Sunday, 26 July 2026

47


தென்னிந்திய சிறுகதைகள்
-கே.வி ஷைலஜா

தென்னிந்திய மொழிகளின் இலக்கிய வளத்தை ஒரே தொகுப்பில் அறிமுகப்படுத்தும் முக்கியமான முயற்சியாக கே.வி. ஷைலஜா தொகுத்த தென்னிந்திய சிறுகதைகள் அமைந்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து வாசகர்களுக்கு வழங்கும் இந்நூல், மொழிகளுக்கு இடையேயான இலக்கியப் பாலமாக விளங்குகிறது.

ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான பண்பாடு, வாழ்க்கை முறை, சமூகச் சிக்கல்கள், மனித உறவுகள் மற்றும் உணர்வுகள் உள்ளன. அவை அனைத்தும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் வழியாக இயல்பாக வெளிப்படுகின்றன. மொழி மாறினாலும் மனித மனம் ஒன்றே என்பதை இந்தக் கதைகள் உணர்த்துகின்றன.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல; சமூக அக்கறை, பெண்களின் வாழ்க்கை, வறுமை, சாதி, குடும்ப உறவுகள், காதல், தனிமை, நகரமயமாக்கல், மனிதநேயம் போன்ற பல்வேறு கருப்பொருள்களை ஆழமாகச் சித்தரிக்கின்றன.

முன்னுரையில் குளத்தங்கரை அரசமரம் பற்றி குறிப்பிடும் பிரபஞ்சன் சிறுகதைகளின் நுட்பத்தையும் வரலாற்றையும் பாடமாக கூறியுள்ளார். சிறுகதையின் விஸ்தரிப்பை ஏற்படுத்திய கதைகள் சிலவற்றை தொகுத்துள்ளார்.

இனி விடிதலுக்கான, சாத்தியமற்ற இருள் இது.மழையினால் பூமியை தின்ன, வெறி பிடித்து வானம் வாய் பிளந்து நிற்கிறதாக வறண்ட ஊரில் திருட வந்து மாட்டிக்கொண்ட திருடன் வறண்ட பூமியை போல வறண்ட மனமுள்ள மனிதர்களிடம் எவ்வாறு ஈரம் ஏற்பட்டது என்பதுதான் சத்ரு கதை

ஜே.பி சாணக்யாவின் புகழ்பெற்ற ஆண்களின் படித்துறை கதை.இந்த கதையில் முடிவை பல முறை வாசித்துள்ளேன் மனம் கலங்க வைக்கும் இடம்."யாருமற்ற அவள் வீட்டுவாசலில், சாவைப் பற்றி நினைத்திராத சமயத்தில் துவைத்துக் காயவைத்த ஆடைகள் ஈரத்துடன் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன என இருக்கும்

நோய்வாய்ப்பட்டு தனித்திருக்கும் இளைஞனுக்கு வாசிப்பின் போதையும் நோய்மையின் வாதையும் எவ்வாறு சமநிலைப்படுத்திக் கொண்டான் என்பது அட்சர ஆழியின் கதை.வேளான்கன்னியும்.கிறிஸ்டோபரும் சேர்ந்துவிட மாட்டார்களா என நினைக்க வைக்கிறது மறையும் முகம் கதை.

பால்யகால காதல் வாழ்க்கை பிரிவையே பரிசாக அளிக்கிறது. "அந்த காடு கனவு.எங்கள் ஆன்மாக்கள் பரந்த வெளியெங்கும் சுற்றிக் கொண்டிருக்கும்.காடு எனக்குள் இப்போதும் ஒரு நாளும் முடிவுக்கு வராத தனிமையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என உண்ணியை பிரிந்த இளம் பெண்ணின் வேதனையை காட்டின் பெருங்கனவு கதை சொல்கிறது.

கடன் தொல்லை தாளாமல் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு குடும்ப சகிதம் தற்கொலை செய்யப்போகிறோம் என்பது தான் கொமாலா கதையின் துவக்க வரி. இதற்கு பின் நடப்பதுதான் கதை.'ஒருவிதத்தில் பார்த்தால் ஒவ்வொருவரும் கடன் பட்டவர்கள்" எனும் வரி பொருத்தமாய் இருந்தது.

எல்லா செய்திகளும் முன்னரே எழுதப்படுபவை தான்.ஒவ்வொன்றையும் எவ்வளவு சீக்கிரம் கண்டடையப் போகிறோம் என்பதுதான் பத்திரிக்கையாளனின் சாமர்த்தியம் -கே.ஆர் மீராவின் செய்திகளின் நாற்றம் கதையில்.

செய்தியாளர் மாணவர் விழித்திறன் சவால்கொண்ட மூவரைப் பற்றி செய்தி சேகரிக்கச் செல்லும்போது
நடக்கும் கதைதான் மூன்று குருடர்கள் யானையைப் பார்த்த அங்கத சுவையுடன் இக் கதை.

19ம் நூற்றாண்டில் மலபார் பிரதேசத்தில் விலைமலிவான உலோகத்தை தங்கமாக்கும் ரசவாதத்தை கண்டுபிடிக்கும் முயற்சியிலிருக்கும் அய்யாச்சாமிக்கு அடுத்து நிகழ்ந்தது என்ன என்பது ரசவாதத்தின் சரித்திரம்.'ஒவ்வொரு வாழ்க்கையும் ரசவாதத்தைக் கண்டு பிடிப்பதற்கான முயற்சிதான் என்பதும்,அவன் மனிதனைத் தங்கமாக்கும் வித்தையைத்தானே கண்டுபிடித்தான் எனும் வரிகளும் ரசித்தவை.

#தெலுங்கு கதைகள்

தமிழ் மண்ணின் விவசாயம், குடும்ப உறவுகள் போலவே தெலுங்கு அடிப்படையில் கதைகள் உள்ளன.
கணவன் மறுமணம் செய்த பிறகு பத்தாண்டுகள் கழித்து மாமனார் பார்க்க வரும் லாவண்யா எதிர்கொள்ளும் சவால்கள், கிராமத்திலிருந்து பிழைக்க நகரத்திற்கு வரும் சிவாவும் லட்சுமியும் சந்திக்கும் இடர்கள், கிராமத்து வாழ்க்கையை தொலைத்து நகர்த்திற்கு சென்று காசுக்கு வாங்கும் ஆக்ஸிஜன் மரத்தின் மெளன அழுகை தெரிகிறது.வீட்டு வேலை செய்யும் ஷகிலாவின் வாழ்க்கை, விவசாயி கடன் வாங்க செல்லும் விவசாய வங்கியின் விதிமுறைகளால் தடம் புறளும் வாழ்க்கை, பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை பார்க்கும் உலகம் என ஒரு மொழியில் பிறந்த சிறந்த படைப்புகள் மற்றொரு மொழி வாசகர்களையும் சென்றடைய வேண்டும் என்ற இலக்கிய நோக்கத்தை இது வெற்றிகரமாக நிறைவேற்றுகிறது.பெண்களின் குரலுக்கும் விளிம்புநிலை மக்களின் அனுபவங்களுக்கும் உரிய இடம் அளிக்கிறது.

#கன்னட கதைகள்

செம்மானின் கங்கை கதை காசிக்கு சென்று கங்கை நதிக்கு தான் கொடுக்க நினைக்கும் பரிசை கொடுக்க நினைக்கும் செருப்பு தைக்கும் கிழவனுக்கு உதவி செய்கிறான் ஒருவன் அதன் பின் நடப்பது கதை.கேப் டப்பியை திருடும் சிறுவன் கதையில் விரியும் கதை, கதை சொல்லும் சக்கக்காவின் கதையை இனிமேல் யார் சொல்லுவாங்ல எனும் பாபுவின் கதை

 ஒவ்வொரு கதையும் ஒரு சமூகத்தின் கண்ணாடியாகவும், ஒரு காலத்தின் பதிவாகவும் அமைகிறது.
தொகுப்பாசிரியர் கே.வி. ஷைலஜா கதைகளைத் தேர்ந்தெடுத்த விதம் இந்நூலின் சிறப்பாகும். வெவ்வேறு இலக்கியப் பாணிகளையும், பல தலைமுறை எழுத்தாளர்களின் குரல்களையும் ஒரே நூலில் வாசகர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை அவர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தென்னிந்திய இலக்கியத்தின் பரந்த பரிமாணத்தை வாசகர்கள் எளிதாக உணர முடிகிறது.

மொத்தத்தில், தென்னிந்திய சிறுகதைகள் என்பது சிறுகதைத் தொகுப்பாக மட்டுமல்ல; தென்னிந்திய மக்களின் வாழ்க்கை, பண்பாடு, சிந்தனை மற்றும் மனித உணர்வுகளை அறிமுகப்படுத்தும் இலக்கியச் சாளரமாகும். சிறுகதை வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கும், ஒப்பிலக்கியத்தை அறிய விரும்பும் மாணவர்களுக்கும், தென்னிந்திய மொழி இலக்கியங்களை விரிவாகப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கும் இந்நூல் வழிகாட்டியாக அமைகிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment