Tuesday, 19 August 2025

பரூக் அப்துல்லா


என்னை பாதித்த ஒரு புகைப்படம் 

புகைப்பட தினத்தில் உங்களுக்காக.. 

முதல் படத்தில் நாம் பார்ப்பது டைப் ஒன்று டயாபடிஸ் எனும் கொடிய உயிர் குடிக்கும் நோயால் பாதிக்கப்பட்ட தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் 

இரண்டாவது படத்தில் அவனது உயிர்காக்கும் அந்த மருந்து கிடைத்தவுடன் அவன் மீண்டும் பெற்ற  வாழ்க்கை 

ஆம்... அந்த உயிர்காக்கும் அமிர்தம்  இன்சுலின் தான். 

நாள்தோறும் உலகின் பல கோடி மக்களின் உயிரைக்காப்பாற்றி வரும் இன்சுலின் பிறந்த கதை விந்தையானது 

Dr.பாண்டிங் எனும் அறுவை சிகிச்சை நிபுணர். 
அறிவியல் ஆராய்ச்சியில் பண்டிதம் கிடையாது. 
கார்போஹைட்ரேட் என்றால் பெரிதாக தெரியாது 

அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியை படிக்கிறார் 

"கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது.. 

கணையம் முழுவதும்  நீக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு நோய் ஏற்பட்டது 
அதுவே கணையத்தில் இருந்து வரும் குழாயை (pancreatic duct) மட்டும் அடைத்தால் நீரிழிவு ஏற்படவில்லை. 

இதைப்படித்ததும் அவருக்கு ஒரு யோசனை வருகிறது அந்த ஒரு யோசனை தான் பலரது வாழ்க்கையில் விளக்கேற்ற இருக்கிறது என்பது அவருக்கு அப்போது தெரியாது. 

நாயின் கணையத்தில் இருந்து குழாயை அடைத்து விட்டால் கணையம் முழுவதுமாய் இறந்து விடுகிறது. இருப்பினும் டயாபடிஸில் இருந்து தடுக்கும் ஏதோ ஒன்றை அந்த நாயின் மீதி இருக்கும் கணையம் சுரக்கிறது என்று அறிந்தார் 

இந்த அறிவியல் ஆய்வுக்காக டொரண்ட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மெக்லியாய்ட் துணையை நாடுகிறார்.

அவரும் தனது ஆய்வகத்தில் ஒரு பகுதியையும் , துணைக்கு Dr.பெஸ்ட் எனும் மருத்துவரையும் தருகிறார். 

பல நாள் ஆய்வுக்கு பிறகு நாயின் மிச்ச கணையத்தின் Islet of langerhans எனும் பகுதியில் இருந்து அந்த திரவத்தை எடுத்தனர்

அதை கணையம் முழுவதும்  நீக்கப்பட்டு நீரிழிவு உண்டாக்கப்பட்ட நாய்க்கு ஊசியாக செலுத்தினர். 

அந்த நாய்க்கு உடனடியாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் குறைவதை கண்டனர்

பின்பு அந்த திரவத்தை தூய்மை படுத்தி மனிதர்களுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டனர். 

அந்த உயிர் காக்கும் திரவம் தான் "இன்சுலின்" 

இந்த கண்டுபிடிப்புக்காக 1923க்கான நோபல் பரிசு Dr.பாண்டிங் மற்றும் Dr.மெக்லியாய்ட் இருவருக்கும் வழங்கப்பட்டது. 

இன்சுலின் கண்டறிந்து பாண்டிங் அதற்கான காப்புரிமையை மக்கள் அனைவரும் எளிதாக பெறுவதற்காக இலவசமாக அளித்தார். 

வரலாற்றில் நிலைத்தார்... 

மீண்டும் ஒரு முறை அந்த புகைப்படத்தை பாருங்கள்..ஒரு மனிதனின் சுயநலமின்மை எப்படி உலகை மாற்ற முடியும் என்று புரியும் 

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை 
#உலகபுகைப்படதினம்

Monday, 18 August 2025

153


#கற்கை_நன்றே_153

செம்பைத் தினந்தோறும் தேய்த்துக் கழுவாவிடில் களிம்பு ஏறிவிடும். நம் மனமும் அப்படித்தான்

-பரமஹம்சர்

வெளிச்சம் கொண்டு அனைத்தையும் தேடலாம் இருளைத்தவிர"

மனம் என்பது அறிவு மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பு.ஒருவர்  “நான் இன்று பூங்காவிற்கு போகலாமா?” என்று சிந்திப்பது..சிந்தனையின் செயல்பாடு, இதை மனம் செய்கிறது.
ஒருவரை பார்த்து பயம் ஏற்படும் போது..பயம் என்ற ஒரு உணர்வு, மனத்தின் வெளிப்பாடு.மனம் உடல் மற்றும் மூளையுடன் தொடர்புடைய ஒரு செயல்பாடாக இருக்கிறது. சில தத்துவம், மனம் உடலுடன் ஒன்றும், முற்றிலும் வேறுபட்டதாகவும் இருக்கலாம் என்று கூறுகிறது

கோவை மருதமலைக்கு செல்லும் போது பாம்பாட்டி சித்தர் என்று கேள்விபட்டிருக்கிறேன்.எப்போதும் பாம்புடன் இருப்பார், பாம்பு பிடிப்பதில் வல்லவர் அல்லது ஏதோ அடைமொழி போல உண்டு என நினைத்திருந்தேன்.அவரை பற்றி ஏ.எம் ராஜகோபாலன் எழுதியதை படித்த போது வியப்பே மேலிட்டது.

பாம்பாட்டிச் சித்தர் என்றால் ஏதோ பாம்புகளுடன் பயமில்லாமல் சித்து விளையாடும் சக்தி பெற்றவர் என்று நினைத்து விடாதீர்கள். பாம்பு என்று அவர் கூறியது மனம் என்னும் பாம்பைத்தான்! 'பாம்பாட்டி' பாம்புடன்தான் இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அந்தப் பாம்பாட்டி ஒவ்வொரு விநாடியும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எந்த விநாடியும் கொடிய விஷப் பாம்பினால் அந்தப் பாம்பாட்டிக்கு மரணம் ஏற்படக்கூடும்.

 அந்தப் பாம்பைப் போன்றுதான் மனித மனமும். அதனைக் கட்டுப்படுத்தி நம்மிடம் தாவித்திருக்கும்வரை ஆபத்தில்லை ஆனால் ஒரு விநாடி அஜாக்கிரதையாக இருந்தாலும், நாம் உறுதி தளர்ந்தாலும் அந்த விநாடியே அது தவறான வழியில் நம்மை இழுத்துச் சென்று. நமது நல்வாழ்க்கையில் இருந்து நம்மை வீழ்த்திவிடும்.

இத்தகைய மனம் என்ற நச்சுப்பாம்பைத் தன் இஷ்டப்படி கட்டுப்படுத்தி, ஆட்டி வைத்ததால், அம்மகாபுருஷருக்குப் பாம்பாட்டிச் சித்தர் என்ற சிறப்புக் காரணப் பெயர் ஏற்பட்டது.அவர் ஒரு முறை தவம் செய்த போது..இளைஞன் ஒருவன் தற்கொலைக்கு முயன்றான். அவனை தேற்றி காரணம் கேட்டபோது,தவறான வாழ்க்கை வாழ்ந்ததை கூறினான். மறுமொழியாக சித்தர்.. அதிகமாக அனுபவித்த இன்பங்களுக்கு பின்னாளில் ஆரோக்கியத்தை விலையாக கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.

"பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேர் அறியவே மெத்த வீங்கிப்
பரியாரும் ஒருமாது பார்த்தபோது
பையோட கழன்றதென்று ஆடுபாம்பே

இறைவன் அளித்த செல்வத்தினால் மதி இழந்தான் என்று கூறும் பாடல் பாடி..கஞ்சமலை மூலிகை கொடுத்து அவனைக் காப்பாற்றினார்.மனித வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மனதை கட்டுப்பாட்டில் வைக்காதது தான் காரணம் என்கிறார்.மனம் எனும் விளைநிலத்தில் ஆசை என்னும் களையை களைந்து..மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம்.மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? எனும் வாலியின் வரிக்கு அன்றே உயிர் கொடுத்திருக்கிறார் பாம்பாட்டி சித்தர்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 17 August 2025

152


#கற்கை_நன்றே_152

தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர
மொழிந்திடுதல்!சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக்
கனவுபல காட்டல்;கண்ணீர்த்
துளிவர உள்ளுருக்குதல்

-பாரதியார்

நம் வாசிப்பின் மிகச் சிறந்த சொத்தாக இலக்கியம் கருதப்படுகிறது. ஆனால் நம் முன்னோர்களின் அறிவு கருவூலமாக நாட்டுப்புற இலக்கியங்கள் திகழ்கின்றன. அவை வாய்வழியாக சொல்வதால் பல்வற்றை மூடநம்பிக்கை, கட்டுக்கதை என்று ஒதிக்கிவிடுகிறோம். ஆனால் அதில் உள்ள வாழ்வியல் கதைகள் என்றும
 நம் உத்வேகப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளன. அவ்வகையில் சமீபத்தில் இறையன்பு உரையில் சில மேற்கோள்கள் கூறியது சிந்தைக்கு விருந்தாக இருந்தது.

ஒருமுறை கம்பர் மாலை வேளையில் நடைபயின்ற போது 'மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே என்று ஓர் ஏற்றம் இறைப்பவர் பாடியதாகவும், அடுத்த வரி எப்படி இருக்கும் என்று இரவு வரை தூங்காமல் அதையே கம்பர் யோசித்திருந்தார்.

மறுநாள் அவர் எப்படி முடிப்பார் என்று அதே வயலுக்குச் சென்றபோது 'மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே' என்று முடித்தாராம். கம்பரே அசந்து போனாராம்.

நாட்டுப்புறப் பாடல்களில் இருக்கும் கவித்திறன் அசாத்தியமானது.

கைம்பெண் ஒருத்தி கணவனை நினைத்துக் கேள்வி கேட்பதுபோல் ஒரு நாட்டுப்புறப் பாடல். (மாலையிட்ட மங்கையில் கேட்டிருப்பீர்கள்)

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று என்னை நிறுத்தி வழிபோனவரே

என்கிற அந்தப் பாடலில் அத்தனை கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த உலகம் நெருஞ்சி பூத்த காடுபோல அழகாக இருக்கிறது, தூரத்திலிருந்து பார்ப்பதற்கு, மஞ்சை மசேலென்று அத்தனை அழகாக அது இருக்கும். கண்களைக் கவர்ந்திழுக்கும்.

நாமும் மயங்கி உள்ளே சென்றால் கால்களை முள்ளாய்க் குத்தும். அதைப்போல கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு இவ்வுலகம் நெருஞ்சியைப்போல் இருக்கும் என்று பாடுகிறாள் அவள்.

எத்தனை பொருள் பொதிந்த பாடல்!

கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்றெல்லாம் கூறுகிறோம். ஏன் கடுகளவு, மிளகளவு என்று கூறக் கூடாதா!

கைமணலைக் காட்டிலும் கடுகு சிறியதில்லையா!
பிறகெதற்கு கைம்மண் உதாரணம்.

"குறுகும் கைமணல் போல' என்கிற நாட்டுப்புறப் பாடல் ஒன்று உண்டு. கை நிறைய மணலை அள்ளினால் அது கை இடுக்குகளின் வழியாக வெளியே விழுந்து கொஞ்சம்தான் எஞ்சியிருக்கும். அதைப்போல நாம் படித்தவற்றில்கூட நாளடைவில் பலவற்றை மறந்துவிட்டுச் சிறிது கல்வி அறிவோடு மட்டுமே இருப்போம் என்பதை அந்தப் பழமொழி குறிப்பிடுகிறது.

காட்டில் ஒரு காகம் மரத்தின் மேல் சும்மா அமர்ந்து கொண்டு இருந்ததாம்அந்த வழியே சென்ற முயல் காகத்தை பார்த்து !

என்ன செய்து கொண்டு இருக்கிறாய்!என்று கேட்க
காகமோ !சும்மா உட்கார்ந்து கொண்டு பொழுதை போக்கி கொண்டு இருக்கேன் என்று சொல்லியதாம்!

முயல் ' அப்படியா நானும் அதையே செய்கிறேன் " என்று அதுவும் கீழே அமர்ந்து சும்மா இருந்ததாம் !
அந்த வழியே சென்ற புலி !
சும்மா இருந்த முயலை பிடித்து சாப்பிட்டு !விட்டதாம் !

நீதி - வாழ்க்கையில் சும்மா இருக்க வேண்டும் என்றால் நீ உயரத்தில் இருக்க வேண்டும் என் அந்த நாட்டுப்புறக் கதை முடியும்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Thursday, 14 August 2025

151



#கற்கை_நன்றே_151

“சுதந்திரப்போராட்ட காலத்தில் எங்கு பார்த்தாலும் காந்திகளாகத் தெரிந்தார்கள். சுதந்திரம் கிடைத்த பின்னர்  தெரிந்தது, காந்தி மட்டும்தான் காந்தி என்று”

- கிரிராஜ் கிஷோர்

பொதுவாய் சுதந்திரம் என்பது குறித்த பல்வேறு கருத்துக்கள் நம்மில் உள்ளன.முதலில் பிரம்மித்து பார்ப்பது,பிறகு இந்த சுதந்திரம் தேவைதானா என தம் கருத்தில் பிறழ்வது, பின்பு மீண்டும் தருக்க ரீதியில் மனம் ஒரு சமநிலை அடைந்து சுதந்திரம் நல்லதுதான் என முடிவுக்கு வருவது. இந்த மனமாற்றமானது மாறிக்கொண்டே இருக்கும்.நீரில் மூழ்கியவனுக்கு வெளிவர வேண்டும் என்ற இலக்கு மட்டுமே இருக்கும்.அதுபோலத் தான் அக்காலத்தில் பெற்ற சுதந்திரமும்

#அட்லியின் அறிவிப்பு 

1946 ஆகஸ்ட் 16ஆம் தேதி "இடைக்கால அரசாங்கத்தை" அமைக்குமாறு வைஸ்ராய் வேவல் பிரபு நேருவை கேட்டுக்கொண்டார். நேரு அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். ஜின்னா முதலில் மறுத்து விட்டார்.

அந்நாளை துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என்று அறிவித்தார்.கல்கத்தாவில் இனக்கலவரம். திட்டமிட்ட தாக்குதல்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வைஸ்ராய் வேவல் பிரபு செயலிழந்தார். அந்த நெருக்கடியான நேரத்தில் தொழிற்கட்சியின் பிரிட்டிஷ் பிரதமர் அட்லி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 *1948 ஜூன் முதல் தேதிக்குள் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு அதிகார மாற்றம் செய்து விடும். *அதிகார பொறுப்பை ஒப்படைப்பது என்பது பற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்யும். *வேவல் பிரபுவுக்கு பதில் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்படுவார்

#மெளன்ட்பேட்டன் திட்டம்

இந்தியா விடுதலை அடைவதற்கு சரியாக 73 நாட்களுக்கு முன் இந்தியாவை இரண்டாக பிரித்து விடுவதற்கான முடிவெடுத்தார் பேட்டன். இந்திய பிரிவினை பற்றி ஜூன் 3ஆம் தேதி மவுண்ட்பேட்டன், நேரும் ஜின்னாவும் டெல்லி வானொலி மூலம் அறிவித்தனர். அந்த அறிவிப்புக்கு இந்திய விடுதலைச் சட்டம் வடிவம் கொடுத்தது. தேசிய காங்கிரஸ் அங்கீகாரம் அளித்தது. உலக வரலாற்றில் சிக்கல் மிக்க "விவாகரத்து" நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவின் வளமிக்க மாகாணங்களான பஞ்சாபையும் வங்காளத்தையும் கூறுபோட இசைந்தனர்.

#விடுதலை நாள்

ஆகஸ்ட் மாதம் 14-15 ஆம் தேதி நள்ளிரவு பிறந்தது. நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் கூட்டம் கூடியது. ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். சரியாக இரவு 12 மணிக்கு சுதேசா கிருபளானி வந்தே மாதரம் பாடலை உணர்ச்சியோடும் பெருமிதத்தோடும் பாடினார். ஜவகர்லால் நேரு இந்திய சுதந்திரம் பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

" நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னால் நாம் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அந்த ஒப்பந்தத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இந்த நள்ளிரவு நேரத்தில் உலகமே உறங்கிக்கொண்டிருக்கையில் இந்தியா சுதந்திரமாக வாழ்வதற்காக விழித்துக்கொள்கிறது.

 நேரு முன்மொழிந்த தீர்மானத்தை  செளத்ரி காலிகுவாஸ்மான் வழிமொழிந்தார். இறுதியில் உரையாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் தீர்க்கதரிசனத்தோடு குறிப்பிட்டதாவது..

" நமக்குள்ள வாய்ப்புகள் பெரிது.. நாம் அதற்கான தகுதியும் திறமையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். உயர் பதவிகளில் ஊழல், உறவினர்களுக்கு சலுகை, அதிகார ஆசை, ஆதாயம் பெறல், கருப்புச் சந்தை ஆகியவற்றின் அடிச்சுவடுகளை அகற்றாவிடில் நிர்வாகத் திறமையும், நல்வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதை உறுதி செய்ய முடியாது.

  பின்னர் பெண்களின் சார்பாக ஹன்சா மேத்தா மூவர்ணக் கொடியை எடுத்து கொடுக்க, இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு அதற்கு பதில் சுதந்திர இந்தியாவின் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை ஏற்றினார். இந்தியா விடுதலை அடைகிறது என்ற அரசியல் அமைப்பு சட்டமன்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.  அன்றிலிருந்து அரசியலமைப்பு சட்டமன்றம் இந்தியாவின் நாடாளுமன்றம் ஆயிற்று. மக்களின் ஆரவாரத்திற்கிடையே ராணுவ அணிவகுப்பை நேரு மற்றும் அவரது சகாக்கள் உடன் சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆனால் அதனைப் பார்த்த மகாத்மா காந்தி அங்கு இல்லை நவகாளியில் இருந்தார்.

#பிரிவு

பிரிவினை திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில் முஸ்லிம்லீக் முறைப்படி அத்திட்டத்தை ஜூன் 9 இல் ஏற்றுக்கொண்டது. அதன்பின் காங்கிரஸ் செயற்குழு தன் சம்மதத்தை ஜூன் 12ஆம் தேதி தெரிவித்தது. சீக்கியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் பிரிவினையை ஏற்றுக்கொண்டனர். ஆனால் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் தேசம் துண்டாடப்படுவதை கடுமையாக எதிர்த்தனர்.

எப்படியாவது பிரிவினையை தவிர்க்க வேண்டும் என்ற தணியாத தாகத்தில் காந்தி  சென்று ஜின்னாவை அவருடைய இல்லத்தில் பலமுறை சந்தித்துப் பேசினார்.ஐக்கிய இந்தியாவை காண வேண்டும் என்ற பல தலைவர்களும் விரும்பினார்கள். ஆனால் நடைமுறை நிகழ்ச்சிகள் நினைப்புக்கேற்றவாறு இல்லை. ஒன்றுபட்ட இந்தியாவை உயிருக்கும் மேலாக நேசித்த காந்தியே தேசப் பிரிவினை என்ற எதார்த்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

#தேசியக்கொடி

1921ம் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் அனைத்து இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தபோது பிங்காலி வெங்கையா   30 நாடுகளின் கொடியை ஆராய்ந்து முடிவில் தேசியக் கொடி ஒன்றை உருவாக்கி காந்தியிடம் காட்டினார். சில மாறுதல்களுக்கு பின் நமது தேசிய கொடி உருவானது.

நமது கொடியில் உள்ள இரண்டு வண்ணங்களுக்கு 'இந்திய கேசரி 'இந்திய பச்சை' என்று பெயர். உலகிலுள்ள வண்ண தர நிர்ணய பட்டியலில் இந்த இரு வண்ணங்களும் இல்லை. எனவே இந்திய தேசிய கொடிக்கு என்ற விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

" சுதந்திர தின உரையில் ராதாகிருஷ்ணன் ஒரு மேற்கோளை குறிப்பிட்டார் "நேற்று வரை எந்த தவறுக்கும் நாம் ஆங்கிலேயரை குற்றம் சாட்டினோம். ஆனால் இன்று முதல் இந்த நிமிடம் முதல் செய்யக்கூடிய அனைத்து தவறுகளுக்கும் நாம் மட்டுமே பொறுப்பாகிறோம் என்று கூறினார். இது தான் நிதர்சன உண்மை. இதனை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துவோம்.

"வரலாற்று நிகழ்வுகளை எளிதாகக் கடந்து போய்விடும் வெறும் தகவல்களாக மாற்றி வைத்திருப்பதுதான் ஒருவன் தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம் என்பார் எஸ்.ரா.

வரலாற்றை வாழ்வியலோடு பொருத்திப் பார்ப்போம். அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 13 August 2025

150


#கற்கை_நன்றே_150

Perfection is not an action but it's a mindset.

உன்னதம் என்பது செயலல்ல; மனநிலை

பொதுவாக தனக்குள் இருப்பதை
வெளியே பார்ப்பதுதான்
Perfection.மற்றவர்கள் எதிர்பார்க்கும் ஒழுங்கை திருப்தி செய்யத்தான் நினைக்கிறோமோ தவிற,நாம் நம்மை perfectionist ஆக முயல்வதில்லை. மாறாக அதற்கு மெனக்கெடுகிறோம்.வலிந்து நமக்குள்ளேயே திணிக்கிறோம். இன்னும் சிலர் நாம் அவ்வாறு இல்லையே என ஏங்குகின்றனர். ஒரிஜினாலிட்டியை தழுவ மறுதலிக்கிறோம்.இது குறித்து நியாண்டர் செல்வனின் கட்டுரையில் இது குறித்து சொல்லியிருப்பார்..

பர்ஃபெக்சனைத் தேடுகையில் நம் ஒரிஜினாலிட்டி எங்கேயோ காணாமல் போய்விடுகிறது. பொய்யான அருவத்தைவிடப் பிழைகள் நிறைந்த ஆனால் ஒரிஜினலான நிஜ உருவத்தையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

 ‘தைரியம் என்பது நம் ஒரிஜினாலிட்டியை உலகுக்குக் காட்டுவதுதான்’ என எழுதுகிறார் பிரேனே பிரவுன். நம் பலவீனங்களை மறைத்துக்கொள்வதுதான் உண்மையான பலவீனம். ‘இதான் என் பலவீனம்’ என உண்மையைச் சொல்கையில் நம் பலவீனம் பலமாக ஆகிறது. 

ஏனெனில் பலவீனம் என்பது பலத்தின் மறுபுறம். ‘உன் வீக்னஸ் என்ன?’ என நேர்முகத்தேர்வில் கேட்டால், ‘எனக்குக் கூட்டம் பிடிக்காது, பார்ட்டி பிடிக்காது. சோசியலைஸிங் பிடிக்காது. ஆனால் ஆழமாகச் சிந்தித்து எழுதுவேன்’ என்று பலவீனம், அதன் மறுபுறமான பலம் இரண்டையும் சொல்லவேண்டும். 

உங்களின் பலம் என ஒன்றிருந்தால் அதன் எதிர்ப்புறமாக பலவீனம் என ஒன்று இருந்தே தீரும். அதலடிக்ஸில் சிறப்பாக இருப்பவர்கள் நன்றாகப் படிக்கமாட்டார்கள். புத்தகப் புழுக்களிடம் ஸ்ட்ரீட் ஸ்மார்ட்னஸ் குறைவாக இருக்கும். நிர்வாகத்திறன் கூடுதலாக இருந்தால் டெக்னாலஜி ‘வீக்’காக இருக்கும். 

பலவீனத்தைச் சரிசெய்கிறேன் எனப் போனால் பலம் பலவீனமாகும். பலவீனம் என நினைப்பது உங்கள் பலவீனமே அல்ல, அது பலத்தின் மறுமுனை என அறிந்தால் மனதில் அமைதி பிறக்கும். அதற்கேற்ற வேலைகளைத் தேடி அடைந்தால் கெரியரின் உச்சத்துக்குச் செல்வீர்கள். 

பர்ஃபெக்சனைத் தழுவ முயல்வதைவிட ஒரிஜினாலிட்டியைத் தழுவுங்கள். பர்ஃபெக்ட் மனிதராக உங்களை மற்றவர்களுக்குக் காட்டுவதைவிடக் குறை நிறைகளுடன் காட்சியளிப்பதற்கே அதிகத் துணிவு வேண்டும். அதிலேயே அதிகப் பலனும் கிடைக்கும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 12 August 2025

149


#கற்கை_நன்றே_149

போட்டிக்கும்... பொறாமைக்கும் என்ன வேறுபாடு?

 அடுத்தவர்களைவிட நாம் உயரமாக இருக்க வேண்டும் என முனைவது போட்டி. நம்மைவிட மற்றவர்கள் குள்ளமாக இருக்க வேண்டும் என நினைப்பது பொறாமை. செயல்பாட்டில் இருக்கிறது போட்டி. வயிற்றெரிச்சலில் இருப்பது பொறாமை!

-இறையன்பு

எட்மண்ட் ஹிலாரி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர். அவரிடம் பலரும் கேள்வி கேட்டார்கள். அதில் ஒரு முக்கியமான கேள்வி 

நீங்கள் மலை ஏறிய போது எது உங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது? குளிரா? பனிப் பாறைகளா? சுவாசிப்பா என்று பலரும் பல மாதிரி கேட்டார்கள்.

ஹிலாரி நீங்கள் கூறிய எந்த விஷயம் எனக்கு சவாலாக இல்லை. ஆனால் அவ்வப்போது என் உள்ளத்தில் தோன்றிய ஒரு எண்ணத்தை வெல்வதை எனக்கு சவாலாக இருந்தது. அதாவது "உன்னால் இந்த சிகரத்தை அடைய முடியாது. பலரும் முயன்று தோற்றுப் போயிருக்கின்றார்கள். உயிரைக் கூட விட்டிருக்கின்றார்கள். எனவே உன் முயற்சியை விட்டுவிடு" என்று என் மனதில் தோன்றிய எதிர்மறை எண்ணம் தான் எனக்கு சவாலாக அமைந்தது. ஆயினும் நான் அந்த எண்ணத்தை புறந்தள்ளி, விடாமல் போராடியதால் வெற்றி பெற்றேன் என்று சொன்னார். நாம் வெற்றி கொள்வது மலைகளை அல்ல நம்மை நாமே என்று இறுதியாக கூறினார்.

நாம் நம்முடைய எண்ணங்களை மாற்றிக் கொள்ளாமல் எதுவும் மாறப்போவதில்லை. ஆனாலும் நம் மனது உண்மையில் அதிர்ஷ்டத்தை நம்பிக் கொண்டிருக்கிறது. யாராவது ஒருவர் கடவுள் ரூபத்தில் வந்து நமக்கு உதவுவார் என்றும், கடவுளே வந்து உழைக்காமல் ஏதேனும் ஒரு பலனை தருவார் என்றும் நாம் எண்ணிக் கொள்கிறோம்.

சமீபத்தில் இணையத்தில் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. 
ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்...

காலையில் ஒருவன் எழுந்து கொள்ளும் போது
சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது....

குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி‌ போய்.. இன்று தேதி 9 எனக்காட்டியது...
.
வங்கிக்கு சென்றுவரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்...
அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது...

வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும்போதுதான் கவனித்தான் வங்கியின் க‌தவு எண் 99 என இருந்தது..

வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரிப்பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக்காட்டியது...

இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது...
என்ன காலையில் இருந்து நமக்கு 9 எண் மட்டுமே கண்ணில் படுகிறதே என்று அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது...

இன்று ஏதோ நமக்கு இந்த 9 என்ற எண்ணில் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்...
இந்த அதிர்ஷ்டத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்...

அதன்படி அந்த 9 இலட்சத்தையும் எடுக்க செக் எழுதி கொடுத்தான்...
அவனுக்கு வந்த டோக்கன் எண் 999
அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்...

 அப்போதுதான் அவனுக்கு குதிரைப்பந்தையம் நினைவுக்கு வந்தது...நேராக குதிரைப்பந்தையம் நடக்கும் அந்த இடத்துக்கு சென்றான்..வாயில் எண் 9 வழியாக உள்நுழைந்தான்.... 9-வது போட்டியில் பங்கெடுத்துக்கொண்டான்....
பந்தையமாக நான் 9 இலட்சத்தை கட்டுகிறான். 10 குதிரைகள் ஓடியதில் குதிரை எண் 9 என எண்கொண்ட குரையின் மீது தன் மொத்தப்பணத்தையும் கட்டினான்....

போட்டி துவங்கியது...
குதிரைகள் சீறிப்பாய்ந்து ஓடின...
பந்தையம் கட்டியவர்கள் பரபரப்பாய் ஆரவாரம் செய்துக்கொண்டிருந்தார்கள்....
போட்டி முடிந்தது....

இவன் பணம் கட்டிய குதிரை ஒன்பதாவதாக வந்தது....

நற்காலை

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday, 11 August 2025

148


#கற்கை_நன்றே_148

தூண்டிலின் நோக்கம் மீனைப் பிடிப்பது.மீனைப் பிடித்ததும் தூண்டிலை மறந்துவிட வேண்டும்.சொற்களின் நோக்கம் கருத்தைத் தெரிவிப்பது.கருத்துக்கள் தெரியப்படுத்தப் பட்ட பிறகு சொற்களை மறந்துவிட வேண்டும்.

சொற்கள் தகவலுக்காக உருவாக்கப்பட்டவை.ஆனால் நாம் சொற்களை பிடித்துக் கொண்டு தகவல்களை மறந்துவிடுகிறோம்

-சங் சூ

ஒவ்வொரு சொல்லும் நம் எண்ணத்தில் அதிர்வுகளை உண்டாக்குகின்றன. அந்த அதிர்வுகள் நேர்மறையாக இருக்கும் போது நமக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது. அதுவே எதிர்மறையாய் மாறுகிறபோது அது எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி நமக்கு மன அழுத்தத்தையும் அச்சத்தையும் தருகிறது. 

ஐந்து வயது வரை எதனையும் கற்றுக் கொள்ளும் திறமை உள்ள குழந்தை பள்ளிக்குள் நுழைந்தவுடன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும்போது.. உன்னால் முடியாது, உனக்கு வராதா என்ற சொல்லை கேட்கும் போது குழந்தை கடைசி வரை அதிலிருந்து வெளிப்பட முடியாமல் திணறுகிறது.
அதனால்தான் எம் எஸ் உதயமூர்த்தி போன்ற அறிஞர்கள் நம்பு தம்பி நம்மால் முடியும் ,உன்னால் முடியும் என்ற சொற்களை அதிகம் பயன்படுத்தினர்.

ஒரு விவசாயி அழகான கன்றுக்குட்டியை வாங்கிய அதை தோளில் மேல் ஏற்றிக்கொண்டு தனது கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார் மூன்று திருடர்கள் அவரை ஏமாற்றி அந்த கன்றுக்குட்டியை திருடுவது என்பது என்று முடிவு செய்தார்கள் முதல் திருடன் அவர் முன்னாள் சென்று ஐயா நாயை போய் ஏன் தோளில் உட்கார வைத்துள்ளீர்கள் என்றான் விவசாயிக்கு ஆச்சரியம் இது நாய் இல்லை கன்றுக்குட்டி என்றால் அவனோ நீங்கள் நாயை கன்று கட்டி என்று எப்போது சொல்லத் தொடங்கினீர்கள் என்று கேட்டு வட்டு சென்று விட்டான்.

இரண்டாவது திருடன் அடுத்ததாக சென்று நாயை போய் தோளில் வைத்துள்ளீர்களே? இது சாஸ்திரத்துக்கு விரோதம் இல்லையா? என்றார். இப்போது மீண்டும் விவசாயி இது கன்றுக்குட்டி என்று வலியுறுத்துகிறார். நீங்கள் போய் மருத்துவரை பாருங்கள் என்று சொல்லிவிட்டு அவன் சென்று விடுகிறான். இப்போது மூன்றாவது திருடன் வந்து ஐயா வீட்டிற்கு இந்த நாயையா கூட்டிப் போகிறீர்கள் என்றான். விவசாயி இப்போது அவருக்கு குழப்பம் ஏற்பட்டு கன்று குட்டியின் கயிறை தூக்கி வீசிவிட்டு நடந்து சென்றார் திருடர்கள் அந்த கண்டினை பிடித்து வைத்துக் கொண்டு சிரித்துக்கொண்டு சென்றனர். 

இதில் நாய் என்ற ஓர் எண்ணம் முதலில் ஏற்பட்டு, பின்பு சந்தேகமாய் வலுப்பட்டு, இறுதியில் ஒரு தவறான முடிவுக்கு வந்து விடுகிறார். இதேபோல் நம் மீதும் பல்வேறு எண்ணங்கள் தரப்படுகின்றன. திணிக்கப்படுகின்றன. நாம் அவற்றையெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொண்டு விடுகிறோம். நமது எண்ணமும் அவர்களின் சொற்களின் பின்னே சென்று விடுகிறது.தேஜ் ஸர்ஶ்ரீ என்பவர் worry fast எண்ணம் எண்ணங்களின் விரதம் அனுசரிக்க வேண்டும் என்கிறார். இது எதிர்மறை எண்ணங்களை குறைத்து நேர்மறை எண்ணங்களை பெருக்குவதற்கு அல்லது எண்ணங்களை அலசுவதற்கு உதவி புரிவதாக சொல்கிறார். தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்போம் தேவை இல்லை எண்ணங்களை வளர்ப்போம் 

நற்காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Sunday, 10 August 2025

147


#கற்கை_நன்றே_147

“உங்கள் முயற்சியைப் பாதியிலேயே கைவிட நீங்கள் கற்றுக் கொண்டுவிட்டால், பிறகு அது ஒரு பழக்கமாக ஆகிவிடும்,” 

-வின்ஸ் லொம்பார்ட
(கால்பந்து பயிற்றுவிப்பாளர்)

நாம் பயன்படுத்தாத எதையும் நாம் இழந்துவிடுவோன் என்கிறார் ஆண்ட்ரு மேத்யூஸ்.நமக்கு உட்கார்ந்திருப்பது தான் பிடிக்கும் என்று எண்ணி சில ஆண்டுகள் சக்கர நாற்காலியில் செலவிடுவது என்று முடிவு செய்தால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உங்களால் நடக்க முடியாது. உங்கள் கால்கள் தம் இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. இது எந்த ஒரு திறமைக்கும் மிகவும் பொருந்தக் கூடியது.

 ஒரு வீணை வாசிப்பதை நீங்கள் சில ஆண்டுகள் நிறுத்தினால் பிறகு அதனை உங்களால் சுலபமாக வாசிக்க முடியாது. படைப்புத்திறன் மிக்க உங்கள் கற்பனையை பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்தினால் அது மாயமாய் மறைந்து விடும். ஆகவே  நாம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் 

நீங்கள் ஒரு விஷயத்தை ஒரு கலையில் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது நீங்கள் அதிக துணிச்சல் கொண்டவராக மாறிவிடுகிறீர்கள். நம்மை நாமே சோதனைக்கு உட்படுத்தும் போது மிகவும் வலிமை அடைந்தவராக ஆகிவிடுகிறோம்.ஒன்றில் ஈடுபடும் போது நாம் தொடர்ந்து அதில் அக்கறை காட்டுகிறோம். எதுவும் தேவையில்லை எதுவும் முக்கியமில்லை என்று நாம் நமக்கு சொல்லிக் கொள்ளும் போது 
நாம் ஒரு பிரச்சனை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம். 

நம் மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். மனதின் ஆற்றல் முழுமையாக பயன்படுத்தும் போது நம் மனம் நமக்காக தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கும்.

ஜப்பானில் ஒரு பிரபல சொற்றொடர் உண்டு. "Win Win Method"
அதாவது தினம்தினம் ஒரு செயலை முன்புஇருந்ததைவிட சிறப்பாக செய்வது.

இன்று ஒரு படம் வரைகிறீர்கள் என்றால் அது எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் இதைவிட இன்னும் சிறப்பாக நாளை வரையவேண்டும் என்று முடிவெடுப்பதான் Win Win Method

தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பது முக்கியமானது தொடர்ந்து பயிற்சி செய்யும் போதும் நாம் சிறப்பு வருகிறோம் நம்மிடம் இருப்பவற்றை நம்மால் இயன்ற அளவு தொடர்ந்து சிறப்பாக பயன்படுத்தவில்லை என்றால் அவை நம்மிடம் நீண்ட காலம் தங்காது ஆகவே பயிற்சி செய்வோம் தொடர்ந்து இயங்குவோம் 

நற்காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 8 August 2025

ஜானகிராம்


இன்று உலக பழங்குடிகள் தினம் - வாழ்க்கை குறித்த ஆப்ரிக்க தேசத்து பழங்குடினரின் சொலவடைகள்: 

1. “வேகமாக செல்ல விரும்பினால், தனியாகச் செல்லுங்கள். தொலைவுக்கு செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்.”
அர்த்தம்: குழுவாக இணைந்து செயல்பட்டால் நீடித்த வெற்றியை அடையலாம்.

2. “ஞானம் ஒரு பவோபாப் மரம் போன்றது; ஒரே மனிதன் அதைத் தழுவ முடியாது.”
அர்த்தம்: யாருக்கும் முழுமையான அறிவு இல்லை — முழு உண்மையை அறிய பிறரின் பார்வையும் தேவை.

3. “உள்ளுக்குள் பகைவர் இல்லாவிட்டால், வெளியிலிருந்து வரும் பகைவர்கள் உங்களை காயப்படுத்த முடியாது.”
அர்த்தம்: உள்ளார்ந்த அமைதியும் தன்னம்பிக்கையும் வெளிப்புற ஆபத்திலிருந்து காக்கும்.

4. “கிராமம் ஒரு குழந்தையை புறக்கணைத்தால், அந்த வெப்பம் மொத்த கிராமத்தை எரித்து விடும்.”
அர்த்தம்: சமூகம் ஆதரவற்றவர்களை புறக்கணித்தால் அவர்கள் எதிர்ப்பு மற்றும் அழிவுக்குத் தள்ளப்படுவர்.

5. “மழை ஒரே வீட்டின் கூரையில் மட்டும் பெய்யாது.”
அர்த்தம்: நன்மை, தீமை எல்லோருக்கும் வரும் — யாரும் விலக்கு அல்ல.

6. “கைகளை கழுவ தெரிந்த குழந்தை மூப்பர்களுடன் உணவருந்தும்.”
அர்த்தம்: மரியாதை, ஒழுக்கம், தயாரிப்பு ஆகியவை ஞானிகளிடையே இடம் பெறச் செய்கின்றன.

7. “சிறந்த சமையல் பாத்திரமாக இருந்தாலும் அது தானாக உணவைத் தராது.”
அர்த்தம்: வளங்கள் இருந்தாலும், செயல் மற்றும் முயற்சி இல்லாமல் பயன் இல்லை.

8. “சிங்கம் பேச கற்றுக்கொள்ளும் வரை, வேட்டையின் கதை எப்போதும் வேட்டைக்காரனைப் புகழும்.”
அர்த்தம்: வரலாறு அதைச் சொல்பவரால் வடிவமைக்கப்படுகிறது; குரல் கேட்கப்படாதவர்கள் மறக்கப்படுவார்கள்.

9. “ஒரே வளையல் சிணுங்காது.”
அர்த்தம்: ஒரே மனிதன் தனியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது — ஒத்துழைப்பு அவசியம்.

10. “இரவு எவ்வளவு நீண்டிருந்தாலும், விடியல் வரும்.”
அர்த்தம்: எந்தத் துன்பமும் என்றென்றும் நீடிக்காது; நம்பிக்கை எப்போதும் பிறக்கும்.

-பகிர்வு

புதிய கல்விக் கொள்கை


தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை-2025
-மணிகண்டபிரபு

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை குழு இன்று இன்று தங்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது இதனை இந்த ஆண்டு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் படி கல்விக்கொள்கை, உயர்கல்வி, பள்ளிக்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதில், பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது

10 தலைப்புகளில் 83 பக்கங்களில் வெளிவந்துள்ளது.
இன்றைய கல்விச் சூழலில் கொரோனாவுக்கு பிந்தைய கற்றல் இடைவெளிகள் மற்றும் எதிர்காலத்துக்கு தயார்படுத்தும் திறன்களின் தேவைகள் போன்ற புதிய சவால்களை கருத்தில் கொண்டு இக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு இயலிலும் தமிழக பள்ளிக்கல்வி யின் தற்போதைய நிலை.. எதிர்காலத்துக்கு தேவைப்படும் திட்டங்கள் நோக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறி அதற்கான தீர்வுகளையும் கூறுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் சமச்சீரானா நிலைத்தன்மை உடைய எதிர்கால கல்வி முறைக்கான பள்ளிக் கல்வியை உருவாக்குவதற்கான நோக்கம் இலக்காக கொண்டுள்ளது. 
மாநில கல்விக் கொள்கைக்கான தேவையையும் வலியுறுத்துகிறது. 
எதிர்காலத்தில்  டிஜிட்டல் என்பது அவசியமாய் இருக்கிறது. அனைவருக்குமான சமமான தொழில்நுட்ப வாய்ப்புகளை உறுதி செய்வது உடனடி தேவையாக கூறுகிறது. 

தற்போது பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் காலை உணவு மற்றும் தமிழக அரசு வழங்கக்கூடிய இலவச நலத்திட்டங்கள், தற்போது அமலில் இருக்கும் கற்பித்தல் முறைகள் மதிப்பீட்டு முறைகள் மன்ற செயல்பாடுகள் மதிப்பீட்டு தேர்வு முறைகள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலிலும் உள்ள பிரச்சனைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளையும் கொடுத்துள்ளது.

2024 இன் படி பள்ளிக்கல்வித்துறை 58,800க்கும் மேற்பட்ட பள்ளிகளையும் 1.16 கோடி மாணவர்களையும் 3 லட்சம் ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. 

*பெண் கல்வியில் பின்தங்கிய மற்றும் பாலின இடைவெளி அதிகம் உள்ள வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டு கூடுதல் உள்கட்டமைப்பு, பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை போன்ற இவ் வட்டாரங்களின் மேம்பாட்டுக்கான கவனம் செலுத்தும் விதமாக எதிர்கால கல்விக் கொள்கை முன்னெடுப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

*சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பட்டியலினத்தவர் பழங்குடியினர் சிறுபான்மையினர் ஆகியோரிடம் காணப்படும் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் இடைநிற்றல் விகிதம் ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன.
முதல் தலைமுறை கற்போர், கற்றல் இடைவெளி சார்ந்த பிரச்சனைகளை கவனம் ஈர்க்கும் அறைகூவல்களாக கூறியுள்ளது.

*தற்போது ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை தொழில் வழிகாட்டுதல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இது மேலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தப்படும்.

*பெற்றோர் ,கல்வி ஆர்வலர்கள் மற்றும் சமுதாய உறுப்பினர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு(BLN) இயக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுத்தப்படுவார்கள் வாசிப்பு இயக்கங்கள் வீட்டுக் கற்றலுக்கான உபகரணங்கள் மற்றும் தாய்மொழியில் உரையாடுவதற்குரிய தொடர்பு சாதனங்கள் தயாரிக்கப்படும்.

*அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும் இணைந்த கலைத்திட்டம் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பிற்காலத்தில் பல்வேறு பாடம் சார்ந்த கற்றலுக்கு அடித்தளம் அமைக்கலாம்

*3,5&8 ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான அடைவாய்வுகளை SLAS தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இதன் மூலம் பாடப் பொருளை புரிந்து கொள்ளுதல் புதிய சூழ்நிலைகளில் பயன்படுத்துதல் ஆகிய திறன்களை மதிப்பிடும் வகையில் உயர்நிலை வினாக்கள் கேட்கப்படும்.

*இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படும். கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறது.

*அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திட்டத்தின் விளைவுகளை மதிப்பிடவும் மாற்றங்களை பரிந்துரைக்கவும் மூன்றாண்டுக்கு ஒரு முறை மூன்றாம் நபர் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

*அடிப்படை நிலை, நடுநிலை, இடைநிலை ,மேல்நிலை என 5+3+2+2 நிலை அடிப்படையிலான கலைத்திட்ட வடிவமைப்பு

*மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்வியை வலுப்படுத்தல், தொழில்நுட்ப ஆய்வகங்களில் மேம்பட்ட செய்முறை பயிற்சி, இடைநிலை வகுப்புகளுக்கு உயர் கல்வி வழிகாட்டி கட்டகங்களை அறிமுகப்படுத்துதல் ,தொழில் கல்வி இணைப்புகளை ஊக்குவித்தல் போன்றவற்றை வலுப்படுத்துதல் வேண்டும் என பரிந்துரைக்கிறது.

*இருமொழிக் கொள்கை, தொடக்கநிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு இரண்டு உடற்கல்வி பாட வேலைகள் இருப்பதை கட்டாயமாக்குதல்.

*விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் உடற்கல்வி SCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளுக்கென தனியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்

*பள்ளியினுள் பள்ளிகளுக்கு இடையே வட்டார மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்துதல். பள்ளிக்கல்வியின் அனைத்து நிலைகளிலும் கலைக்கல்வியை கட்டாயமாக்குதல்.

*அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு உடல் இயக்க வளர்ச்சியை கற்பித்தல் முறை மற்றும் குழந்தை மைய கற்பித்தல் உத்திகள் சார்ந்து பயிற்சி அளித்தல். 

*புதிதாக பாடத்தை உருவாக்குவதற்கு பதிலாக தற்போது நடைமுறையில் உள்ள பாடகட்டமைப்புக்குள் ஸ்டெம் STEAM கருத்துக்களை ஒருங்கிணைத்தல்.
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு பருவத்திற்கும் பல்வேறு பாடங்கள் சார்ந்த ஸ்டெம் செயல் திட்டத்தினை கட்டாயமாக்குதல் 

*எண்ம உள் கட்டமைப்பில் 100% இலக்கை அடைவதற்கு பள்ளிகளில் இணைய வசதிகளை விரிவாக்குதல். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு மானிய விலையில் மின்னணு கருவிகளை வழங்குதல்.

*பசுமை பள்ளி என்னும் தரநிலை உருவாக்கப்பட வேண்டும். அதில் மழை நீர் சேகரித்தல் ,சூரிய சக்தி பயன்பாடு, புல்வெளி பராமரித்தல் மற்றும் நீர் மறுசுழற்சி போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுதோறும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
கட்டாய காலநிலை பாடத்திட்டம் 1 முதல் 5 ,6 முதல் 8 ,9 முதல் 12 வகுப்புகளுக்கு உருவாக்குதல் 

*TN-SPARK இணையவள கருவிசார் கல்வி திட்டத்தினை பொருத்தமான வகுப்புகளுக்கு விரிவுபடுத்துதல்.
மனப்பாட முறைகளிலிருந்து புதிய சூழல்களில் பெற்ற அறிவினை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்பீட்டு முறைக்கு மாறுதல்

*ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தேக்கமின்மை கொள்கையை நடைமுறை ப்படுத்தி வருவதால் தேர்ச்சியை மட்டும் நோக்கமாகக் கொண்ட தேர்வு முறையிலிருந்து விலகி, தொடர்ச்சியாக மாணவர்களுக்கு உதவும் வகையில் திறன் அடிப்படையில் வலியுறுத்துகிறது.

*ஆசிரியர்கள் ஆங்கிலம் பேசுதல் எழுதுதல் மற்றும் கற்பித்தல் திறன்களை வலுப்படுத்துவதற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட தொடர் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி விரிவு படுத்தப்படும். 

*எண்ம வள வங்கிகள் உருவாக்கப்பட்டு புதுமையான மாதிரிகளை வழங்க ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

*குழந்தைகள் நல மேம்பாடு பகுதிகளில் போக்சோ நடைமுறை குறித்த விழிப்புணர்வு, மாணவர் மனநலன் மனவளர்ச்சி நல மேம்பாடு, கட்டணம் இல்லாத உதவி தொடர்பு எண்கள், இணையதளங்கள், தொடர் நல ஆய்வ ஆகியவை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் வழிமுறைகள் உருவாக்கப்படும்.

*சிறுவர் சிறுமிகளுக்கான தனித்தனியான பயன்படுத்தத்தக்க கழிவறைகள், குடிநீர், மின்விசிறி, மின் விளக்குகள் விளையாட்டு உட்கட்டமைப்பு, அறிவியல் ஆய்வகங்கள் போன்ற இன்றியமையாத பள்ளி வசதிகள் அடுத்த 3 ஆண்டுகளில் 100% அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

*நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி,
முன்னாள் மாணவர் ஈடுபாடு- விழுதுகள், பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்துதல், பள்ளி மேம்பாட்டு முன்னெடுப்புகளை வளர்த்தல் சமுதாய பங்கேற்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday, 7 August 2025

146


#கற்கை_நன்றே_146

அன்பை விதைப்பவர்கள் மட்டுமே
நிம்மதியை
அறுவடை செய்கிறார்கள்.!

-புத்தர்

புத்தரின் கொள்கைகளை வாழ்வியலோடு இணைத்துக் கூறுபவர் அமலன்ஸ்டான்லி. சமீபத்தில் அவரின் பதிவு ரசிக்க வைத்தது.

புத்தர் சொன்னது போல, ஒன்றைத் தீர்மானத்துடன் கைவிடுகிறீர்கள் என்றால், முதலில் நீங்கள் அதைப் பற்றிய முழுதான புரிந்துணர்வைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு புத்தர் ஐந்து படிநிலைகளைக் குறிப்பிடுகிறார்: உங்கள் மனத்தில் திறனற்றதென ஒன்றிருந்தால் அதை ஊன்றிக் கவனியுங்கள். அது எப்போது எழுகிறது என்பதைப் பாருங்கள். புத்தர் அதனைத் தோற்றுவாய் என்றழைக்கிறார். 

இப்போது, தோற்றுவாய் என்பது இரண்டு காரியங்களைக் குறிக்கிறது: ஒன்று, நீங்கள் காரணத்தைத் தேடுகிறீர்கள் - அது எழுவதை மட்டுமல்ல, அது எழுவதற்கு என்ன காரணம்? அதனுடன் இணைந்து எழுவது எது? புத்தர் தோற்றம் பற்றிப் பேசும்போது,  மனத்திற்குள் இருந்து உதிக்கும் தூண்டுதல்களைப் பற்றிப் பேசுகிறார். மனத்திற்குள் எது தூண்டப்படுகிறது? அது எவ்வளவு காலம் நீடிக்கும்? ஏனென்றால் அது மறைந்து போவதைப் பார்க்க விரும்புவது தான் அடுத்த படிநிலை. அதாவது தோற்றத்தையும் மறைவதையும் காண்பது. பின்னர் அக்குறிப்பிட்ட மாசு மறைந்து போகையில், "சரி, எழுவதற்கும் மறைவதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது" எனும் உண்மையைக் காண்கிறீர்கள்.

சரி, உங்களை ஈர்க்கும் காரணம் எது? அது மூன்றாவது படிநிலை: அக்கவர்ச்சி யாது? அக்குறிப்பிட்ட விழைவு எங்கே குவி மையம் கொண்டுள்ளது?

புத்தர் குறிப்பிடுவது போல ஆசை கிட்டத்தட்ட எதன் மேலும் கவனத்தைக் குவிக்கலாம். ஒருவரை நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் பெரும்பாலும் அவரல்ல நீங்கள் விரும்புவது. மாறாக, அவரைச் சுற்றி நீங்கள் உருவாக்கிய குறிப்பிட்டதொரு பார்வையைத் தான் விரும்புகிறீர்கள்.

அல்லது உலகளவில் பிரபலமான, விலை மதிப்புமிக்க ஒரு வாகனத்தை விரும்புகிறீர்கள். ஒரு குறிப்பிட்ட சமூகநிலையை, கௌரவத்தை அதன்மூலம் பெறுவதாக நீங்களே எண்ணிக் கொள்கிறீர்கள். 

அப்படியானால், உண்மை என்னவெனில் கவர்ச்சி எங்கே இருக்கிறது என்பதுதான். அது விலையுயர்ந்த வாகனத்தில் இல்லை. மாறாக, அது உங்களைப் பற்றி விளம்புவதென்ன என்பதில்தான் இருக்கிறது. நிறைய வர்த்தக விளம்பரங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன.

உங்கள் மனமும் அதையே உங்களுக்குச் செய்கிறது. எனவே நீங்கள் கவர்ச்சி எதிலுள்ளது என்று துல்லியமாகப் பார்க்க வேண்டும். பெரும்பாலும் அது மறைக்கப்பட்டிருக்கலாம். அதை உணர்ந்தறிவது கடினமாகத் தோன்றலாம். என்றாலும் அதன்  காரணங்களைத் தோண்டி எடுக்க வேண்டும். அக்குறிப்பிட்ட பொருளில், மனிதரில் உங்களுக்குப் பிடித்தது எது?

பின்னர், நான்காவது படிநிலையில், நீங்கள் அவ்வசீகரத்தை அதற்கேயுரிய குறைபாடுகளுடன் ஒப்பிடுவது. அக்குறிப்பிட்ட விழைவை அடைவதால் என்ன நிகழப் போகிறது? இங்கேயும், உங்கள் பகுத்தறிவை முன்னிறுத்த வேண்டும். 

முவ்வகை வாழடையாளங்கள் பற்றிய போதனைகள் இங்குதான் தொடர்புறுகின்றன. விழைவிலிருந்து எவ்வித சுகத்தைப் பெற்றாலும், அது நிலையற்றதாக, துயருறுத்துவதாக, தன்னின்மை கொண்டதாக இருக்கும். அதாவது, அதைத் தன் சொந்தமென இறுகப் பற்றிக் கொள்வதில் எவ்வொரு மதிப்பும் பயனுமில்லை.  தன்னின்மை பற்றிய போதனை உண்மையில் ஒருவித தர மதிப்பீடாகும். அது வாழிருப்பு பற்றியதோர் ஆழமான பார்வைக்கு வழிவகுக்கும். இதன் மூலம் நீங்கள், "இவ்விழைவு உண்மையில் மதிப்புக்குரியது அல்ல" என்று முடிவிற்கு வரலாம்.

எனவே அதைக் கைவிடுவது ஐந்தாவது படிநிலைக்கு அழைத்துச் செல்கிறது. அதாவது முன்னர் ஆர்வமாக இருந்தவற்றின் மீது அக்கறையின்மையை வளர்த்துக் கொள்கிறீர்கள். அதுவே விடுதலைக்குத் தலைப்படுதலாகும்.

இவ்வாறாக, ஒன்றைக் கைவிடுவதில் இப்படித்தான் அர்ப்பணிப்புடன் முயல்கிறீர்கள். அதைக் கைவிட வேண்டும் எனும் ஒரே நோக்கத்தோடல்ல. அதைப் பற்றிக் கொள்வதற்கு உண்மையில் எவ்வொரு சரியான, வலுவான காரணமும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டதால் விட்டுவிடுகிறீர்கள்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 6 August 2025

145


#கற்கை_நன்றே_145

‘அவையத்து நாணுதல்’ என்பது ஒரு பண்புநலனாகவே தொன்றுதொட்டு தமிழ்ச்சூழலில் சொல்லப்பட்டுவருகிறது. அது என்ன? சான்றோர் முன் பிழையாக வெளிப்பட்டுவிடாமலிருக்கும் எச்சரிக்கைநிலை. அவையிலுள்ளோர் முன் குறைவாக தோன்றக்கூடாது என்னும் கவனம். இது கற்றல்நிலையில் மிக அவசியமான ஒன்று. எந்த அவைக்கும் இது பொருந்தும்.

அவைநாணுதல் ஏன் தேவை? அது நாம் மேலும் கற்பதன்பொருட்டே தேவையாகிறது. கல்வியில் நமக்குத் தேவையான முதல்தேவை என்பது நமக்கு என்னென்ன தெரியாது, நம் நிலை என்ன என்னும் தன்னுணர்வுதான். அறியாமையை அறியாதோர் அறிவையும் அறியமுடியாது. அறிவதற்கான கூர்மையும் முயற்சியும் உருவாகவேண்டும் என்றால் நாம் அறியாதவை எவை என்று நமக்குத்தெரியவேண்டும்.

அது ஒருவகை பணிவுதான். நாவை அடக்கிச் செவியை திறந்து வைத்திருத்தல். எங்கும் நம்மை முன்வைப்பதற்குப் பதிலாக நமக்கு கற்பிக்கக்கூடியவர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான இடத்தை அளித்து நாம் கற்பவராக அமர்ந்திருத்தல். பெரிய அவையையும் பெரியவர்களையும் நம் ஆசிரியர்களாக எண்ணுதல். மேலதிகாரிகள் முன் பணிகிறோமே, கொஞ்சம் ஆசிரியர்கள் முன்னும் பணிந்தால்தான் என்ன?

நம் சூழலில் அவைப்பணிவு என்னும் வழக்கம் மிகக்குறைவு. உண்மையில் இதை இன்றைய தலைமுறையில் எவருமே நமக்குச் சொல்லித்தருவதில்லை. நான் முன்பு எழுதிய ஒரு அனுபவக்குறிப்பில் ஒரு நிகழ்வைச் சொல்லியிருந்தேன். அ.கா.பெருமாளுடன் நான் ரயிலில் பயணம்செய்துகொண்டிருந்தேன். எங்கள் பேச்சைக் கேட்ட ஒரு பயணி அ.கா.பெருமாள் யார் என்று கேட்டார். தமிழகத்தின் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவர், அரசு விருதுபெற சென்னை செல்கிறார் என்று நான் சொன்னேன். அவர் சுசீந்திரம் ஆலயம் பற்றி எழுதியிருக்கிறார் என்றேன்

அந்தப்பயணி ஒரு கேள்விகூட அ.கா.பெருமாளின் ஆய்வுகள் பற்றி கேட்கவில்லை. சுசீந்திரம் பற்றி அவருக்குத்தெரிந்த ஆரம்பச்செய்திகளை நீட்டி நீட்டிச் சொல்ல தொடங்கினார். அ.கா.பெருமாளை பேசவே விடவில்லை. ஒரு கட்டத்தில் கடும் சினம் அடைந்த நான் ‘உன் வாழ்நாளில் ஒரு ஆய்வாளரை பார்த்திருக்கிறாயா? அவரிடமிருந்து ஒரு வார்த்தைகூட உனக்கு தெரிந்துகொள்வதற்கு இல்லையா?’ என்றேன்

அந்நிகழ்வைப்பற்றி பேசும் ஒருவர் முரட்டடியாக ‘ஏன் ஒரு சாமானியன் பேசக்கூடாதா?’ என்றெல்லாம் கேட்கலாம்தான். ஆனால் நமக்கு ஏன் ஓர் அவையிலிருந்து, ஓர் அறிஞனிடமிருந்து சிலவற்றை கற்றுக்கொள்ளவேண்டும் என்று தோன்றுவதே இல்லை? ஏன் நாமே பேசிவிடவேண்டும் என்று தோன்றுகிறது? அந்த மனநிலையை நாம் கண்காணிக்கவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். நம்மை பாமரர்களாக நிலைநிறுத்துவது அதுதான்.

நன்றி:ஜெயமோகன்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 5 August 2025

144


#கற்கை_நன்றே_144

விடைகளுக்குப் பரிணாமம் உண்டு;

கேள்வி களுக்கோ கிளைகள் மட்டும்

-லட்சுமி

பொதுவாய் கேள்விக்கு பதில் சொல்வது என்பது சாதாரணமானதல்ல..எனக்கு கேள்வி மட்டும்தான் கேட்கத்தெரியும் என்பார் திருவிளையாடலில் நாகேஷ். தனக்கு எவ்வளவு தெரியும்,உனக்குத் தெரியுமா என்பது போல இருக்கும் சிலரின் கேள்வி.ஒருவரின் அறியாமையிலிருந்த கேட்பதே உண்மையான கேள்வி என்பார் ஓஷோ. சினிமா அறிவியல், வரலாறு என அனைத்து தளத்திலும் அறிந்தவர்களில் ஒருவர் மதன் சார் .அவரின் வந்தார்கள் வென்றார்கள் தேர்ந்த வரலாற்றாசிரியர் கூட இப்படி எழுத முடியுமா எனத் தெரியாது. அவரின் மதன் கேள்விபதில் விகடனில் வந்தபோது வாரவாரம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதிலிருந்து சில கேள்வி பதில்கள்.. 

*அட்வைஸ்?

சும்மா ஒவ்வொரு நிமிசமும் 'வாட்சை' பார்த்து நீங்களாகவே டைம் சொல்லிக் கொண்டிருக்க கூடாது.யாராவது நேரம் கேட்கும் போது மட்டும் சொன்னால் போதும். அட்வைஸும் அது மாதிரிதான்

*சர்க்கஸ் எப்போது தோன்றியது?

 சர்க்கஸ் (வட்டம்) என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான். ரோம் நாட்டில் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே வட்டமான மைதானத்தில் குதிரை ரேஸ் ரேக்ளா ரேஸ் முதலிய எல்லாம் நடந்த பிறகு அதைச் சுற்றி ஸ்டேடியம் கட்டினார்கள். ஜூலியஸ் சீஸர் 3 லட்சம் மக்கள் அமர்ந்து பார்க்கும்படி விரிவுபடுத்தினார்.

 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் மாடர்ன் சர்க்கஸ் தொடங்கியது.
சர்க்கஸை உலக புகழுக்கு கொண்டு போனவர் பி.டி.பார்னம் என்ற அமெரிக்கர்.

# யானை குதிரை குட்டிகள் பிறந்த சில நிமிடங்களில் எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகின்றன மனிதக் குழந்தைகள் நடக்காதது ஏன்?

 இந்த விஷயத்தில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு மாதிரி. சுறாவின் கர்ப்பப் பைக்குள் கையை விட்டார் ஒருவர் உள்ளே இருந்த குட்டி அவர் விரலை கடித்து துண்டாக்கியது. அதேபோல் நல்ல பாம்பு குட்டி விஷயத்தோடு பிறக்கிறது. ஒட்டகச்சிவிங்கி பிறந்து சில நிமிடங்களில் எழுந்து ஓடுகிறது. குரங்கு தானாக செயல்பட சில நாள் ஆகிறது. மனிதனுக்கு சில வருடங்கள் ஆகிறது. தாய் தரும் பாதுகாப்பு இப்பொழுது பரிணாம வளர்ச்சி.

# முதலில் கிருதா வைத்துக் கொண்டவர் யார்?

 19 ஆம் நூற்றாண்டில் US ராணுவ தளபதியாக இருந்தவர் general ஆம்ப்ரோஸ் பர்ன்ஸைடு முதலில் வைத்துக்கொண்டதால் தான் அவர் பெயரை திருப்பி போட்டு side burn என்றாகியது.

# ஹெல்மெட் பெயர் காரணம்
 பற்றி? 

kel-கெல்  என்றால் மூடிக்கொள்வது அல்லது கவர் செய்து கொள்வது என்று இந்தோ-ஐரோப்பிய மொழியில் அர்த்தம். பிரெஞ்சு மொழியில் ஹெல்மெட் என்பது பாதுகாப்பு தொப்பி என்று மாறியது.

# கொரியர் -கூரியர் எது சரி?

கூரியர் தான் சரி. ஓடுவது அல்லது வேகமாக முன்னேறுகிறது என்று அர்த்தம். அதில் இருந்து தான் career-ம் வந்தது.  இவையெல்லாமே கரண்ட் என்கிற வார்த்தையில் இருந்து பிறந்தவை. மின்சக்தியும் கூரியர் மாதிரி ஒயரில் ஓடுகிறது அல்லவா.

# லட்சுமி படத்தின் இரண்டு பக்கங்களிலும் யானை படங்கள்  வரைவது ஏன்?

 ஒரு சமயம் யானைக்கு இறக்கைகள் இருந்தன. வானத்தில் மேகக் கூட்டம் போல பறந்து தும்பிக்கையால் மழை பொழிந்தன. இரு யானைகள் மரத்தின் மீது அமர கீழே இருந்த ரிஷிக்கு தொந்தரவாகி உங்களது இறக்கை  இல்லாமல் போக என்று சபித்ததார். மழை என்பது செல்வம். ஆகவே மனமிரங்கி லட்சுமி இரு யானைகளும் தன் பக்கத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டுவிட்டார்

# டாக்டர்கள் ஸ்டெதாஸ்கோப்பை தன் இதயத்தின் மீது வைத்து துடிப்பை கணக்கிடுகிறார்கள்.ஏன் முதுகுப்பக்கம் சிலசமயம் பார்க்கிறார்கள்?

 நம்ம உடல் சிலிண்டர் மாதிரிதாங்க. உங்க முதுகு மட்டும் செங்கல்பட்டிலா இருக்கு. ஸ்டெதாஸ்கோப்பை மார்பு முதுகு எல்லாமே ஒன்றுதான்

# பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?

 சத்தியமாக கிடையாது. வெளியே போ என்று உடலால் ஒதுக்கித் தள்ளப்பட்ட செத்துப்போன செல்தான் முடி. அதற்கு எப்படி மனம் இருக்க முடியும். நகமும் இதே கேஸ்தான்.நகத்துக்கு மணம் உண்டா. நக்கீரர் சொன்னது கரெக்ட்

# ஹம்மிங் பறவை எப்படி பின்னோக்கி பறக்கிறது?

 ஹம்மிங் பறவை ஒரு உயிருள்ள மினி ஹெலிகாப்டர். ஒரு விநாடிக்கு 60 முறை அதன் இறக்கைகள் இயங்கும். மொத்த இறக்கையும் உடலோடு இணையாமல், ஒரு விரல் நுனி அளவுக்கு மட்டுமே ஒட்டிக் கொண்டிருப்பதால், ஹம்மிங் பறவை மனிதனைப் போல் முன்னாலும் பின்னாலும் சுழற்ற முடியும். மேலும் கீழுமாக கூட முடியும். ஹம்மிங் முட்டைகளை விட கொஞ்சம் பெரியது.

# வவ்வால் இருட்டில் வாழ்வதன் மர்மம் என்ன?

 வெளவாலுக்கு செயலிழந்த கண்கள். பார்வை அதற்கு அவசியமில்லை. இருட்டே அதற்கு பகல். வாயால் அல்ட்ரா ஒலி எழுப்பி, அதன் எதிரொலியை வைத்து, ஒலி அலைகளை பயன்படுத்தி கும்மிருட்டில் படு வேகமாகப் பறக்கும்.வெளவாலுக்கு பகல் முழுவதும் சிரசாசன தூக்கம்தான்

# மனித உறுப்புகளில் கைகளில் நடுவிரலுக்கு அதிகம் வேலை இல்லையே?

 கைவிரல்களில் படு பிசியானது கட்டைவிரல்.அடுத்து ஆள்காட்டிவிரல். என்றாலும் எல்லா விரல்களுமே முக்கியம் தான். இதை டெஸ்ட் பண்ண நடுவிரலில் ஒரு பிளாஸ்திரி போட்டுக் கொள்ளுங்கள். நடுவிரலின் பணிகளையெல்லாம் முன்னரே இது ஒன்றுதான் வழி

# கொசுவை அடித்தால் எவ்வளவு கொசுக்களின் உற்பத்தி தடுக்கலாம்?

 ஒரு கொசுவை  அடித்தால் அது பெண் கொசுவா இருந்தால் பிரசவிக்கப் போகும் சுமார் 300 கொசுக்களை நீங்கள் கொன்றதாக அர்த்தம். 300ம்  பெண்களாக இருந்தால் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

# பிளாட் அபார்ட்மெண்ட் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

தமிழில் பிரித்து என்றால் பரப்பிவை அல்லது அகலப்படுத்து என்று பொருள். கிரேக்க மொழியில் ப்ளாத்து என்றானது. அதிலிருந்து ஜெர்மானிய மொழிக்கு போன வார்த்தை ப்ளாட்டு. ஆங்கிலத்தில் பிளாட்.

 அமெரிக்காவில் அப்பார்ட்மெண்ட் என்கிறார்கள் அதாவது மற்றவரிடம் இருந்து விலகி(apart) தனிமையில் எங்கள் குடும்பம் வாழ்கிற இடம் என்று அர்த்தம்.

#Number என்ற ஆங்கிலச் சொல்லை சுருக்கி எழுதுகையில், ‘No’ என்று எழுதுகிறோம். இதில் N-க்குப் பக்கத்தில் O எப்படி வந்தது?

 நியூமராலஜி, நியூமரிக்கல் என்று சொல்கிறோம் அல்லவா? நியூமரோ (Numero) என்றால் நம்பர். அதன் முதலும் கடைசியுமான சுருக்கம்தான் அது!

#இந்த மாநிலத்தில் பிறந்திருக்கலாமே என எண்ணியதுண்டா?

நம் அம்மாவைவிட நூறு மடங்கு அழகாய் இருந்தாலும், அடடா! அந்த பெண்மணிக்கு நாம் மகனாக பிறந்திருக்க கூடாதா என நினைப்போமா?அது மாதிரித்தான் நாம் பிறந்த மண்ணும்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

அமலன் ஸ்டான்லி


சின்னச்சின்ன நற்காரியங்களைச் செய்வதில் கவனம் செலுத்தும்போது, மனம் வலுப்பெற்று எல்லையற்ற தயாள மனப்பான்மையை வளர்க்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்வதற்கும், செய்ய வேண்டிய மிச்சமுள்ளவற்றைத் திட்டமிட மட்டும் இங்கில்லை. உங்களுக்கான நாட்களை வெறும் வேலைகளால் மட்டுமே நிரப்ப வேண்டியதில்லை. சுத்தம் செய்ய வேண்டிய, சேகரித்து வளர்த்தெடுக்க வேண்டிய சின்னச்சின்னக் காரியங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். 

குறித்த எல்லாம் முடிந்த பிறகு, உதாரணமாக, சமையலறையில், மதிய வேலையை முடித்தவுடன், இன்னும் கவனிக்க வேண்டியவை ஏதுமுள்ளனவா எனும் விவரத்தையும் கவனியுங்கள். ஒவ்வொரு நாளும் இரண்டு கூடுதல் காரியங்களைத் தேடி நிவர்த்தி செய்யுங்கள். ஒதுக்கப்பட்டவற்றை மட்டுமே செய்யும் வழக்கதை விட்டுவிடுங்கள். சின்னச்சின்னக் காரியங்களைக் கவனித்துச் செயலாற்றுவதில் தான் அருங்குணங்கள் வளரும்.

~ தனிசாரோ பிக்கு 
"எல்லையற்ற இதயத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" உரை

-அமலன் ஸ்டான்லி

Monday, 4 August 2025

143


#கற்கை_நன்றே_143

வீசிவிட்டு போன தினசரி நனைந்திருந்தது சற்று. வீசிவிட்டு போன பையன் நனைந்திருப்பான் முற்றிலும் - கல்யாண்ஜி"

கல்யாண்ஜி

காற்றுக்கு அறிமுகம் தேவையில்லை என்பதுபோல் கல்யாண்ஜிக்கு அறிமுகம் தேவையில்லை.வாழ்வின் அவசர ஓட்டத்தின் முன் நகர்தலை தடுத்து சொற்களில் இளைப்பாற வைத்தும்,அழகியலின் பிடிமானத்தை நம்முள்ளும் கடத்துவதில் ஒரு கவிதைக்காரர். சொற்களை விதை நெல்லைப்போல் கையாள்வதில் இவருக்கு நிகர் இவரே..

" எல்லோர் சொல்வதிலும் கொஞ்சம் உண்மை  இருக்கிறது

 எல்லோரும் சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இல்லை..

 எல்லாருக்கும் சொல்லே வேண்டுமெனில் யாரிடம் தருவேன் என் கண்ணீரை?

படைப்பு என்பதை படிப்பவரையும் சேர்ந்து கவனிக்க வைப்பது.தான் பார்த்த நுண்ணிய அழகியலை நம்மையும் காண வைக்க கவிஞன் நீட்டும் ஆள்காட்டி விரலே கவிதை. விரல் நீட்டும் திசையில் பார்க்கும் நம் பார்வை இன்னும் விசாலப்படும்

"பழகிய காலணிகளை இருட்டுக்குள் கால் நுழைத்து அணிந்து கொள்வது போல இருந்தது 

கழற்றிப் போடப்பட்டிருக்கும் இருட்டில் 

இந்த இரவின் ஊடாக 

நாளைக்கு செல்வது

*இந்த தினத்தின் முதல் வகுப்பு எடுக்க வந்த ஆசிரியர் 
முந்தைய தினத்தின் கடைசி வகுப்பு எழுத்து மிதக்கும் கரும்பலகையை பார்க்கிறார். மிகுந்த தயக்கத்துடன் ஒரு முந்திய தினத்தை எல்லோரிடமிருந்தும் அளிக்கிறார்

#எல்லா கவிதையும் புரிய வேண்டுமா?

கோயிலுக்குச் சென்று ஒரு வித அனுபவத்தை அல்லது குறிப்பிட்ட மனநிறைவை பெறுகிற மனிதனைப் போல கவிதையை அணுகும் நபர் ஏமாந்து போகிறார். குறிப்பிட்ட உணர்வினை கவிதைத் தர வேண்டும் என்று நினைக்கும் வாசகன் அவ்வுணர்வை பெறாமல் காணாமல் போகிறான். பிரதானமாய் புரிய தன்மை என்பது கவிஞன் இடத்தில் இல்லை கவிதை இடத்திலும் இல்லை மாறாக வாசகர்களாகிய நம்மிடம் தான் உள்ளது.ஆனால் கல்யாண்ஜியின் கவிதைகள் எட்டுவழிச் சாலைபோல் இல்லாமல் பெரும்பாலும் மேதாவித்தனம் இல்லாத எளிய சாலைபோலவே இருக்கும்.

" எல்லோரும் பசியில் இருந்தோம் எங்கள் முன்னால் இருந்த 
ஒரே ஒரு ரொட்டி 
அவரவர் கண்கள் அளவில் துண்டுகளாய் தெரிய.

பார்வையில் இருக்கும் பசியின் அளவை வார்த்தையால் அளக்க முடியாது.

" யாரும் அகன்றுவிட வேண்டாம் கட்டிலைச் சுற்றி அப்படியே நில்லுங்கள் 
உங்களிடமிருந்து பெற்றிருக்கும் சிரிப்பை 
உங்களிடம் நான் ஒப்படைக்க வேண்டும்"

*மின்விசிறியின் காற்று வாங்கிப் பழகியவனுக்கு வெட்டவெளியில் கிடைத்த இயற்கை காற்று போல இருக்கும் கல்யாண்ஜியின் வரியை படிக்கும்போது.இவரின் புத்தகத்தின் பக்கத்தைக்கூட அன்பாய் புரட்ட இவரின் எழுத்துக் கற்றுக்கொடுக்கும்.

எழுத்துக்களில் உள்ள வியப்பை மனிதனிடத்தில் பார்க்கும் கவிதையாய்..

* எழுத்துக் கூட்டி யாவது மனிதர்களை வாசித்து விடுகிறேன்.

* வெயில் காலத்தில் ஒரு மாதிரி இருக்கிறேன். இந்த மழை காலத்தில் வேறு மாதிரி இருக்கிறேன். எனக்குள் வளரும் தாவரம் அப்படி.

#வெயிலிலிருந்து நகர்ந்து நிழலுக்கு வருவதுபோல..
சிந்தனையிலிருந்து வெளிப்பட்டு நனவுலகையும் கனவுலகையும் தொடர்படுத்தும் கயிதுபோல் இக்கவிதை

* நனைந்து வீட்டுக்குள் நுழைந்தவள் 
தலையிலிருந்து மழை கொட்டிக்கொண்டிருந்தது. சொல்லலாம் மழையிலிருந்து அவள் சொட்டிக் கொண்டே இருந்ததாகவும்

* கடைசியாக பஸ்ஸிலிருந்து  இறங்குபவர்களை கடைசியாக அரங்கில் இருந்து வெளியேறுபவர்களை 
ஒரு பந்தி வரிசையின் நடுஇலை ஒன்றில் கடைசியாக சாப்பிட்டுக்கொண்டு இருப்பவரை...
நான் முயல்கிறேன் கடைசி வரிக்கு முந்தைய வரிகளில் ஒன்று எழுதி விடுவதை

#எவ்வளவு விளக்கங்களுக்கு அப்பாற்பட்டும் கவிதைகள் தமக்குள் ஒரு சூட்சும ஆழங்களை வைத்துக் கொண்டுதான் இருக்கும் என்பார் பிரம்மராஜன்.இன்று புரிந்து கொள்ளப்பட்டது அடுத்த சில தசாப்தங்களில் மீண்டும் மூடப்பட்டு விடலாம்.

* நீங்கள் என்னை சாப்பிட்டுக் கொண்டே இருந்தீர்கள்.
 உங்கள் தட்டில் கொஞ்சம் மிச்சம் இருந்தேன் நான்.
 எனக்கு இப்போது கடும் பசி. என்னை நான் சாப்பிடத் துவங்கி இருக்கிறேன் உங்கள் தட்டிலிருந்து எடுத்து.

*உருண்டு விழுந்தோடும் பென்சிலை 
குனிந்தெடுத்தந்த சிறுமியிடம் கொடுக்கையில் 
பென்சில் அழகாக இருந்தது 
ஒரு உலகம் போல. 
உலகம் அழகாக இருந்தது 
ஒரு பென்சில் போல.

 எவ்வளவு எதார்த்தமாக இருக்கிறது இந்த கவிதை சிறு சிறு விஷயங்களில் நாம் தவறவிட்ட அத்தனை இன்பங்களையும் தன் வார்த்தைகளில் வசப்படுத்தி விடுகிறார் கல்யாண்ஜி.

கல்யாண்ஜியின் முத்திரை வரிகள்:

*எனக்கு இருக்கும் இறந்த காலம் போல, 
பறவைக்கும் இருக்கும் அல்லவா 
-ஒரு பறந்த காலம்

*போய்க்கொண்டிருக்கும் போது "ஒரு கைப்பிடிச்சு தூக்கிவிடுங்க" என்று கனத்த கூடையுடன் சில முகம் அழைக்குமே,
அப்படி அழைக்கும்படியாக
  நான்
போய்க் கொண்டிருந்தால்
போதும்

*எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தை விட,அணைந்த பொழுதில் தொலைந்த வெளிச்சம் பரவுகிறது மனதில் பிரகாசமாக...!

*நீ வருவதற்காக 
காத்திருந்த நேரத்தில்தான் 
பளிங்கு போல் 
அசையாதிருந்த தெப்பக்குளம் 
பார்க்க ஆரம்பித்தேன். 
தலைகீழாய் வரைந்து கொண்ட 
பிம்பங்களுடன்  
தண்ணீர் என் பார்வையை 
வாங்கிக் கொண்டது முற்றிலும்; 
உன்னை எதிர்பார்ப்பதையே 
மறந்து விட்ட ஒரு கணத்தில் 
உன்னுடைய கைக்கல் பட்டு 
உடைந்தது 
கண்ணாடிக்குளம். 
நீ வந்திருக்க வேண்டாம் 
இப்போது.

*தொட்டிப்பூ
பூப்பூத்தல் அதன் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்

*முடி திருத்துகிற ஒரு தெய்வம்
செவ்வாய்க் கிழமை ஓய்வெடுத்துக்
கொள்கிறது

*உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம் இருக்கும்தானே!"

*என்ன செய்துகொண்டு
இருக்கிறாய் இப்போ?
என்று நானும் 
இனிமேல் கேட்கலாம்
எனக்கு வேலை கிடைத்துவிட்டது

*"தானாய் முளைத்த செடி என்கிறார்கள் யாரோ வீசிய விதையிலிருந்து தானே 

*கருப்பு வளையல் அணிந்து குனிந்து வளைந்து ஒருத்தி பெருக்கிவிட்டு போனாள்.வாசல் சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு.'

ரசனைக் குறைவே இன்றைய மனநிலையை அதிகம் பாதிக்கிறது. ரசனையுள்ள வாழ்வே வாழ்நாளை அர்த்தப்படுத்துகிறது.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

தன்னை அறியத் தனக்கு ஒரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்சிக்கத் தானிருந்தானே-திருமூலர்

97


#Reading_Marathon2025
#25RM055

Book No:97/100+
Pages:-272

யாரும் யாருடனும் இல்லை
-உமா மகேஸ்வரி

உமா மகேஸ்வரியின் எழுத்து நடைக்காகவே வாங்கி நூல்களை வாசித்துள்ளேன்.இயல்பாக நடக்கும் ஒரு விஷயத்தைக் கூட தன் கவித்துவ நடையில் மெருகூட்டுவார். இந்நாவல் முழுக்க குடும்பத்தை அடிநாதமாகக் கொண்டது.ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்கள், அனுபவங்கள் தான் நம் நினைவுகளோடு பொருத்தி நம்மை குடும்பத்தில் ஒருவராய் இருந்து பார்வையாளராய் ஆக்குகிறது. நாவல் துவங்குவது என்பது.. அணைக்கட்டிலிருந்து வெளியேறும் மழைநீர் கிராமத்தினுள் நுழைதல் போல இந்த வரிகள்..
"இரவின் ஆழ்ந்த அமைதியோடு வீடு ஒரு மாபெரும் கொள்கலனாயிருந்தது" என வீட்டின் வரைபடத்தை மனதில் வரைகிறார்.

திருமலாபுரத்தில் குழந்தை திடீரென இரவில் அழுவதை
'தெருக்கள் முழுக்க முழுக்க அமைதியுற்றபோது சூடான ஊற்றாகப் பீரிட்டெழுந்தது அந்த அழுகுரல்'என டைபாய்ட் நோயால் பாதிக்கப்பட்ட தனமணியை மருத்துவமனையில் சேர்ப்பதிலிருந்து நாவல் துவங்குகிறது.அன்னம்மாவின் மூன்று மருமகள்களில் ஒருவர்தான் தனமணி.இன்னொரு மருமகள் விஜயா மற்றும் ராஜேஷ்வரி.இவர்களின் மாமனார் பொன்னையா.

இவர்களின் மகள் பூரணியின் கணவன் ஒருகுடிகாரன். இவளுக்கு சொத்து இருப்பது இவனுக்கு ஒரே உறுத்தல்.பேத்தி அனுவின் பள்ளி பருவமும் சொல்கிறார்கள். நான் லீனியர் முறையில் ஒவ்வொரு பகுதியும் கதாபாத்திர அறிமுகத்துடனும் அவர்களின் பின்புலமும் விவரிக்கிறது.முதல் பகுதியில் மருத்துவமனையில் சேரக்கும் தவமணி பற்றி பின்னர் கதையாக தொடர்கிறது. இரண்டாவது பெண்ணை ஈன்றெடுக்கும் தனத்தினை கணவன் செல்வம் கடிந்து கொள்கிறான்.

கூட்டுக்குடும்பம் என்றாலே ஒரு கடலில் இருந்தாலும் தனித்தனி தீவுகளாக மனிதர்களும் அவர்களின் உணர்வுகளும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.அன்னம்மாவின் தன்மையை பிறர் பார்வையிலிருந்து கூறுகிறார்.கால் ஊனமான சுப்பக்கா அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் கதாபாத்திரம்.கதை சொல்லியும் கூட.நரேந்திரன், கோபால் இருவரும் செல்வத்தின் தம்பிகள். கூட்டுக் குடும்பத்திற்கே உரிய முறையில் பிரசவம், குழந்தைகள் கூட்டம் என அன்றாடம் கூச்சல் தான். ஒவ்வொருவர் சமைக்கும் போது என்ன நடக்கும்.. எவ்வாறு முகம் சுருக்குவார்கள் என நகைச்சுவையாய் சொல்லியிருப்பார்.

கூட்டுக்குடும்பமாய் இருந்தாலும் அனைவரும் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிறவர்கள் போலத்தான் எண்ணுகின்றனர்.பல நேரங்களில் கடமைக்காகவும், சில அனுபவங்கள் சுமையாகவும் ஒவ்வொருவரை எண்ண வைக்கிறது.ஆனாலும் அங்கு உள்ள குழந்தைகளுக்கு விளையாடுவதும் சித்தப்பாக்களும் இருப்பதால் சொர்க்கம்தான் வீடு.மீண்டும் தனத்துக்கு மூன்றாவது பெண் குழந்தை. பெண் குழந்தை தொடர்ந்து பிறந்தால் ஏற்படும் உளவியல் பார்வை இந்நாவலில் வெளிப்படுகிறது 

பேத்தி அனுவின் பார்வையிலேயே நாவல் விரிகிறது.தாத்தாக்களின் பழைய வாழ்க்கையில் இரு மனைவி வாழ்க்கை,ஒருவருக்கு உடல் சுகமில்லையெனில் வீடே ஆறுதலும் அறிவுரையும் அளிப்பது என நாமே கூட்டுக் குடும்பத்தில் இருந்த திருப்தியை தருகிறது.அன்னம்மா, சுப்புக்காவின் மரணமும்..தரணியின் நான்காவது கர்ப்பதில் ஆண் பிறந்ததும் நாவலை சுவாரஸ்யமாய் படிக்கத் தூண்டுகிறது.குழந்தைகள் தான் உறவுகளை இணைக்கும் பாலமாய் விளங்குகின்றனர். பெரியவர்களின் பிணக்குகள் இவர்களை பாதிப்பதில்லை.

கூட்டு குடும்பத்தில் உள்ள ஒவ்வ்வொருவரின் குணாதிசியமும் 
விவரிக்கப்படுகிறது.ஒரு குடும்ப சீரியல் இறுக்கமான கதைகளுடனும் சுவாரஸ்யமான கதைமாந்தர்களுடனும் இருந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறு படிக்க தூண்டும் விதத்தில் உள்ளது.

ரசித்த வரிகள்

*சொல்லிய சொற்களை கொட்டிய கண்ணீரில் அழித்துவிட விரும்பினாள்.ஆனால் அறையை அடையுமுன் உலர்ந்து அழித்துவிட்டிருந்தது

*தினசரி உயர்ந்தும் தாழ்ந்தும் எரியும் அடுப்பு நெருப்பில் மாற்றி மாற்றி தங்கள் பொழுதுகளைப் போட்டுக் கொளுத்திக் கொண்டிருப்பார்கள் அந்த வீட்டின் பெண்கள்

*அவன் சொல்ல வேண்டுமென்று காத்திருப்பதுதான் பெண்மைக்கு அழகு

*இரவு மிக நீண்டது.துணை இழ்ந்தவர்க்கு இன்னும் கொடிது.தனிமைக்குள்ளிருந்து முளைத்த கனவுகள் இசையற்று விரிந்து பரவும்

*பெண்களும் குழந்தைகளும் அழும் ஓசை வீட்டின் சுவர்களுக்குள் புகைந்து கொண்டே இருக்கும்

வீடு, தன்னைச் சுவர்களால் பிரிப்பதை மௌனமாகக் குனிந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தது. அந்த சுவர்கள் இறுக்கமாக மேலே எழும்பின. அவை எல்லாவற்றை யும் மூர்க்கமாகப் பிரித்தன. அறைகள். அலமாரிகள் கண்ணாடிகள், பிள்ளைகளின் விளையாட்டு சாமான்கள்... தனித்தனியாகப் பிரிந்து விலகின வீடு வெயிலில் தன்னை எறிந்து. கனியே நின்று; வரிவரியாகத் தன் மேல் விழும் பிரிவினையின் கோடுகளை வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றிருந்தது.

ஒரு கூட்டுக்குடும்பத்தின் அக உலகை பார்த்து வந்த திருப்தி நாவலில்.

கூட்டுக்குடும்பம் தொடர்ந்து இயங்குவது அங்கேயிருக்கும் பெண்களின் கைகளிலும் மனங்களிலும் தான் உண்டு.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 3 August 2025

142


#கற்கை_நன்றே_142

யார் எதுவும் சாதிக்க போவதில்லையோ அவர்கள் தியாகம் செய்யத் தேவை யில்லை.

சாதிக்கப் போகிறவர்கள் கட்டாயம் நிறைய தியாகம் செய்ய வேண்டும்.

யார் அதிக உயரத்தை எட்டப் போகிறார்களோ அவர்கள் அளப்பரிய தியாகங்களைச் செய்ய வேண்டியது அத்தியாவசிய மாகிறது.

ஜேம்ஸ் ஆலன்

கடந்த வாரத்தில் முகநூலில் ஒரு நண்பர் சந்தேகம் ஒன்றை என்னிடம் கேட்டார். நான் அதற்கு தகுந்த பதிலை ஆதாரங்களுடன் அளித்தேன்.பதிலுக்கு ஒரு சிறிய நன்றி கூட தெரிவிக்கவில்லை.. நான் நன்றியை எதிர்பார்க்கவில்லை ஆனால் ஒரு மரியாதைக்காகவாவது ஒரு தம்ஸ் அப் போட்டிருக்கலாம் என எண்ணினேன்.ஒரு சிலரின் எண்ண ஓட்டங்கள் இவ்வாறெல்லாம் இருக்கிறதே என வியக்கத் தோன்றுகிறது

சமீபத்தில் தீக்கதிர் நாளிதழில் ச. லெனின் எழுதிய மண்ணுயிர்க்கெல்லாம் இனிது எனும் கட்டுரை வாசித்தேன்.அதில் 
1995 முதல் 2009 க்குள் பிறந்தவர்களை தலைமுறையினரை ஜெனரேஷன் Generation Z). Q (Gen 2) என்கின்றனர்.தொழில் நுட்ப அறிவில் முந்தைய தலைமுறையினரை விட அறிவு மிக்கவர்களாக உள்ளனர். பணியிலிருக்கும் திறமையானவர்கள் வேலையைவிட்டு செல்வேன் என மிரட்டும்வதும், திறமையற்றவர்ளை
வேலையைவிட்டு நீக்குவதும் சகஜமாகிவிட்டது.

ஜென் சி தலைமுறையினர் குறித்துப் பலதளங்களில் விவாதங்களும் ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. முந்தைய தலைமுறையினரோடு ஒப்பிடுகையில், ஜென் சி-யினர் பொறுப்பற்றவர்கள். எடுத்துக் கொண்ட வேலைகளைச் சரிவர முடிக்கத் தவறுகிறவர்கள், நிர்வாக ஒழுங்குகளை மதிக்க மாட்டார்கள், தங்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது எனும் மனநிலை உடையவர்கள், நேரத்திற்கு வருவதும் நேர மேலாண்மையும் இல்லாதவர்கள் என்று மனிதனை அதிகாரிகள் குறைபட்டுக்கொள்வ தாக ஒரு ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கிறது. ஜென் சி-யினரை பணிக்கு அமர்த்துவதில் 75% மனிதவன் அதிகாரிகளுக்கு விருப்பமில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொதுச்சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், தான் என்கிற தன்னிலைப் போக்கை மட்டுமே ஜென் சி தலைமுறையிடம் ஆளும் முதலாளித்துவ வர்க்கம் வளர்த்துவிட்டுளளதாக கூறுகிறது.
குறைபாடுடைய முதலாளுத்துவத்திற்கு குறைபாடுடைய ஆற்றலே கிடைக்கிறது.தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடின்மை,குறைந்த கூலிக்கு கூடுதல் உழைப்பு என பொறுப்பற்ற முதலாளித்துவத்துக்கு ஒப்புக்கொண்டு வேலை செய்கின்றனர்.தனித்தனி உழைக்கும் எந்திரங்களாக மாறுகின்றனர்.ஒப்பந்த அடிப்படையிலேயே பெருமளவு நியமிக்கப்படுகின்றனர்.அதிக சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

தனிநபரின் வாழ்விற்கும் சமூகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நினைக்கிறார்கள். சமூக வளர்ச்சிக்கு தங்கள் பங்ககிப்பை விரும்புவதில்லை. பொது சிந்தனையோ பொதுநலன் சார்ந்த சிந்தனையோ இன்றி இதற்கு எதிர்மாறான சூழலில் இருக்கின்றனர்.புதிய கோரிக்கைகளுக்கு போராடுவதை விடுத்து, தற்போது உள்ள உரிமைகளைப் பாதுகாக்கப் போராடும் நிலைக்கு சமூகத்தைத் தள்ளியுள்ளது.இத்தகைய சூழலில் இவர்களும் இணைந்து செயல்படாமல் தனித்து பயணிக்கின்றனர்.

இவர்களிடம் வாசிக்கும் தன்மை குறைந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதோடு நின்றுவிடுகின்றனர்.தற்போதைய நிலையில் பொறுமை இன்றி வேலை அழுத்தமும் மன அழுத்தமும் இருபுறம் அழுத்துகிறது. நெருக்கடிகளை எதிர்கொள்ளாத நிலை ஏற்படுத்துகிறது. உரிமைகளுக்காக போராடும் சிலர் நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர்.

முதலாளித்துவம் சீர்படுத்த முடியாத அமைப்பு முறையாகும். அதை அழித்தொழிப்பதே நவீன பாட்டாளி வர்க்கத்தின் பணி என்றார் லெனின். ஜென் சி-யினர்தான் இன்றைய நவீன பாட்டாளி கள். குறைபாடுடைய முதலாளித்துவம் அவர்களி டம் திணித்துள்ள குறைபாடுகளைக் களைந்து, அவர்களின் அறிவாற்றலை மன்னுயிர்க் கெல்லாம் இனிதானதாக மாற்றிட அவர்களை அரசியல்படுத்து வதும், அணிதிரட்டுவதும் அவசியமாகிறது.

ஜென் சி-யினருக்கு அடுத்து ஜென் ஆல்ஃபா (Generation Alpha) (2010 - 2024 பிறந்தவர்கள்) தலைமுறை வந்துவிட்டது. அதற்கடுத்து பீட்டா தலைமுறை பிறக்கத் தொடங்கிவிட்டது. இளம் பாட்டாளிகளும், மாணவர்களுமாக உள்ள ஜென் சி-யினரை அணிதிரட்டுவதும் அடுத்தடுத்த தலைமுறையை ஒழுங்கமைத்து கூர்தீட்டுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு