#கற்கை_நன்றே_153
செம்பைத் தினந்தோறும் தேய்த்துக் கழுவாவிடில் களிம்பு ஏறிவிடும். நம் மனமும் அப்படித்தான்
-பரமஹம்சர்
வெளிச்சம் கொண்டு அனைத்தையும் தேடலாம் இருளைத்தவிர"
மனம் என்பது அறிவு மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பு.ஒருவர் “நான் இன்று பூங்காவிற்கு போகலாமா?” என்று சிந்திப்பது..சிந்தனையின் செயல்பாடு, இதை மனம் செய்கிறது.
ஒருவரை பார்த்து பயம் ஏற்படும் போது..பயம் என்ற ஒரு உணர்வு, மனத்தின் வெளிப்பாடு.மனம் உடல் மற்றும் மூளையுடன் தொடர்புடைய ஒரு செயல்பாடாக இருக்கிறது. சில தத்துவம், மனம் உடலுடன் ஒன்றும், முற்றிலும் வேறுபட்டதாகவும் இருக்கலாம் என்று கூறுகிறது
கோவை மருதமலைக்கு செல்லும் போது பாம்பாட்டி சித்தர் என்று கேள்விபட்டிருக்கிறேன்.எப்போதும் பாம்புடன் இருப்பார், பாம்பு பிடிப்பதில் வல்லவர் அல்லது ஏதோ அடைமொழி போல உண்டு என நினைத்திருந்தேன்.அவரை பற்றி ஏ.எம் ராஜகோபாலன் எழுதியதை படித்த போது வியப்பே மேலிட்டது.
பாம்பாட்டிச் சித்தர் என்றால் ஏதோ பாம்புகளுடன் பயமில்லாமல் சித்து விளையாடும் சக்தி பெற்றவர் என்று நினைத்து விடாதீர்கள். பாம்பு என்று அவர் கூறியது மனம் என்னும் பாம்பைத்தான்! 'பாம்பாட்டி' பாம்புடன்தான் இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அந்தப் பாம்பாட்டி ஒவ்வொரு விநாடியும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எந்த விநாடியும் கொடிய விஷப் பாம்பினால் அந்தப் பாம்பாட்டிக்கு மரணம் ஏற்படக்கூடும்.
அந்தப் பாம்பைப் போன்றுதான் மனித மனமும். அதனைக் கட்டுப்படுத்தி நம்மிடம் தாவித்திருக்கும்வரை ஆபத்தில்லை ஆனால் ஒரு விநாடி அஜாக்கிரதையாக இருந்தாலும், நாம் உறுதி தளர்ந்தாலும் அந்த விநாடியே அது தவறான வழியில் நம்மை இழுத்துச் சென்று. நமது நல்வாழ்க்கையில் இருந்து நம்மை வீழ்த்திவிடும்.
இத்தகைய மனம் என்ற நச்சுப்பாம்பைத் தன் இஷ்டப்படி கட்டுப்படுத்தி, ஆட்டி வைத்ததால், அம்மகாபுருஷருக்குப் பாம்பாட்டிச் சித்தர் என்ற சிறப்புக் காரணப் பெயர் ஏற்பட்டது.அவர் ஒரு முறை தவம் செய்த போது..இளைஞன் ஒருவன் தற்கொலைக்கு முயன்றான். அவனை தேற்றி காரணம் கேட்டபோது,தவறான வாழ்க்கை வாழ்ந்ததை கூறினான். மறுமொழியாக சித்தர்.. அதிகமாக அனுபவித்த இன்பங்களுக்கு பின்னாளில் ஆரோக்கியத்தை விலையாக கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.
"பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேர் அறியவே மெத்த வீங்கிப்
பரியாரும் ஒருமாது பார்த்தபோது
பையோட கழன்றதென்று ஆடுபாம்பே
இறைவன் அளித்த செல்வத்தினால் மதி இழந்தான் என்று கூறும் பாடல் பாடி..கஞ்சமலை மூலிகை கொடுத்து அவனைக் காப்பாற்றினார்.மனித வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மனதை கட்டுப்பாட்டில் வைக்காதது தான் காரணம் என்கிறார்.மனம் எனும் விளைநிலத்தில் ஆசை என்னும் களையை களைந்து..மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம்.மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? எனும் வாலியின் வரிக்கு அன்றே உயிர் கொடுத்திருக்கிறார் பாம்பாட்டி சித்தர்.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment