#கற்கை_நன்றே_160
“மனித உடம்பின் தலையாய பணி, போகுமிடங்களுக்கெல்லாம் மூளையையும் தன்னுடன் எடுத்துச் செல்வதுதான்” என்று.
-தாமஸ் ஆல்வா எடிசன்
அன்றாட வாழ்வில் பல விஷயங்க்ளை தெரிந்து வைத்திருந்தாலும் சில விஷயங்கள் மனதிற்கு தெம்பூட்டுபவை. சமூகம் குறித்து சிந்திக்க வைப்பவை. அந்த வகையில் சில கேள்விகளும் பதில்களும்
*சரியான தேர்வு சரியான தீர்வு
வார இறுதி நாள்களான சனி, ஞாயிறுகளில் அமெரிக்காவின் மியாமி தீவுகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்; குப்பையும் சேர்ந்து. அங்குள்ள நிர்வாகம் எத்தனை அறிவுறுத்தியும் மக்கள் கேட்பதாக இல்லை. ஐஸ்க்ரீம் கப்புகளே அதிகம் தென்பட்டன. இதற்குத் தீர்வாக, சாப்பிடக்கூடிய கப்பாக ஏன் தயாரிக்கக் கூடாது என யோசனை செய்து 'Wafer Cups' பயன்பாட்டிற்கு வந்ததையடுத்து அது குப்பையில்லாத கடற்கரையானது.
ஒரு பியூ ரிசார்ச் சர்வேயில் "வாழ்க்கையில் எது முக்கியம்?" என கேட்கபட்டது மினிமலிசம் பகிர்ந்த செய்தி
இரண்டாமிடம் பிடித்தது: குடும்பம்
மூன்றாமிடம் பிடித்தது: தொழில், வேலை
முதலிடம்?
"எனக்கு பிடித்ததை செய்ய நேரம் கிடைப்பது" என மக்கள் சொன்னார்கள்.
தினமும் நமக்கு பிடித்ததை செய்ய ஓரிரு மணிநேரம் அவசியம். அந்த நேரத்தில் சும்மா இருக்கலாம், புத்தகம் படிக்கலாம், டிவி பார்க்கலாம்,..ஆனால் ரிலாக்ஸ் அண்ட் ரிவைண்ட் செய்ய தினமும் நேரம் ஒதுக்குவது அவசியம்.
24 மணிநேரத்தில் நாம் நமக்காக வாழும் நேரம் என்பது தூங்கும் நேரம், உண்ணும் நேரம், உடல்பயிற்சி செய்யும் நேரம் ஆகியவை தான். ஆனால் அவை எல்லாம் நம்மை நாமே பழுதுபார்ப்பது மாதிரிதான்
நாம் நமக்காக வாழும் நேரம் என இந்த ஒரு மணிநேரமாவது இருக்கட்டும். அதில் நமக்கு பிடித்ததை செய்வோம்
#கண்ணியம் என்பது யாதெனில்..
இந்தியா பிரிந்தவுடன் முகமது அலி ஜின்னா, காயிதே மில்லத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். 'ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லிம் லீக் கட்சியின் வரவு, செலவு பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான பங்குத் தொகை என்னிடம் உள்ளது. இதனை என்னிடம் நீங்கள் பெற்றுச் செல்லலாம்' என எழுதினார்.
அதற்கு பதில் எழுதிய மில்லத், 'தற்போது பிரிவினையில் நீங்கள் பாகிஸ்தானிலும் நான் இந்தியாவிலும் என இருக்கிறோம். ஒருவேளை நீங்கள் அளித்து நான் பெறுவதாய் இருந்தால் என் கை கீழேயும் தங்கள் கை மேலேயும் இருக்கும். இந்தியரான எங்களுக்குக் கொடுத்துத்தான் பழக்கம், வாங்கிப் பழக்கமல்ல. எனவே அப்பணத்தை தாங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்றாராம். அதுதான் கண்ணியமிகு காயிதே மில்லத்.
#பேச்சாளர் கவனத்தில் கொள்ள வேண்டியது
'விசாரணை' பட விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்ன, நாடக ஆசிரியர் பாரத இந்துவின் கதை.
"கொத்தனார் ஒருவர் சுவர் கட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த வழியே சென்ற பெண்ணின் அழகில் மயங்கி கட்டடத்தை கோணலாய் கட்டியதால் கீழே விழுந்து ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதால் நீதி விசாரணை நடக்கிறது. 'உன் கவனக்குறைவால் நடந்ததால் நீதான் பொறுப்பு' என்றார் மன்னர். 'ஐயா, கவனக்குறைவிற்கு நான் காரணமல்ல, அந்தப் பெண்மணிதான்' என்றார் கொத்தனார். அப்பெண்மணியிடம் விசாரித்தபோது, 'தவறு என்னுடையதல்ல, மந்திரி அலுவல் விஷயமாய் அழைத்தார். ஆகவே தவற்றுக்கு மந்திரிதான் பொறுப்பு' என்றார். மந்திரியின் பதிலில் திருப்தியுறாத அரசன், அவரை தூக்கில் போடுவதாக முடிவு செய்தான்.
மக்கள் முன் மந்திரியை தூக்கிட வரும்போது ஒரு பிரச்னை. தூக்குக் கயிற்றைவிட மந்திரியின் முகம் பெரிதாய் இருக்கிறது. தூக்குக் கயிற்றை மாற்றலாமா எனக் கேட்டபோது, அது வழக்கமில்லை என அரசன் மறுத்துவிடுகிறான். இதற்குத் தீர்வாக, இந்தச் சுருக்குக் கயிறு யாருக்குப் பொருந்துகிறதோ அவரை தூக்கிலிடுவோம் என முடிவு செய்யப்படுகிறது.
ஒரு தவறும் செய்யாத, மெல்லிய கழுத்துடைய ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவோ மறுத்தும், ``இந்தக் கயிற்றிற்கு ஏற்ற சின்னக் கழுத்து உனக்குத்தான் உள்ளது" எனக் கூறி அவனை தூக்கிலிட்டனர். ஒருவனை தண்டிக்க விரும்பினால் அனைவருக்கும் எளிதில் ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது’’ என முடியும்.
இக்கதை, `விசாரணை' படத்துக்குப் பொருத்தமான பேச்சு. ஒரு பேச்சாளன் பொருத்தமாய்ப் பேச வேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
நற்காலை
-தோழமையுடன் மணிகண்டபிரபு