#கற்கை_நன்றே_162
வாய்ப்பு என்பது தீக்குச்சி போன்றது
தீக்குச்சியை உரசியவுடன் பற்றி எரிய வேண்டும்
இல்லையேல்...
வாய்ப்பு மற்றொரு தீக்குச்சிக்கு வழங்கபடும்..
சச்சின் டென்டுல்கரைக் காட்டிலும் ரமாகாந்த் ஆச்ரேக்கர் ஒன்றும் சிறந்த கிரிக்கெட் வீரர் அல்ல. ஆனால், அவரது பயிற்சிதான் சச்சினுக்கு சச்சினை அடையாளம் காட்டியது. அதுதான் சச்சினை உலகிற்கு அடையாளம் காட்டியது. பி.டி.உஷாவோடு ஒப்பிடுகையில் ஓ.எம். நம்பியார் ஒன்றுமே இல்லை. ஆனால் அவர்தான் இந்தியாவிற்கு ஒரு தலைசிறந்த தடகள வீராங்கனையை வழங்கினார். தன் குருவான துரோணாச்சாரியாரை எதிர்த்துப் போரிட்டு வெல்லும் அளவுக்கு அர்ஜுனன் வளர்ந்தது, துரோணாச்சாரியாரின் புகழைப் பறைசாற்றுகிறது.
நமக்கு வெளியே உள்ள ஒருவர் நம்மை வழிநடத்துவது அவசியம். அவர்கள், நம்மை நமக்கே பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி; நம் பலவீனங்களை எதிர்த்துப் போராடத் தேவையான, நமக்குள் இருக்கும் வலிமைகளை நமக்குக் காட்டுபவர்கள். நம் திறமைகளைப் பட்டை தீட்டிக் கொள்ள நமக்குத் தனிப்பட்டப் பயிற்சியாளர்கள் தேவை. நம் அறிவை விருத்தி செய்வதற்கு ஆசிரியர்கள் தேவை.
உங்கள் மழலையர் பள்ளி ஆசிரியர் அவரது வாழ்வில் உங்களைப்போல் உயர்ந்த நிலையை அடையாது இருந்திருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்வு அவர் உங்களுக்கு அளித்த அறிவின் அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. நம்மை வழிநடத்தும் ஒளியுடன் நம்மை நாம் ஒப்பிட வேண்டாம். சூரியக் கதிர்களிலிருந்து சூரியனை நீக்கிவிட்டால், எதுவும் இருக்காது.
கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.
"பத்தாயிரம்," என்று உடனடியான பதில் வந்தது. இப்போது இன்னோரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்," என்று அவன் பதில் கூறினான். ஆசிரியர் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும் போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதுமில்லை.
அதுபோன்றதுதான் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந்தால்? பதில் உனக்கே தெரியும்," என்று கூறினார். ஒரு பயிற்சியாளரின் மகத்துவம், ஒரு வீரனுக்கு அவனது திறனை வெளிப்படுத்துவதில் உள்ளது. ஒரு விளையாட்டு வீரனின் மகத்துவம், தனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளத் தன் திறனுக்கு ஏற்றவாறு செயல்படுவதில் இருக்கிறது.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment