Thursday, 7 August 2025

146


#கற்கை_நன்றே_146

அன்பை விதைப்பவர்கள் மட்டுமே
நிம்மதியை
அறுவடை செய்கிறார்கள்.!

-புத்தர்

புத்தரின் கொள்கைகளை வாழ்வியலோடு இணைத்துக் கூறுபவர் அமலன்ஸ்டான்லி. சமீபத்தில் அவரின் பதிவு ரசிக்க வைத்தது.

புத்தர் சொன்னது போல, ஒன்றைத் தீர்மானத்துடன் கைவிடுகிறீர்கள் என்றால், முதலில் நீங்கள் அதைப் பற்றிய முழுதான புரிந்துணர்வைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு புத்தர் ஐந்து படிநிலைகளைக் குறிப்பிடுகிறார்: உங்கள் மனத்தில் திறனற்றதென ஒன்றிருந்தால் அதை ஊன்றிக் கவனியுங்கள். அது எப்போது எழுகிறது என்பதைப் பாருங்கள். புத்தர் அதனைத் தோற்றுவாய் என்றழைக்கிறார். 

இப்போது, தோற்றுவாய் என்பது இரண்டு காரியங்களைக் குறிக்கிறது: ஒன்று, நீங்கள் காரணத்தைத் தேடுகிறீர்கள் - அது எழுவதை மட்டுமல்ல, அது எழுவதற்கு என்ன காரணம்? அதனுடன் இணைந்து எழுவது எது? புத்தர் தோற்றம் பற்றிப் பேசும்போது,  மனத்திற்குள் இருந்து உதிக்கும் தூண்டுதல்களைப் பற்றிப் பேசுகிறார். மனத்திற்குள் எது தூண்டப்படுகிறது? அது எவ்வளவு காலம் நீடிக்கும்? ஏனென்றால் அது மறைந்து போவதைப் பார்க்க விரும்புவது தான் அடுத்த படிநிலை. அதாவது தோற்றத்தையும் மறைவதையும் காண்பது. பின்னர் அக்குறிப்பிட்ட மாசு மறைந்து போகையில், "சரி, எழுவதற்கும் மறைவதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது" எனும் உண்மையைக் காண்கிறீர்கள்.

சரி, உங்களை ஈர்க்கும் காரணம் எது? அது மூன்றாவது படிநிலை: அக்கவர்ச்சி யாது? அக்குறிப்பிட்ட விழைவு எங்கே குவி மையம் கொண்டுள்ளது?

புத்தர் குறிப்பிடுவது போல ஆசை கிட்டத்தட்ட எதன் மேலும் கவனத்தைக் குவிக்கலாம். ஒருவரை நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் பெரும்பாலும் அவரல்ல நீங்கள் விரும்புவது. மாறாக, அவரைச் சுற்றி நீங்கள் உருவாக்கிய குறிப்பிட்டதொரு பார்வையைத் தான் விரும்புகிறீர்கள்.

அல்லது உலகளவில் பிரபலமான, விலை மதிப்புமிக்க ஒரு வாகனத்தை விரும்புகிறீர்கள். ஒரு குறிப்பிட்ட சமூகநிலையை, கௌரவத்தை அதன்மூலம் பெறுவதாக நீங்களே எண்ணிக் கொள்கிறீர்கள். 

அப்படியானால், உண்மை என்னவெனில் கவர்ச்சி எங்கே இருக்கிறது என்பதுதான். அது விலையுயர்ந்த வாகனத்தில் இல்லை. மாறாக, அது உங்களைப் பற்றி விளம்புவதென்ன என்பதில்தான் இருக்கிறது. நிறைய வர்த்தக விளம்பரங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன.

உங்கள் மனமும் அதையே உங்களுக்குச் செய்கிறது. எனவே நீங்கள் கவர்ச்சி எதிலுள்ளது என்று துல்லியமாகப் பார்க்க வேண்டும். பெரும்பாலும் அது மறைக்கப்பட்டிருக்கலாம். அதை உணர்ந்தறிவது கடினமாகத் தோன்றலாம். என்றாலும் அதன்  காரணங்களைத் தோண்டி எடுக்க வேண்டும். அக்குறிப்பிட்ட பொருளில், மனிதரில் உங்களுக்குப் பிடித்தது எது?

பின்னர், நான்காவது படிநிலையில், நீங்கள் அவ்வசீகரத்தை அதற்கேயுரிய குறைபாடுகளுடன் ஒப்பிடுவது. அக்குறிப்பிட்ட விழைவை அடைவதால் என்ன நிகழப் போகிறது? இங்கேயும், உங்கள் பகுத்தறிவை முன்னிறுத்த வேண்டும். 

முவ்வகை வாழடையாளங்கள் பற்றிய போதனைகள் இங்குதான் தொடர்புறுகின்றன. விழைவிலிருந்து எவ்வித சுகத்தைப் பெற்றாலும், அது நிலையற்றதாக, துயருறுத்துவதாக, தன்னின்மை கொண்டதாக இருக்கும். அதாவது, அதைத் தன் சொந்தமென இறுகப் பற்றிக் கொள்வதில் எவ்வொரு மதிப்பும் பயனுமில்லை.  தன்னின்மை பற்றிய போதனை உண்மையில் ஒருவித தர மதிப்பீடாகும். அது வாழிருப்பு பற்றியதோர் ஆழமான பார்வைக்கு வழிவகுக்கும். இதன் மூலம் நீங்கள், "இவ்விழைவு உண்மையில் மதிப்புக்குரியது அல்ல" என்று முடிவிற்கு வரலாம்.

எனவே அதைக் கைவிடுவது ஐந்தாவது படிநிலைக்கு அழைத்துச் செல்கிறது. அதாவது முன்னர் ஆர்வமாக இருந்தவற்றின் மீது அக்கறையின்மையை வளர்த்துக் கொள்கிறீர்கள். அதுவே விடுதலைக்குத் தலைப்படுதலாகும்.

இவ்வாறாக, ஒன்றைக் கைவிடுவதில் இப்படித்தான் அர்ப்பணிப்புடன் முயல்கிறீர்கள். அதைக் கைவிட வேண்டும் எனும் ஒரே நோக்கத்தோடல்ல. அதைப் பற்றிக் கொள்வதற்கு உண்மையில் எவ்வொரு சரியான, வலுவான காரணமும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டதால் விட்டுவிடுகிறீர்கள்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment