கால்பந்தின் கதைகள் ஒவ்வொன்றும் வாழ்வின் மீதான நம்பிக்கைகளை அதிகமான அளவில் எனக்குள் உயர்த்துகிறது.
2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவுக்கு எதிராக கூடுதல் நேரத்தில் (106 ஆவது நிமிடத்தில் )ஃபெரான் டோரஸ் அடித்த கோல், அவரை உலக அரங்கில் இன்று கதாநாயகனாகிவிட்டது. ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது. அந்தக் கோல் வழியே டோரஸின் தனிப்பட்ட மீட்சிக் கதை ஒன்றும் இணைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் ஸ்பெயின் உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து வெளியேறிய அணியில் ஃபெரான் டோரஸும் இருந்தார். ஏற்கனவே மான்செஸ்டர் சிட்டியிலிருந்து பார்சிலோனாவுக்கு பெரிய தொகைக்கு மாறிய பிறகு ஏற்பட்ட காயங்கள், அதனால் ஏற்பட்ட விமர்சனங்கள், முக்கியமாகச் சமூக வலைத்தளங்களில் அவர் மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்கள், அணிகளில் விளையாடுவதற்குக் குறைவான நேரம் கிடைப்பது என பல பிரச்சினைகள் அவரைத் தொடர்ந்து தாக்கின. "நான் ஒரு ஆழமற்ற பள்ளத்தில் இருப்பதாக உணர்ந்தேன். அதிலிருந்து வெளியே வரும் வழியே தெரியவில்லை. என் நம்பிக்கையை இழந்துவிட்டேன். அனைத்தும் என்னைப் பாதித்தது” என்று மிகுந்த மனவழுத்தத்தில் உழன்று கொண்டிருந்தார் டோர்ஸ், இறுதியில் விளையாட்டு மனநல நிபுணர் ஒருவரிடம் கலந்துரையாடலுக்குப் போகிறார். இந்தத் தொடர் கலந்துரையாடல் வழியே அவரின் விளையாட்டு மற்றும் தனிப்பட்ட வாழ்வின் பிரச்சினைகள் கலந்துரையாடப்படுகின்றன. உளவியல் நிபுணர் வழியிலான இத்தகைய தொடர் கலந்துரையாடல்கள் அவருக்கு மிகச்சிறந்த சிகிச்சையும் நம்பிக்கையை கிடைத்திட வழிவகை செய்கிறது. இதன் வழியே ஃபெரான் டோரஸ் வேகமாக மீண்டெழுகிறார். இந்த மீண்டெழுந்த செயலுக்கு அவர் வைத்துக் கொண்ட பெயர் “ஷார்க் மென்டாலிட்டி” (Shark Mentality) அல்லது “எல் டிபுரான்” (El Tiburón).
அதாவது, சுறா மீன் எப்போதும் நகர்ந்து கொண்டே இருப்பது போல, ஒருபோதும் நிற்காமல், தினசரி மேம்பாட்டுக்கு முயல்வது, விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவது மற்றும் போட்டியில் இரக்கமற்ற முறையில் எதிர் அணியைத் தாக்குவது. இந்த மனநிலை அவரை மீண்டும் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களில் ஒருவராக மாற்றுகிறது.
ஸ்பெயின் அணியில் ஃபெரான் டோரஸின் இடம் என்பது எப்பொழுதும் சூப்பர் சப்ஸ்டிடியூட் என்பதாகும், அதாவது, ஆட்டம் தொடங்கும்போது முதல் பதினொரு வீரர்களுடன் இல்லாமல், தேவைப்படும் போது ஆட்டத்தின் நடுவில் உள்ளே வந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது. இதுவே ஸ்பெயின் அணியில் அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியமான கதாபாத்திரம். நேற்றைய போட்டியில் இப்படியாகச் சப்ஸ்டிடியூட்டாக உள்ளே வந்து விளையாடிக் கொண்டிருந்த போது சக வீரர் நிகோ வில்லியம்ஸ் அடித்த பந்து அவரை நோக்கி வந்தபோது, அவர் அடித்த அந்த வலிமையான இடது கால் ஷாட், அவரை வரலாற்றில் இடம் பிடிக்கச் செய்தது மட்டுமின்றி ஸ்பெயினுக்கும் கோப்பையும் அளித்துவிட்டது.
நேற்று போட்டி முடிந்தபின்பு ஃபெரான் டோரஸ் சொன்னது: “பந்து என்னை நோக்கி வந்தது. என் ஸ்பெயின் மக்களின் சக்தி ஒன்றாக என்னுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு பந்தை உதைத்தேன்.”
மனவழுத்தில் மீண்டெழுந்த கதை என்றெல்லாம் இதை எழுதுவதை விடவும் இக்கதையில் முக்கியமானது: எந்தவொரு தனிநபரும் மனதளவில் தான் ஆழமற்ற பள்ளத்தில் இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக செய்ய வேண்டியது மனநலம் சார்ந்த நல்ல கலந்துரையாடல் அல்லது சரியான சிகிச்சை முறை. இதில் வெட்கம் கொள்வதற்கு ஒன்றுமில்லை.
குறைந்தபட்சம் அழுத்தமான கணங்களில் உங்களுக்குப் பிடித்தவர்களிடம் அதிகமான கலந்துரையாடல் செய்யுங்கள், நாம் யாரும் இங்கே தனியாக இல்லை. ஃபெரான் டோரஸக்கு கோல், வெற்றி, கோப்பை என்றால் நமக்கும் அருளப்பட்டவை ஏதாவது என்றாவது கிடைக்கும்.
No comments:
Post a Comment