#கற்கை_நன்றே_166
"மக்களை இரண்டு காரியங்களைச் செய்ய வைப்பது மிகவும் கடினம்: ஒன்று, அவர்களைச் சிந்திக்க வைப்பது; மற்றொன்று, செயல்களின் முக்கியத் துவத்திற்கேற்ப அவற்றை வரிசைப்படுத்த வைப்பது." இவ்விரு விஷயங்கள்தான் ஒரு தொழில்முறைக் கலைஞனுக்கும், பொழுது போக்குக் கலைஞனுக்கும் இடையே உள்ள வேறுபாடு
-படித்தது
மாடு மேய்க்கும் ஒரு வயதானவர், ‘ஹெர்ஃபோர்டு இன பசுக்களிடமிருந்து வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு பாடத்தை
கற்றுக்கொண்டதாய் நார்மன் பீலே கூறுகிறார்.மலைச்சரிவில் உள்ள மாட்டுப்பண்ணையில் கழித்த ஒருவரின் வாழ்வியல் சம்பவத்தை நமக்குக் கூறுகிறார்
வீசியடிக்கும் பனிக்காற்றை தாங்கமுடியாமல் மாடுகள் மடிவது அங்கே வாடிக்கையான நிகழ்வு. பனி மழையில் பசும் புல்மேடுகளெல்லாம் உறைந்து போகும்; திடீர் திடீரென்று குளிர் அதிகரிக்கும்; காற்றில் பறந்து வரும் பனிக்கட்டிகள் தசையைத் துளைத்துவிடும். இயற்கை நிகழ்த்தும் இந்த வன்முறைக்கு எதிராக எதுவும் செய்ய இயலாமல் கால்நடைகள் திகைத்து நிற்கும். சிதறி வீசும் பனித்துகள்களுக்கு எதிராக தமது பின்பக்கத்தைக் காட்டிக் கொண்டு வரிசையாக நிற்கும் அந்த மாடுகளை பனிக்காற்று பல மைல் தொலைவுக்கு உருட்டிச் செல்லும்.
முடிவில் எங்காவது ஒரு வேலி ஓரத்தில் அவை கொத்துக்கொத்தாக மடிந்து விறைத்துக் கிடக்கும்.
ஆனால் ஹெர்ஃபோர்டு இனப் பசுக்களோ இந்த விஷயத்தில் மிகவும் வித்தியாசமானவை. பனிக் காற்று வீச ஆரம்பிக்கும்போதே, இவை காற்று கடைசியாக மோதித் திரும்பும் ஒரு மலை அடிவாரத்துக்கு ஓடிப்போய்விடும். அங்கே உடலோடு உடல் உரச வரிசை கட்டி நிற்கும் இந்த பசுக்கள், பனிக் காற்றுக்கு முகம் காட்டியபடியே, தலை குனிந்து நிற்கும். ‘பனிக்காற்றின் கோரத்தாண்டவம் முடிந்த பின் பார்த்தால், அந்த ஹெர்ஃபோர்டு இனப் பசுக்கள் எல்லாமே உயிரோடு இருக்கும் அதிசயத்தைப் பார்க்கலாம்.
மாடுமேய்ப்பவர் பரவசத்துடன் சொன்னார்: “அந்த பனிப் புல் வெளியில் இருந்துதான், ‘வாழ்க்கைப் புயலை எதிர்கொள்’ என்னும் மிக முக்கியமான வாழ்வியல் பாடத்தை நான் கற்றுக் கொண்டேன்.” இந்தப் பாடம் எல்லா இடத்துக்குமே பொருந்தக்கூடியதுதான்.
நீங்கள் அச்சம் கொள்ளும் விஷயங்களை தவிர்த்து விட்டு விலகி ஓட முயற்சிக்காதீர்கள். அப்படிச் செய்தால் அந்த பெருங்காற்று உங்களை அப்படியே உருட்டி கீழே தள்ளிவிடும். அச்சமூட்டும் பிரச்சனைகளை நேருக்கு நேராக எதிர்கொள்வதா? அல்லது அதை தவிர்த்துவிட்டு விலகி ஓடுவதா? என்பதை ஒவ்வொரு மனிதனும் தமக்குள்ளேயே முடிவு செய்து கொள்ள வேண்டும்.
சொல்லப்போனால் பெரும்பாலான பயங்களுக்கு அடிப்படையே கிடையாது. அவை வெறுமையானவை. ‘வாழ்நாளில் தான் பயந்து நடுங்கிய விஷயங்களில் 92 சதவிகிதம் நடைபெறவே இல்லை’
மீதி எட்டு சதவிகித பிரச்சனை வந்தபோது, நான் அவற்றை நேருக்கு நேராக சந்தித்தேன். அதை வெகு இலாவகமாக கையாண்டேன். அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டெழுந்தேன்.” அவன் முத்தாய்ப்பாக சொன்னான்: “எல்லா பயங்களுமே நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவைதான்.”என்று.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment