Monday, 4 August 2025

97


#Reading_Marathon2025
#25RM055

Book No:97/100+
Pages:-272

யாரும் யாருடனும் இல்லை
-உமா மகேஸ்வரி

உமா மகேஸ்வரியின் எழுத்து நடைக்காகவே வாங்கி நூல்களை வாசித்துள்ளேன்.இயல்பாக நடக்கும் ஒரு விஷயத்தைக் கூட தன் கவித்துவ நடையில் மெருகூட்டுவார். இந்நாவல் முழுக்க குடும்பத்தை அடிநாதமாகக் கொண்டது.ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்கள், அனுபவங்கள் தான் நம் நினைவுகளோடு பொருத்தி நம்மை குடும்பத்தில் ஒருவராய் இருந்து பார்வையாளராய் ஆக்குகிறது. நாவல் துவங்குவது என்பது.. அணைக்கட்டிலிருந்து வெளியேறும் மழைநீர் கிராமத்தினுள் நுழைதல் போல இந்த வரிகள்..
"இரவின் ஆழ்ந்த அமைதியோடு வீடு ஒரு மாபெரும் கொள்கலனாயிருந்தது" என வீட்டின் வரைபடத்தை மனதில் வரைகிறார்.

திருமலாபுரத்தில் குழந்தை திடீரென இரவில் அழுவதை
'தெருக்கள் முழுக்க முழுக்க அமைதியுற்றபோது சூடான ஊற்றாகப் பீரிட்டெழுந்தது அந்த அழுகுரல்'என டைபாய்ட் நோயால் பாதிக்கப்பட்ட தனமணியை மருத்துவமனையில் சேர்ப்பதிலிருந்து நாவல் துவங்குகிறது.அன்னம்மாவின் மூன்று மருமகள்களில் ஒருவர்தான் தனமணி.இன்னொரு மருமகள் விஜயா மற்றும் ராஜேஷ்வரி.இவர்களின் மாமனார் பொன்னையா.

இவர்களின் மகள் பூரணியின் கணவன் ஒருகுடிகாரன். இவளுக்கு சொத்து இருப்பது இவனுக்கு ஒரே உறுத்தல்.பேத்தி அனுவின் பள்ளி பருவமும் சொல்கிறார்கள். நான் லீனியர் முறையில் ஒவ்வொரு பகுதியும் கதாபாத்திர அறிமுகத்துடனும் அவர்களின் பின்புலமும் விவரிக்கிறது.முதல் பகுதியில் மருத்துவமனையில் சேரக்கும் தவமணி பற்றி பின்னர் கதையாக தொடர்கிறது. இரண்டாவது பெண்ணை ஈன்றெடுக்கும் தனத்தினை கணவன் செல்வம் கடிந்து கொள்கிறான்.

கூட்டுக்குடும்பம் என்றாலே ஒரு கடலில் இருந்தாலும் தனித்தனி தீவுகளாக மனிதர்களும் அவர்களின் உணர்வுகளும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.அன்னம்மாவின் தன்மையை பிறர் பார்வையிலிருந்து கூறுகிறார்.கால் ஊனமான சுப்பக்கா அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் கதாபாத்திரம்.கதை சொல்லியும் கூட.நரேந்திரன், கோபால் இருவரும் செல்வத்தின் தம்பிகள். கூட்டுக் குடும்பத்திற்கே உரிய முறையில் பிரசவம், குழந்தைகள் கூட்டம் என அன்றாடம் கூச்சல் தான். ஒவ்வொருவர் சமைக்கும் போது என்ன நடக்கும்.. எவ்வாறு முகம் சுருக்குவார்கள் என நகைச்சுவையாய் சொல்லியிருப்பார்.

கூட்டுக்குடும்பமாய் இருந்தாலும் அனைவரும் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிறவர்கள் போலத்தான் எண்ணுகின்றனர்.பல நேரங்களில் கடமைக்காகவும், சில அனுபவங்கள் சுமையாகவும் ஒவ்வொருவரை எண்ண வைக்கிறது.ஆனாலும் அங்கு உள்ள குழந்தைகளுக்கு விளையாடுவதும் சித்தப்பாக்களும் இருப்பதால் சொர்க்கம்தான் வீடு.மீண்டும் தனத்துக்கு மூன்றாவது பெண் குழந்தை. பெண் குழந்தை தொடர்ந்து பிறந்தால் ஏற்படும் உளவியல் பார்வை இந்நாவலில் வெளிப்படுகிறது 

பேத்தி அனுவின் பார்வையிலேயே நாவல் விரிகிறது.தாத்தாக்களின் பழைய வாழ்க்கையில் இரு மனைவி வாழ்க்கை,ஒருவருக்கு உடல் சுகமில்லையெனில் வீடே ஆறுதலும் அறிவுரையும் அளிப்பது என நாமே கூட்டுக் குடும்பத்தில் இருந்த திருப்தியை தருகிறது.அன்னம்மா, சுப்புக்காவின் மரணமும்..தரணியின் நான்காவது கர்ப்பதில் ஆண் பிறந்ததும் நாவலை சுவாரஸ்யமாய் படிக்கத் தூண்டுகிறது.குழந்தைகள் தான் உறவுகளை இணைக்கும் பாலமாய் விளங்குகின்றனர். பெரியவர்களின் பிணக்குகள் இவர்களை பாதிப்பதில்லை.

கூட்டு குடும்பத்தில் உள்ள ஒவ்வ்வொருவரின் குணாதிசியமும் 
விவரிக்கப்படுகிறது.ஒரு குடும்ப சீரியல் இறுக்கமான கதைகளுடனும் சுவாரஸ்யமான கதைமாந்தர்களுடனும் இருந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறு படிக்க தூண்டும் விதத்தில் உள்ளது.

ரசித்த வரிகள்

*சொல்லிய சொற்களை கொட்டிய கண்ணீரில் அழித்துவிட விரும்பினாள்.ஆனால் அறையை அடையுமுன் உலர்ந்து அழித்துவிட்டிருந்தது

*தினசரி உயர்ந்தும் தாழ்ந்தும் எரியும் அடுப்பு நெருப்பில் மாற்றி மாற்றி தங்கள் பொழுதுகளைப் போட்டுக் கொளுத்திக் கொண்டிருப்பார்கள் அந்த வீட்டின் பெண்கள்

*அவன் சொல்ல வேண்டுமென்று காத்திருப்பதுதான் பெண்மைக்கு அழகு

*இரவு மிக நீண்டது.துணை இழ்ந்தவர்க்கு இன்னும் கொடிது.தனிமைக்குள்ளிருந்து முளைத்த கனவுகள் இசையற்று விரிந்து பரவும்

*பெண்களும் குழந்தைகளும் அழும் ஓசை வீட்டின் சுவர்களுக்குள் புகைந்து கொண்டே இருக்கும்

வீடு, தன்னைச் சுவர்களால் பிரிப்பதை மௌனமாகக் குனிந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தது. அந்த சுவர்கள் இறுக்கமாக மேலே எழும்பின. அவை எல்லாவற்றை யும் மூர்க்கமாகப் பிரித்தன. அறைகள். அலமாரிகள் கண்ணாடிகள், பிள்ளைகளின் விளையாட்டு சாமான்கள்... தனித்தனியாகப் பிரிந்து விலகின வீடு வெயிலில் தன்னை எறிந்து. கனியே நின்று; வரிவரியாகத் தன் மேல் விழும் பிரிவினையின் கோடுகளை வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றிருந்தது.

ஒரு கூட்டுக்குடும்பத்தின் அக உலகை பார்த்து வந்த திருப்தி நாவலில்.

கூட்டுக்குடும்பம் தொடர்ந்து இயங்குவது அங்கேயிருக்கும் பெண்களின் கைகளிலும் மனங்களிலும் தான் உண்டு.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment