தன்னுடைய பிறப்பின் ரகசியம் குறித்த செய்தியை அறிகிறார். 

நாவல்  112 பக்கங்கள் தான். ஆனால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதைகள் நான் லீனியர் மாய‌யதார்த முறைகளில் நடக்கிறது. படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது. கதையின் முக்கிய கதாபாத்திரமான பாவனா தன்னுடைய கணவனின் மறுமணத்திற்கு செல்லும் போதும், மகனிடம் காட்டும் பிரியத்துக்கும், நீதியில் நடுநிலை தவறாமல் இருக்க வேண்டும் என்ற தீவிரமும், அந்த கதாபாத்திரத்தின் தன்மையை நமக்கு உயர்த்தி காட்டுகிறது.

 மற்றொருவர் பாவனாவின் தாயாக வருபவர்.மகளை உற்சாகப்படுத்துகிறார்
 ஒரு இடத்தில் தாகூரின் மேற்கோளை கூறி "கூண்டுக்குள் என்றால் சிறகு விரிப்பதற்கு இடமில்லை. ஆனால் அமர கம்பி உண்டு.வானத்தில் என்றால் சிறகு விரிப்பதற்கு இடம் உண்டு. ஆனால் அமர கம்பி இல்லை" எந்த வாழ்க்கையை நீ தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சுதந்திரம் அளிக்கிறார்.

காதலால் அவ்வளவு ஒன்றும் அழ வைத்திட முடியாது.. ஆனால் அவமானம் செய்வதற்கு முடியும் என காதல் பிரிவின் துயரத்தை தனது சொற்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். நீதி சார்ந்த வார்த்தைகளை நாவல்களில் அவ்வப்போது பயன்படுத்துகிறார். உதாரணத்திற்கு

* உறக்கத்தின் நீதிபதி என்னுடைய மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார். 

*இந்திய தண்டனைச் சட்டத்தில் சிரிப்பையும் அழுகையையும் குறித்த பிரிவுகள் இல்லாததால் ஏமாற்றமடைந்தேன்.. 

*வாழ்க்கை ஒரு வழக்கல்ல தீர்ப்பு தான் தெய்வம் யாருக்கும் நீதிபதி அல்ல எல்லாருக்கும் சாட்சி தான் என்று புரிந்து இருப்பார்.

தந்தை சீரியல் பார்த்துக் கொண்டு தன்னிடம் பேசுவதை பார்த்திருக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு தந்தை இயல்பாக பேசுகிறார் இப்போது மின்சாரம் மீண்டும் வந்துவிட்டது அதற்கு 

*அன்பின் ஆயுள் மின்சாரம் வரும் வரைக்குமே இருந்தது என்று வெளிப்படுத்துகிறார்.

இல்லாமையின் பரிபூரணத்துவத்தை உணர வைக்கும் விதமாக நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ளும் படியும், நாமே அந்த கதாபாத்திரமாக ஒன்றி போகும்படியும் அமைந்துள்ளது. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்துள்ளது.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday, 4 March 2026

tea-23


#மனசுக்கு_ஒரு_தேநீர்_23

ஒருவனின் வாழ்நாளை எவ்வாறு 
களவாட முடியும்? 

எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பை விதைத்து, தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற 'அன்றைய' நாளை மறக்கடித்து விடு. 
செய்த செயல்கள் ஏதுமின்றி அவனது ஆயுட் காலம் முழுவதும் கழிந்தே போய் விடும்.

-கஸ்ஸாலி

“Your mindset determines whether you see difficulty as a problem or a challenge

ஒரே நிகழ்வு 
ஒருவருக்கு பிரச்சனை,
மற்றொருவருக்கு சவால்.
ஒரு பிரச்சனைக்கும் ஒரு சவாலுக்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது. மஹாத்ரயா ரே
இதனை உதாரணங்களுடன் விளக்குகிறார்.

ஒரு காட்டின் நடுவில் ஒரு சிங்கம் என் எதிரில் நின்று கொண்டிருந்து, என் கையில் எந்த ஆயுதமும் இல்லை என்றால், நான் ஒரு பிரச்சனையில் இருக்கிறேன் என்று அர்த்தம். ஆனால் என் கையில் ஓர் இயந்திரத் துப்பாக்கி இருந்தால், அந்த சிங்கத்திற்குப் பிரச்சனை என்று பொருள். சரியான நேரத்தில் துப்பாக்கியால் சுடும் சவால் மட்டும்தான் எனக்கு இருக்கும். 

நான் எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலை என்னிடம் உள்ள வளங்களைவிடப் பெரியதாக இருந்தால், அதை ஒரு பிரச்சனை என்று கூறலாம். ஆனால், என்னிடமுள்ள வளங்கள் நான் எதிர்கொண்டுள்ள சூழ்நிலையைவிடப் பெரிதாக இருந்தால், அது வெறும் சவால்தான்.

 நம்முடைய பிரச்சனைகளை அளவுக்கதிகமாக மதிப்பிடுவதும், அப்பிரச்சனைகளை முறியடிக்கக்கூடிய நமது திறனை மிகவும் குறைவாக மதிப்பிடுவதும்தான் மனிதனுடைய இக்கட்டான சூழ்நிலை

சவால்களை  வெற்றி கொள்ளும்போது, நீ இன்னும் பெரிய சவால்களைப் பின்தொடர அவை உனக்கு உதவுகின்றன; அதன் வாயிலாக அவை உனக்கு மாபெரும் வளர்ச்சியைக் கொடுக்கின்றன.

மனித வாழ்க்கை என்பது அமைதியான ஏரி அல்ல; அலைகள் எழும் கடல் போன்றது. அந்த அலைகளில் சிலவற்றை நாம் பிரச்சனை என்று அழைக்கிறோம்; சிலவற்றை சவால் என்று அழைக்கிறோம். ஆனால் உண்மையில் அலை ஒன்று தான் — அதை நாம் பார்க்கும் பார்வை மட்டுமே வேறுபடுகிறது.

வாழ்க்கையில் எதிர்பாராத சூழ்நிலை வந்தால் மனித மனம் முதலில் அதை பிரச்சனையாகவே உணர்கிறது. பிரச்சனை என்பது நம்மை நிறுத்திவிடும் சுவரைப் போன்றது. அது பயத்தையும் தளர்ச்சியையும் உருவாக்குகிறது.
அதே நிலையை ஒருவர் சவால் என்று எண்ணும் போது, அந்த சுவர் கதவாக மாறுகிறது.
வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு திறமையில் அல்ல; பார்வையில் தான்.

பிரச்சனை மனிதனை சோதிக்கிறது;
சவால் மனிதனை செதுக்குகிறது.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

மெய் வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்-இதில் கண் துஞ்சார் என்றால் தூங்கவே மாட்டார்கள் என்கிற பொருள் இல்லை. தூக்கத்தைக் குறைத்துக் கொள்வார்கள். தூக்கத்தில் கூட விழிப்புணர்வுடன் செயலைப் பற்றிய அரை நிலை சிந்தனையோடு இருப்பார்கள் என்று பொருள்இனிய காலை

Monday, 2 March 2026

tea-22


#மனசுக்கு_ஒரு_தேநீர்_22

உண்மையான அன்பு ஒருபோதும் குழப்பமடைவதில்லை. அது எந்தவித தகுதிகளையும் எதிர்ப்பார்ப்பதில்லை.ஒருபோதும் அது நிராகரிப்பதில்லை. அது வேண்டும். இது வேண்டுமென்று கோரிக்கைகள் வைப்பதில்லை. அது குறையக் குறைய தன் மேன்மையின் அளவற்ற சுழற்சியால் தன்னை மறுபடியும் நிரப்பிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. தன்னை இழந்து வாழ்வை ஒளிமயமாக்கும். ஏனெனில் அதற்கு மட்டும்தான் தியாகத்தின் உண்மையான அர்த்தம் தெரியும் என்கிறார் ஹென்றி மில்லர்

நீண்டகாலமாக இருக்கும் செவி வழி கதை.ஆனால் வரலாற்று ரீதியாக நிருபிக்கப்படவில்லை. ஆனால்.எப்போது படித்தாலும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும்.

ஒரு நாள், ஸ்காட்லாந்து கிராமப்புறத்தில் ஒரு ஏழை விவசாயி Fleming என்பவர் சதுப்புநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் புதைகுழியில் மார்பளவு மூழ்கிவிட்டார். இதைக்கண்ட விவசாயி சற்றும் தாமதிக்காமல் கயிறு கட்டிச்சென்று காப்பாற்றினார்.
இதை அறிந்த செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த தந்தை இச்செயலை பாராட்டி பணம் தந்தார். விவசாமி பிளெமிங் வாங்க மறுத்துவிட்டார்.

அப்போது அவர் கூறினார்:
“உங்கள் இளைய மகனுக்கு நல்ல கல்வி கிடைக்கட்டும்; அதற்கான செலவை நான் ஏற்கிறேன் என்று கூறி அவனை படிக்க வைத்தார்.
அந்த விவசாயியின் மகனே பின்னர் உலகப் புகழ்பெற்ற பென்சிலின் மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானியான Alexander Fleming ஆவார்.

பல ஆண்டுகள் கழித்து, சதுப்பு நிலத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அச்சிறுவன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு பென்சிலினால் காப்பாற்றப்பட்டார்.அவரது பெயர் Winston Churchill.

இதேபோன்று கரு.பழனியப்பன் பகிர்ந்த செய்தி.. எம்.ஜி.ஆரஇ பார்க்க.. மகனை தோளில் வைத்துக்  கொண்டு தினசரி ஒருவர் சாலையில் நின்றிருந்தார்.ஒரு முறை அழைத்து விசாரித்ததில் ஐந்து மகனக்கு தங்கள் வாயால் பெயர் வைக்க வேண்டுமென சொன்னாராம். சிரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர் இதுவரை எப்படி அழைத்தீர்கள் என கேட்டதற்கு மலைக்கள்ளன் படம் வந்த போது பிறந்ததால் அப்பெயர் வைத்து அழைக்கிறோம் என்றாராம். இதனைக் கேட்ட எம்.ஜி.ஆர், நல்ல பெயரை வைத்ததோடு.. அச்சிறுவனின் கல்விச் செலவை ஏற்பதாக கூறினார். கட் செய்தால் அமெரிக்காவில் சிகிச்சை பெற வந்த எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டராக மலைக்கள்ளன் வந்து நின்றாராம்.

Kindness returns in unexpected ways.”

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

கோ கமலக்கண்ணன்


வாழ்வில் நிகழும் தடுமாற்றங்களின்போது ‘நானும் மனிதன்தான்’ என்று அகத்துக்குள் நினைத்துக்கொள்வதற்கு ஒரு பொருள் உண்டு. நானும் பிழை செய்யக் கூடியவனே ஆனால் பிழையை ஏற்று முன்னகரும் ஆற்றலும் என்னுள் உண்டு என்பது ஒரு பார்வை. குற்ற உணர்வு கொண்டு அங்கிருந்து எழுந்து ஊக்கம் பெற்று சக மனிதன் மீது கருணை கொள்வது. 

ஆனால் பொதுவாக மக்களைப் பாருங்கள். தனது பிறழ்வைப் பிறர் முன் நியாயப்படுத்தவே பெரும்பாலும் ‘நானும் மனுசன்தானே’ என்பார்கள். அதாவது உணர மாட்டார்கள், அலுத்துக்கொள்வார்கள். லஞ்சம், , திருட்டு, கொலை பாதகங்கள் அனைத்தையும் தன்பொருட்டு செய்துவிட்டு ‘நானும் மனிதன் தானே’ என்று அங்கலாய்ப்பார்கள். 

அதற்கு ‘நானும் மூடர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளத்தான் விரும்புகிறேன். அறமெல்லாம் ஒரு ஓரமாக இருக்கட்டும். அதற்கெல்லாம் இந்தக் காலத்தில் மதிப்பில்லை’ என்பதுதான் பொருள். 

எப்போது பார்த்தாலும் ‘அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்’ என்று சொல்லிக்கொண்டே திரிவது ஒரு வித மனநோய். அத்தகையோர் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் மனிதர்கள் அல்லர், மனிதப் பதர்கள். 

முதுமையில் கனிந்தால் பிறருக்கு இனிப்பைத் தர முடியும். கனிவு என்பது தளர்வு அல்ல. ஊக்கத்தால் எய்தக் கூடிய மேன்மை நிலை. மாறாக தன் தீங்குகளை வாதத்தால் தக்க வைத்தபடி இறுகிக் கொண்டே போனால் முதுமை பாறையாகத்தான் முடியும்.  அத்தகைய அக ஊக்கம் அற்றோரையே நடமாடும் மரங்கள் என்கிறார் வள்ளுவர்.

-கோ.கமலக்கண்ணன்

Sunday, 1 March 2026

tea-21


#மனசுக்கு_ஒரு_தேநீர்_21

“சிஸோகூ” (Chisoku) புத்தமதத்தில் வரும் ஒரு முக்கியமான வாழ்வியல் கோட்பாடு. இதன் பொருள்:
“கிடைத்ததிலே திருப்தி கொள்” அல்லது “மனநிறைவு அறிந்து வாழ்” என்பதாகும்.

புத்தமதம் கூறுவது:
ஆசை குறைந்தால் மனம் அமைதியாகும்;
திருப்தி வந்தால் வாழ்க்கை நிறைவாகும்.

சாலையில் யாரோ கோபத்தைத் தூண்டினால், அந்தத் தூண்டுதல் (contact) கோபத்தை (feeling → craving) உருவாக்கும். ஆனால், புன்னகைத்து "இது தற்காலிகம்" என ஞானத்தால் கோபத்தின் சங்கிலியை நிறுத்தினால், சிசோகூ நிகழ்கிறது.

மனித வாழ்க்கையின் பெரும்பாலான துன்பங்களுக்கும் அடிப்படை காரணம் “இன்னும் வேண்டும்” என்ற முடிவில்லா ஆசை. இதற்கு எதிர்மறையான மருந்தாக புத்தமதம் முன்வைக்கும் முக்கிய வாழ்வியல் நெறி தான் சிஸோகூ கிடைத்ததிலே திருப்தி கொள்ளும் அறிவு. அதிகம் சேர்ப்பது வாழ்க்கை இலக்கு அல்ல.மனநிறைவு தான் உண்மையான செல்வம்

சிஸோகூ என்பது வறுமையை ஏற்க வேண்டும் என்பதல்ல;
அது ஆசைக்கு எல்லை வைப்பதன் மூலம் மன அமைதி பெறும் அறிவு.

மனிதன் எவ்வளவு பெற்றாலும் இன்னும் வேண்டும் என்று நினைத்தால்
அவன் எப்போதும் குறைவாகவே உணர்வான்.
ஆனால் கிடைத்ததை உணர்ந்து நன்றி கொண்டால்,
அவனுக்குள் நிறைவு தோன்றும்.
“He who knows that enough is enough will always have enough.” — Lao Tzu
இது சிஸோகூவின் நேரடி தத்துவ வடிவம்.

Chisoku is not having less; it is realizing you already have enough.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 22 February 2026

tea-20


#மனசுக்கு_ஒரு_தேநீர்_20

“நான் தெரிந்தவன்” என்று நினைக்கும் நொடியில் வளர்ச்சி நிற்கிறது;
“நான் கற்றுக்கொள்கிறேன்” என்று நினைக்கும் நொடியில் வாழ்க்கை தொடங்குகிறது.
இந்த உண்மையை வாழ்க்கை தத்துவமாக மாற்றும் எண்ணமே Beginner’s Mindset.

இந்தக் கருத்தை ஜென் தத்துவத்தில் விளக்கியவர் Shunryu Suzuki, அவர் எழுதிய Zen Mind, Beginner’s Mind நூல் உலகளவில் இந்த மனப்பாங்கை பரப்பியது.

தொடக்க மனநிலை என்பது
தெரிந்த விஷயத்தையும் புதிய கண்களால் காணும் மனநிலை.
ஒரு குழந்தை உலகைப் பார்ப்பதை நினைத்துப் பாருங்கள்.
அதற்கு எல்லாமே புதிது, அதனால் எல்லாமே அதிசயம்.அதே ஆச்சரிய உணர்வை பெரியவர்களாக இருந்தாலும் இழக்காமல் வைத்திருப்பதே இந்த தத்துவம்.
எந்த ஒரு விஷயத்தையும் முன் முடிவுகளுடன் ஆராயமல் உண்மையை ஏற்றுக் கொள்ளுவது ஆகும்

இதனால் சலிப்பு குறைந்து புத்துணர்வு தருகிறது.பதிலை முன்பே யூகிக்காமல் அவர்கள் சொல்லும்வரை பொறுமை காப்பது,
முன்பே இதுதான் இக்கதை சொல்ல வருகிறது என யோசிக்காமல் முழுமையாக படிப்பது,சரி தவறுக்கு
 அப்பாற்பட்டு வேறொரு கோணத்தில் சிந்தித்து நல்லவற்றை எடுத்துக் கொளவது,சிறிய தருணங்களில் கூட உணர்வு பூர்வமாக செயல்படுவது, இவ்வாறு செய்வதால் பதட்டத்தை தணிக்கச் செய்யும்.

மனம் வெறுமையாக இருந்தால் எதற்கும் தயாராக இருக்கும்.
பிரச்சினைகள் வெளியுலகத்தில் இல்லை  மனதில்தான்.உண்மை உண்மையாக காண் என்கிறது.

ஒரு பணியாளர் “I know everything” என்றால் வளர்ச்சி முடியும்.
“I’m still learning” என்றால் உயர்வு தொடங்கும்.நாம் ஒருவரை முழுமையாக தெரிந்துவிட்டோம் என்று நினைத்தால் புரிதல் குறையும்.அவரை தினமும் புதிதாய் அறிய முயன்றால் அன்பு அதிகரிக்கும்.

தொடக்க மனநிலை என்பது அறியாமை அல்ல,அது உயர்ந்த அறிவின் அறிகுறி.எப்போதும் தொடக்க நிலை மாணவனாக இருப்பவன் தான் உண்மையான ஞானி.

மனம் சோர்வடைவது கற்றல் காரணமாக அல்ல;
கற்றலை நிறுத்துவதால்தான்.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

ஜா-31


வாழ்க்கைக்கு ஹைக்கூ: 31

"நாம் சந்தித்தோம், பின் பிரிந்தோம்;
இப்போது தூரிகையும் மையும் 
இட்ட சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன!"

- டைகு ரயோகன் (Daigu Ryokan)

இந்தக் கவிதை வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை மிக அழகாகப் பேசுகிறது. மனித வாழ்க்கையில் உறவுகள் தோன்றுவதும் (சந்திப்பு), மறைவதும் (பிரிவு) இயற்கையான சுழற்சி. எவருமே எப்போதும் கூடவே இருப்பதில்லை.

இங்கு 'தூரிகை மற்றும் மை' என்பது ஒரு கலைப்படைப்பையோ அல்லது நாம் விட்டுச் செல்லும் நினைவுகளையோ குறிக்கிறது. மனிதர்கள் மறைந்தாலும், அவர்கள் செய்த செயல்களும், அவர்கள் விட்டுச் சென்ற படைப்புகளுமே உலகத்தில் சாட்சிகளாக எஞ்சியிருக்கும்.

நாம் வாழும் காலத்தில் மற்றவர் இதயத்தில் அல்லது இந்த உலகில் எத்தகைய பாதிப்பை (சுவடுகள்) ஏற்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.

இந்தச் சிறிய கவிதை மகிழ்ச்சியான வாழ்விற்கு மூன்று முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகிறது:

1. நிகழ்காலத்தில் வாழுதல்: சந்திப்புகளும் உறவுகளும் நிரந்தரமற்றவை என்று உணரும்போது, தற்போது நம்முடன் இருப்பவர்களிடம் அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொள்ளத் தோன்றும்.

 2. பற்றற்ற நிலை: 
பிரிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைத்தால், இழப்புகளால் வரும் துயரம் குறையும்.

3. நல்ல சுவடுகளை ஏற்படுத்துதல்: "நான் போன பிறகு என்ன எஞ்சியிருக்கும்?" என்ற கேள்விக்கு விடையாக, ஒரு ஓவியமாகவோ, கவிதையாகவோ அல்லது ஒரு நல்ல செயலாகவோ பிறருக்குப் பயனுள்ள ஒன்றை விட்டுச் செல்வதே வாழ்வின் அர்த்தம் என்பதை உணரலாம்.

"வாழ்க்கை ஒரு தருணம்; அதில் நாம் தீட்டும் ஓவியம் (நல்ல செயல்கள்) மட்டுமே என்றும் நிலைக்கும்"

Saturday, 21 February 2026

கோ.கமலக்கண்ணன்


‘நீ தகுதி உள்ளவனா?’

அழகு என்பது சீர்மை என்ற பொருளையே தரும். அதனால்தான் வடிவு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இன்று நிறத்துக்கும் ஒப்பனைக்கும் அழகு ஆகுபெயரானது ஒரு மருவுதான். அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். 

தகுதி என்ற சொல்லின் சரியான பொருள் நடுமை. அதாவது ஒவ்வொரு நொடியும் சூழலுக்கும் தன்னிலைக்கும் இடையேயான இயைபை அடையும் ஆற்றல்.

தான் என்ற செருக்கிலிருந்து அகன்றவனுக்கே நடுவு நிலைமை வாய்க்கும். 

வெவ்வேறு அறிவுச் சிந்தனைகளின் உரையாடல் நிகழும் மன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கும் தகுதி யாருக்கு உண்டு? நடுவருக்கு. நடுவர் என்பவர் யார்? அறிவின் தேடல் வழியே புது கண்டடைவுக்காக நடுநிலை வகிப்பவர். 

ஒரு நடுவர் வாதாடுபவர்களைக் காட்டிலும் அறிவாளியாக இருப்பது முதன்மையானதல்ல. மன்றத்தில் வழக்காடலின்போது அவர் கவனித்தவற்றைப் பக்கச் சார்பின்றிப் பரிசீலித்து அறுதி முடிவு வழங்கும் தகுதியாளரே நடுவர். 

நடுமை என்பது பற்றின்மையின் அடிப்படை. புத்தர் மத்ய மாக்கத்தையே துறவிகளின் தகுதியாகப் போதித்தார். 

நடுமை என்பது இரண்டுக்கும் அடையே நிற்பது அல்ல. ஒவ்வொரு கணமும் மாறும் நடுப்புள்ளியைப் பின்தொடரும் இலகு. 

வள்ளுவர் ‘ஒரு பகுதியோடு ஒட்டாமல் அப்பாற்பட்டு முடிவெடுக்கும் திறனே தகுதி என்னும் நன்மை’ என வரையறுக்கிறார். 

இங்கு ஒரு கேள்வி எழும். சரி எப்போதும் பக்கச் சார்பின்றி தகுதி காக்கும் அவனுக்கு உலகம் என்ன கைம்மாறு செய்துவிடும்? எல்லாருக்கும் வருவது போல அவனுக்கும் தாழ்வு வரும். ஆனால் அப்போது அவன் கெட்டு ஒழிய. வேண்டும் என்று உலகம் சபிக்காது என்கிறார் செந்நாப்போதார்! 

இனி ‘தகுதியை வளர்த்துக்கொள்’ என்று யாரேனும் சொன்னால் சினமுறாதீர்கள். ஒற்றைக் கால் கட்டைவிரலில் உடலின் மொத்த எடையையும் தாங்குவதற்கு இணையாக அகத்தின் நடுவுநிலைமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென நினைத்துக்கொள்ளுங்கள்.

-கோ.கமலக்கண்ணன்

வெளியே முற்றத்தில் வெயில் அனாதையாய நின்று வதைத்து கொண்டிருந்தது.அது உறவு தேடி வீட்டுக்குள்ளும்வெக்கையாய் நுழைந்தது. அவன் வீட்டிலிருந்த மின்விசிறியால் வெக்கைக்காற்றை விரட்டியடிக்க முடியவில்லை.அதன் விசிறலிலும் வெக்கைக் காற்றே அனாயசமாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது-அபிமானி(மஞ்சள் என்பது நிறமல்ல சிறுகதையில்)

Tuesday, 17 February 2026

tea-19


#மனசுக்கு_ஒரு_தேநீர்_19

புதிதாக நாம் ஒன்றை கற்க ஆரம்பித்து சில நாள்களிலேயே ஏன் நாம் கைவிட்டு விடுகிறோம்?

You lose because you focus on the outcome, not the"doing"

இப்படி செய்தால், அப்படி வரும்" என்று நமக்கு எதிர்காலத்தில் கிடைக்க கூடியதை மட்டுமே குறி வைக்கிறோம். போக வேண்டிய பாதையை பற்றி இல்லை.
வெற்றியை பெற ஒரே ஒரு வழி தான். நிலையான முயற்சியுடன், ஒழுங்காக செய்வது தான்.

அமெரிக்க உளவியலாளர் கூறுகிறார்.. ஒரு பஃபே பந்தி உள்ளது.சிறந்த உணவுகள் உங்கள் முன்னே இருக்கின்றன.அங்கு செல்வதற்கு இரண்டு அடிகள் தான் உள்ளன.அதற்கு நாம் முதலில் வரிசையில் நிற்க வேண்டும். அதே வரிசையில் தொடர்ந்து நிற்க வேண்டும்.அந்த உணவினை நாமே சென்று தான் எடுக்க வேண்டும். யாரும் எடுத்து வர மாட்டார்கள் என நம்ப வேண்டும்.பக்கத்தில் உள்ள வரிசை வேகமாய் செல்வது போல் தோன்றும்.ஆனால் அங்கு செல்லாமல் நிற்க வேண்டும். தொடர்ந்து முயற்சியுடன் ஒரே இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.

உன்னுடைய துறையில் நீ நிலைத்து நிற்கவும் இதை கற்றுக் கொள்ள வேண்டும்.புதுப்புது விசயங்களையும்,திறமையும் கற்றுக் கொண்டு தொடர்ந்து முன்னேற வேண்டும்.நீ தேக்கமடைந்து நின்றுவிட்டால் உன் பின்னால் உள்ளவர்கள் உன் அருகில் உள்ளது போல் இருப்பார்கள். ஆனால் சிறிது நேரத்தில் உனக்கு முன்னால் வெகு தூரத்தில் நிற்பார்கள். ஆகவே புதிய பழக்கத்தை வசமாக்க தொடர்ந்து அதனை செய்வதுதான் சாத்தியம்.

ஒரு புத்தகத்தை படிக்க 3 மாதங்கள் கூட ஆகலாம், பரவாயில்லை. உங்கள் அக்கறை தினமும் படிப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். அது தினம் ஒரு பக்கமாக கூட இருக்கலாம். நிலையான முயற்சி இருக்க வேண்டும்.

ஒரு புதிய பழக்கம் ஒன்று பழக, அது
கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்.எளிதாக இருக்க வேண்டும்.அதை செய்யும் பொழுது உங்களுக்கு முழு திருப்தி கிடைக்க வேண்டும்.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 16 February 2026

book-14


#Reading_Marathon2026
#26RM009

Book No:14/150+
Pages:-157

உருவாகும் உள்ளம்
-எஸ்.ராமச்சந்திரன்
தமிழில் ஆயிஷா இரா.நடராசன்

#12மாதம்_ஒரு_எழுத்தாளர்

சில ஆண்டுகளுக்கு முன் குங்குமம் ஆசிரியர் கே.என் சிவராமன் அவர்கள் எஸ் ராமச்சந்திரன் எழுதி ஆயிஷா நடராசன் மொழி பெயர்த்த உருவாகும் உள்ளம் என்ற புத்தகத்தைப் பற்றி சொல்லியிருந்தார். அப்போதே தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. அதன் பின்பு எதேச்சையாக புத்தகத் திருவிழாவில் வாங்கியதுதான் இந்த புத்தகம். மருத்துவராகவும் ஆய்வு உளவியலாளராகவும் அழைக்கப்படும் ராமச்சந்திரன் அவர்கள் அமெரிக்காவில் இருக்கின்ற போது நிகழ்த்திய பேருரைகள், அவர் எழுதிய கட்டுரைகள் என ஐந்து பகுதிகளாக இந்த புத்தகத்தில் தந்துள்ளார்.

மூளையைப் பற்றி படித்த புத்தகங்களில் தலைமைச் செயலகம், விகடன் வெளியிட்ட உச்சி முதல் பாதம் வரை புத்தகத்திற்கு பிறகு மூளையைப் பற்றி மிக எளிதாக அதில் உள் நடைபெறும் மாற்றங்கள் பற்றி நமக்கு எளிமையாக இந்த புத்தகத்தில் முதல் கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.

இந்நூல் மனித மனம், சிந்தனை, உணர்ச்சி, நினைவு போன்றவை மூளையின் செயல்பாடுகளால் எவ்வாறு உருவாகின்றன என்பதை எளிய தமிழில் விளக்குகிறது.
மனிதன் காட்சிகளை எவ்வாறு அறிந்துகொள்கிறான் என்பதை மூளையின் 30க்கும் மேற்பட்ட பகுதிகள் மூலம் விவரிக்கிறது

ஆரம்ப கால கட்டங்களில் இருந்து தமிழ் சினிமாவில் தலையில் அடிபட்டால் மறந்துவிடும் நோய் வந்து விடுவது இயற்கை. மீண்டும் தலையில் அடித்தால் அந்த நோய் நிவர்த்தி ஆகிவிடும். ஆனால் எனக்குத் தெரிந்து இதை உடைத்தது சேது படம் தான். தலையின் அடிபட்ட பின் சித்த வைத்தியம் மூலமாக நினைவுகளை மீட்டுக் கொணர்வது. இது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் இந்த புத்தகத்தில் தலையில் அடிபட்ட பின் அல்லது மூளையில் ஏதேனும் ஒரு இடத்தில் பழுதாகி விட்டால் முகக்குருடு என்று அழைக்கப்படும் அமைக்டாலா என்னும் அமைப்பு உள்ளது. இது உணர்வு மண்டலம் மையங்களுக்கு தொடர்பு கருவியாக உள்ளது எனவும், அதில் பாதிப்பு ஏற்பட்டால் நினைவு மறதி உள்ளிட்ட தொடர்புகள் துண்டிக்கப்படும் என்றும் விரிவாக இதில் சொல்லியுள்ளார். மேலும் மூலையில் நடைபெறும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவாக இதில் சொல்லியிருப்பார்.

சிரிப்பு ஏன் வருகிறது?சாலையில் ஒருவர் விழுந்தவுடன் வரும் சிரிப்பு? எதனால் ஏன்? மூளை நரம்புகள் என்ன செய்கின்றன என்பதை காரணத்துடன் கூறுகிறார்.

பார்வையின் வழியே கவனிப்பதை மூளை எவ்வாறு கண்டுணர்கிறது? அப்போது எந்த நரம்பின் பங்குபெறுதலால் இது நடக்கிறது?
மனிதன் ஏன் அழகை ரசிக்கிறான்?
மிரர் அக்நோசியா,மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நியூரான்களின் பெரிய பங்கு என இதற்கு அறிவியல் பூர்வ எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறார்.

கலைத்திறன் கூறுகள் மனித மூளையில் உள்ளனவா? அதற்கு பேராசிரியர் 10 வித பொதுவிதிகளை முன் வைக்கிறார்.கேலிச்சித்திரங்கள்

சோழர் கால சிற்பங்கள் போன்றவற்றை விளக்கி புள்ளிகளை கோர்வையாக அணிப்படுத்தி உருவத்தை கண்டுபிடிக்கும் வேலையை மூளை செய்கிறது. பரிணாமம் அடைந்த பிறகு மூளையின் அதீத உந்துதலுடன் அவற்றை உணர்வது நேரடி காரணமாக இருக்கலாம் என ஊகிக்கிறார்.மேலும் மில்லர், ஸ்டீவ் பிங்கரின் கலை குறித்த கோட்பாட்டினை பொருத்திப் பார்க்கிறார்.

மனித மனத்தின் இயல்பை அறிவியல் கோணத்தில் புரிய வைக்கும் சிறந்த அறிவியல் அறிமுக நூல்.உணர்ச்சி உருவாகும் நரம்பியல் காரணங்கள்,மனிதன் ஏன் அழகை ரசிக்கிறான்,டிஸ்லெக்சியா போன்ற கற்றல் கோளாறுகள் தொடர்பான ஆய்வுகள், சைனஸ்தீசியா நோய் குறித்தும் விளக்கியுள்ளார்  மூளை குறித்த வந்த புத்தகங்கள் பைபாஸ் ரோட்டில் செல்வது போல் இருக்கும்..இது மூளையை நரம்புகளுடன் இணைத்து கூறும்போது பைபாஸிலிருந்து ஊருக்குள் போய் வருவது போல நுண்ணிய பல பகுதிகளை விவரித்துள்ளார். இது அறிவியல் நூல் என்ற பயமே ஏற்படாமல் அழகிய எளிய தமிழில் ஆயிஷா நடராசன் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.

தொடந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 15 February 2026

tea-18


#மனசுக்கு_ஒரு_தேநீர்_18

உலகின் பிரபலமான ஐந்து விதிகள். 

1. மர்ஃபி விதி - எது நடந்து விடக்கூடாது என்று அதிக அச்சத்துடன் இருக்கிறீர்களோ அது நடந்து விடும் வாய்ப்பு அதிகம்.

கணினித் துறையில் அதிகம் பயன்படுத்துவதுண்டு. உண்மையான வாழ்க்கைக்கும் பல நேரங்களில் பொருந்தும். 

2. கிட்லின் விதி - ஒரு பிரச்னையை தெளிவாகவும் துல்லியமாகவும் எழுதி வைத்து விட்டீர்கள்  என்றால் அதைத் தீர்ப்பதில் பாதி வெற்றி பெற்று விட்டீர்கள். 

எழுதுவது என்பது ஒரு தெரபி போலத்தான். தெளிவாகவும் துல்லியமாகவும் எழுத அதை விலகி நின்று பார்க்க வேண்டும். 

3. கில்பர்ட் விதி - ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை எப்படி சரியாக செய்து முடிப்பது என்ற வழியைத் தீர்மானிப்பது எப்போதும் உங்கள் பொறுப்பு மட்டுமே. 

யாரும் வந்து உங்களுக்கு உதவ மாட்டார்கள். அப்படி யாராவது உதவ வேண்டும் என்றாலும் உங்கள் திட்டத்தில் அவர்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களே தீர்வைத் தருபவர்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது அவர்கள் விருப்பத்துக்கு நடக்குமே ஒழிய உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அல்ல. 

4. வில்சன் விதி - உங்கள் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் செயல்களை முதன்மைப்படுத்தினால் பணம் உங்களைத் தேடி வரும். 

அனுபவத்தில் கண்ட உண்மை. சற்றே தாமதித்தாலும் தொடர்ந்து உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அதற்கான பலன்கள் வரத் தவறியதே இல்லை. 

5. ஃபாக்லேன்ட் விதி - ஒன்றைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டிய தேவை இல்லாதபோது எந்த முடிவையும் எடுக்காதீர்கள். 

தேவை இல்லாத ஆணியைப் பிடுங்காதீர்கள் என்பதுதான் இது. இதற்கு எதிர் விதி ஒன்றும் உள்ளது. முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயத்தில் முடிவெடுக்காமல் இருப்பதும் கூட நீங்கள் எடுத்திருக்கும் ஒரு முடிவுதான்.

நன்றி:ஷான்

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 10 February 2026

எல்லாத் துயரத்திற்கும் முன்பாக அதன் வேர்க் கிழங்காக ஓர் இன்பம் ஒளிந்திருக்கும். துயரங்கள் காலத்தின் வெளிச்சத்தில் கருகி வீழ்பவை. வேர்க் கிழங்குகள் ஒருபோதும் அழிவதில்லை. மண்ணுக்குக் கீழே அவை உறங்கிக்கொண்டே இருக்கின்றன. -திருச்செந்தாழை

tea-17


#மனசுக்கு_ஒரு_தேநீர்_17

இன்றைய சமூக ஊடக காலத்தில் மனிதனின் பங்கு அளப்பரியது. கவனம் மிகப் பெரிய நாணயமாக மாறியுள்ளது. அந்தக் கவனத்தைப் பிடிக்க சிலர் அன்பையும் அறிவையும் பயன்படுத்துகிறார்கள்; இன்னும் சிலர் கோபத்தை. கோபத்தைத் தூண்டி, அதன்மூலம் பார்வை, பகிர்வு, விவாதம் ஆகியவற்றைப் பெருக்கும் யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள்.

2015ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி தேர்ந்தெடுத்த சொல் தான் Rage bait.
சமூக ஊடகங்கள் மூலமாக ஒருவர் பெறும் ஆவேசத் தூண்டல் எனலாம். 

மக்களை உண்மையைச் சிந்திக்க வைப்பதற்காக அல்லாமல்
அவர்களை உடனடி கோபத்திற்கு தள்ளுவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.உணர்ச்சி வசப்பதிவுகள், பாதி உண்மை, மிகைப்படுத்துதல்கள் இவைகளே ஆயுதம் Rage bait.

“If you want to control people, make them angry.”போல

மனித மனம் அமைதியை விட கோபத்திற்கே வேகமாக எதிர்வினை செய்கிறது.முகம் தெரியாத ஒருவர் மீது வன்மத்தை வார்த்தைகளில் உமிழ்கிறோம்.உரையாடத் தெரியாமலோ சிந்தனை வறட்சியாலோ வாக்குவாதம் செய்கிறோம்.சிந்தனை மேடையாக இல்லாமல்.சந்தைக் கடை போல் கூச்சலிடுகிறோம்.தனது கருத்துதான் சரி என்பதை வலுப்படுத்த எந்த எல்லை வரையும் செல்லத் தயங்குவதில்லை.

சில எதிர் கருத்துகளுக்கு குழுவாக வந்து திட்டி கோபத்தை தூண்டும் வகையிலும் செயல்படுகிறார்கள் ஆன்லைன் யுகத்தில்.
செனிகா எனும் அறிஞர் கூறுகிறார்..“We suffer more often in imagination than in reality.” உண்மையை விட கண்மூடித்தனமான கற்பனைகளுக்கு அதிக இடம் அளிக்கிறோம்

Rage bait நம்மிடம் ஒரு முக்கியமான வாழ்வியல் பாடத்தைச் சொல்கிறது:
எதை நாம் கவனிக்கிறோமோ, அதையே நாம் வளர்க்கிறோம்.
ஒவ்வொரு தூண்டிவிடும் பதிவுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.எதிர்வினை ஆற்றாமல், தன் கருத்திற்கு உடன்படவில்லை எனில் ஒதுங்கிக் கொள்ளவது சுலபம். 

சில நேரங்களில் மௌனம் தான் மிகச் சக்திவாய்ந்த எதிர்வினை.
“You don’t have to attend every argument you’re invited to.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 9 February 2026

tea-16


#மனசுக்கு_ஒரு_தேநீர்_16

Theory X & Theory Y 

“மனிதனை சந்தேகித்தால் அடிமை;
நம்பினால் தலைவன்"

 எல்லார் மனதிலும் ஒரு கற்பனை தராசு இருக்கும். அதில் அவர் குறித்த பிம்பத்தையும் நம் கற்பனையையும் எடை போட்டுப் பார்ப்போம். இதில் எது எடை அதிகமோ அதனையே நம்புவோம்.மனவியல் அறிஞர் Douglas McGregor முன்வைத்த இரண்டு முக்கிய கோட்பாடுகள் தான் Theory X மற்றும் Theory Y. 

இவை வெறும் மேலாண்மை கோட்பாடுகள் மட்டுமல்ல; மனித வாழ்க்கையையே புரிந்துகொள்ள உதவும் வாழ்வியல் பார்வைகளாகவும் விளங்குகின்றன.

Theory X – சந்தேகத்தில் கட்டப்பட்ட வாழ்க்கை. பணியாளர்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள், குழந்தைகள் சரியாக படிக்க மாட்டார்கள் என நினைப்பது.தீவிர கண்காணிப்பு, சரியான கட்டளை பிறப்பித்தால் தான் செய்வார்கள் என ஆணித்தரமாக நம்புவது. இதனால் அவர்களின் சிந்தனை குறைகிறது, படைப்பாற்றல் சுருங்குகிறது, பயம் வாழ்க்கையின் அடிப்படை உணர்வாகி விடுகிறது. மேலதிகாரியின் சந்தேகத்தை உடைப்பதே பணியாளனுக்கு பெரும் வேலையாகிவிடுகிறது

“The average human being has an inherent dislike of work and will avoid it if he can.”
என்கிறார் Douglas McGregor
(மனிதனுக்கு வேலையைப் பொறுத்த அளவில், இயல்பான வெறுப்பு உண்டு; அதைத் தவிர்க்க முடிந்தால் கட்டாயம் தவிர்ப்பான்.)
என்கிறார்

Theory Y – நம்பிக்கையில் மலரும் வாழ்க்கை.முந்தைய எண்ணங்களுக்கு முற்றிலும் எதிரான பார்வையே Theory Y. மனிதன் பொறுப்புணர்வுடனும், ஆர்வத்துடனும் செயல்படக்கூடியவன் என்று  நம்புவது. வேலை என்பது தண்டனை அல்ல; சரியான சூழல் கிடைத்தால் அது மகிழ்ச்சியான அனுபவமாக மாறும் என Theory Y கூறுகிறது.
“Work is as natural as play or rest, if the conditions are favorable.”
என்கிறார் Douglas McGregor

இந்த அணுகுமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படும்போது, மனிதன் சுய கட்டுப்பாட்டுடன் வளர்கிறான்.
நம்பிக்கையுடன் நடத்தப்படும் குழந்தை பொறுப்புடன் வளர்கிறது.
சுதந்திரம் கொடுக்கப்பட்ட ஊழியர் புதுமையை உருவாக்குகிறான்.
Theory Y மனிதனை ஒரு கருவியாக அல்ல; ஒரு முழுமையான மனிதனாக பார்க்கிறது. 

இந்தக் கோட்பாடுகள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்தலாம்: Theory X போன்று கடுமையான சுய-கட்டுப்பாட்டால் சோம்பலை வென்று இலக்குகளை அடையலாம். Theory Y மூலம் உள்ளார்ந்த உந்துதலை வளர்த்து, படைப்பாற்றலுடன் வாழ்க்கையை அமைக்கலாம், திருப்தி மற்றும் உறவுகளை மேம்படுத்தலாம். 

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான முரண்பாடுகள், நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்கும் இடையிலான போராட்டமே ஆகும்.

புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 7 February 2026

ஜா-28


வாழ்க்கைக்கு ஹைக்கூ 28

“இந்த வசந்த காலத்தில்
எனது குடிசையில்
ஒன்றுமே இல்லை;
எல்லாமே இருக்கிறது!”

- யமகுச்சி சோடோ

ஜப்பானிய கவிஞர் யமகுச்சி சோடோவின் மிகவும் புகழ்பெற்ற தத்துவார்த்தமான ஒரு ஹைக்கூ கவிதை இது. முரண்பாடுகளின் மூலம் (Paradox) ஒரு வாழ்க்கைக்கான உன்னதமான உண்மையை விளக்கும் கவிதை.

இந்தக் கவிதை பொருள் சார்ந்த உலக வாழ்க்கைக்கும், ஆன்மீக அல்லது மனரீதியான நிறைவுக்கும் இடையிலான வேறுபாட்டை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. கவிஞர் ஒரு எளிய குடிசையில் வசிக்கிறார். அவரிடம் ஆடம்பரமான பொருட்கள், டீவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி போன்ற விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள், கார், தங்கம், பணம் என எதுவுமே இல்லை. ஒரு வெளிநபர் இவரது வீட்டுக்கு வந்து பார்த்தால் அந்தக் குடிசை "வெறுமையாக" (Nothing) இருக்கிறது என்று கூறுவார். ஆனால், அவரது குடிசையின் ஜன்னலுக்கு வெளியே வசந்த காலம் வந்திருக்கிறது. பூக்களின் மணம், பறவைகளின் இசை, மென்மையான காற்று, அதன் குளிர், லேசான வெம்மை, நிலத்தின் மலர்ச்சி என இயற்கையின் அழகு அவர் குடிசை முழுவதும் பரவிக்கிடக்கிறது. மன அமைதியும், இயற்கையோடு இணைந்த வாழ்வும் அவருக்கு "எல்லாமும்" இருப்பதைப் போன்ற உணவைத் தருகிறது.

இந்த கவிதையின் வரிகள் சராசரி தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு ஒரு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தைக் கூறுகின்றன. நம்மிடம் என்ன இல்லை என்று வருத்தப்படுவதை விட, நம்மிடம் இருக்கும் எளிய விஷயங்களில் (சுவாசிக்கும் காற்று, இயற்கை, நண்பர்கள், உறவுகள்) மகிழ்ச்சியைக் கண்டால் வாழ்வு முழுமையடையும்.

செல்வம் மட்டுமே வாழ்க்கையல்ல. பொருட்கள் தரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, ஆனால் இயற்கையோடும் எளிமையோடும் இணைந்திருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி எல்லையற்றது. வாழ்க்கை என்பது நாம் அதை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் உள்ளது. வெறும் சுவர்களைப் பார்த்தால் அது வெறும் குடிசை; உலகைப் பார்த்தால் அதுவே சொர்க்கம்.

ஆக, வெறுமை என்பது வறுமை அல்ல; அது தேவையற்ற சுமைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரம். நம்மிடம் "எதுவுமே இல்லை" என்று நாம் நினைக்கும் போது தான், பிரபஞ்சம் அதன் "அனைத்தையும்" நமக்குப் பரிசாக அளிக்கிறது.

Thursday, 5 February 2026

book-11


#Reading_Marathon2026
#26RM009

Book No:11/150+
Pages:-160

தெற்கு ஜன்னல்
-ந.சிவநேசன்

கவிஞராக அறியப்பட்டு வந்த அருமை நண்பர் சிவநேசன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு.அவரின் கதைகள் வெகுஜன இதழ்களிலும், சிற்றியதகளிலும் வந்த போது படித்திருக்கிறேன். சம்பவங்களை கோர்வையாக சொல்வதோடு சொற்களின் தேர்ந்த முத்திரையோடு சூழலை படிக்கும் வாசகன் உணரும் வண்ணம் பண்படுத்தியிருப்பார் ஒவ்வொரு இடத்திலும்.

“சில ஜன்னல்கள் வெளிச்சத்திற்காகத் திறக்கப்படுகின்றன;
சில ஜன்னல்கள் நம் மனதுக்குள் இருப்பதை வெளியே பார்க்கவே.”

என்ற உணர்வை நூல் முழுவதும் உணர முடிகிறது.

இன்றைய இண்ட்ரோவர்ட்டுகளின் முன்னோடியாக பயத்தின் காரணமாக மரியாதை காரணமாக அண்டை வீட்டாரிடம் வயதுவந்த பிள்ளைகள் பேச கூச்சப்படுவார்கள். அந்தகூச்சத்தினை போக்கும் வகையில் யாரேனும் ஒருவர் பேசி அத்தடைகளை தகர்த்துவிட்டால் அவர் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறார். அப்படித்தான் ரீசார்ஜ் செய்துவிடுறியா தம்பினு அறிமுகமாகும் மூர்த்தி சார்..இவனுக்கு நீங்காத வலியை ஏற்படுத்திவிடுகிறார்.ஒருவரின் அந்தரங்கத்தை அறியும்போது அவரகள் மூர்க்கமடைகிறார்கள் அல்லது சமநிலையை இழக்கிறார்கள் என்பதாக கதை ஓட்டம் செல்லும்..ஒரு இடத்தில்

மது அருந்தும் போது மூர்த்தி சார் சொல்லும் இந்த வாசகம் இக்கதைக்கானஒரு பதம்..

ஒரு மனுசனை அதிகம் அவமானப்படுத்துறது எது தெரியுமா?

'நீங்கலாம் வசவு, கேலி, துரோகம்னு நிறைய சொல்லுவீங்க. ப்ச்... அதெல்லாம் கிடையாது. ஒருத்தன் உன்மேல காட்டுற பரிதாப உணர்ச்சி இருக்கு பாரு. அதுதான் கொடுமையானது. ஒரு பரிவு நம்மீதான ஒட்டுமொத்த தன்னம்பிக்கையையும் அசைத்து பார்க்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கும்.

அலுவலகத்தில் உடன் பணியாற்றும் நிரூபமா அன்று மதியம் இறந்துவிட்டாள். இறப்பதற்கு இது கண்டிப்பா உன்னால் இல்லடா.. தைரியமா இரு எனும் குறுஞ்செய்தி இவனுக்கு வந்திருக்கிறது. ஒரு நல்ல கதைக்கான கருவாக முன்னும் பின்னும் விவரிக்கப்படும் போது ஆச்சர்யமும் அச்சமும் சம அளவில் நமக்கும் அடுத்து என்ன நிகழும் எனும் முடிச்சை உணர்வுகளின் வழியே திறக்கிறார் ஊற்றுக்கண் கதையில்.

கதை நாயகன் எப்படிப்பட்டவன் என சொல்லும்போது..

"கடந்தகாலங்களில் இழந்தவற்றை இப்போதைய இழப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அழுவான். ஒப்பிட முடியாத இழப்புகளுக்கும் அழுவான். தன்னால் எப்படி அழுது அழுதே கவலைகளைச் செரிக்க முடிகிறது என நினைத்து அழுவான்.."  என நாயகனின் மன இயல்பை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போல் இருந்தது.

ஆனந்தவிகடனில் வந்த போதே படித்து பாராட்டு பெற்ற கதைதான் 'படையல் கறி'.கிராமத்து குல தெய்வங்களான கருப்பனும் முனியனும் தான் கதைமாந்தர்கள். கருப்பனின் பார்வையில் தன்வரலாற்று கதை போல் பகடி செய்து நவீன மனிதர்களின் செயல்களை எள்ளல் தொனியில் விவரித்திருப்பார்.

கதை சொல்லும் நூலாக அல்லாமல்
வாழ்வியலை மெதுவாகக் கவனிக்கச் சொல்லும் கதையாக காக்காபொன் கதை.கோயிலில் கூத்து கட்டும் கலைஞன் வஞ்சிரத்தான் விஸ்வரூபம் எடுத்து ஆடுகையில் இறந்துவிடுகிறான். அதன் பின் நடக்கும் விவாதங்கள், படிக்கபடிக்க..மெதுவான காட்சிகளில் ஆழமான காட்சிகள் சொற்களின் வழியே நெஞ்சில் பதிகிறது.

சில கதைகளில் பெண்கள் பின்னணியில் நின்று விட்டு..
நினைவுகளை கதாநாயகிகளாக மாற்றுவிடுகிறார்கள்.அவ்வகையில் தி கிரேட் தில்ருபாவும், கல்யாணியும்
நம் நெஞ்சில் நிறைகிறார்கள்..

அந்தோணிராஜ் வர்ணிக்கும் போது ஒரு இடத்தில்.."சித்தப்பாவும் கல்யாணியும் மரத்துக்குப் பின்புறமிருந்து வெளிவருவார்கள். கல்யாணியின் முகம் பூரணமான அமைதியைக்கொண்டிருக்கும். மீப்பெரும் மகிழ்ச்சியை நாம் கொண்டாடி முடித்தபிறகு கொண்டிருப்போமே அந்த வகையான அமைதி. அல்லது அளப்பரிய மகிழ்வை உடனடியாகச் செலவழித்துத் தீர்த்துவிட மனமின்றி தேக்கி வைத்து சிறிது சிறிதாகக் கசியவிடும்போது முகம் காட்டிக் கொடுக்குமே... அந்த மாதிரியான அமைதியென்றும் சொல்லலாம்" எனும் போது கல்யாணியின் பிம்பம் நம் மனதில் பதிகிறது.

ஒவ்வொரு கதையும் வாசித்த பின்பு சிறு அமைதி, சிறு சோகம், சிறு புன்னகை..இந்த மூன்றிலும் ஒன்றையாவது மனதில் விட்டுச் செல்கிறது."விருந்தினர் வருகைக்கு கோழி அடித்து குழம்பு வைக்கும்.. இயல்பான விருந்தோம்பலை ஒரு கதையில் பாசாங்கின்றி வெளிப்படிருக்கும்.

இக்கட்டான சூழலில் ஒருவனின் சுயம் வெளிப்படும்.அப்படித்தான் முன்னாள் திருடனான மகேந்திரன் வாழும்போது ஒரு சம்பவம் நிகழ்கிறது.அவன் மனம் மாறுவதற்கும், சுயம் இழப்பதற்குமான சூழலை அழகான வார்த்தைகளில் அகாலத்தின் கண்கள் காட்சிப்படுத்திருப்பார். "வனத்தின் இரவு மெளனமாய் அருகிலிருந்த நகரத்தின் இரவிடம் யாவற்றையும் ஒப்புவித்துக் கொண்டிருந்தது என்பது அழகிய டச்.

காரின் இண்டிகேட்டர் வெளிச்சம் இன்னும் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது எனும் வரி மகேந்திரனின் மனதை குறிக்கும் குறியீடாகவும், காரில் உள்ளவள் இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்பதாகவும் இருந்தது.

விசித்திரமான தருணங்களை விவரிப்பது ஆசிரியருக்கு கை வந்த கலையாக எல்லா கதைகளிலும் தெரிகிறது. ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஒரு தேடல் உள்ளது. ஒவ்வொரு கதைகளும் ஏதேனும் ஒரு வாழ்க்கையை நோக்குபவையாக உள்ளன.பெண் பாத்திரங்கள் எல்லாக் கதையிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.கதை ஓட்டங்களும் எந்த இடத்திலும் அயர்ச்சி தரவில்லை. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 28 January 2026

ஜா-27


வாழ்க்கைக்கு ஹைக்கூ 27:

"பிளம் மரத்தில்
ஒரு மலர், 
ஒரு மலர்அளவு
வெப்பம்.." 

- ரன்செட்சு (Ransetsu)

ஜப்பானிய கலாச்சாரத்தில் 'பிளம்' (Plum) மலர்கள் குளிர்காலத்தின் இறுதியிலும், வசந்த காலத்தின் தொடக்கத்திலும் பூக்கக் கூடியவை. 

கடுங்குளிரில் மரம் மொட்டையாக இருக்கும்போது, முதன்முதலில் பூக்கும் அந்த ஒரே ஒரு மலர் வசந்தத்தின் வருகையை அறிவிக்கிறது. இங்கு "ஒரு மலர்" என்பது வெறும் பூவை மட்டும் குறிக்கவில்லை; அது நம்பிக்கையின் அடையாளம்.

அந்தச் சிறிய மலர் மலர்வதால், உலகமே மெல்ல வெப்பமடையத் தொடங்குகிறது என்பதை "ஒரு மலர்அளவு வெப்பம்" (One blossom-worth of warmth) என்று கவிஞர் அழகாகக் கூறுகிறார்.
****

இந்தச் சிறிய கவிதை நமது வாழ்க்கைக்குப் பல ஆழமான பாடங்களைக் கற்றுத் தருகிறது. பெரிய மாற்றங்கள் எப்போதும் பிரம்மாண்டமாகத் தொடங்குவதில்லை. ஒரு சிறிய மலர் எப்படிப் பெரிய வசந்தத்தை வரவேற்கிறதோ, அதுபோல நம் வாழ்க்கையின் ஒரு சிறிய நேர்மறையான மாற்றமோ அல்லது ஒரு நல்ல செயலோ ஒட்டுமொத்த வாழ்வையும் ஒளிரச் செய்யும்.

வாழ்க்கை மிகக் கடினமாகவும், குளிர்காலத்தைப் போல உறையச் செய்வதாகவும் இருக்கும்போது, கண்ணுக்குத் தெரியும் ஒரு சிறிய நல்வாய்ப்பு கூட "இனி எல்லாம் மாறும்" என்கிற நம்பிக்கையைத் தரும்.

ஒரு பெரிய மரத்தில் பூத்திருக்கும் அந்த ஒற்றை மலரை உற்றுக் கவனிக்கும்போதுதான் அதன் மதிப்பும், இயற்கையின் இயக்கமும் நமக்குத் தெரிகிறது. அதுபோல, நம் அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் சிறிய சந்தோஷங்களைக் கொண்டாடப் பழக வேண்டும்.

இருள் சூழ்ந்த நேரத்தில் ஒரு மெழுகுவர்த்தி தரும் வெளிச்சத்தைப் போன்றது இந்த பிளம் மலர். அந்த ஒரு மலர் தரும் வெப்பம், விரைவில் மரம் முழுவதும் பூக்கள் பூக்கும் என்பதற்கான நம்பிக்கை. & அந்த நம்பிக்கையே வாழ்க்கை.

Tuesday, 27 January 2026

tea-12


#மனசுக்கு_ஒரு_தேநீர்_12

வால்டர் மிஷல் எனும் ஆசிரியர் வகுப்பிலுள்ள பத்து மாணவர்களுக்கு அழகிய கேக்கினை கொண்டு வந்தார்.அவர்கள் முன்னே அதனை வைக்கிறார்.பத்து நிமிடங்கள் யாரும் சாப்பிடக் கூடாது எனும் நிபந்தனை வைக்கிறார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது ஏழு பேர் சாப்பிட்டுள்ளனர்..மூன்று பேர் சாப்பிடவில்லை.அவர்களை ஆய்வு செய்தபோது அந்த மூன்று பேர் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பதும், மற்றவர்கள்
சாதாரண வாழ்க்கை வாழ்வதையும் அறிகிறார்.

பத்து நிமிடங்கள் பொறுமையாக இருக்க முடியாத ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற முடியாது"என கணிக்கிறார்.
பேராசிரியர் வால்டர் குழந்தைகளுக்கு வைத்த தேர்விற்கு "மார்ஷ்மெல்லோ" என்று பெயரிடப்பட்டதால் இந்த ஆராய்ச்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது அதற்கு "மார்ஷ்மெல்லோ தியரி" என்று பெயரிடப்பட்டது.

இன்றைய பொறுமை, நாளைய வெற்றி.மனித வாழ்க்கையின் பெரும் சவால்களில் ஒன்று இப்போதே கிடைக்கக்கூடிய சுகத்தையும், எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் பெரும் நன்மையையும் தேர்வு செய்வதுதான். இந்தத் தேர்வின் மையத்தில்தான் மார்ஷ்மெல்லோ தியரி நிற்கிறது.

“The ability to delay gratification is a critical factor in long-term success.”
— Walter Mischel

இந்தத் தியரி குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அது முழு மனித வாழ்க்கைக்கும் பொருந்தும்.
இதுவா அதுவா எனும் தேர்வு
 எல்லாமே மார்ஷ்மெல்லோ தியரியின் மறுவடிவங்களே.

தன்னைக் கட்டுப்படுத்தும் தன்மையே அதிகம் போராட்டமானது.
ஒரு மனிதன் இன்றைய சோம்பலை ஒதுக்கி, தொடர்ச்சியான உழைப்பைத் தேர்வு செய்யும் போதும், வாழ்க்கையின் இனிப்பை பின்னாளில் பெரிதாகச் சுவைக்கிறான்.

“Self-control is choosing what you want most over what you want now.”

இன்றைய வேகமான உலகில், உடனடி திருப்தி எளிதாகக் கிடைக்கிறது. ஒரு கிளிக், ஒரு ஸ்க்ரோல், ஒரு ஸ்வைப்—என மகிழ்ச்சிகள் உடனே. ஆனால் அந்த மகிழ்ச்சி தற்காலிகம். மார்ஷ்மெல்லோ தியரி நமக்கு நினைவூட்டுவது ஒன்றே: தற்கால இன்பத்தை துறந்தவர்களுக்கே நிலையான வெற்றி கிடைக்கும்.பொறுமை என்பது பலவீனம் அல்ல; அது ஒரு மறைமுக வலிமை. இன்று நம்மை நாம் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு தருணமும், நாளைய நம்மை வலுப்படுத்துகிறது.

“Discipline is remembering what you want.”
— David Campbell

“இப்போதைய ஆசையை கட்டுப்படுத்தத் தெரிந்தவன், எதிர்காலத்தை கட்டுப்படுத்தக் கற்றவனாகிறான்.”

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 26 January 2026

tea-11


#மனசுக்கு_ஒரு_தேநீர்_11

வாழ்க்கை ஒவ்வொரு மனிதராய் தேர்ந்தெடுத்து நமக்கு பாடம் கற்பிக்க அனுப்புகிறது. பாடங்களை நன்கு கவனித்தால் இன்னும் வாழ்க்கையை  நிறைவுடன் வாழலாம். 

வெற்றி பெற்ற மனிதர்களை பின்பற்றலாம் என எண்ணி அவர்களை காப்பியடிப்பதை பலர் செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் யாரையும் பின்பற்ற முடியாது. அடுத்தவர் வாழ்வில் இருந்து நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. நல்ல செய்தியை எடுத்துக் கொள்ளுதல் என்பது நகல் எடுப்பதாக மாறிவிடக்கூடாது என்கிறார் ஓஷோ.தனித்துவத்தை இழந்துவிடாத பின்பற்றுதல் அவசியம்.

சீடன் வேறு பின்பற்றுபவன் வேறு. ஒழுக்கம் என்பது கற்றல்.. ஆங்கிலத்தில் discipline அதன் வேர்ச்சொல். அது கட்டுப்பாட்டை குறிக்கும் சொல்லல்ல.கற்றுக் கொள்ள தயாராய் இருப்பது. கற்க தயாராக இருக்கும் போது குரு உங்கள் முன் தோன்றுவார் என்கிறது சூஃபி.  அறிவு இரண்டே இரண்டு விஷயங்களை செய்யும். ஒன்று மூர்க்கத்தனமாக எதிர்க்கும், இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக பின்பற்றும். அறிவு உங்களை பகைவனாக்கும் இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக பின்பற்ற வைக்கும்.இதில் நாம் கண்மூடித்தனமாக பின்பற்றி நம் தனித்துவத்தை பல நேரங்களில் இழந்துவிடுகிறோம்.நாம் எவ்வளவு பின்பற்றினாலும் தனித்துவத்தையும் நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இயேசுநாதர் தன் சீடர்களுக்கு கடைசியாக சொன்னது என்ன தெரியுமா.. "என்னை உண்ணுங்கள், என்னை அருந்துங்கள்" என்னை உங்கள் ரத்தத்தில் ஓட விடுங்கள்" என்னை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்" அதன் பொருள் என்னை உள்வாங்கிக் கொள்ளுங்கள் நான் சொல்வதை ஜீரணித்து பின் உங்கள் வழியில் செல்லுங்கள். நான் செய்வது போல் செய்யாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் உள் ஒளியை இழந்து விடுவீர்கள் என்கிறார். ஒரு உண்மையான குரு உங்களுக்கு விதிமுறைகளை தர மாட்டார். கண்களை தருவார். நீங்கள் செல்ல வேண்டிய பாதையை காட்ட மாட்டார் மாறாக உங்களிடம் ஒரு விளக்கை தருவார். இந்த விளக்கை எடுத்துக்கொண்டு உன் பாதையில் போ.. இது உன் பாதையை உனக்கு காட்டும் என்று சொல்லுவார்.

உங்கள் கையில் வழிகாட்டும் விளக்கு இருந்தால் போதும். வரைபடமோ வழிகாட்டியோ தேவையில்லை. ஒரு மனிதன் விதிகளுக்காக ஏங்க மாட்டான், அவன் புரிந்துணர்வை நாடுவான். அப்போதுதான் இந்த பரந்த உலகத்தில் அவன் வழியை கண்டுபிடித்து அதில் அவன் பயணிக்க முடியும். அவனுடைய உள்ளொளியே அவனுக்கு வழியை காட்டிவிடும். புரிந்துணர்வு இருப்பதால் சுதந்திரமும்  இருக்கிறது

 செல்லும் பாதை சரியாக இருக்கும் போது,மெதுவாக ஓடினாலும் வெற்றிதானே..!

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 25 January 2026

பெங்குயின்


வெர்னர் ஹெர்சாக்கின் Encounters at the End of the World , இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த டாக்குமென்ட்டரி வைரல் ஆகும் என வெர்னர் ஹெர்சாக்கே நினைத்திருக்க மாட்டார். இப்போதும்கூட அதை வைரல் செய்யும் நபர்களுக்கு, வெர்னர் ஹெர்சாக் குறித்தோ, Encounters at the End of the World டாக்குமென்ட்டரி குறித்தோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

Nihilist Penguin meme என அழைக்கபடும் மீமில் ஒரு அடேல் பென்குயின் தன்னந்தனியாக யாருமற்ற திசை நோக்கி சென்றுகொண்டிருக்கும். அது எங்கு செல்கிறது என்பது தான் பலரின் கேள்வி. முதலில் டிக்டாக்கில் வைரலாக, பின்பு இன்ஸ்டாவில் வைரலாகி, தற்போது white house வரை வைரலாகியிருக்கிறது. 

He is heading towards certain death என வீடியோவில் பேசியிருப்பார்  வெர்னர் ஹெர்சாக். 

2010ல் penguin depressed என்னும் தலைப்பில், அந்த இரண்டு நிமிட க்ளிப்பை ஒருவர் youtubeல் அப்லோடு செய்ய அது கிட்டத்தட்ட 88 லட்சம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. அந்த பென்குயினைத் தடுக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என மனிதர்களிடம் ஏற்கெனவே வெர்னர் ஹெர்சாக் சொல்லிவிட்டார். அதனால், அந்த 5000 கிமீ பனிப்பாதையை அது தனியே கடக்கவிருக்கிறது. 

பென்குயின்கள் பெரும்பாலும் தனித்து வாழ்பவை அல்ல. கணவன் மனைவி சகிதமாக வாழ்பவை. எதிர் பாலினத்தைக் கவர, pebblesஐக் கொண்டு வருவது, ‘ என் கூட்டைப் பார் என்னைப் பிடிக்கும் ‘ ரீதியில் முட்டை வைக்க அழகான கூழாங்கற்களான கூட்டினை செய்வது, என வாழ்பவை. குட்டிகளைத் திருடி வைத்துக்கொள்ளும் திருட்டு அப்பா அம்மா பென்குயின்களும் உண்டு. 

ஆனால், பார்ட்னர் மறைந்ததும் பெரும்பாலும் பென்குயின்கள் தனிமையை நோக்கிச் சென்றுவிடும். டாக்குமென்ட்டரியில் வரும் இந்த பென்குயினும், அப்படியானதொரு முடிவை எடுத்த பென்குயின் தான். 

-கார்த்திகேயன்

Saturday, 24 January 2026

ஜா-26


வாழ்க்கைக்கு ஹைக்கூ 26

“சொட்டு சொட்டாய்
விழும் பனித்துளி...
இவ்வுலகின் தூசியைக்
கழுவிவிடத் துடிக்கிறது!”

- மட்சுவோ பாஷோ

இந்தக் கவிதை "தூய்மை" மற்றும் "புதுப்பித்தல்" பற்றிய மிக அழகானதொரு கற்பனை. அதிகாலை நேரத்தில் ஒரு மலரின் இதழிலிருந்து ஒரு சிறிய பனித்துளி (Dew drop) சொட்டுச் சொட்டாகக் கீழே விழுகிறது. அந்தப் பனித்துளி பார்ப்பதற்குப் பளிங்கு போலத் தூய்மையாக இருக்கிறது. அது கீழே விழுவதை, "இந்த உலகத்தில் படிந்துள்ள அழுக்குகளையும், தூசியையும் கழுவிச் சுத்தம் செய்ய அது முயல்கிறது" என்று கவிஞர் வர்ணிக்கிறார்.

பனித்துளி மிகச் சிறியது; உலகம் மிகப் பெரியது. இருப்பினும், அந்தச் சிறிய துளிக்கு உலகையே சுத்தப்படுத்தும் ஒரு பெரிய ஆசை இருப்பதாகச் சொல்வது இதன் அழகியல்.

இந்தச் சிறிய ஹைக்கூ நமக்குத் தரும் நம்பிக்கையான செய்திகள் பல உள்ளன.

பனித்துளி மிகச் சிறியதாக இருக்கலாம், ஆனால் அதன் நோக்கம் உயர்வானது. அதுபோல, "நம்மால் என்ன செய்துவிட முடியும்?" என்று நினைக்காமல், நம்மால் முடிந்த சிறிய நற்செயல்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். பல சிறிய துளிகள் சேர்ந்தால் அது ஒரு நதியாகி, உலகையே மாற்றும் வல்லமை பெறும்.

"உலகத்தின் தூசி" என்பது நம் மனதில் படியும் கவலைகள், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் வெறுப்பைக் குறிக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் அந்தப் பனித்துளி எப்படிப் புதிதாக வருகிறதோ, அதுபோல நாமும் ஒவ்வொரு நாளையும் புதியதாகத் தொடங்க வேண்டும். கடந்த காலக் கசப்புகளை (தூசியை) அவ்வப்போது மனதிலிருந்து கழுவிவிட வேண்டும்.

உலகம் எவ்வளவு மாசுபட்டிருந்தாலும், இயற்கை பனித்துளி மூலம் அதைச் சுத்தம் செய்யத் தொடர்ந்து முயற்சிக்கிறது. அதுபோல, வாழ்வில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், அவற்றைச் சரிசெய்யும் நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.

"நமது செயல் சிறியதாக இருக்கலாம், ஆனால் நமது எண்ணம் உலகைச் சுத்தப்படுத்தும் அளவுக்கு உயர்வானதாக இருக்கட்டும்.

Wednesday, 21 January 2026

tea-9


##மனசுக்கு_ஒரு_தேநீர்_9

"ஸ்வபாவதஹ ப்ரவிஷந்தி"

எல்லாம் உண்டாகின்றன. அழிகின்றன, தொலைந்து மறைகின்றன, நீ சாட்சியாக தூரத்தில் இரு. அங்கு நின்று கொண்டு பார்த்தபடி இரு.

ஒரு விதை மண்ணில் புதையும்போது, அதற்கு “முளைக்க வேண்டும்” என்று யாரும் கட்டளையிடுவதில்லை. அதன் இயல்பே அதை முளைக்கச் செய்கிறது. அதுபோலவே, மனிதனின் மனம் எதை விரும்புகிறதோ, அவன் வாழ்க்கை அவ்வழியிலே தானாகவே செல்லத் தொடங்குகிறது.

புத்தர் மலைப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார். கடும் வெயிலில் தாகம் எடுத்தது. சீடர் ஆனந்தரை கூப்பிட்டு நாம் வந்த வழியில் திரும்பிச் செல். இரண்டு காத தூரத்துக்கு பின் ஒரு அருவியை பார்த்தோம் அல்லவா. அங்கே நீர் நிரப்பி வா என்றார். ஆனந்தர் பாத்திரத்துடன் அருவியை அடைந்தார். அதே சமயம் அங்கு தேங்கி இருந்த நீரின் வழியாக மாட்டு வண்டிகள் சில சென்றன. தண்ணீர் முழுவதும் குப்பை பரவி விட்டது. அடிமட்டத்திலிருந்து சகதிகள் மேலே எழும்பி வந்து விட்டது. அந்த தண்ணீர் மிகவும் கலங்கி இருந்தது. 

அப்போது ஆனந்தர் திரும்பி புத்தரிடம் வந்து சொன்னார். அந்த அருவி நீர் பருகுவதற்கு லாயக்காக இல்லை. மேற்கொண்டு நாலு ஐந்து மைல்களில் நதி உள்ளது. அங்கிருந்து புது தண்ணீர் எடுத்து வருகிறேன் நீங்கள் ஓய்வெடுங்கள் என்றார். ஆனால் புத்தர் பிடிவாதமாக திரும்பிப் போய் அதே அருவி நீரை கொண்டு வா என்றார்.

 இதனை மறுக்க முடியாத ஆனந்தர் அருவி நீரை அடைந்தபோது தண்ணீர் சுத்தமாகி விட்டிருந்தது. ஆனந்தர் அருவியை நோக்கிச் செல்லும் போது  ஆன தூரத்தில் தூசி எல்லாம் அடிமட்டத்துக்கு இறங்கிவிட்டது. ஆனந்தர் திகைத்துப் போனார். அப்பொழுதுதான் அவருக்கு புத்தரின் பிடிவாதத்தின் அர்த்தம் புரிந்தது

நான் செல்லும்போது யோசித்துக் கொண்டு சென்றேன். குப்பையை அகற்றிவிட்டு நீர் எடுத்து வரலாம் என்று. ஆனால் நான் அவ்வாறு செய்யாமல் கரையிலேயே இருந்தேன். கலங்கிய நீர் அமைதிபட்டதும்.. தெளிவடைந்தும்.. இருந்தது. யாரும் அதை வழிந்து சென்று அமைதி படுத்தவில்லை. தானாகவே அது சாந்தப்பட்டு விட்டது என்றார்.

இதனைக் கேட்டவுடன் புத்தர் சொன்னார்..
வாழ்க்கையில் பிரச்சனைகளும் அப்படித்தான்.. அதுவே வரும் அதுவே அழியும். நாம் அமைதியாக நின்று பார்த்தபடி இருந்தால் போதும்.
இக்கட்டான நிலையில் பொறுமை முக்கியம். பதட்டமே அந்த நிலையை இன்னும் சுமையாக்கிவிடுகிறது. ஆகவே பொறுமையை வளர்த்துக் கொள்வது அவசியம்.ஆனால்
பொறுமை பொறுமையாகத்தான் வரும்.

புத்தம் புது காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday, 20 January 2026

tea-8


#மனசுக்கு_ஒரு_தேநீர்_8

Procrastination எனும் வார்த்தை அண்மையில் பிரபலமடைந்து வருகிறது.இதன் பொருள் அனைவருக்கும் தெரிந்தது தான்..
"செய்ய வேண்டிய காரியங்களைத்  தொடர்ந்து தள்ளிப்போடுவது 

இப்போது செய்ய முடியும் வேலை என்பதை அறிந்திருந்தும்,
“சிறிது நேரம் கழித்து செய்வோம்”,
“நாளை பார்த்துக் கொள்வோம்” என்று மனம் காரணங்கள் சொல்லி ஒதுக்கிவைப்பதே Procrastination.
பணியை தொடங்குவதில் சுணக்கம், கடினமானதை தவிர்ப்பது, அவசரப்பட்டு செய்வதில் ஒரு அலட்சியம் போன்றவை. 

எதிர்காலம் எங்களுக்கு என்ன வைத்திருக்கிறது?”
“What the future has in store for us”

“எதிர்காலத்தை ஒரு களஞ்சியம் அல்லது பொக்கிஷப் பெட்டி போலக் கற்பனை செய்கிறது மனது.ஆனால் நிகழ்கால வாய்ப்புகள், சவால்கள் அனைத்தும் செய்தால் தான் அது பொக்கிஷமாக மாறும்.உடனே தைத்தால் ஒன்பது கிழிசலை தவிர்க்கலாம் என்பது பழமொழி. ஆகவே எந்த ஒரு செயலையும் விரைந்து செய்ய வேண்டும்.

ஒரு மனிதன் விஷ அம்பால் காயமடைந்தான்.
அவன், “அம்பு எங்கிருந்து வந்தது? யார் எய்தார்?” என்று கேள்விகள் கேட்டு காலம் தாழ்த்தி..
அந்த நேரத்தில் சிகிச்சை பெறாமல் இறந்தான். தேவையற்ற கேள்விகளை விட, தீர்வில் கவனம் செலுத்து என்கிறது புத்தம்

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

*கிடைப்பதற்கரிய காலம் வந்து வாய்க்குமானால் அப்போதே தாம் செய்வதற்கு அரியவான செயல்களை செய்து முடித்தல் வேண்டும் என்கிறார்
திருவள்ளுவர்

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 19 January 2026

வாழ்க்கைக்கு ஹைக்கூ 24"ஒரு கை தட்டும் ஓசை என்ன?" – ஹாகுயின் எகாகு இது புகழ்பெற்ற 'ஜென் கோன்' (Zen Koan) எனப்படும் ஒரு விதமான ஆன்மீகப் புதிர். பொதுவாக, இரண்டு கைகள் சந்திக்கும் போது தான் 'கைத்தட்டல்' ஓசை வரும். அப்படியிருக்க, "ஒரு கையின் ஓசை என்ன?" என்று கேட்பது முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால், ஜென் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே நமது தர்க்க அறிவை (Logic) நிறுத்திவிட்டு, உள்ளுணர்வை (Intuition) விழிக்கச் செய்வது தான். அதற்கு இதனைப் போன்ற புதிர்கள் உதவுகின்றன.இந்தக் கேள்விக்கு, "காற்று கிழிக்கும் சத்தம்" என்றோ, "விரல்கள் சொடுக்கும் சத்தம்" என்பது பதிலல்ல. உண்மையான பதில் "அமைதி" ஆகும். சத்தம் ஏற்படுவதற்கு இரண்டு பொருட்கள் வேண்டும். ஆனால் ஒரு கை என்பது எதனோடும் மோதாத நிலை. அது முழுமையான அமைதியைக் குறிக்கிறது.உதாரணமாக வானத்தில் இடி இடிப்பதற்கு மேகங்கள் மோத வேண்டும் (இரண்டு கைகள்). ஆனால் அந்த மோதலுக்கு முன் அங்கே இருந்த அமைதியான வானம் தான் ஒரு கை தட்டும் ஓசை.நாம ஒருவருடன் சண்டை போடுறோம். அங்கே "நான்" மற்றும் "அவன்" என்ற இரண்டு கைகள் உள்ளன. ஆனால் நாத தனிமையில், எந்த எண்ணமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கும்போது, அங்கே மோதுவதற்கு எதுவுமில்லை. அந்த முழுமையான மௌனமே ஒரு கையின் ஓசை.இந்த வாசகம் நமக்கு உணர்த்தும் பாடம் மிகவும் ஆழமானது. நாம் எப்போதும் பிறரது பாராட்டு, அங்கீகாரம் அல்லது பதிலுக்காகவே (இரண்டாவது கைக்காக) காத்திருக்கிறோம். ஆனால், நம் மகிழ்ச்சிக்கு இன்னொருவர் தேவையில்லை. நாம் தனியாக இருக்கும்போதே முழுமையானவர்கள் என்பதை இது உணர்த்துகிறது.உலகில் உள்ள அனைத்து சத்தங்களும் (பிரச்சனைகளும்) இரண்டு விஷயங்கள் மோதுவதால்தான் வருகின்றன (விருப்பம் vs வெறுப்பு, நான் vs நீ). இந்த மோதல்களை விட்டுவிட்டு, மனதை ஒரு சாட்சியாக (Observer) மட்டும் வைத்தால் கிடைப்பது பேரமைதி.வாழ்க்கையில் எப்போதும் சத்தத்தை மட்டுமே கேட்டுப் பழகிவிட்டோம். "சத்தமில்லாத அந்த ஓசையை" (Sound of Silence) கேட்கப் பழகுவதே இறைநிலை அல்லது தியான நிலை.ஒரு இசைக் கச்சேரிக்குச் செல்கிறோம். இரண்டு கைகளால் இசைக்கப்படும் வயலின் இசையை ரசிக்கிறோம். ஆனால், அந்த இசைக்கு இடையே ஒரு சிறிய இடைவெளி (Gap) இருக்கும் அல்லவா? அந்த இடைவெளியில் இசை இல்லை, ஆனால் இசைக்கான உயிர் அங்கு தான் இருக்கிறது. அந்த இடைவெளியை ரசிப்பது தான் "ஒரு கை ஓசை".

tea-7


#மனசுக்கு_ஒரு_தேநீர்_7

பொருத்தமற்றத் தகவல் பெருவெள்ளத்தில் மூழ்கிய இன்றைய உலகில் தெளிவு தான் தீர்வு

-யுவால் நோவா ஹராரி

தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,"நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்!" என்று சபித்துவிட்டார்."

பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, "நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக் கொன்று விடு!" என்று கேட்டுக்கொண்டான்.

எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது," மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு!" என்றான்

பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் (பன்றித்) துணையைத் தேடிக் கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது," மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்று போடு" என்றான்.

மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தனது தந்தையின் அருவருப்பான வாழ்க்கைக்கு முடிவு கட்ட வந்தபோது," மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் உடன் வந்து எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக் கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும்! " என்று மகனுக்கு அறிவுறுத்தினான்

நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.

முதல் வழி பிரச்சனைகளைத் தீர்க்க வழி தேடுவது.

அடுத்தது, பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.

இறுதிவழி பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது.

பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சனையோடு வாழ்வதே தீர்வாகிறது. பிரச்சனைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழி தான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சனைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லை! எல்லாவற்றையும் பொதுமைப்படுத்த முடியாது.எல்லாவற்றுக்கும் இது தான் தீர்வு எனவும் சொல்ல முடியாது.சூழலுக்கு தகுந்தவாறு முடிவெடுத்து வெற்றி பெறுவோம்

புத்தம்புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 18 January 2026

tea-6


#மனசுக்கு_ஒரு_தேநீர்_6

சுதர்சனின் பதிவு

புத்தகம் படிப்பது பற்றி இரண்டுவிதமான முறைப்பாடுகள் இருக்கிறது. ஒன்று, புத்தகம் படிக்க நேரமில்லை. இரண்டாவது, புத்தகங்களை வாங்கிவிட்டுப் படிக்கமுடியாமல் அடுக்கிவைத்தல்.
புத்தகம் படிக்க நேரமில்லை என்கிற குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே இருக்கிறது. நேரமென்பது நம் கண் பார்க்கும் நிறங்களைப் போல ஒருவித Illusion என்று சொல்வார்கள். 

நாம் தீர்மானித்துக்கொள்வதுதான். சினிமா, கிரிக்கெட், சிறுபேச்சுகள், பேஸ்புக் டைம்லைனை மேலும் கீழும் பார்த்தல் என்று அவர்கள் நேரம் முடிந்துவிடும். இதையெல்லாம் செய்வது தவறென்று சொல்லவரவில்லை. இவற்றைச் செய்பவர்கள், "நேரமில்லை" என்றொரு காரணம் சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாதது. Warren buffet க்குகூட வாசிக்க நேரமிருகிறது.
தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்கிறவர்கள் சிலர், புத்தகங்களை வாங்கிவிட்டு அடுக்கி வைக்கிறோம் என்று ஒப்புக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். பலரும் புத்தகங்களை வாங்கிவிட்டுப் படிக்காமல் அடுக்கி வைக்கிறார்கள் என்று சொல்லும் பதிவுகளும் பார்த்திருக்கிறேன்.

உண்மையில் நாம் சும்மா இருந்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஆவதுபோலவும் பிரபல நடிகையாவது போலவும் ஒரு மணிநேரம் கனவு காணும்போது நம்முடைய மூளை பதினொரு கலோரிகளைப் பயன்படுத்துகிறது. ஒருமணித்தியாலம் வாசிப்பில் ஈடுபடும்பொழுது 42 கலோரிகளை மூளை பயன்படுத்துகிறது. இதுபோக தகவல்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தல், நியூரோன்களின் உரையாடல் என்று அதற்கு மேலதிகமாக பல கலோரிகள் செலவாகிறது. உண்மையில் நேர முகாமைத்துவம் என்பது நேரத்தைப் பயன்படுத்துவது அல்ல. நேரத்தை திறம்படப் பயன்படுத்துவது.

நான் ஒரு புத்தகத்தை ஒரு அரச அலுவலகத்தில் காத்திருந்த நீண்ட நேரத்தில் படித்து முடிக்க முடிந்தது. ஆகவே புத்தகம் படிப்பதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நம்முடைய கவனத்தைத் திசைதிருப்பும் காரணிகள்தான் பிரச்சனை. நம்முடைய மூளை இரண்டு அல்லது மூன்று வேலைகளைச் செய்யும்போதே(task switching) அதன் சக்தியை இழந்துவிடுகிறது.
நம்முடைய மூளை ஒருவித புதுமையை(novelty) எப்போதும் எதிர்பார்க்கும். வாசிப்பிலும் ஒரு படத்தைப் பார்க்கும்போதும் பெரும்பாலான சொல்லப்படாத பகுதிகளை நம்முடைய மூளை ஊகித்துக்கொள்கிறது. ஆனால் வாசிப்பில் கற்பனைவளம் அதிகம் பெருகும். இவ்வளவு கடினப்பட்டு வாசிக்கவேண்டுமா?
வாசிப்பு உண்மையில் ஒருவித இன்பம். ஒரு நகைச்சுவையை ரசிக்கிறீர்கள். ஆனால் அந்த நகைச்சுவையில் சொல்லப்படாத பகுதிகளை மூளை கண்டுணர்ந்து ஒரு சிறுபுன்னகை தருகிறது. அந்த நகைச்சுவை தரும் இன்பம் போல அனைத்தையும் காட்சிப்படுத்தும் நகைச்சுவைகள் தந்துவிடுவதில்லை எனப்படுகிறது.

 உண்மையில் நம்முடைய மூளையில் நம்மால் படிப்படியாக ஆழ உணரப்படும் விடயங்கள் நன்றாகப் பதியுமென்று சொல்லப்படுகிறது.
கல்லூரிகளில் பாடப்புத்தகங்களை அப்படியே கற்பிக்கும் கல்விமுறையைவிட மாணவர்களாக அவர்களுக்குள்ளேயே உரையாடிக் கற்கும் கல்விமுறை (peer instruction) வெற்றிபெற்ற்றிருக்கிறது.
இவற்றைத்தான் நாமாக வெளியில் தேடிப்படிக்கும் புத்தகங்கள் நம்முள் நிகழ்த்திச் செல்கிறது.
ஆகவே புத்தகங்களைப் பார்த்துத் தெரிவுசெய்வது உங்கள் பொறுப்பு. வருடத்துக்கு இரண்டு என்றாலும் ஒழுங்கான வாசிப்பை நிகழ்த்தினால் போதும்

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 17 January 2026

book-8


#Reading_Marathon2026
#25RM009

Book No:8/150+
Pages:-127

தண்டகாரண்யத்தில் சீதை
-இமையம்

தமிழ் இலக்கியத்தில் சமூகத்தின் ஓரங்களில் வாழும் மனிதர்களின் மௌன வலிகளையும் மறைக்கப்பட்ட குரல்களையும் தீவிரமாக பதிவு செய்து வருபவர்.சிறுகதையோ, நாவலோ தனித்து ஒலிக்கும் குரலாக கதைமாந்தர்களின் தன்மை வெளிப்படும். சாதாரண ஒரு புள்ளியில் கதையின் மையசரடை சொற்களாலேயே அதனை வாசகனுக்கு தெரியப்படுத்துவார்.கிராமிய வாழ்வியலோ, 

தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்த குரலாக விளங்குபவர். கிராமிய வாழ்வியல், ஒடுக்கப்பட்ட மக்களின் வலி, பெண்களின் மனநிலை, உறவுகளின் மெல்லியச் சிக்கல்கள் ஆகியவை அவரது சிறுகதைகளின் மையம். சாதாரணமான எழுத்துக்கள் தான் ஆனால் ஆழமான கதை சொல்லின் வழியாக நம்மை எப்போதும் கவர்ந்து இழுப்பவர் இமையம் அவர்கள். சமூக கருத்துக்கள் அவருடைய கதைகளில் அர்த்தமுள்ளதாய் பதிவு செய்திருப்பார். வாசிக்கும் ஒவ்வொருவரையும் ஒரு கதைகளின் வாயிலாக அல்லது ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக தன்னை உணர வைத்து, எது சமூக நீதி? என்பது போல் சிந்திக்க வைப்பார்.அந்த அறக்கருத்துக்களை வாசிக்கும் நம்மிடம் கடத்துவார் ,அதுவே அவரின் சிறுகதையின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டில் கொம்பன் என்னும் மாட்டினை ஆசையாக வளர்க்கிறார் மருது. வாடி வாசலில் அவிழ்க்கப்பட்ட மாடு வருவது தான் கதையின் ஆரம்ப வரியாக இருக்கிறது.அதற்கு அடுத்தாற் போல் மாடு பிடிபடுகிறது.அது மருதுவுக்கு அவ்வளவு அவமானத்தை தருகிறது.. அந்த அவமானம் அவரின் ஆணவமாய் மாறி என்னவெல்லாம் செய்கிறார்,நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவரின் குணம் மாறுகிறது. இப்படி எல்லாம் ஒருவர் இருப்பாரா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டு மருதினை பின்தொடர்ந்து இந்த கதைகளின் வழியே சென்றால் இறுதியில் மனம் கணக்க வைக்கும் முடிவு ஒன்று வருகிறது.

ஆசிரியர் கதை ஒன்று அல்லது பள்ளியில் நடைபெறும் கதை ஒன்று அவருடைய தொகுப்புகளில் தவறாமல் இடம்பெற்று விடும். அதன் வழியே அவர் காட்டும் வெளிச்சம் நாம் பார்க்காத கோணத்தில் இருக்கும் அப்படித்தான் பொட்டச்சி மனசு கதைகளிலும் சுமதிக்கும் சந்திரனுக்கும் இடையே நடைபெறும் மனப்போராட்டம் ஜாதி ரீதியான கண்ணோட்டத்தில் ஆழமாக அந்தக் கதை  இருக்கும்.

உங்களுக்கு தீங்கிழைக்காத எந்த ஒரு ஆதிவாசியையும் கேடு விளைவிக்காத எந்த ஒரு விலங்கையும் வதம் செய்யாதீர்கள். மீறி செய்தால் அதர்மமான காரியங்களை ராமன் செய்தான் என பெயர் வந்துவிடும். வழக்கமாக ராமாயணத்தில் ராமனை பழித்துறைக்க வேண்டுமானால் அவர்  வானரங்களிடம் மனிதனைப் போல் வாழ வேண்டும் என்று கற்பித்தல் அறம் ஆகாது என்று சொல்வதாக பல வழக்காடு மன்றங்கள் நடப்பதுண்டு. இங்கே ராமனுக்கு புத்தி புகட்டும் சீதை என்ன வழியை கையாண்டால் என்பதுதான் தண்டகாரியத்தில் சீதை எனும் கதை. 

"மனம் ஆசைகளால் நிரம்பி இருக்கும் போது, சுயநலத்தின் பிடியில் மனம் சிக்கி இருக்கும் போது,

 மரணத்தை கண்டு மனம் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும்போது, தர்மத்துக்கும் அதர்மத்திற்கும் வேறுபாட்டை உணராத போது, தவம் யாகம் செய்து பெறுவது ஞானமா ? என்ற கேள்வி ராமனை நோக்கி சீதை கேட்பாள். இந்த கேள்வி படிக்கும் நம்மையும் ஒரு நிமிடம் உலுக்க வைப்பது போல் இருக்கும். எந்த தவறு செய்தாலும் நாம் ஒரு பரிகாரம் செய்தால் அந்த தவறுகள் நீங்கிவிடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக அல்லது பின் நடக்க இருப்பதை ராமனுக்கு சீதை முன்பே சொல்லும் விதமாக இந்த கதை மனதுக்கு நெருக்கமாக இடம் பெற்றிருக்கும். "ஆயுதம் தான் அதிகாரத்தை கொண்டு வருகிறது" என்பது நடைமுறை நாட்களில் கூட நாடுகளைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்க வைக்கிறது.

சாவித்திரி என்பவள் தன் அழகின் மீது கர்வம் கொண்டவள். தன்னை நாடிவரும் ஆண்களை ரசித்து விட்டு தூக்கி எறிபவள். அப்படி செய்யும் போது ஒரு கட்டத்தில் சாவித்திரியே தூக்கி எறிகிறான் ஒருவன் .அப்போது உண்மையான முகம் யாருக்கு என்பதை அருள்மணி கதாபாத்திரத்தின் வாயிலாக இந்த முகம் கதையை சொல்லி இருப்பார். "கரும்பு கட்டு தூக்குறவளுக்கு கரும்பு வெட்டுறவன் தான் பிரிசனா வருவான்" என்ற வார்த்தை எப்படி அவள் மனதை மாற்றியது என்பதை இக்கதை

 அடங்காத அழுகை கதை ஆனந்த விகடனில் வந்த போது வாசித்தேன். அப்போதே இக்கதை மிக நெருக்கமாக மனதிற்குப் பட்டது.. ஆசிரியர்  மாணவியை பார்த்து நீ எந்த ஊர் ?என்று கேட்கிறார் அதற்கு அவள் பதில் சொல்ல வேண்டும் இதுதான் கதை .இந்த ஒரு வரி கதையை படிக்கும் அனைவரையும் இழுக்கும் விதமாக அந்த கதை செல்கிறது. இந்த ஒரு வரியை அவர் 5 பக்கங்களில் சுவாரசியம் குன்றாமல் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை அந்த ஆசிரியரைப் போலவே நாமும் அந்த மாணவியின் வாயிலிருந்து வரும் பெயரைக் கேட்க ஆவலாய் உள்ளது போல் அடங்காத அழுகை கதை இருக்கும்.

கூடுன்னாலும் குருவிக்கு அதுதான் அரண்மனை என்ற மகன் ராமனிடம் வயதான கிராமத்தில் வாழும் துளசியம்மாள் சொல்கிறாள். மகனும் மருமகளிடம் ஒரு கட்டத்துக்கு மேல் வரக்கூடாது என்று சுயமரியாதையுடன் வாழும் பெரியவர்களை காலம் சில சூழ்நிலைகளில் மகனிடமோ அல்லது மருமகளிடமோ வந்து தங்க வைத்து விடுகிறது.இந்த மனப்போராட்டம் பல பெரியவர்களிடம் இருக்கிறது. விரிசல்களை தவிர்த்து வாழ நினைக்கும் போது அவர்களின் சுயமரியாதை எவ்வாறெல்லாம் சுரண்டப்படுகிறது அல்லது உண்மையான கோர முகங்களை பார்க்கும் நுட்பமும் சொந்த வீடு என்ற இந்த கதையில் விளக்கி இருப்பார்.

90களில் கிராமங்களில் மகளிர்க்கு தான் மலைவாழை அல்லவோ கல்வி எனும் வாசகம் முற்றிலும் பொருந்தும். ஏனெனில் பெண்கள் வயதுக்கு வந்தால் பலர் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். குறிப்பிட்ட பருவம் எய்திய உடன் திருமணம் செய்து முடித்து விடுவார்கள். இன்று அப்படி இல்லை என்றாலும் சில கிராமங்களில் இன்றும் பெண்கள் கல்வி தொடர்வதற்கு வயது ஒரு காரணமாக இருக்கிறது. அதனை மையப்படுத்தி ஆசைகள் என்ற கதையை இமையம் அவர்கள் எழுதி இருப்பார்கள். பெண்கள் வயது மூப்பு அடைவதை பற்றி ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் பட்டாசு தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

கந்தர்வன் இரண்டாவது ஷிப்ட் என்ற கதை எழுதி இருப்பார் அந்த கதையை நினைவுபடுத்தும் விதமாக அதே நேரத்தில் காலை நிகழ்வை மட்டும் மையப்படுத்தி இந்த இயந்திரங்கள் கதை எழுதப்பட்டுள்ளது. வழக்கமாக இருவரும் பணிக்குச் செல்லும் போது பெண்கள் தான் அதிக வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். அப்போது ஏற்படும் கோபம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப செய்யும் காரியங்கள் என ஒவ்வொன்றிணையும் மிக அழகாக வார்த்தைகளால் கோர்த்து இந்த கதை அமைந்திருக்கும் ஒவ்வொரு சண்டைகளும் பெண்கள் ஆண்கள் வீட்டு ஆட்களை திட்டுவதும் பதிலுக்கு அவர்கள் இவர்களை பேசுவதுமாக எல்லோர் வீட்டில் நடக்கும் சம்பவங்களைத் தான் இந்த கதை நமக்கு கண்ணாடி வழியே காட்டுவது போல் இருக்கிறது. 

இந்த கதைகள் எல்லாம் கட்டுரைகள் போல் முன்னுரை பொருளுரை முடிவுரை என்று வழக்கமான டெம்ப்ளேட்டுகள் வடிவில் கதைகள் இல்லாமல் இமையத்தின் பெரும்பலமே சம்பவங்களை சுவாரசியமாக்கி, வார்த்தைகளில் வடித்துக் கொடுப்பதுதான். அவர்களுடைய கதைகளில் உரையாடல் மிகப்பெரிய பங்கினை பெற்றிருக்கும். அந்த உரையாடலின் வழியாகத்தான் கதைகள் நகரும். அவை சாதாரண உரையாடல்கள் போலவே தோன்றும் ஆனால் அவை கதைகளுக்கு எவ்வளவு ஆழமான அர்த்தமுடையவை என்பதை அந்த கதை முடியும் போது நம்மை உணர வைத்திருப்பார். 

கதைகளின் பரிணாமங்கள் இப்படித்தான் நிகழும் என்பதை நாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. காரணம் கதைகள்  ஒரே நேர்கோட்டில் இல்லாமல்
ஆற்று நீரோட்டம் போல வளைந்து வளைந்து செல்லும் போது என்னதான் நடக்கிறது என்பதனை நாம் மெல்ல கவனித்துக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. இலக்கிய மேற்கோள்களோ அல்லது வாழ்வியல் தத்துவங்களோ இவருடைய கதைகளின் நிறைந்திருக்காது. ஆனால் வாழ்வியல் சம்பந்தமான அர்த்தமுள்ள உரையாடல்கள், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இவருடைய கதைகள் விவரிக்கப்பட்டிருக்கும். ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை இவருடைய கதைகள் எப்போதும் தரும் அந்த வகையில் இந்த சிறுகதை தொகுப்பும் நிச்சயம் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை உள்வாங்கும் நோக்கில் இருக்கும் 

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday, 15 January 2026

ஜா-21


வாழ்க்கைக்கு ஹைக்கூ 21:

"நான் குனிந்து, 
கூர்ந்து கவனிக்கும் போது, 
கற்கள் கூட பதிலளிக்கின்றன."
— யுவான் மேய்

சீனக் கவிஞரான யுவான் மேய் எழுதிய இந்த ஹைக்கூ வரிகள் "ஜென்" தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை.

பொதுவாகக் கற்கள் உயிரற்றவை, கடினமானவை என்போம். ஆனால், நாம் நமது மனதின் இரைச்சலை அடக்கிவிட்டு, முழு ஈடுபாட்டுடனும் (Mindfulness), மிகுந்த கவனத்துடனும் ஒரு விஷயத்தை அணுகினால், பேசாத கற்கள் கூட நம்முடன் பேசும். இயற்கையின் மிக நுண்ணிய அசைவுகளைக் கூட நம்மால் உணர முடியும்.

இந்த மெட்டாஃபரின் மூலம் நமது அன்றாட வாழ்க்கைக்கு மூன்று முக்கியமான பாடங்களை கற்றுக் கொள்ளலாம்:

1. கவனமாக கேட்பதின் சக்தி (The Power of Deep Listening):
இன்று நம்மில் பலர், பிறர் சொல்வதைக் கேட்பது, அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகத்தானே தவிர, அவர்களைப் புரிந்து கொள்வதற்காக அல்ல. "கூர்ந்து கவனித்தல்" என்பது ஒரு தியானம் போன்றது. 

நாம் முழுமையாக ஒருவரையோ அல்லது ஒரு சூழலையோ கவனிக்கும்போது, வார்த்தைகளால் சொல்லப்படாத உண்மைகளைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

2. நிதானம் மற்றும் பொறுமை (Stillness and Patience):
படத்திலுள்ள கற்கள் ஒன்றின் மேல் ஒன்று சமநிலையில் அடுக்கப்பட்டுள்ளன. இது நிதானத்தைக் குறிக்கிறது. அவசரமான உலகில், நாம் சிறிது நேரம் நின்று, நிதானித்து, சூழலைக் கவனித்தால் மட்டுமே வாழ்க்கையின் அழகையும், நமது பிரச்சனைகளின் தீர்வுகளையும் கண்டடைய முடியும்.

3. கல்லும் கரையும் (Empathy):
வாழ்க்கையில் "கல்" போன்ற கடினமான மனிதர்களோ அல்லது கடினமான சூழ்நிலைகளோ நமக்கு எதிர்ப்படலாம். 

அந்த சமயங்களில் நாம் அவர்கள் மீது கோபப்படாமல், பதற்றமடையாமல் சற்று இறங்கி வந்து, பொறுமையுடன் அவர்கள் தரப்பைக் கேட்டால், அந்தக் கல் மனமும் கரையும்; கடினமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

Tuesday, 13 January 2026

சொக்கன்


இந்த மாத 'அந்திமழை' இதழில் கலை இயக்குநர் தோட்டா தரணியின் பேட்டியைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது:

> நாம் செய்யும் வேலைமீது நமக்குப் பயம் வேண்டும். சின்னதாகக் குடிசைச் செட் போட்டாலும் எனக்குப் பயம் இருக்கும்.

உளவியலாளர்கள் Anxiety (பதற்றக் குறைபாடு) பற்றிப் பேசுகையில், நம்முடைய அன்றாடப் பணிகளைச் செய்யும்போது நமக்குள் சிறிதளவு பதற்றம் இருந்தால் அது நம் வாழ்க்கையைப் பாதுகாப்பாக்குகிறது, நேர்த்தியாகச் செலுத்துகிறது என்பார்கள். அந்த அச்சம் அளவுக்கு மீறினால்தான் சிக்கலாகிவிடுகிறது. கட்டுக்குள் இருந்தால் அதுவும் ஒரு நல்ல, பயனுள்ள கருவிதான். கலைஞர்களுக்கும் அது பொருந்தும் என்பதைத் தோட்டா தரணி மிக அழகாகச் சொல்லிவிட்டார்.

ஆக, அச்சம் என்பதும் வலிமையடா!

Monday, 12 January 2026

ஜா-16


வாழ்க்கைக்கு ஹைக்கூ 19

"சூரிய ஒளியைக் காணாமலே, 
அந்தக் குளிர்கால கமிலியா மலர் 
பூத்துக் குலுங்குகிறது."

- கோபயாஷி இஸ்ஸா

பொதுவாக மலர்கள் மலர்வதற்குச் சூரிய ஒளி மிக அவசியம். சூரியனைப் பார்த்தால் தான் பல பூக்கள் மலரும். ஆனால், இந்தக் கவிதையில் வரும் "குளிர்கால கமிலியா" (Winter Camellia) மலர், சூரிய வெளிச்சம் இல்லாத, இருண்ட மற்றும் குளிர்ந்த சூழலிலும் முழுமையாக மலர்கிறது.

இங்கு சூரிய ஒளி என்பது  சாதகமான சூழ்நிலை, பாராட்டு அல்லது நமக்கு மற்றவர்கள் தரும் ஆதரவைக் குறிக்கிறது. மலர்வது என்பது நம்முடைய செயல்பாடு அல்லது வெற்றியைக் குறிக்கிறது. இந்த ஹைக்கூவின் மூலம், இஸ்ஸா: "சிறப்பாகச் செயல்பட, சாதகமான சூழ்நிலையோ அல்லது பிறரின் ஆதரவோ அவசியம் இல்லை. மனதில் உறுதி இருந்தால், இருளில்கூட நம்மால் ஒளிர முடியும்." என்ற கருத்தை கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கு உதாரணமாக நம் காலத்தில் வாழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களை எடுத்துக்கொள்ளலாம். அவர் பிறந்தது ராமேஸ்வரத்தில் ஒரு மிகச் சாதாரணமான குடும்பத்தில். மின்சார வசதியோ, பண பலமோ, பெரிய பின்புலமோ அவருக்குக் கிடையாது. தினசரி செய்தித்தாள் போட்டு தனது செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வறுமை இருந்தது. இது "சூரிய ஒளி இல்லாத" நிலையைக் குறிக்கிறது. ஆனால், கலாம் அவர்கள், வசதிகள் இல்லை என்று அவர் முடங்கிவிடவில்லை. மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்தார். தோல்விகளைக் கண்டார் (விமானப்படை வேலை கிடைக்காதது). தன் விடாமுயற்சியால் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், அனைவரும் மதிக்கத்தக்க ஜனாதிபதியாகவும் உயர்ந்தார்.

பொதுவாக, "யாராவது என்னைப் பாராட்டினால் தான் நான் செய்வேன்," "சூழ்நிலை சரியாக அமைந்தால் தான் நான் தொடங்குவேன்" என்று நாம் பல நேரங்களில் காத்திருக்கிறோம். சூரியன் வரட்டும் என்று கமிலியா காத்திருப்பதில்லை. அதுபோல, பிறர் பாராட்டுவதற்கோ, உதவிகள் கிடைப்பதற்கோ காத்திருக்காமல், நமது கடமையைச் செய்து வரவேண்டும். நமது திறமை தானாகவே ஒருநாள் வெளிப்படும்.

வாழ்க்கையில் கஷ்டங்கள் (குளிர்காலம்) வரும்போது நாம் சோர்ந்து முடங்கி விடுகிறோம். கடினமான காலக்கட்டத்தில்தான் நம் உண்மையான வலிமை வெளிப்பட வேண்டும். இருள் சூழ்ந்திருந்தாலும், நம்மால் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

"எனக்கு அந்த வசதி இல்லை, இந்த வசதி இல்லை" என்று குறை கூறிக்கொண்டே இருப்பதை விட, இருப்பதை வைத்துச் சிறப்பாகச் செயல்படுவதே அழகு. 

இதைத் தான் ரூமி, “இருள் நிறைந்த பாதையில் ஒளியில்லையே என்று தேடாதீர்கள். சற்று கவனித்துப் பாருங்கள், நீங்களே அந்த ஒளியைத் தரும் தீபமாக இருக்கக்கூடும்" என்கிறார்.

Wednesday, 7 January 2026

ஜா-18


வாழ்க்கைக்கு ஹைக்கூ 18

"எவ்வளவு குளிர்ச்சி!
மணியை விட்டு
விலகிச் செல்லும் அந்த ஓசை..."

- யோசா பூசன் 

இந்தக் கவிதை ஒரு காற்றில் அசையும் மணியிலிருந்து (Wind chime) எழும் ஓசையை விவரிக்கிறது.

காற்றால் மணி ஆடும்போது சத்தம் வருகிறது. ஆனால், அந்தச் சத்தம் மணிக்குள்ளேயே இருந்தால் அது யாருக்கும் கேட்காது. அந்தச் சத்தம் மணியை விட்டுப் பிரிந்து, காற்றில் கலந்து, வெளியே வரும்போதுதான் அது இனிய ஒலியாக மாறுகிறது.

இங்கே "குளிர்ச்சி" என்ற சொல் "மன அமைதி" மற்றும் "பாரமற்ற மனநிலை"யைக் குறிக்கிறது.

இந்த ஹைக்கூவின் மூலம் பூசன் "ஒன்றைப் பற்றிக்கொண்டே இருப்பதை விட, அதை விடுவிப்பதில்தான் அழகும் பயனும் இருக்கிறது." என்கிறார். ஓசை மணியை விட்டுப் பிரியும் அந்த நொடிதான் ஆனந்தத்தைத் தருகிறது.

"ஒரு தாய் தன் பிள்ளையை வளர்ப்பதை" நினைத்துப் பாருங்கள். ஒரு தாய் தன் குழந்தையைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறாள் (மணி). ஆனால், அந்தக் குழந்தை வளர்ந்து, வீட்டை விட்டு வெளியே சென்று, தன் சொந்தக்காலில் நின்று சாதிக்கும்போதுதான் (ஓசை பிரியும்போது), அந்தத் தாய்க்கு உண்மையான பெருமையும், மனநிறைவும் கிடைக்கிறது.

"என் பிள்ளை என்னுடனேயே இருக்க வேண்டும்" என்று நினைத்தால் (ஓசை மணிக்குள்ளேயே இருந்தால்), அங்கே வளர்ச்சி இல்லை; மகிழ்ச்சி இல்லை. பிள்ளையை உலகத்திற்குப் பறக்க விடும்போதுதான் வாழ்க்கை முழுமையடைகிறது.

அதே போல, ஒரு பூ, தன் நறுமணத்தைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டால் அதற்குப் பயன் இல்லை. அது காற்றோடு கலந்து, பூவை விட்டு விலகிச் செல்லும்போது தான் பயன் ஏற்படுகிறது.

நாம் பல நேரங்களில் கடந்த காலக் கசப்புகளையோ, கோபத்தையோ அல்லது நமது பதவியையோ, நமக்குப் பிடித்தவர்களையோ இறுக்கமாகப் பற்றிக்கொண்டு இருக்கிறோம்.

மணி எப்படி ஓசையைத் தக்க வைத்துக்கொள்ளாமல் காற்றில் பறக்க விடுகிறதோ, அதுபோல உங்கள் கவலைகளையும், எதிர்பார்ப்புகளையும் மனதை விட்டு வெளியேற்றும் போது தான் மனம் "குளிர்ச்சியாக" அமைதியாக இருக்கும்.

கீதையில் சொல்வது போல, "கடமையைச் செய், பலனை எதிர்பாராதே." என்ற தத்துவம் மனநிறைவுக்கு முக்கியம்.

நாம் ஒரு நல்ல செயலைச் செய்தவுடன் (ஓசை எழுப்பியவுடன்), அதை மறந்துவிடுவது நல்லது. "நான் செய்தேன், எனக்குப் பாராட்டு வேண்டும்" என்று அந்தச் செயலையே பிடித்துக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. அந்தச் செயல் உலகத்தைச் சென்றடையட்டும்; நாம் அதிலிருந்து விலகி நிற்கலாம்.

நம்மிடம் இருக்கும் அறிவு, செல்வம் அல்லது அன்பு ஆகியவை நமக்குள்ளேயே இருந்தால் யாருக்கும் பயனில்லை.

அது மணியை விட்டு வரும் ஓசை போல, உங்களை விட்டுப் பிறருக்குச் செல்லும்போதுதான் உண்மையான மதிப்பைப் பெறுகிறது.

Attachment leads pain; Detachment leads peace!

Tuesday, 6 January 2026

tsa-5


#மனசுக்கு_ஒரு_தேநீர்_5

ஒரு மனிதன் தினமும் தன் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவன் துடைப்பதை நிறுத்திவிட்டான்.
நாட்கள் சென்றன.தூசி படிந்து அவன் பிரதிபலிப்பை மறைத்தது.
அவன் நினைத்தான், “நான் என்னை இழந்துவிட்டேன் என்று.”மீண்டும் கண்ணாடியை சுத்தம் செய்தபோது தான் அறிந்தான்
அவன் முகம் போகவில்லை; அது வெறும் தூசியினால் மூடப்பட்டிருந்தது என்று.
உன் உண்மையான “நான்” ஒருபோதும் மறைவதில்லை.
அது எண்ணங்கள், பயங்கள், குழப்பங்கள் ஆகியவற்றால் தற்காலிகமாக மங்குகிறது.
தெளிவு தேடுவதால் அல்ல — மனதின் தூசியை நீக்குவதால் கிடைக்கும் என்கிறார் புத்தர்

இதேபோல் மற்றொன்று
ஒரே கடலில் இரண்டு மீன்கள் வாழ்ந்தன.  

ஒன்றை கண்ணாடிக் கிண்ணத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
மீன் பாதுகாப்பாக உணர்ந்தது ஆனால் உண்மையில் சுதந்திரமாக இல்லை. மற்றொரு மீன் விசாலமான கடலில் நீந்தியது.  
அது அலைகள், புயல்கள், மற்றும் தெரியாத ஆபத்துகளை சந்தித்தது.  
ஆனால் அதுவே நீரின் ஆழத்தை உணரச் செய்தது.  

ஒன்று கடலைப் பற்றி கற்றுக்கொண்டது.  
மற்றொன்று கடலில் வாழ்ந்து கடலை அனுபவித்தது.  கிண்ணம் அதே “பாதுகாப்பு” என்று கூறியது.கடல் அதே “உண்மை” என்று கூறியது.  

ஒன்று நம்பிக்கையை கற்பிக்கும்.  
மற்றொன்று இருப்பதைக் கற்பிக்கும். விதிகள் உண்மையைக் காட்டக்கூடும், ஆனால் விழிப்புணர்வே அதை வாழச் செய்யும்.  

புத்தரின் கருத்தில் அறிதல் என்றால் கருத்து-அறிவு மட்டும் இல்லாமல், அனுபவத்தின் மூலம் பார்ப்பதும் ஆகும்.

புத்தம்புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 5 January 2026

tea-4


#மனசுக்கு_ஒரு_தேநீர்_4

தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது. அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி... அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன... சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது... அந்த நூறு நாய்களும் பதிலுக்கு.... "உர்ர்.. உர்ர்.." என்றது.

அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது. இருந்தும் கோபம் தாளாமல்.. "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.

எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது. அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன் மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திக் கொண்டது.....

அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,

" வெறி பிடித்ததை" போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன...

இந்த நாய் பயத்தின் உச்சத்தில்... வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது....

இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது....

இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்கு புரிந்திருக்கும்.தான் நுழைந்தது கண்ணாடி அறை என்று...தன்னை சுற்றி இருந்ததுதான் என்று....குரைத்தது தன் குரலின் எதிரொலி தான் என்று....

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.... நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும்..

அன்பு செலுத்தினால்... அன்பு கிடைக்கும்...
நீ எதை விதைக்கிறாயோ....,"அதுவே முளைக்கும்"...

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 4 January 2026

தேநீர்,-3


#மனசுக்கு_ஒரு_தேநீர்_3

ஜப்பானில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போதே 'கேன்பாரு' (Canbaru)எனும் ஒரு ஜப்பானியச் சொல்லை சொல்லி வளர்க்கிறார்கள். அதன் பொருள்
விடா முயற்சியைக் கைவிடாதே” எது உன்னுடைய முழுத் திறமையோ  அதை நன்றாகச் செய்வதிலே முழு கவனஞ் செலுத்து என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது!

நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு, அல்லது மூன்று சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்திருப்பீர்கள். மற்றச் செயல்கள் எல்லாம் கவனமின்றி, உங்கள் மனம் ஒருமுகப்படாமல் செய்யப்பட்டவை.

 நீங்கள் வேலை மும்முரத்தில் இருப்பதை விட குருட்டுச் சிந்தனையில் இருக்கும் நேரமே அதிகம். அப்புறம் எப்படி நேரம் போதுமானதாக இருக்க முடியும்? மனித மனம் மிகப் பெரும் சக்தி வாய்ந்தது. அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டு விட்டீர்களென்றால், அற்புதமான பல செயல்களைப் புரிவீர்கள் என்கிறார் ஆண்ட்ரூ கார்னகி

எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் நேரம் தாராளமாய் உண்டு. நாம்தான் நேரத்தை சரியாய் பயன்படுத்துவதில்லை. நேரம் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது. அது நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்

இப்பொழுதே அழகாகி கொள்.
இப்பொழுதே சந்தோசமாக இரு.
இப்பொழுதே துவங்கு.
இப்பொழுதே வாழ்ந்து விடு..!!

எதிர்காலம் ஒன்றும், 
நீ இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கைக்கு பதிலாக
புதிதாக எந்தவொன்றையும் உனக்கு தந்து விடப்போவதில்லை
-ஷம்ஸ் தப்ரீஸி

புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு

book-3


#Reading_Marathon2026

#25RM009

Book No:3/150+

Pages:-416

நான் ப்ரம்மம்

-ஸ்ரீநிசர்கதத்த மஹராஜ்

ஆன்மிகவாதிகளை பின்பற்றுவதை விட அவர்கள் கூறும் கருத்துக்களை பின்ப்ற்றுவது உண்மையான ஆன்மிகமாக கருதுகிறேன். ஏனெனில் அக்கருத்துகள் மகிழ்ச்சியாக வாழ வழி செய்யும்

உளவியலாளர்கள் முதல் ஆன்மிகவாதிகள் வரை அனைவரும் வலியுறுத்துவது தன்னை அறிதல் தான்.நான் என்பதை ஒருவர் எவ்வாறு கையாளலாம் ஒன்றும் அறியாதவராக, ஆர்வமிக்கவராக, உறக்கத்திலிருந்து விழிக்கும் போது நான் எனும் விழிப்புணர்வு பெற்றவராக,தோன்றும். நாம் என்னவாக இல்லை என அறிந்தால் தான் நான் யார் என்பது தெரியவரும்.எதனையும் அடையாமல் வாய்ப்பு கொடுக்கப்படும் போது நீ வெளிப்படுவாய் பிறர் மீது அன்பு செய்வாய் என ஆரம்பத்தில்நான் எனும் உணர்வு குறித்து விளக்கமளிக்கிறார்.

ராமாயணத்தில் ஒரு காட்சியை விளக்கும் போது கம்பர்.. தயிர் மத்துகடைவது போல் துன்பம் தான் என்றும் நிலையாக மனிதவாழ்வில் உள்ளது. அது கடையும் நேரத்தை தவிர கிடைக்கும் சொற்ப நேரங்கள் தான் இன்பம் உள்ளது என்பார். மனநிலைகளின் ஓட்டம் முடிவற்றது, அர்த்தம் மிகுந்தது, வலி மிகுந்தது ஆகும். ஏனெனில் வலி ஒரு நிலையான காரணி. இரு வலி மிகுந்த நிலைகளுக்கு இடையே ஒரு இடைவெளியை நாம் இன்பம் என்று சொல்கிறோம் என அந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமான ஒரு வரியை இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். மனம் இயங்கும் வரை காரண காரிய தன்மைகளை அலசிக்கொண்டே இருக்கிறது. ஒன்றுதான் மற்றொன்று காரணம் என்று ஓயாமல் மனம் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு இடத்தில் ஆசை படாதே என்று நான் எப்போதும் சொல்லுவதில்லை.ஆசைகளை நிறைவேற்றுவதற்கு நீ பாடுபட வேண்டும். அதற்கான சக்தியை செலவிட வேண்டும். அதன் பின்பு அதன் பலன்களுக்காக காத்திரு என்ற நடைமுறை எதார்த்தத்தை புரிய வைக்கிறார்.

உலகை யார் நடத்துகிறார்கள் எனும் கேள்விக்கு யாரும் நடத்தவில்லை. எல்லாம் தானாக நடக்கின்றன. நீ கேள்வி கேட்கிறாய் நான் பதிலை சொல்கிறேன் அவ்வளவுதான் என்கிறார். 

மனிதனுக்கு பிராண மன,காரண எனும் மூன்று உடல்கள் உள்ளன .பிராண உடல் அவன் இருப்பையும், மனு உடல் அவன் அறிதலையும், காரண உடல் அவனுடைய ஆனந்தமான உருவாக்கம் குணத்தையும் குறிக்கின்றன. இதையெல்லாம் விழிப்புணர்வில் உள்ள நிலைகளே.

மாற்றத்திற்கு தேவையானது என்ன எனும் கேள்விக்கு..உன் உலகத்தை உள்ளவாறு பார். நீ கற்பனை செய்யும் வண்ணம் பார்க்காதே. பகுத்தறிவு பற்றற்ற தன்மைக்கு வழிவகுக்கும்; பற்றற்ற தன்மை சரியான செயலை உறுதி செய்யும்; சரியான செயல் உன் மெய்யான இருத்தலுக்கு உள்முகப் பாலம் அமைக்கும். முழுமூச்சான முயற்சிக்குச் செயல்தான் அத்தாட்சி. உனக்குச் சொன்னவற்றைப் பிசகாமலும் உண்மையாகவும் செய். எல்லாத் தடைகளும் கரைந்து விடும்.

அறியப்படுவதும் அறிபவரும் ஒன்றாவதாய் எனும் கேள்விக்கு.. இவை இரண்டுமே மனதின் கருத்துக்களே - வார்த்தைகள் அவற்றை வெளிப்படுத்துகின்றன. அவற்றில் சுயம் என்பது கிடையாது. சுயம் என்பது அவை இரண்டில் ஒன்றிலும்கூட இல்லை. அவற்றிற்கு இடையிலோ. அவற்றிற்கு அப்பாலோ இல்லை. அதை மனதளவில் தேடுவது வீண். தேடுவதை நிறுத்தி. அது இங்கேயே, இப்போதே இருப்பதைப் பார். அதுதான் நீ நன்கு அறிந்த 'நான்' என்னும் விழிப்புணர்வு. நீ செய்ய வேண்டிய தெல்லாம் உன்னை விழிப்புணர்வின் புலத்திற்குள் இருப்ப தாகவோ, அல்லது விழிப்புணர்வுப் புலத்தால் ஆனதாகவோ நினைப்பதை நிறுத்துவதுதான். இதைச் செய்தால் போதும். நீ தெளிவான கவனத்தை இதன்மீது வைத்திருக்க வேண்டும்.. உன் பழைய அனுபவங்களையும் சாதனைகளையும் மறந்துவிடு என்று பதில் அளிக்கிறார். 

புதிய மனத்துக்கும் பழைய மனதிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்விக்கு பழைய சுயம் எல்லாவற்றையும் வரையறுக்கவும் விளக்கவும் வேண்டுகிறது. அது வார்த்தைகளுக்குள் ஒவ்வொன்றும் பொருத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. வார்த்தைகளால் ஆன விளக்கங்களுக்கு புதுசுயம் முக்கியம்த்துவம் கொடுப்பதில்லை. ஞாபகத்தில் உள்ளவற்றோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்க்காமல் அது ஒவ்வொன்றையும் அவை இருக்கும் படியாக ஏற்றுக் கொள்கிறது என்ற வித்தியாசத்தை உணர்த்துகிறார்.

*நம்பிக்கை இல்லாமல் அமைதி இல்லை.யாரேனும் ஒருவரை நீ எப்போதும் நம்புவாய் அது உன் தாயாகவோ அல்லது உன் மனைவியாகவோ நண்பராகவோ இருக்கலாம்.

*எல்லா நேரமும் ஒவ்வொன்றும் தானாக நடக்கின்றது. ஆனால் நீ அதற்கு தயாராக இருக்க வேண்டும்.தயாராக இல்லாமல் இருப்பது குழந்தைத்தனம்.

*நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எப்போதும் எதிர்காலத்திற்கே நகர்கிறாய்

*உன்னை கேட்பதெல்லாம் உன்னிடமே திரும்பிப் பார்.உன்னை நெருக்கமாக பார் .உனக்குள் ஆழமாக பார் என்பதே

புத்தகத்தின் மையம் என்பது நான் இன்னும் உணர்வை பெறுவது தான். அதற்குத் தேவையானவை விழிப்புணர்வு மட்டுமே.அந்த விழிப்புணர்வுக்கு தடையாக இருப்பவை எவை எவை எல்லாம் உள்ளன என்பதனை கேள்வி பதில் வடிவில் கூறியுள்ளார். சில உரையாடல்கள் சாதாரண வடிவிலும் சிலவற்றிற்கு மிகவும் ஆழ்ந்த பதிலும் இந்த புத்தகத்தில் தந்துள்ளார். எந்த இடத்திலும் கடவுளை வணங்கு என்று கூறவில்லை. ஒவ்வொரு இடத்திலும் உன்னை எவ்வாறு எல்லாம் மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும், உன்னை எவ்வாறு எல்லாம் உள்ளுணர்வுடன் நோக்க வேண்டும், அதற்கு தேவையானவை என்ன என்ன என்பதனை பற்றிய மனித மனதை நான் என்று அறிய வைப்பதற்கான முயற்சியில் இந்த புத்தகம் உள்ளது. எந்த இடத்திலும் மூடநம்பிக்கைகளை பரப்பும் கருத்துக்கள் இடம்பெறவில்லை. கேள்விகள் தர்க்க ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் நிகழ்கின்றன. இன்னும் கொஞ்சம் சுருக்கி தத்துவ வடிவில் கொடுத்திருந்தால் இன்னும் இந்த புத்தகம் மேம்பட்டதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் 

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு