Wednesday, 7 August 2024

புத்தகம்-18


Reading_Marathon2024
#24RM050

Book No:18/100+
Pages:240

ஆனைமலை
-பிரசாந்த் வே

கோவை புத்தகத் திருவிழாவில் வாங்கிய நாவல் இது. பழங்குடியினர் பற்றிய ஆராய்ச்சியில் இருப்பதால் இந்த நாவல் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது.இந்தியாவில் பழமையான பழங்குடியினரான காடர்கள் வசிக்கும் பகுதி ஆனைமலை.புத்தகத்தை தோழர் பரமசிவம் அவர்களுக்கு சமர்ப்பித்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். .ஆனைமலை பகுதியில் பழங்குடியினர் பற்றி ஆராய வேண்டும் என்றால் இவர்தான் நமக்கு வழிகாட்டியாக இருப்பார் .நண்பர் அருண் பாலாஜி மூலம் அவரிடம் இரண்டு மூன்று முறை அலைபேசியில் பேசியுள்ளேன். நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிட்ட வில்லை. பழங்குடியினர் நலனுக்காக போராடும் இடதுசாரி போராளி இவர் இனி நாவலை பற்றி பார்ப்போம்.

மனுஷங்களும் விலங்குகளும் ஒண்ணா வளர்வது சாத்தியமே இல்லை என படித்தவர்கள், என் ஜி ஓ கள் இயற்கை ஆர்வலர்கள் ஆகியோரின் வழியே இந் நாவல் தொடங்குகிறது. ஆனைமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்ட பிறகு புலிகளின் நல்வாழ்வுக்காக பழங்குடியினரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் கருத்தரங்கு நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் புதிய வன பாதுகாப்பு அதிகாரியான இளன் காடுகள் குறித்து அறிந்திருந்தாலும் களத்தில் அவரின் அனுபவம் குறைவு. களத்தில் நேரடியாக காடர்களை சந்திக்கும் போது அவர்களை வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்ளும்போது ஆனைமலையின் உண்மையான வரலாறு விலங்குகள் அழிப்பும் காடுகளின் அழிப்பும் பற்றி தெரிந்து கொள்ளும்போது நம்மை புது உலகத்திற்கு நாவல் வழிகாட்டுகிறது.

புலிகள் கணக்கெடுப்புக்கு செல்லும் இளன் காடுகள் குறித்து ஒவ்வொன்றாக தெரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் காட்டில் யானைகளால் இளன் தாக்கப்பட நேரும் போது காட்டு ராசா யானை மிரட்டி இலைகளைக் கொண்டு யானை மொழியில் பேசி யானையை விரட்டுகிறார் அப்போது காட்டு ராசாவின் மேல் இளனுக்கு அன்பு பிறக்கிறது. காட்டு ராசா விலங்குகளின் அனைத்து உத்திகளையும் காடுகளின் நுட்பத்தையும் அறிந்தவன். மலையின் கீழ் இருக்கும் கவுண்டர் தோட்டத்தில் வேலைக்கும் செல்பவன். யானைகளை விரட்ட தெரிந்த ஒரு சில காடர்களில் காட்டு ராசாவும் ஒருவன். அவன் சுந்தரியை மணந்து காட்டில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான்.

ஆனைமலை காடுகளில் தேக்கு மரங்களுக்கு வித்திட்டவர் ஹ்யூகோ வுட் என்னும் ஆங்கிலேயர் அதற்கு முன் இருந்த வில்லியம்சின் கொடுமைகளை அனுபவித்த காடர்கள் இவரின் வருகைக்குப் பிறகு மகிழ்ச்சியாய் இருந்தனர் உயிர்களை காப்பாற்றுதல் காடுகளை மேம்படுத்தல் என பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். உலகப் போரில் கூட கப்பல் செய்ய மரங்களைக் கேட்டபோது பிடிவாதமாய் மறுத்து விட்டார் இவையெல்லாம் வுட்டின் மீது நமக்கு இருக்கும் நன்மதிப்பை அதிகப்படுத்துகிறது.

ஆழியாறு, பரம்பிக்குளம் அணை கட்டுவதில் பழங்குடியினரின் இடமாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது அணைக்கட்டுலின்போது அவர்கள் பட்ட துன்பங்கள் என்னென்ன‌.. காடுகளை விட்டு சமவெளிக்கு வந்த வானம்மா கூறும் கதைகள் காடுகளை விட்டு வரக்கூடாது என்ற எண்ணத்தை காட்டு ராசாவின் மனதில் விதைத்தது.

அமைதியாகச் செல்லும் காட்டு ராசாவின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஒன்று வந்து சேர்கிறது. காடு அழிப்பு புலிகள் படுகொலை போன்றவைகளால் பழங்குடியினர் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் உண்மையின் தன்மை இன்றி அப்பாவியான பழங்குடியினர் பல சமயங்கள் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றனர் என்பதும் காட்சி வடிவில் நமக்கு நாவல் உணர்த்துகிறது.

இறுதியில் வனத்துறையினர் எவ்வாறு பழங்குடியினருக்கு எதிராய் இருக்கின்றனர், பழங்குடியினரின் வாழ்வியலில் எந்த ஒரு ஒளி வெளிச்சமும் இல்லாமல் இருளில் அவர்கள் செய்வதறியாத திகைத்து நிற்கும் போது நம்மையும் திகைத்து நிற்கச் செய்து விடுகின்றார்கள் .காட்டு ராசாவின் மனநிலையும் பழனிச்சாமியின் கண்ணீருடன் இந்த நாவலை முடிக்க வேண்டி இருந்தது.

#ரசித்தது

*புலிகள் கணக்கெடுப்பு மே மாதமும் டிசம்பர் மாதமும் நடக்கும். 

*க்ளோஸ் என்கவுண்டர் என்பது எதிர்பாராத வகையில் வனவிலங்குகளால் காட்டில் தாக்கப்படும் நிகழ்வு

*வீடுகளை மலசர்கள் சாளை என்று அழைப்பது வழக்கம்

*காடு காரிருளை போர்த்தி படுத்திருந்தது. தூக்க கலக்கத்தில் இருக்கும் குழந்தை தூங்கி தூங்கி விழிப்பது போல சோலார் விளக்குகள் விட்டுவிட்டு எரிந்தன

*யானை விரும்பி உண்ணும் புல் வகை யானை புற்கள் டெமிடாஸ் இன்பெரியா எனப்படுகிறது 

*மற்ற பறவைகளை தங்களது இடத்திலிருந்து துரத்துவதில் குறியாகவும், எப்போதும் சண்டையிட தயாராகவும் இருக்கும் பறவை மைனா

*காடுகளுக்கு இடையே தீ பரவாமல் இருக்க குறிப்பிட்ட அகலத்துக்கு செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தலுக்கு தீ தடுப்பு கோடுகள் என்று பெயர்.

*ஆனைமலையில் தங்கியிருந்த இளவரசரு வேட்டைக்காக செல்வதற்கு வால்பாறை சாலைகளை போட்டார் இந்த சாலையும் குதிரை போகிற மாதிரி வளைந்து வளைந்து போகும்

*பரம்பிக்குளம் சுற்றுலா செல்லும் ஒவ்வொருவரும் காணக்கூடிய ஒரு மரம் தன் கன்னிமாரா எனும் தேக்கு மரம். நான் ஒரு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மரத்தின் வரலாறு இதில் சொல்லப்பட்டுள்ளது.

*என்ன அடிச்சு கொன்னு போட்டா கூட எங்க கொடி அரைக்கம்பத்தில் பறக்குமே தவிர ,கொடியை எடுக்கிற பேச்சுக்கே இடமில்லை என நிதானமாகவும் உறுதியாகவும் தோழர் பரமசிவன் சொன்னார்.

*காட்டு விலங்குகள் மேல காட்டுற அக்கறையை கூட மனுசங்க நம்ம மேல யாரும் காட்டுறது இல்ல

நாவலின் எந்த ஒரு இடத்திலும் தொய்வின்றி ஆராய்ச்சி உணர்வுடன் ஒவ்வொரு அத்தியாயமும் புதிய புதிய தகவல்களையும் வனம் குறித்த செய்திகளையும் நமக்குச் சொல்லி இருந்தது. .ஆழ்ந்த இலக்கிய நடை போன்று இல்லாமல் சாதாரண பாமர மக்கள் பேசும் மொழியினை உரைநடையாக எழுதிக் கொடுத்திருப்பார் ஆசிரியர் பிரசாந்த். இயற்கைக்கு எதிராக போராடுவதா அல்லது அரசாங்க வனத்துறையினரை எதிர்த்து போராடுவதா எனும் கேள்விக்கு விடை தெரியவில்லை. இதில் சூழலியலாளர்கள் பறவைகள் விலங்குகள் பக்கமும், பழங்குடியின செயல்பாட்டாளர்கள் பழங்குடி மக்கள் பக்கம் இருப்பதால் இருவரிடமும் கருத்து வேறுபாடுகள் மிகுந்து உள்ளது. ஆகவே இது பொது தன்மையுடன் வனங்களின் மக்களாகிய பழங்குடியினரை துன்புறுத்தல் இன்றி வனத்தையும், வனத்தை நம்பி வாழும் பழங்குடியினரையும் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment