மனிதனுக்கு செவ்வாய் கிரகத்தை பற்றி தெரிந்ததை விட அண்டார்டிகா கண்டம் பற்றி தெரிந்தது குறைவு என்றால் வியப்பாக இருக்கும்
அண்டார்டிகா என நீங்கள் மேப்பில் பார்ப்பது அண்டார்டிக் பனிப்பாறையைத்தான். இது சுமார் ஐந்து கிமி கிலோமீட்டர் தடிமன் கொண்டதாக இருக்கும். பனிப்பாறையை ஐந்து கிமி கீழே துளைத்து சென்று ஆராய்ந்தால் தான் அண்டர்டிகாவின் நிலப்பரப்பே கண்ணில் தென்படும். எந்த மனிதனும் அதை பார்த்தது கூட கிடையாது என்பது மட்டுமல்ல, அதன் நிலபரப்பில் 90% இன்னும் ஆராய்ச்சி செய்யபடவே இல்லை
காரணம் அண்டார்டிகா என்பது பரப்பளவில் ஒட்டுமொத்த ஐரோப்பாவை விட சற்று பெரிய கண்டம். அதன் மேலே பறந்தபடி விமானங்கள் ரேடாரை கீழே அனுப்பும். ரேடார் அலைகள் பனிக்கட்டியைத் துளைத்து, நிலத்தை அடைந்து எதிரொலிப்பதன் மூலம், அந்த பகுதியின் நில அமைப்பு பற்றிய தகவல்களைப் பெற முடியும். இப்படி 10% நிலபரப்பு மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 90% நிலபரப்பு ஆராயபடவே இல்லை
அண்டார்டிகாவின் பனிக்கட்டியை முழுவதும் அகற்றினால், கீழே ஏராளமான எரிமலைகள், ஆறுகள், ஏரிகள் காணப்படும். அண்டார்டிகாவின் பனிக்கட்டியின் கீழே உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றான டிரான்ஸ்டென்டிக் மலைகள் அமைந்துள்ளன. இவை ஹிமாலய மலைகளை விட உயரமானவை. அண்டார்டிகாவின் ஒரு பகுதியான மேற்கு அண்டார்டிக் எரிமலை மற்றும் பிளவு மண்டலம் என்பது பசிபிக் தீவளையத்தின் ஒரு பகுதியாகும். அதனால் அன்டார்டிகாவின் பனிக்கு கீழே எரிமலைகளின் சூட்டால், பனிக்கட்டி உருகி, ஆறுகள் உருவாகி, பனிப்பாறைக்கு கீழே ஆறுகள் ஓடி, கடலில் நீரை சேர்க்கின்றன என்பது வியப்பான தகவலாகும். இதேபோல அண்டார்டிகாவின் பனிப்பாறைக்கு அடியே திரவடிவில் நீர் இருக்கும் மிகப்பெரும் ஏரிகளும் உள்ளன.
அண்டார்டிகாவின் பனிப்பாறைக்கு அடியில் திரவ நிலையில் நீர் நிரம்பிய மிகப்பெரிய ஏரிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது லேக் வோஸ்டாக் (Lake Vostak). மதிப்பீடுகளின்படி, இது சுமார் 15,690 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இது ஒரு சிறிய நாட்டின் அளவுக்கு சமம். இது பல லட்சம் ஆண்டுகளாக பனிக்கட்டியின் கீழ் உள்ளது.
ஐந்து கிமி பனிப்பாறைக்கு கீழே பல லட்சம் ஆண்டுகளாக இருப்பதால், இங்கே உயிர்கள் ஏதேனும் இருக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது. அத்தனை கிமி ஆழத்துக்கு சூரிய வெளிச்சம் போகாது. சூரிய ஒளிச்செர்க்கை நடைபெறாது. ஆனால் ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் அங்கே சில நுண்ணுயிரிகள் வசிப்பதை உறுதி செய்தனர்.
அதன்பின் பனியால் மூடப்பட்ட அண்டர்டிகாவின் எராபஸ் மலையில், குகைகள் இருப்பதும், அது எரிமலை என்பதால், குகைக்குள் நல்ல வெப்பம் இருப்பதும், 25 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், குகை ஜம் என உயிர்கள் வாழ தகுதியாக இருப்பதும், அங்கே திரவ வடிவில் நீர் இருப்பதும் தெரிய வந்தது. ஒளிசேர்க்கை தேவைபப்டாத கெமோசிந்தசிஸ் மூலம் உயிர்கள் உருவாகலாம்
ஆக, நாம் வாழும் பூமிக்கு அடியிலேயே முற்றிலும் புதிய வகையிலான உயிர்கள் வாழகூடும் என்பதே வியப்பளிக்கிறது. அண்டார்டிகா போல பல கிரகங்கள், நிலவுகளில் பனியால் மூடப்ட்ட திரவநிலை சமுத்திரங்கள், ஏரிகள் உள்ளன. அங்கேயும் இதுபோல மிக புதிய வகை உயிர்கள் வாழலாம். #பூமியும்_வானமும் இடையே எத்தனை அதிசயங்கள், விந்தைகள்
~ நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment