#கற்கை_நன்றே_158
மேற்பரப்பினைக் கண்டு
மெய் மறப்போர்க்கு
ஒரு கடல்
அதன் ஆழத்தால் ஆனது
என்பது தெரியாது
-மகுடேசுவரன்
பெரும்பாலான மக்கள் தங்களுக்குள் இருக்கும் மென்மையான இடத்தை கடுமையானதாக கடினமானதாக மாற்றி விடுகிறார்கள் இதன் மூலம் மற்றவர்களுக்காக மனதில் தோன்றும் பதிவு உணர்வு இல்லாமல் அடைத்து விடுகிறார்கள். ஆனால் மனதில் இருக்கும் மென்மையான இடங்கள் சுவரில் இருக்கும் விரிசல்கள் போல அப்படியே நிலைபெற்று விடுகின்றன. அவை நமது உண்மையான இயல்பை நமக்கு சுட்டிக் காட்டும் படி எப்போதும் நமக்குள் இருக்கின்றன.பேராசிரியர் மாடசாமி அவர்கள் இது குறித்து எழுதிய மேற்கோள் கதை முற்றிலும் பொருந்துகிறது
மாசாய்' என்பவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடிகள். உடல்வலிமை மிக்கவர்கள். போர் வீரர்களாக இருந்தவர்கள். ஒரு சமயம் கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர்கள். இன்று வலிமை ஒடுங்கி, உடல் உழைப்பாளிகளாய், கென்யாவிலும் டான்சானியாவிலும் வசிக்கின்றனர். மாசாய் மக்கள் சொன்ன நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று இது:
ஒரு கம்பளிப் பூச்சி, மெல்ல மெல்ல ஊர்ந்து முயல் ஒன்றின் வீட்டுக்குள் நுழைந்தது. பத்திரமாக ஓரிடத்தில் பதுங்கிக் கொண்டது.
முயல் வீடு திரும்பிய போது, யாரோ வீட்டுக்குள் நுழைந்த தடம் தெரிந்தது. யாராய் இருக்கும்? யார் என் வீட்டுக்குள்? என்று கேட்டது முயல். கம்பளிப் பூச்சி சுதாரித்தது.தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே! எந்த விலங்கும் ஒரு மிதி மிதித்தால் கம்பளிப் பூச்சி காலி! சரி! என்ன செய்தது கம்பளிப் பூச்சி? மறைவிடத்தில் இருந்து கம்பளிப் பூச்சி பேசியது. பெருங் குரலில் பேசியது." நானா? நான்தான் காண்டாமிருகங்களையும் யானைகளையும் அடித்துத் துவம்சம் செய்தவன்!"
கர்ண கடூரமான குரல். நம்பத்தான் வேண்டும். முயல் பயந்து ஓடியது. ஓடிப் போய் ஒரு குள்ளநரியைக் கூட்டி வந்தது. குள்ள நரிக்கும் அதே பதில்! அதே குரல்! நரியும் அடித்துப் பிடித்து ஓடியது.
அடுத்து ஒரு சிறுத்தை... அடுத்து ஒரு யானை... "யார் என் நண்பனின் வீட்டில்?"
கம்பளிப் பூச்சியிடம் இருந்து அதே பதில்! அதே குரல்! "நான்தான் காண்டா மிருகங்களையும் யானைகளையும் அடித்துத் துவம்சம் செய்தவன்."
முயலுக்குத் துணையாக நிற்க ஒரு விலங்கும் இல்லை. பெரிய பெரிய விலங்குகள் எல்லாம் ஓட்டம் பிடித்தன.
கடைசியாக ஒரு தவளை வந்தது. அதற்கு மரண பயம் இல்லை. மரணம் எந்த நேரமும் வரக் கூடியதுதான்!
குரல் வந்த திசை நோக்கி தவளை தத்தித் தத்தி வந்தது. இன்னும் சில நொடிகளில் கம்பளிப் பூச்சியைக் கண்டு பிடித்து விடும்.
வெளியேற வேண்டிய நேரம் வந்தது. பதுங்கிய இடத்தில் இருந்து கம்பளிப் பூச்சி வெளியேறியது. ஊர்ந்து ஊர்ந்து குடிசையை விட்டு வெளியேறியது.
குடிசைக்கு வெளியே விலங்குகளின் கூட்டம். கம்பளிப் பூச்சியைப் பார்த்தன. சத்தமிட்டுச் சிரித்தன. அட! இதுதானா நம்மைப் பயமுறுத்தியது?...அவைகள் சிரித்துக் கொண்டிருந்தபோதே, கம்பளிப் பூச்சி மெல்ல மெல்ல ஊர்ந்து மறைந்தது.
சரி! கதை என்ன சொல்கிறது?
பெருங்குரல் எடுத்துப் பேசினால், பிறர் கவனிக்கிறார்கள்; நம்புகிறார்கள்; பயப்படுகிறார்கள். மெலிந்த குரல் என்றால் சட்டை செய்ய மாட்டார்கள்.இன்று அமைதியாய் இருந்தால் விவரம் இல்லாதவன் என்கிறார்கள். பிழைக்கத் தெரிந்தவன் என் வசைபாடுகிறார்கள்.இது தவறான அணுகுமுறை
மென்மையான குரல் உடையவர்களையும் மதிப்போம். அவர்களின் குரலையும் கேட்போம்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment