Reading_Marathon2024
#24RM050
Book No:19/100+
Pages:144
காரான்
-மு.காமுத்துரை
எழுத்து என்பது வித்தை எல்லாம் இல்லை நிகழ்வுகளை தொகுத்துப் பார்த்துச் சொல்லத் தெரிந்தாலே போதும் என காமுத்துரை சொன்னதாக கல்யாண்ஜி சொல்லியிருப்பார். ஒரு சிறுகதை ஆசிரியருக்கு தேர்ந்த கதை சொல்லல், உக்தி இருப்பவர்கள் தான் நல்ல கலை படைப்புகளையும் படைக்க முடியும். எளிதான மொழிகள் எந்த பகட்டும் இல்லாமல் இருப்பதை உள்ளவாறு.. மேலும் அழகுற இருப்பதை சீர்கெடுக்காமல் சொன்னாலே அது ஒரு நல்ல சிறுகதையாக வருவதற்கான முழு வாய்ப்பு உண்டு. அந்த வகையில் இந்த தொகுப்பில் உள்ள பல கதைகள் மனதிற்கு நெருக்கமாக உள்ளன. சில கதைகளை வார இதழ்களில் படித்திருந்தாலும் தொகுப்பாக படிக்கும்போது என்ன மனதுக்கு நெருக்கமாய் இருக்கிறது.
மாடு கன்று வைத்திருப்பவர்கள் தான் பெரிய ஆட்கள் என்று நம்பிக்கொண்டிருந்த போது என் அம்மா ஊரில் எருமை வளர்த்த கதையைச் சொல்லி இருப்பார். அந்த கதையோடு தொடர்பு படுத்தி தான் காரான் கதையை படிக்க முடிந்தது. அதில் உள்ள சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் எருமைக்கும் இடையிலான பந்தம் தான் அக்கதை."குருவம்மாவின் நோவால் வீடே மந்தித்து கிடந்தது" என்ற வரிகளே நம்மை அந்த கிராமத்து வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறது.
"எருமைதான் நம்மள மாதிரி சம்சாரி போங்குக்கு ஏத்தது. எதை போட்டாலும் கழிக்காமல் தின்னுட்டு சிவனேன்னு படுத்து எந்திரிக்கும் ஆடைக்கும் கோடைக்கும் அதுபாட்டுக்கு திரியும் .பெருசா பண்டிதம் பார்க்க வேண்டியதில்லை என எருமை வளர்ப்பின் முக்கியத்துவத்தை ஏழைகளுக்கு புரியும்படி சொல்லி இருப்பார்.
ஊனு கம்பு கதையில் தலைமுறை தலைமுறையாக பணியில் இருக்கும் ஒரு தொழிலாளி தன்னுடைய முதலாளிக்கு காட்டும் விசுவாசத்தினை அவரின் பிள்ளையிடமும் எப்படி காட்டுகிறார் என்பதை இயலாமையின் வெளிப்பாடாக கதையில் கொண்டு வந்திருப்பார்
40 ரூபாய்க்கு சர்ட்டுகள் 150 ரூபாய்க்கு ஜீன்ஸ் பேண்டுகள். டெய்லர்கள் தூக்கிய தொங்கிய தீபாவளி அந்த வருஷம் தான் அரங்கேறியது என்பதனை டைலர் கடை வைத்திருக்கும் கமலக்கண்ணனின் கதையின் வாயிலாக நம் கண் முன்னே நிறுத்தி விடுகிறார். ஒரு பால்பாயிண்ட் பேனா தான் இங்க் பேனாவின் இறுதி வரலாற்றை எழுதியது என்பது போல ரெடிமேடு ஆடைகள் பல டெய்லர்களின் வாழ்க்கையினை சூறையாடிவிட்டது என்பதையும் நாம் கண்கூடாக உணர வைக்கும் காலத்தை நம் கண் முன்னே காட்டுகிறார். புதுத்துணியே தைத்துக் கொண்டிருந்தவருக்கு பழைய துணியை தைக்கும் வலி எவ்வளவு பாரமானது என்பதனை இக்கதை நமக்கு படித்தவுடன் கணக்க வைக்கிறது.
சகோதரியை பெண் பார்க்க வரும்போது சகோதரனும் மாப்பிள்ளை தோரணைக்கு மாறுகிறான் என்ற கருவை வைத்துக் கண்டு தன்னுடைய சகோதரியை பெண் பார்க்க வரும்போது தன்னை எவ்வாறெல்லாம் ஒரு சகோதரன் வெளி உலகினருக்கு வெளிக்காட்டிக்கொள்கிறான் ,எவ்வாறெல்லாம் தன்னை பொய்களை கட்டமைத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறான் என்பதனை பெண்பார்க்கும் படலம் கதை சொல்கிறது
ஒரு பொன்வண்டினை பிடித்து வைத்துக்கொண்டு ராசு வாத்தியாரின் வகுப்பறையில் அல்லாடும் மாணவர்களின் மனநிலையும், ஆசிரியரின் கண்டிப்புள்ள அந்த ஒரு காலகட்டத்தையும், ஒரு வகுப்பறை சூழலில் நிலவும் அமைதியையும் ஏக்கத்தையும் பொன்வண்டு காலம் கதை நமக்குச் சொல்கிறது.
வெள்ளை வெயில் கதை படிக்கும் போது மு.வவின் குறட்டை ஒலி கதை தான் நினைவுக்கு வருகிறது. ஒரு நாய்க்குட்டியிடம் ஒரு தாய் காட்டும் வாஞ்சையை கதை சொல்லி இருப்பது போல இதில் பூனை குட்டிகள் பசியால் வாடும் போது எவ்வாறு நம் இளகிய மனம் நம்முடைய வளர்ப்பு உயிரினங்களுக்கு உதவுகிறது என்பதனை இக்கதை படிக்கும் போது அறிய முடிகிறது. தான் கடன் வாங்கி வைத்திருந்த காப்பியை பூனைக்கு கொஞ்சம் ஊற்றும் போது "வெள்ளை வெயில் நிறம் மாறி பூத்தது "என்ற இறுதி வாக்கியத்துடன் கதை கவித்துவத்தோடு நிறைவு பெறுகிறது.
அறியாமையில் உண்டான அன்றைய பயத்துக்கும் இன்றைக்கு எட்டியுள்ள பட்டறிவு மற்றும் ஏட்டறிவால் கிட்டியுள்ள பார்வைக்கும் எத்தனை வேறுபாடு உண்டு. என்ற அழகிய வார்த்தைகள் தோய்ந்த கதை தான் காட்டில் பெய்யும் நிலாக்கள். ஊரடங்குக்கு பின்னான பேருந்து பயணத்தில் ஒரு குடிகாரருக்கும் ஓட்டுநருக்கும் இடையில் நடக்கும் கலகத்தை ஒரு திருநம்பி தீர்த்து வைக்கிறார் .இறுதியில் அந்த குடிகாரரை பேருந்தை விட்டு இறக்கிச் சென்று விட இருக்கும் போது என்ன நடந்தது என்பது தான் இக்கதை. பேருந்துகளைப் பற்றிய வர்ணனைகளை ரசித்து படித்தேன். 'குழந்தைகள் ஜன புழுக்கத்தில் நெளிந்து சிணுங்களானார்கள் '.ஆனாலும் சிலர் எந்த பிரக்னஞயும் இன்றி வாய்ப்பிழந்த உறக்கத்தில் கிடந்தனர். கண்ணெட்டும் தூரம் வரை படுதா போட்டு மூடியது போல ஒரே இருட்டு என்பன போன்ற ரசனை மிக்க வார்த்தைகளால் கதை பயணப்பட்டது.
ஊரில் இருக்கும் பெரியவர்களிடம் போனில் பேசும்போது நமக்கு ஒரு நிமிடம் ஆகும் ஆனால் அந்த ஒரு நிமிடத்தையும் ஒவ்வொரு நிமிடங்களும் நினைத்துக் கொள்வார்கள் பெரியவர்கள் அப்படித்தான். ஊருக்கு வரும்போது சொல்லிவிட்டு வாருங்கள் என்று சொன்னதை கேட்டு கலவரம் அடைந்த மகாலிங்கம் இனி பேசவே கூடாது எனும் முடிவுக்கு வருகிறார் .வீண் கோபங்கள் எப்போதும் குழந்தைத்தனமானது என்பதனை உணர வைக்கும் இறுதிக்காட்சியில் எதிர் வீட்டுக்காரரின் வீடியோ காலில் வரும் பேரனை பார்க்க மனைவிகிளம்பும்போது, சாய்வு நாற்காலி நிமிரும் ஓசை கேட்டது என்ற வரியோடு அந்த கதை நம்மையும் அந்த பெரியவரை மனநிலையை நினைக்க வைப்பதாக கதை முடிகிறது.
எம்பிஏ முடித்துவிட்டு சேல்ஸ்மேன் ஆக வேலை பார்க்கும் மாறனுக்கு ஏற்படும் சங்கடங்களும் தொல்லைகளும் குடும்ப உறவுகள் எவ்வாறு அதனை பார்க்கிறார்கள் அவனுக்கு நம்பிக்கை தருகிறார்கள் என்னும் கதை தான் "நாளைக்கு அம்மா சில டப்பாக்களை வாங்குவார்கள்" எனும் கதை. அம்மா பெண் ஜாதகம் கொண்டு வரும் தரகரிடம் அவனது வயசை ஒவ்வொரு வருஷம் குறைத்துச் சொல்லிக் கொண்டிருந்தார் எனும் வரியை படிக்கும் போது வேலையில்லாத அல்லது வயது முதிர்ந்த வாரிசுகளின் தாயின் மனநிலை உணர முடிகிறது. எந்த நேரத்திலயும் நம்மை தாழ்த்திக்கிறதோ நம்முடைய இயலாமையை பிறர்கிட்ட ஒப்பிக்கிறதோ பிரச்சினையை தீர்க்காது. வீக்கான பக்கம் இருக்கிறாப்ல ஸ்ட்ராங்கான இன்னொரு பக்கமும் இருக்கும் அதை கண்டுபிடி எல்லா வேலையும் சுலபமாகும் என அண்ணனுக்கு அட்வைஸ் செய்யும் ரமேஷ் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நேர்நிலை மனப்பான்மையுடன் இருக்கிறார்கள்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment