Friday, 9 August 2024

கிளி


தனியாக வாழும் பெண் கிளி வளர்க்க ஆசைப்பட்டாள். ஆகவே பேசும் கிளி ஒன்றினை வாங்கினாள்.

ஒரே ஒருநாள் மட்டுமே அந்தக் கிளியைத் தன்னோடு வைத்துக் கொண்டுவிட்டு, மறுநாள் அந்தக் கடைக்குத் திரும்பிச் சென்று, “இந்தக் கிளி இன்னும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இது எனக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது,” என்று அந்தக் கடைக்காரரிடம் புலம்பினாள்.

 ”முகம் பார்க்கும் கண்ணாடி ஏதேனும் உங்கள் வீட்டில் இருக்கிறதா? தம்மைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது கிளிகளுக்கு மிகவும் பிடிக்கும்,” என்று அந்தக் கடைக்காரர் கூறினார். எனவே, அப்பெண் ஒரு கண்ணாடியை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள்.

மறுநாள் மீண்டும் அவள் அக்கடைக்கு வந்து, தன்னுடைய பறவை இன்னும் பேசவில்லை என்று கூறினாள். “ஒரு சிறிய ஏணி அதற்கு இருக்கிறதா? ஏணியில் ஏறி இறங்குவது கிளிகளுக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு,” என்று அக்கடைக்காரர் பதிலளித்தார். எனவே, இம்முறை அவள் ஓர் ஏணியை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள். 

மூன்றாவது நாளும் அதே புகாருடன் அவள் அக்கடைக்குத் திரும்பி வந்தாள். “உங்கள் கிளிக்கு ஊஞ்சல் ஏதேனும் இருக்கிறதா? ஊஞ்சலில் ஆசுவாசமாக இருப்பது கிளிகளுக்குப் பிடிக்கும்,” என்று அக்கடைக்காரர் கூறினார். எனவே, அவள் ஓர் ஊஞ்சலை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.

 மறுநாள் அவள் மீண்டும் அந்தக் கடைக்கு வந்து, தன்னுடைய பறவை இறந்துவிட்டதாகத் தெரிவித்தாள். “உங்கள் கிளி இறந்தது குறித்து நான் வருந்துகிறேன். தான் இறப்பதற்கு முன்பாக அது ஏதேனும் கூறியதா?” என்று அந்தக் கடைக்காரர் கேட்டார்.

 ”ஆமாம். ‘அந்தக் கடையில் சாப்பாடு எதுவும் விற்பனை செய்யப்படுவதில்லையா?’ என்று அது கேட்டது,” என்று அவள் கூறினாள்.

வெறுமனே மாற்றத்திற்காக மாறுவது உங்களுக்கு உதவப் போவதில்லை.

No comments:

Post a Comment