Tuesday, 9 September 2025

166


#கற்கை_நன்றே_166

"மக்களை இரண்டு காரியங்களைச் செய்ய வைப்பது மிகவும் கடினம்: ஒன்று, அவர்களைச் சிந்திக்க வைப்பது; மற்றொன்று, செயல்களின் முக்கியத் துவத்திற்கேற்ப அவற்றை வரிசைப்படுத்த வைப்பது." இவ்விரு விஷயங்கள்தான் ஒரு தொழில்முறைக் கலைஞனுக்கும், பொழுது போக்குக் கலைஞனுக்கும் இடையே உள்ள வேறுபாடு

-படித்தது

மாடு மேய்க்கும் ஒரு வயதானவர், ‘ஹெர்ஃபோர்டு இன பசுக்களிடமிருந்து வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு பாடத்தை
கற்றுக்கொண்டதாய் நார்மன் பீலே கூறுகிறார்.மலைச்சரிவில் உள்ள மாட்டுப்பண்ணையில் கழித்த ஒருவரின் வாழ்வியல் சம்பவத்தை நமக்குக் கூறுகிறார்

 வீசியடிக்கும் பனிக்காற்றை தாங்கமுடியாமல் மாடுகள் மடிவது அங்கே வாடிக்கையான நிகழ்வு. பனி மழையில் பசும் புல்மேடுகளெல்லாம் உறைந்து போகும்; திடீர் திடீரென்று குளிர் அதிகரிக்கும்; காற்றில் பறந்து வரும் பனிக்கட்டிகள் தசையைத் துளைத்துவிடும். இயற்கை நிகழ்த்தும் இந்த வன்முறைக்கு எதிராக எதுவும் செய்ய இயலாமல் கால்நடைகள் திகைத்து நிற்கும். சிதறி வீசும் பனித்துகள்களுக்கு எதிராக தமது பின்பக்கத்தைக் காட்டிக் கொண்டு வரிசையாக நிற்கும் அந்த மாடுகளை பனிக்காற்று பல மைல் தொலைவுக்கு உருட்டிச் செல்லும்.
 முடிவில் எங்காவது ஒரு வேலி ஓரத்தில் அவை கொத்துக்கொத்தாக மடிந்து விறைத்துக் கிடக்கும்.

 ஆனால் ஹெர்ஃபோர்டு இனப் பசுக்களோ இந்த விஷயத்தில் மிகவும் வித்தியாசமானவை. பனிக் காற்று வீச ஆரம்பிக்கும்போதே, இவை காற்று கடைசியாக மோதித் திரும்பும் ஒரு மலை அடிவாரத்துக்கு ஓடிப்போய்விடும். அங்கே உடலோடு உடல் உரச வரிசை கட்டி நிற்கும் இந்த பசுக்கள், பனிக் காற்றுக்கு முகம் காட்டியபடியே, தலை குனிந்து நிற்கும். ‘பனிக்காற்றின் கோரத்தாண்டவம் முடிந்த பின் பார்த்தால், அந்த ஹெர்ஃபோர்டு இனப் பசுக்கள் எல்லாமே உயிரோடு இருக்கும் அதிசயத்தைப் பார்க்கலாம். 

மாடுமேய்ப்பவர் பரவசத்துடன் சொன்னார்: “அந்த பனிப் புல் வெளியில் இருந்துதான், ‘வாழ்க்கைப் புயலை எதிர்கொள்’ என்னும் மிக முக்கியமான வாழ்வியல் பாடத்தை நான் கற்றுக் கொண்டேன்.” இந்தப் பாடம் எல்லா இடத்துக்குமே பொருந்தக்கூடியதுதான். 

நீங்கள் அச்சம் கொள்ளும் விஷயங்களை தவிர்த்து விட்டு விலகி ஓட முயற்சிக்காதீர்கள். அப்படிச் செய்தால் அந்த பெருங்காற்று உங்களை அப்படியே உருட்டி கீழே தள்ளிவிடும். அச்சமூட்டும் பிரச்சனைகளை நேருக்கு நேராக எதிர்கொள்வதா? அல்லது அதை தவிர்த்துவிட்டு விலகி ஓடுவதா? என்பதை ஒவ்வொரு மனிதனும் தமக்குள்ளேயே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

 சொல்லப்போனால் பெரும்பாலான பயங்களுக்கு அடிப்படையே கிடையாது. அவை வெறுமையானவை. ‘வாழ்நாளில் தான் பயந்து நடுங்கிய விஷயங்களில் 92 சதவிகிதம் நடைபெறவே இல்லை’ 
மீதி எட்டு சதவிகித பிரச்சனை வந்தபோது, நான் அவற்றை நேருக்கு நேராக சந்தித்தேன். அதை வெகு இலாவகமாக கையாண்டேன். அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டெழுந்தேன்.” அவன் முத்தாய்ப்பாக சொன்னான்: “எல்லா பயங்களுமே நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவைதான்.”என்று.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 8 September 2025

165


#கற்கை_நன்றே_165

பிரச்சினைகளே இல்லாமல் அல்லது பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கி வாழ்வதல்ல மன ஆரோக்கியம். பிரச்சினைகளுடன் வாழப் பழகுவது, அதன் தீர்வைத் தேடுவது, அதை நோக்கிப் பயணிப்பது, அந்தத் தீர்வில் இருந்து கற்றுக்கொள்வது, கற்றுக் கொண்டதை வைத்து எதிர்வரும் பிரச்சினைகளைக் கலைவது, அதைத் தடுப்பது என்பவைதான் உண்மையான மன ஆரோக்கியம்.

-சிவபாலன் இளங்கோவன்

Ho'oponopono என்பது ஹவாய் நாட்டின் பழமையான மன்னிப்பு மற்றும் சமரசத்தின் ஆன்மிக நடைமுறையாகும்.இதன் பொருள் சரிசெய்வது அல்லது விஷயங்களை முறையாக திருத்துவது ஆகும்.
இதில், நம் வாழ்க்கையில் ஏற்படும் எந்த பிரச்சனையும், நமது மனதின் பிரதிபலிப்பாகவே விளங்குகிறது.

Ho'oponopono முறையில் தன்னிலை பொறுப்பு (total responsibility) என்பது முக்கியக் கருத்து; அனைத்து அனுபவங்களும் நம்மால் உருவாவதாகக் கருதப்படுகிறது
இதன் அடிப்படை கோட்பாடு—நாம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளுக்கும் நாமே பொறுப்பு! பிறரை குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, நம்முடைய உள்ளத்தை பரிசோதித்து, தன்னம்பிக்கை மற்றும் தன்னிலை மாற்றம் மூலம் வெளிப்புற உலகை மாற்றலாம். “I am sorry, Please forgive me, Thank you, I love you” எனும் நான்கு முக்கியமான வார்த்தைகளின் மூலம், மனதின் ஆழத்திலிருந்து நம் துன்பங்களை தீர்த்துக்கொள்ளலாம் என்கின்றனர்.
தொடர்ந்து இதனை சொல்லும் போது மாறுபட்ட எண்ணங்களை மாற்றலாம்.

அமெரிக்காவில் தற்போது இக்கருத்து குழந்தைகளுக்கு வேறு ஒரு முறையில் சொல்லப்ப்பட்டு வருகிறது. எந்த பிரச்சனைக்கும் உன் பார்வையிலிருந்து அணுகி முடிவெடு என்பது.இது மிகவும் கடினமான ஒன்றுதான்.நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நாமே காரணம் என்பதை உணர்வதாகும். ஆனால், இதை ஏற்றுக்கொள்வது மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு முடிவாகும். ஏனெனில், பிறரை குற்றம்சாட்டாமல், நாமே நம் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டவர்கள் என்பதை உணர முடியும். இதனால், நாம் நம்மை வளர்த்துக்கொண்டு, மன அமைதியை அடையலாம்

நாம் நினைப்பதற்கும் உண்மையிலேயே நிகழ்வதற்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது. Ho'oponopono-வில், நமது மனதின் ஆழத்தில் பதிந்துள்ள துரிதமான எண்ணங்கள், பழைய நினைவுகள், கோபம், வருத்தம் ஆகியவை நம் வாழ்க்கையில் பிரச்சனைகளை உருவாக்குகின்றன. நாம் நம் உள்ளத்திலேயே இந்த எண்ணங்களை மாற்றி அமைத்தால், நம் சுற்றியுள்ள உலகமும் அதற்கேற்ப மாறத் தொடங்கும்.

 உதாரணமாக, ஒருவருக்கு வேலை இடத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டால், அவர் தனது உட்புற உணர்வுகளை மாற்றினால், வேலை இடத்தில் நல்ல மாற்றங்கள் தானாகவே ஏற்படும் என்கிறார்கள். வேலை மீதான வெறுப்பே சலிப்படைய வைக்கிறது.இந்த வெறுப்பை நாம் மாற்றுவதன் மூலம் வேலை குறித்த நம் எண்ணம் மாற்றமடைகிறது.

 எந்த ஒரு பிரச்சனையும் நேர்ந்தாலும், அது நம்மிடம் ஏன் வந்தது என்பதை உணர்ந்து, மனதிற்குள் Ho'oponopono மந்திரங்களை சொல்லி, தன்னிலை மாற்றத்தை ஏற்படுத்தினால், வாழ்க்கை சிறப்பாக மாறும்.

காபியின் தரம் என்பது, கோப்பைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. வாழ்க்கையில் முழுமை என்பது, நம்மைச் சுற்றி இருக்கும் மற்றவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை.
சிறந்த கோப்பைகளைப் பற்றியே யோசிக்கும் நமக்கு, பல சந்தர்ப்பங்களில் காபியின் சுவை தெரிவதில்லை.அதே போல் பணத்தையும் பதவியையும் விடாமல்

துரத்தும் நாம், அவற்றை விடவும் முக்கியமான வாழ்க்கையை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். நமது துன்பங்களுக்கு எல்லாம் இந்த தவறான அணுகுமுறை தான் காரணம் என்கிறார் சுகபோதானந்தா

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 7 September 2025

164


#கற்கை_நன்றே_164

ஊடலில் பிடிவாதம் கூடாது.ஊடல் ஊறுகாயை போல் இருக்க வேண்டும்.அவ்வப்போது தொட்டுக் கொள்ளலாம்.உணவு போல் உட்கொண்டால் வெறுப்புதான் மீதமாகும்.

-சங்கப்பாடலில்

பிடிவாதங்கள் ஆரம்பத்தில் நன்றாய் இருக்கும்..விரும்பியது கிடைக்கும் போது சிறந்த உக்தியாக தெரியும். ஆனால் காலப்போக்கில் தளர்ந்து விடும்.அன்பின் முன் மட்டும் பிடிவாதம் குறையும்.குறிப்பிட்ட வயதுக்கு மேல பிடிவாதங்களுக்கு மருந்தாக சமரசமே தீர்வாக மாறுகிறது. சமரசங்களே அன்பு அதுவே வாழ்க்கையாக மாறிவிடுகிறது.

பிடிவாதத்தை பலர் விடாமுயற்சி 
 என்று குழப்பிக் கொள்கிறார்கள்.
விடாமுயற்சி என்பது, ஒரு செயலில் பல முறை தோற்றாலும், மனம் தளராமல் வெற்றி இலக்கை அடைய தொடர்ந்து அச்செயலை செய்து முடித்தல்.

பிடிவாதம் என்பது எப்பாடு பட்டாவது (நல்லது , அல்லது) எச்செயலை செய்தாவது, தனக்கு வேண்டியதை அடைவது. இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல தோன்றினாலும், இரண்டும் வெவ்வேறானவை

நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களில் கீழ் காணும் நபர்களையும் கடந்து செல்கிறோம்.

பிடிவாத மனிதர்கள் ஐந்து வகைகளில் இருப்பதாக பெர்னார்டு பெர்னோவிஜ் கூறுகிறார்

1.I know all:எனக்கு எல்லா தெரியும் எனும் அகங்காரம் அதிகம்.மற்றவர் பேசிக் கொண்டிருந்தாலும் தான் சொல்ல நினைப்பதை சொல்லிக் கொண்டே இருப்பார்

2.Grenade:சிறிய விஷயத்தை பெரியது போல் சொல்லுவார். தாம் சொல்வதை மட்டும் மற்றவர் கேட்க வேண்டும் என நினைப்பவர்

3.Missing track:முக்கிய விசயத்தை விட்டுவிட்டு சிறிய விசயத்தை அதிக நேரம் விவாதிப்பது.

4.Negative:எந்த விஷயத்தையும் இல்லை,கிடையாது என்பது.இவர்களை ஒப்புக் கொள்ள வைப்பது கடினம்

5.May be:எந்த விசயத்தையும் ஆதரிக்க மாட்டார்.முடிவெடுக்க நீண்ட நேரம் ஆகும்

கொள்கைப் பிடிப்புடன் கூடிய பிடிவாதம் வாழ்வை முன்னேற்றும்.. ஆனால் வீண்பிடிவாதம் நம் சிந்தனையை சிதைக்கிறது. பிடிவாதத்திற்கான கடிவாளம் போடுவதே சிறப்பு. பிடிவாதத்தை நேர்மறையில் செலுத்துவது சிறப்பு.
காத்திருப்பதற்கும்
பொறுத்திருப்பதற்கும்
ஒரு பற்றுதல் வேண்டும் என்கிறார் மனுஷ்.அந்த காத்திருப்பு மனநிலை நல்ல விஷயங்களில் பொறுத்திருந்து விடாமுயற்சியுடன் தொடர உதவும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 6 September 2025

மகாத்மா காந்தியை, காந்தியடிகள் என்று முதல் முதலில் எழுதியவர் திருவிக. சிலப்பதிகாரத்தில் வருகிற கவுந்தியடிகளைப் பற்றிப் படித்தபோது, மகாத்மாவை காந்தியடிகள் என்று எழுத வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. தொடர்ச்சியாக அவர் அப்படியே எழுதிக்கொண்டிருந்ததைக் கண்டு பலரும் காந்தியடிகள் என்றே எழுத ஆரம்பித்து, அது நிலைத்துவிட்டது.ஆனால் அன்னி பெசண்ட்டை ‘அன்னை வஸந்தை’ என்று திருவிக எழுதியிருக்கிறார். அது நிலைக்கவில்லை.(கு. அழகிரிசாமியின் நான் கண்ட எழுத்தாளர்கள் நூலில் படித்தது.)

தனியாக நடமாடும்பிடிவாதம் உனது..நிழலோடும் உரசாத தன்மானம் எனது-கபிலன்

முப்பது கம்பெனிகளும் இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் இருக்கும் அந்தப் பெரிய கட்டிடத்தை தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள் அந்த சித்தாள், 'நாங்கள் கட்டியது' என்று சொல்லி.-முகுந்த் நாகராஜன்

Thursday, 4 September 2025

163


#கற்கை_நன்றே_163

*ஒருவன் கஷ்டத்தில் இருந்தான்.அந்த ஊரில் உள்ள குருவிடம் சென்றான்

*குரு கூறினாராம்
"இன்று போல் என்றும் இருப்பாயாக என்று"

அவன் திகைத்துப் போய் குழப்பத்துடன் வெளியேறினான்.

இது போல் நடைமுறை யதார்த்தத்தை ஜென் வழியில் ஞானிகள் கூறுவதை படிக்கும்போது நிறைய அகக்கதவுகள் திறக்கும். ஆன்மிகம் என்பதை தாண்டி உபதேசத்தின் போது சொல்லும் வாழ்வியல் உண்மைகள் மிகப்பெரும் படிப்பினைகள் தரும்.அவ்வகையில் யதெச்சையாய் படித்த சுகபோதானந்தாவின் புத்தகத்தின் சில வாழ்வியல் கருத்துகளில் சில..

#அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை.அது சிறியதோ, பெரியதோ,கசப்போ,இனிப்பாகவோ இருக்கலாம்.அது இலைகளை,பூக்களை,அசுத்தங்களை எவ்வித பாகுபாடின்றி சும்ந்து செல்லும் நதியைப்போலத்தான். வாழ்க்கை எனும் நெடுங்கதையில் மாற்றம் ஒருகால் புள்ளிதான், முற்றுப்புள்ளியல்ல.

#மகிழ்ச்சி குறித்து ஜென்னில்

மகிழ்ச்சி பொருளில் இல்லை,அது மற்றவர்கள் கொடுத்து நாம் பெறுவது அல்ல,உள்ளே இருக்கிறது மகிழ்ச்சி. அதை உணராதவர்கள் தேடினாலும் கிடைப்பதில்லை."எது மகிழ்ச்சியளிக்குமோ அதை எண்ணுங்கள்.எது மகிழ்ச்சியாய் உணரச்செய்யுமோ அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.

#திருப்தி

பொதுவாக தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள்.அதுதான் மனதார போதும்னு சொல்வாங்க.
மற்றவைகளான பொன்னோ,
பணமோ கொடுத்தால் திருப்தியடையாது.

"ஒரு பெண்மணி குழந்தையுடன் கடற்கரைக்கு சென்றாள்.ஒரு பெரிய அலை குழந்தையை இழுத்துச் சென்றது.ஐயோ என அலறியபோது, இளைஞன் துள்ளிச் சென்று காப்பாற்றினான். குழந்தையை கையில் வாங்கிய தாய் "ஐயோ குழந்தையின் செருப்பு போய்விட்டதே என்றாராம். திருப்தியற்ற மனம் இப்படித்தான் இருக்கும்.

#முரண்பாடு

ஒரு கருத்தோடு முரண்பட்டு, தன் கருத்தோடு மோதி புதிய கருத்து உருவாகும் என்பார் ஹெகல்.ஆனால் சமீப காலமாக முரண்படுதல் என்பது ஃபேசனாகிவிட்டது.இதுபற்றி, துருகனேவ் எழுதிய ரஷ்யக்கதை

"ஒரு ஊரில் ஒரு மூடன் இருந்தான். அவனின் அறிவற்ற தன்மையும், அபத்த செயலையும் கண்டு ஊரே கைகொட்டி சிரித்தது.அவனுக்கு சங்கடம். அறிவாளியிடம் யோசனை கேட்டான்.அவர் சொன்னார் யாரேனும் உன்னத படைப்பு எனச் சொன்னால் குப்பை என்று நீ சொல்.பிறரை மட்டம் தட்டு. மறுத்துப்பேசு.ஏழுநாள் கழித்து என்னை வந்துபார். பின்னாளில் அவனை மேதை,ஆராய்ச்சியாளர்,
என ஊரே கொண்டாடினர்  என கதை முடியும்.

"முரண்படுகிற சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது.ஆனால் அதையே தன்னுடைய இயல்பாகவும், வாழ்க்கை முறையாகவும் ஆக்கிக் கொண்டுவிடக்கூடாது. எண்ணங்களுடன் முரண்படாதீர்கள்.
மனதைக் காலியாக வைத்திருங்கள்.

#ஒப்பிடுதல்

மனம் ஒரு ஒப்பீடு செய்யும் கருவியாயிருக்கிறது.இது வெறுப்பையும் பொறாமையும் தரும்."இதைவிட அழகான நதியை நான் பார்த்திருக்கிறேன்.இதைவிட பெரிய மலையை பார்த்திருக்கிறேன் என்பதெல்லாம் எதையும் முழுமையாய் புரியவிடாமல் அதாவது நிகழ்காலத்துடன் ஒன்றாமல் செய்துவிடுகிறது.

"அகந்தை எப்பொழுதும் பழையதாகத்தான் இருக்கும்.
அவரின் சொல்லும் செயலுமே சரியாக இருக்கும் என நினைப்பார். மாற்றங்களை வரவேற்கமாட்டார்.பழைய முறையை தொடர்வார்.ஒரு கருத்துடன் ஒன்றாமல் தன் கருத்தையே திணிப்பார்கள்.

ஒத்துப்போக தன்னுணர்வு இடம் தராது. அகந்தை அறியாமையுடன் பொருந்தியிருக்கும்.இதனுடன் இன்னொன்று "கோபம்".

நம்மைநாமே தாழ்த்திக்கொண்டு சிந்திக்கும்போது நம்மிடமிருந்து வெளிப்படும் எதிர்வினை கோபம். கோபத்தை அடக்குவதுவிட வெளிப்படுத்துவது நல்லது. சுஜாதா தன் கற்றதும் பெற்றதும் தொடரில் இதனை ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருப்பார்.
ஜப்பானில் கோபம் வந்தால் கோபமல்லாததை செய்வார்களாம்.அதாவது எதிராளியின் மீது கோபம் வந்தால் அதற்குப்பதில் பூவைக் கொடுப்பார்களாம்.இது கோபத்தை குறைக்குமாம்.

#துணிவு

தனக்கு சரியெனபட்டதை தயக்கமின்றி செய்வது துணிவு. அச்சமற்று இருத்தலல்ல.அச்சத்தை அடக்கி வைத்து மெலெழும் நிலை.விவேகம் இல்லாவிடில் அது அசட்டு துணிச்சல் ஆகிவிடும். தைரியம் என்பது தெரியாத ஒன்றை ஆராய்ந்து தேடிக் கண்டுபிடிப்பது.
தெரிந்தே ஒன்றின் கைதியாக இருப்பது தைரியமல்ல.

இதற்கு ஷிப்லியின் கதை ஒன்று
சொல்லலாம்..

ஒரு நாள் அந்த நாய் கடும் தாகத்துடன் இருந்தது. தண்ணீரில் தெரியும் தனது பிம்பத்தைப் பார்த்து ஒவ்வொரு முறையும் அதை கண்டதும் தண்ணீரைக் குடிக்காமல் பின்வாங்கியது. தன்னுடைய பிம்பத்தை வேறு நபராக எண்ணிக்கொண்டது. ஆனால் தாகம் அதிகரித்த நிலையில், அது பயத்தை உதறி விட்டு தண்ணீரில் பாய்ந்தது. அந்தக் கணத்தில் அதன் சுய பிம்பம் மறைந்து போனது. நாயின் செயல் தமக்கு தெளிவு தந்ததாக  ஷிப்லி கருதினார். நாம் தாகம் கொண்டு விடுகிற போது நமக்கு தேவையானது கிடைத்துவிடும் என்கிறார் எவ்வளவு பெரிய உண்மை.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 2 September 2025

162


#கற்கை_நன்றே_162

வாய்ப்பு என்பது தீக்குச்சி போன்றது
தீக்குச்சியை உரசியவுடன் பற்றி எரிய வேண்டும்
இல்லையேல்...
வாய்ப்பு மற்றொரு தீக்குச்சிக்கு வழங்கபடும்..

சச்சின் டென்டுல்கரைக் காட்டிலும் ரமாகாந்த் ஆச்ரேக்கர் ஒன்றும் சிறந்த கிரிக்கெட் வீரர் அல்ல. ஆனால், அவரது பயிற்சிதான் சச்சினுக்கு சச்சினை அடையாளம் காட்டியது. அதுதான் சச்சினை உலகிற்கு அடையாளம் காட்டியது. பி.டி.உஷாவோடு ஒப்பிடுகையில் ஓ.எம். நம்பியார் ஒன்றுமே இல்லை. ஆனால் அவர்தான் இந்தியாவிற்கு ஒரு தலைசிறந்த தடகள வீராங்கனையை வழங்கினார். தன் குருவான துரோணாச்சாரியாரை எதிர்த்துப் போரிட்டு வெல்லும் அளவுக்கு அர்ஜுனன் வளர்ந்தது, துரோணாச்சாரியாரின் புகழைப் பறைசாற்றுகிறது. 

நமக்கு வெளியே உள்ள ஒருவர் நம்மை வழிநடத்துவது அவசியம். அவர்கள், நம்மை நமக்கே பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி; நம் பலவீனங்களை எதிர்த்துப் போராடத் தேவையான, நமக்குள் இருக்கும் வலிமைகளை நமக்குக் காட்டுபவர்கள். நம் திறமைகளைப் பட்டை தீட்டிக் கொள்ள நமக்குத் தனிப்பட்டப் பயிற்சியாளர்கள் தேவை. நம் அறிவை விருத்தி செய்வதற்கு ஆசிரியர்கள் தேவை. 

 உங்கள் மழலையர் பள்ளி ஆசிரியர் அவரது வாழ்வில் உங்களைப்போல் உயர்ந்த நிலையை அடையாது இருந்திருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்வு அவர் உங்களுக்கு அளித்த அறிவின் அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. நம்மை வழிநடத்தும் ஒளியுடன் நம்மை நாம் ஒப்பிட வேண்டாம். சூரியக் கதிர்களிலிருந்து சூரியனை நீக்கிவிட்டால், எதுவும் இருக்காது.

 கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.

 "பத்தாயிரம்," என்று உடனடியான பதில் வந்தது. இப்போது இன்னோரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்," என்று அவன் பதில் கூறினான். ஆசிரியர் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும் போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதுமில்லை.

 அதுபோன்றதுதான் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந்தால்? பதில் உனக்கே தெரியும்," என்று கூறினார். ஒரு பயிற்சியாளரின் மகத்துவம், ஒரு வீரனுக்கு அவனது திறனை வெளிப்படுத்துவதில் உள்ளது. ஒரு விளையாட்டு வீரனின் மகத்துவம், தனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளத் தன் திறனுக்கு ஏற்றவாறு செயல்படுவதில் இருக்கிறது.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 1 September 2025

161


#கற்கை_நன்றே_161

இன்னாமை வேண்டின், இரவெழுக;
இந் நிலத்து
மன்னுதல் வேண்டின்,புகழ் நடுக;-தன்னொடு
செல்வது வேண்டின், அறஞ்செய்க;  வெல்வது
வேண்டின், வெகுளி விடுக!

-துன்பம் வேண்டின் பிச்சை கேட்டுப்பாருங்கள்,பெயர் நிலைக்க உங்கள் புகழை விட்டுச் செல்லுங்கள் தழைத்துக் கொண்டே இருக்கும்.உங்களோடு எடுத்துச் செல்ல அறச்செயல்கள் உள்ளன.அனைத்து காரியங்களும் வெற்றி பெற வேண்டுமாயின் கோபத்தை விட்டு ஒழியுங்கள்

-நாண்மணிக்கடிகை

ஓர் இருள் சூழ்ந்த சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் ஏராளமான நல்ல மனிதர்கள்தான். நல்ல மனிதர்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தங்கள் வாழ்வில் பெரும் திருப்தியுடனும் மன நிறைவுடனும் இருப்பதுதான். 

தங்களிடம் இருப்பது போதும் என்று அவர்கள் ஒரேயடியாகத் திருப்திப்பட்டு விடுவதால், பணக்காரராவதற்கான தூண்டுதல் அவர்களிடம் இருப்பதில்லை . பொருளாதார அபரிமிதம் குறித்த உணர்ச்சிரீதியான கட்டாயம் எதையும் அவர்கள் உணர்வதில்லை.

 சாலையில் ஒரு நூறு ரூபாய் நோட்டு கிடப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த வழியாகச் செல்லும் ஒரு நல்ல மனிதர், அதைப் பார்த்துவிட்டு, "இது என் பணம் அல்ல. எனவே, அதை நான் தொட மாட்டேன்," என்று கூறிவிட்டுத் தன் வழியில் சென்றுவிடுவார். அவர் விட்டுச் சென்றதை ஒரு கயவன் கண்டெடுக்கிறான். தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டாலும், அந்த நூறு ரூபாயை அந்த நல்ல மனிதர் எடுத்திருப்பாரேயானால், ஏழைகளின் பசியாற்ற அதைப் பயன்படுத்தியிருக்கலாம். அதைக் கண்டுகொள்ளாமல் சென்றதால், அழிவுபூர்வமான வழியில் அதைப் பயன்படுத்தக்கூடிய ஒரு கயவனின் கையில் அது கிடைத்துவிட்டது.

 எந்தவொரு நாட்டிலும் புழங்கும் அதிகாரபூர்வமான பணம் ஓர் அளவிற்குட்பட்டது. இப்போது, அந்தப் பணம் ஒரு நல்லவரிடமும் இருக்கலாம், அல்லது ஒரு கயவனிடமும் இருக்கலாம். திருப்தி காரணமாகப் பெருஞ்செல்வத்தைக் குவிக்க விரும்பாத நல்லவர்களால், ஏராளமான பணம் தீயவர்களின் கைகளில் கிடைக்கும்படி ஆகிறது.

 ஒரு நிலைக்குப் பிறகு, செழிப்பு என்பது எவரொருவருக்கும் மிகையாகிவிடுகிறது. ஆனால் வித்தியாசம் என்னவென்றால், நல்லவர்களிடம் இருக்கும் மிகுதி ஒரு சிறந்த உலகை உருவாக்க உதவும்; 
தீயவரிடம் இருந்தால் உலகை அழிக்கப் பயன்படுத்தப்படும். நல்ல மனிதர்கள் தங்களிடம் உள்ள மிகுதிப் பணத்தைக் கொண்டு பள்ளிகளைக் கட்டுவார்கள், கல்வி உதவி வழங்குவார்கள், ஏழைகளின் பசியைப் போக்குவார்கள், மருத்துவ உதவிகளைச் செய்வார்கள். 

 தங்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நல்ல மனிதர்களை, செழிப்பான மனிதர்களைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க நீங்கள் முன்வாருங்கள். தீயவர்கள் கைகளுக்குப் போய்ச் சேரும்படி ஒரு நூறு ரூபாய் நோட்டை விட்டுச் செல்லாதீர்கள். நாம் அத்தீயவர்களைப் பலவீனப்படுத்துவோம். பொருளாதாரத்தை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வோம். பொருளாதார உபரியை உருவாக்குவோம். உங்களுக்கு அவ்வளவு பணம் தேவையில்லாமல் இருக்கலாம். அதனால் என்ன? அதைக் கொண்டு ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவோம். - பணம் சேர்ப்பதற்கான தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு நல்ல மனிதனுக்கும் உண்டு.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு