மனிதன் இயல்பிலேயே சுயநலமானவனா?
அறிவியல் என்ன சொல்கிறது?
இந்த கேள்விக்கான பதிலை நீண்டகாலமாக சமூகம் கேட்டு வந்திருக்கிறது. நவீன அறிவியலானது ஒரு மனிதனின் குணநலனை மூன்று வகையான விஷயங்கள் தீர்மானிப்பதாகச் சொல்கிறது. ஒன்று அவன் தனது மூதாதையரிடமிருந்து பெற்றிருக்கும் மரபுப்பண்புகள், இரண்டாவது அவன் வளரும் / வளர்க்கப்படும் சூழல் (குறிப்பாக குடும்பம் இதில் தாக்கம் செலுத்துகிறது) மூன்றாவது அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள்.
இந்த மூன்றில் முதலாவது மட்டுமே அகக்காரணி. மற்ற இரண்டும் புறக் காரணிகள். நம் கேள்வி மனிதன் இயல்பிலேயே சுயநலமானவனா என்பதாக இருப்பதால் இந்த புறக்காரணிகளை இப்போதைக்கு விட்டுவிட்டு அவனது மரபணுக்கள் அவனை சுயநலமியாக வைத்திருக்கிறதா அல்லது பொது நலன் நாடுபவனாய் வைத்திருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
இதனைத் தெரிந்துகொள்ள மனிதப் படிமலர்ச்சிக்கு (பரிணாமம்) நாம் செல்ல வேண்டும்.
மாறும் சவாலான சூழலுக்கு ஏற்றபடியான ‘தகவமைப்பைப் பெற்றிருக்கும்’ உயிர்(கள்) தழைக்கும் என்பது படிமலர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படை. அதாவது, மரபியல் சிதைவுபோன்ற (Mutation) ஏதேச்சையாக நிகழும் உயிரியல் மாற்றங்கள், மாறும் புறச்சூழலுக்கு சாதகமாக இருக்கும்போது உயிர்கள் தழைக்கின்றன / முரண்படும்போது அழிகின்றன.
40-50 மனிதர்கள் இருக்கும் ஒரு தொல்பழங்கால மனிதரின் குழுவை எடுத்துக்கொள்வோம். கடுமையான வறட்சியையும் பட்டினியையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். குழுவுக்கான மிகச்சிறிய உணவே இருக்கிறது. ஒரு மனிதனுக்கு, 'இந்த உணவை நான் மட்டும் சாப்பிட்டுவிட்டால் என்ன?' என்ற எண்ணம் தோன்றுகிறது. இதை அவர் சாதுர்யமாகச் செய்துவிட்டால் குறைந்தபட்சம் உடனடியாக அவரது உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
அவர் அதனைச் செய்து பிழைத்துக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த பிழைத்தல் அவரது சுயநலனுக்குக் காரணமான மரபணுக்களை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துகிறது. இதுவொரு வெற்றிகரமான பிழைத்தல் யுக்தியாக இருக்கும்பட்சத்தில் மனிதனின் இயல்பான குணமும் இயல்பூக்கமுமாக மாறுகிறது என்று கருதலாம்.
அதாவது படிமலர்ச்சிக் கோட்பாட்டின்படி பிழைத்திருக்க உதவும் தகவமைப்பானது பல்கிப் பெருகும்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
ஆனால் உண்மையிலேயே இப்படிப்பட்ட மனிதரைத்தான் பரிணாமம் தேர்ந்தெடுத்ததா?
-ஜியோ டாமின்
No comments:
Post a Comment