Sunday, 17 August 2025

152


#கற்கை_நன்றே_152

தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர
மொழிந்திடுதல்!சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக்
கனவுபல காட்டல்;கண்ணீர்த்
துளிவர உள்ளுருக்குதல்

-பாரதியார்

நம் வாசிப்பின் மிகச் சிறந்த சொத்தாக இலக்கியம் கருதப்படுகிறது. ஆனால் நம் முன்னோர்களின் அறிவு கருவூலமாக நாட்டுப்புற இலக்கியங்கள் திகழ்கின்றன. அவை வாய்வழியாக சொல்வதால் பல்வற்றை மூடநம்பிக்கை, கட்டுக்கதை என்று ஒதிக்கிவிடுகிறோம். ஆனால் அதில் உள்ள வாழ்வியல் கதைகள் என்றும
 நம் உத்வேகப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளன. அவ்வகையில் சமீபத்தில் இறையன்பு உரையில் சில மேற்கோள்கள் கூறியது சிந்தைக்கு விருந்தாக இருந்தது.

ஒருமுறை கம்பர் மாலை வேளையில் நடைபயின்ற போது 'மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே என்று ஓர் ஏற்றம் இறைப்பவர் பாடியதாகவும், அடுத்த வரி எப்படி இருக்கும் என்று இரவு வரை தூங்காமல் அதையே கம்பர் யோசித்திருந்தார்.

மறுநாள் அவர் எப்படி முடிப்பார் என்று அதே வயலுக்குச் சென்றபோது 'மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே' என்று முடித்தாராம். கம்பரே அசந்து போனாராம்.

நாட்டுப்புறப் பாடல்களில் இருக்கும் கவித்திறன் அசாத்தியமானது.

கைம்பெண் ஒருத்தி கணவனை நினைத்துக் கேள்வி கேட்பதுபோல் ஒரு நாட்டுப்புறப் பாடல். (மாலையிட்ட மங்கையில் கேட்டிருப்பீர்கள்)

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று என்னை நிறுத்தி வழிபோனவரே

என்கிற அந்தப் பாடலில் அத்தனை கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த உலகம் நெருஞ்சி பூத்த காடுபோல அழகாக இருக்கிறது, தூரத்திலிருந்து பார்ப்பதற்கு, மஞ்சை மசேலென்று அத்தனை அழகாக அது இருக்கும். கண்களைக் கவர்ந்திழுக்கும்.

நாமும் மயங்கி உள்ளே சென்றால் கால்களை முள்ளாய்க் குத்தும். அதைப்போல கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு இவ்வுலகம் நெருஞ்சியைப்போல் இருக்கும் என்று பாடுகிறாள் அவள்.

எத்தனை பொருள் பொதிந்த பாடல்!

கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்றெல்லாம் கூறுகிறோம். ஏன் கடுகளவு, மிளகளவு என்று கூறக் கூடாதா!

கைமணலைக் காட்டிலும் கடுகு சிறியதில்லையா!
பிறகெதற்கு கைம்மண் உதாரணம்.

"குறுகும் கைமணல் போல' என்கிற நாட்டுப்புறப் பாடல் ஒன்று உண்டு. கை நிறைய மணலை அள்ளினால் அது கை இடுக்குகளின் வழியாக வெளியே விழுந்து கொஞ்சம்தான் எஞ்சியிருக்கும். அதைப்போல நாம் படித்தவற்றில்கூட நாளடைவில் பலவற்றை மறந்துவிட்டுச் சிறிது கல்வி அறிவோடு மட்டுமே இருப்போம் என்பதை அந்தப் பழமொழி குறிப்பிடுகிறது.

காட்டில் ஒரு காகம் மரத்தின் மேல் சும்மா அமர்ந்து கொண்டு இருந்ததாம்அந்த வழியே சென்ற முயல் காகத்தை பார்த்து !

என்ன செய்து கொண்டு இருக்கிறாய்!என்று கேட்க
காகமோ !சும்மா உட்கார்ந்து கொண்டு பொழுதை போக்கி கொண்டு இருக்கேன் என்று சொல்லியதாம்!

முயல் ' அப்படியா நானும் அதையே செய்கிறேன் " என்று அதுவும் கீழே அமர்ந்து சும்மா இருந்ததாம் !
அந்த வழியே சென்ற புலி !
சும்மா இருந்த முயலை பிடித்து சாப்பிட்டு !விட்டதாம் !

நீதி - வாழ்க்கையில் சும்மா இருக்க வேண்டும் என்றால் நீ உயரத்தில் இருக்க வேண்டும் என் அந்த நாட்டுப்புறக் கதை முடியும்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment