ஆதிமங்கலத்து விசேஷங்கள்
-க.சீ.சிவகுமார்
Ignorance is bliss
-Thomas gray
க.சீ சிவக்குமாரின் மாஸ்டர் பீஸ் என்று இந்த புத்தகத்தை சொல்லலாம்.அறியாமைதான் நகைச்சுவையின் மூலம். அதை இலாவகமாக கையாண்டு புத்தகத்தை முழுவதும் பன்னீர் தெளித்திருப்பார்.கிராமத்து வாழ்க்கையின் எளிய நிகழ்வுகளையும், புதிய தொழில்நுட்பங்கள் கிராம மக்களின் வாழ்க்கைக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட வியப்புகளையும் நகைச்சுவையும் பகடியும் கலந்த நடையில் பதிவு செய்யும் படைப்பு.
கருத்து என்பது மூக்கு போலவும்,
நகைச்சுவை என்பது மூக்குத்தி போலவும் இருக்க வேண்டும் என படித்த வரி நினைவுக்கு வருகிறது.
க.சீ யின் நகைச்சுவை எழுத்தும் அவ்வாறே. தாராபுரத்துக்கு அருகில் ஆதிமங்கலம் எனும் கற்பனை கிராமத்தில் அறிவியல் சாதனங்கள் நுழையும் போது நடக்கும் விசயங்களை தனக்கே உரிய கொங்குதமிழில் நகைச்சுவை கட்டுரை வாயிலாய் நம்மையும் 1980களுக்கு அழைத்துச் செல்கிறார்.
கிராமத்திற்குள் மின்சாரம், தொலைபேசி, தந்தி போன்ற புதுமைகள் அறிமுகமாகும்போது, அவற்றை மக்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள், தங்களுக்குத் தெரிந்த உலகத்தோடு எவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள் என்பதையே சிவகுமார் சுவையான சம்பவங்களாக மாற்றுகிறார்
பஸ்ஸில இன்னிக்கும் நடுவில் உட்கார்ந்தால் ஆக்சிடன்ட்ல இருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்கும் அறிவாளிகள் இன்னும் வாழ்கின்றனர்.முதன்முதலாய் ஆதிமங்கலத்துக்கும் பஸ் வரும்போது அந்த ஸ்டேரிங்கை பார்த்து இதுதான் வண்டிக்கு கயிறுபோலனு ஊரே அதிசயமாய் பார்த்து நம்புகிறது.
கரன்ட் கண்டுபிடித்த அன்று பல்பை விடிய விடிய ஊதி அணைக்க முற்பட்டார்களாம்.அதுபோல ஆதிமங்கலத்தில் வீடு தீப்பிடிச்சுனு நினைச்சு ஊரே ஒரு வீட்டை வேடிக்கை பார்க்கிறது கூட்டம்.பின்பு இரு சக்கர வாகனத்தை எருமைக்கும் பன்னிக்கும் பொறந்தது மாதிரி இருக்கும் மோட்டார் பைக் அறிமுகமாகிறது.ஒருத்தன் உக்காந்து உதைச்சதுல அது வலி தாங்க முடியாம படபடானு கிளம்பி ஓடுதுனு முடிவு செய்யறாங்க.
தபால் ஆபிசு குறித்தும் அதன் சாக்கு பை குறித்தும் விவரித்து அந்த சிவப்பு பெட்டியின் ரகசியம் கொள்ளவும் ஆழங்கான முடியாது என நம்புகிறார்கள்.தந்தியில் வந்த இறப்பு செய்தியில் அம்மா இல்லாமல் நாமில்லை..அப்பத்தா இல்லாமலும் நாம் இல்லைனு பஞ்ச் வைக்கிறார்.
அம்பாசிடர் காரை தொட்டுப் பார்க்காத,பின்னாடியே ஓடாத 80' கிட்ஸ் யாரும் இருக்க முடியாது. ஆதிமங்கலத்தில் இருக்கும் ஒத்த கார் நிற்கும் இடமும் ஸ்டாண்ட் என்றே அழைக்கப்பட்டது.
குளிபட்டி சுப்பிரமணி எங்கிருந்தாலும் உடனடியாக கொறட்டு வாசற்படிக்கு வரவும் என அறிவிக்கும் மைக்செட் வேலுச்சாமி நஷ்டம் அடைந்த கதையும்,லாட்டரி ஏஜென்சீஸ் ஏ.கே.எஸ் கருப்புசாமி வீரவரலாறும் நகைச்சுவையாய் எழுதியிருப்பார்.
ஊருக்குள் ஸ்டவ் அறிமுகமானபோது பாத்திரங்கள் பளபளக்க துலக்குப் பிடியும் அறிமுகமாகிறது.
முதன்முதலில் பேஸ்ட்டில் பல் துலக்கும் மலேசியக்காரரை பார்த்து "ஏதோ பூச்சி கடிச்சிருச்சுபோல வாயில நொரத் தள்ளீருச்சு" என ஊர் மக்கள் பரிதாபப்படுகிறார்கள்.
மதுக்கடை அறிமுகமான ஆதிமங்கலத்தில் "நீ நிம்மதியா குடிப்பேயப்பா குடும்பம் என்றார் குழந்தைவேல்.அந்த குடும்பத்தை மறக்கத்தான் குடிக்கிறேன் என்பார் கண்ணுசாமி.இந்த இந்திக்காரன் ஏன் எல்லா எழுத்து மேலயும் கம்பிய கட்டிவிட்டு ஜாயின்ட் அடிச்சிருக்கான எமகாதனுக எனும் எள்ளல் தொனியும் வெளிப்படுகிறது.
உடல்நலமில்லாத ஊரிலிருந்து வந்த வீராசாமியிடம் அது ஒன்னுமில்ல க்ளைமேட் சேன்ஜ் என்பதை கிலோமீட்டர் சேன்ஜ் என வெகுளியாகவும்,சளீனு சொன்னா ஏன் ஸ்டெதஸ்கோப்பை மூக்கில் வைத்து பார்க்கலனு அறியாமல் மருத்துவரிடம் விவாதம் செய்கின்றனர். ஒரு முறை காய்ச்சலுக்கு மருந்தை குடிச்சேன் என்பதை அந்நாள்வரை விசத்தை குடிப்பதை தான் மருந்தை குடிக்கும் பொருளில் பயன்பட்டதை குறிப்பிட்டு நடக்கும் நிகழ்வை விளக்குகிறார்.
புதிதாய் வந்த ஸ்டூடியோவில் படம் எடுத்த ஈஸ்வரன் கண்ணில் வெளிச்ச புள்ளி விழ..எங்க பரம்பரையில் யாருக்குமே கண்ணுல பூ விழுந்ததில்லனு திட்டி தீர்க்கிறார். டிவி வந்த புதிதில் எல்லோரும் ஒரு வீட்டில் ஒலியும் ஒளியும் பார்க்க வீட்டுக்காரம்மா மட்டும் எப்ப ஒழியும் னு பார்க்கும் யதார்த்த உண்மையையும் பதிவிட்டிருக்கிறார்.பெருசுகள் வாழும் வீட்டில் டிவியை அணைக்க தெரியாமல் ஊருக்கு போன மகன் வரும்வரை ஒன்றரை நாள் டிவி ஓடுயதையும் நகைச்சுவை மிளிர கூறுகிறார்.
தனியாய் செல்போன் பேசும் சதீசை அவனென்னமோ கிறுக்கெழும்பிப் போய் தனியாப் பேசிக்கிட்டு இருக்கிறானேயா என ஊர்ப்பெருசுகள் விவாதிக்கிறாங்க.
ஒருமுறை தான் தேடியழைந்த காதலியின் எண்ணை சேமித்து வைத்திருக்கிறான்.கைமறதியாய் செல்லை பாத்ரூமில் வைத்துவிட அண்ணன் குளியல் சோப்புக்கு பதில் அதை எடுத்து முகத்தில் தேய்க்க..மரணவிபத்து அடைகிறது செல்போன்.கூடவே செல்'வன் சதீஸின் காதலும்.
ஒரு காலகட்டத்து கிராமத்து மனிதர்களின் வியப்பையும், வெகுளித்தனத்தையும், நகைச்சுவையையும், வாழ்க்கை முறையையும் நம் கண்முன் கொண்டு வரும் சுவையான எழுத்து.”
90 களின் கிராமத்து வாழ்வினை அப்படியே படம் பிடித்துள்ளார்.
படித்துக்கொண்டு போகும்போதே நம் மனதில் விரிவடையும் காட்சிகளும் மனிதர்களும் நிஜமாய் அவர்களின் அருகினில் வாழ்ந்த அனுபவத்தை தருகின்றன.எளிய அனுபவங்கள் என்றாலும் அதனை கடக்கும்வரையோ பழகும்வரையோ இமாலய உயரம் தான் எல்லாருக்கும்.ஒரு குக்கர் அறிமுகமான போது குடும்பமே நின்று மூன்று விசிலை எண்ணியது, கேபிள் டிவி வந்தபோது அந்த கருப்பு ஒயருக்குள் தான் எல்லா சேனலும் ஓடுகிறது என்றும், டிவிஎஸ் 50 ஸ்டார்ட் செய்வதை வீதியே நின்று வேடிக்கை பார்த்திருக்கோம்.அதனை நினைத்து சிரிப்பதுதான் அந்த அறியாமைக்கு செய்யும் இறுதி அஞ்சலி.
நம் அறியாமைகளை அப்படியே திரும்பி பார்ப்பது போல் இருக்கிறது இப்புத்தகம்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment