Thursday, 21 August 2025

156


#கற்கை_நன்றே_156

"ஆற்றின் வேகத்தில் சிக்கப் பட்ட வேதனைகளைக் கூழாங்கல் ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை. அது தண்ணீர் உருவாக்கிய சிற்பம் போலவே தன்னைக் கருதுகிறது. கூழாங்கல்லின் மௌனம் போன்றதே எனது நிதானம்."

-எஸ்.ரா

ஒரு கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் ஒரு குவளையில் நீரை நிரப்பி அதன் எடை என்னவென்று தன் மாணவர்களை கணிக்க சொன்னார். ஒவ்வொருவரும் ஒரு விடையை சொன்னார்கள்.

அதற்கு ஆசிரியர் கூறுகிறார் இந்த குவளையின் எடை இங்கே முக்கியமில்லை அதை நான் எவ்வளவு நேரம் தாங்கி பிடித்திருக்கிறேனோ அதற்கேற்றாற் போல் அதன் எடை மாறுபடும்.

இதை நான் ஒரு நிமிடம் தாங்கி பிடித்தால், அதன் எடை மிகவும் சிறிதாக தெரியும். இதையே நான் ஒரு மணி நேரம் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தால்.. என் கை வலிக்க ஆரம்பித்து விடும். இதுவே நான் ஒரு நாள் முழுதும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தால் என் கை உணர்வற்று செயலற்றதாகி விடும்.

இங்கே அந்த குவளையின் எடை அதிகமாகவில்லை ஆனால் அதை நான் தாங்கிக் கொண்டிருக்கும் நேரம் அதிகமாகும் பொழுது அந்த குவளையின் எடை கூடுவது போல் ஒரு பிம்பம் உருவாகிறது.

நம் மன அழுத்தம், கவலைகள் எல்லாம் இந்த குவளை தண்ணீர் போல. சிறிது நேரம் அதைப் பற்றி நினைத்தால் எந்த தொந்தரவுமில்லை. அதுவே கொஞ்சம் நேரம் கூடுதலாக அதை பற்றிய சிந்தனையில் இருந்தால் ஒரு சங்கடமான நிலையை உருவாக்குகிறது. சதா ஒரு நாள் முழுவதும் இதே சிந்தனையிலிருந்தால் அது நம்மை உணர்ச்சியற்றவராக எதுவும் செய்ய இயலாத நிலையை தந்துவிடும்.

இங்கே கவலைகளோ மன அழுத்தமோ நம்மை தொந்தரவு செய்வதில்லை. அதைப்பற்றி நாம் எவ்வளவு நேரம் யோசிக்கிறோமோ அந்த அளவு நம்மை ஆட்படுத்தும் சக்தியை நாம் அதற்கு கொடுத்து விடுகிறோம். இங்கே ஒரு மடுவை மலையாக்குகிறோம் நாம்.

இதற்கென்ன வழி? மிகவும் எளிது. எப்பொழுதும் அந்த குவளையை கீழே வைத்துவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment