குட்டி இளவரசன்
-அந்த்வான் து செந்த்-எக்சுபெரி
அந்த்வான் து செந்த்-எக்சுபெரி எழுதிய "குட்டி இளவரசன்" (Le Petit Prince) உலகப் புகழ்பெற்ற ஒரு உன்னதப் படைப்பாகும். 1943-இல் வெளியான இப்புத்தகம், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்குமான ஒரு அழகான வாழ்வியல் கதையாகக் கருதப்படுகிறது. தமிழில் இதனை வெ. ஸ்ரீராம் மற்றும் ச. மதனகல்யாணி மிகச் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளனர்.
கதையின் நாயகனான விமானி,சிறு வயதில் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். அதற்கு பெரியவர்களுக்கி விளக்கம் சொல்லி சலித்துப் போய் பெரியவனாகி விமானியாகிறார்.சில ஆண்டுகளுக்கு முன்பு தனது விமானம் பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் தரையிறங்குகிறார். அங்கு மனித நடமாட்டமே இல்லாத பகுதியில், ஒரு விசித்திரமான சிறுவனை அவர் சந்திக்கிறார். அவன் தான் "குட்டி இளவரசன்". அவன் "சிறுகோள் பி. 612" என்ற ஒரு சிறிய கிரகத்திலிருந்து வந்தவன். அந்தக் கிரகம் ஒரு வீட்டை விடச் சற்று பெரியது.
குட்டி இளவரசன் தனது கிரகத்தில் இருந்த ஒரு ரோஜா மலரை ஆழமாக நேசிப்பவன். அந்த மலருடன் ஏற்பட்ட சிறிய மனவருத்தத்தால், அவன் தனது கிரகத்தை விட்டுப் பல்வேறு கிரகங்களுக்குப் பயணம் செய்கிறான். இந்தப் பயணத்தின் போது அவன் பின்வரும் நபர்களைச் சந்திக்கிறான்
அரசன், தற்பெருமைக்காரன், குடிகாரன்,வியாபாரி மற்றும் சிலரை சந்தித்ததை பகிர்ந்து கொள்கிறான்.
இந்தச் சந்திப்புகள் மூலம், பெரியவர்கள் எண்களையும், வெளிப்படையான விஷயங்களையும் மட்டுமே கவனிப்பவர்கள் என்பதையும், அவர்கள் வாழ்க்கையின் உண்மையான அழகைப் புரிந்துகொள்ளத் தவறுபவர்கள் என்பதையும் மென்மையான நகைச்சுவையுடன்
சுட்டிக்காட்டுகிறார்.
வாழ்வின் ரகசியம் பூமிக்கு வரும் குட்டி இளவரசன் ஒரு நரியைச் சந்திக்கிறான். அந்த நரி அவனுக்கு " ஆழமான பொருளைக் கற்றுக்கொடுக்கிறது. "உலகில் நீ எனக்கு ஒருவனாக, நான் உனக்கு ஒருவனாக மாறுவதுதான் பழக்கப்படுத்துதல்" என்று நரி விளக்குகிறது. மேலும், கதையின் மிக முக்கியமான கருத்தாக, "இதயத்திற்குத்தான் பார்வை உண்டு; முக்கியமானவை கண்களுக்குத் தெரிவதில்லை" என்ற ரகசியத்தை நரி அவனிடம் பகிர்ந்துகொள்கிறது.
தனது ரோஜா மலருக்காகத் தான் பொறுப்பாளி என்பதை உணரும் குட்டி இளவரசன், மீண்டும் தனது கிரகத்திற்கே திரும்ப முயல்கிறான். இக்கதையில் வரும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு, பெட்டிக்குள் இருக்கும் ஆடு போன்ற ஓவியங்கள், பெரியவர்களின் வறண்ட கற்பனைத் திறனைச் சாடுகின்றன.
குட்டி இளவரசன் வெறும் கதை புத்தகம் மட்டுமல்ல; அது அன்பு, நட்பு, பொறுப்புணர்வு மற்றும் குழந்தைப் பருவத்துத் தூய்மையை நினைவூட்டும் ஒரு வாழ்வியல் பாடம். பிரெஞ்சு அரசாங்கம் இதன் ஆசிரியரைப் போற்றும் வகையில், குட்டி இளவரசன் மற்றும் ஆசிரியரின் படங்களைக் கொண்ட ஐம்பது பிராங்க் நோட்டை வெளியிட்டது அதன் சிறப்பை உணர்த்துகிறது.
உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது". நாம் ஒருவருக்காகச் செலவிடும் நேரமும் அக்கறையும்தான் அவர்களை நமக்குச் சிறப்பானவர்களாக மாற்றுகிறது.
*நீ பழக்கப்படுத்திக்கொண்டதற்கு நீ என்றுமே பொறுப்பாளியாகிறாய்" ஒருவருடன் உறவை ஏற்படுத்திக்கொண்டால், அவர்களுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டவர்களாகிறோம்.
*மற்றவர்களுக்கு நீதி வழங்குவதைக் காட்டிலும், தனக்குத் தானே நீதி வழங்கிக்கொள்வது மிகக் கடினம்". அவ்வாறு ஒருவன் தனக்குச் சரியான நீதி வழங்கிக்கொண்டால் அவன் ஒரு உண்மையான ஞானி என்று அரசன் குறிப்பிடுகிறான்.
*உண்மையான அழகு கண்களுக்குப் புலப்படுவதில்லை. மனிதர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பது தெரியாமல் அலைபாய்கிறார்கள், ஆனால் அவர்கள் தேடுவது ஒரே ஒரு ரோஜாவிலோ அல்லது சிறிதளவு தண்ணீரிலோ கிடைத்துவிடும்.
*பெரியவர்கள் தங்களுக்குள் இருக்கும் குழந்தையை மறந்துவிடக்கூடாது என்பதையும், வாழ்க்கையில் அன்பும் நேரமும் எவ்வளவு மதிப்புமிக்கவை என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment