Tuesday, 16 September 2025

170


#கற்கை_நன்றே_170

உங்கள் பயங்களை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தைரியத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்

பெரும்பாலான புற்றுநோய்களில் கால தாமதத்தைத் தவிர வேறெதெற்கும் பயப்படத் தேவையில்லை என்கிறார்கள். பயம் தான் தைரியத்தின் முதல் எதிரி. நம் பயத்தை நம்முடன் மட்டும் வைத்துக் கொள்ள மாட்டோம். அது தொற்று நோய் போல மற்றவருக்கும் பரப்புவோம்.மற்றவரும் பயப்படும் போது நமக்கு கொஞ்சம் தைரியம் வரும். பின்பு நாமே அவர்களுக்கு தைரியம் சொல்லுவோம்

தைரியத்தின் ரகசியம் பற்றி நார்மன் வின்செண்ட் பீலே சொல்கிறார்..
வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா?. தோல்விகளைப் பற்றிய உங்கள் உணர்வுகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வதுதான். அதன் பின், எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் அன்றாட வேலைகளை அமைதியுடன் செய்யத் தொடங்குங்கள். இது உங்கள் பயத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்.அதற்கு உதாரணமாக ஒரு மேற்கோள் கதையை சொல்கிறார்...

மெளரிஸ் செவாலியர் சிறந்த நடிகர். அவர் தனது நடிப்புத் தொழிலில் உச்சத்தில் இருந்தபோது ஒருநாள்..நிகழ்ச்சி துவங்குவதற்கு சற்று முன்னால் அவருக்கு கடுமையான தலைச்சுற்றல் ஏற்பட்டது. தொடர்பில்லாத ஏதேதோ சிந்தனைகள் அவருடைய மூளையை ஆக்கிரமிக்கத் தொடங்கின. அவர் தன்னால் முடிந்தவரையிலும் அந்த அவஸ்தையிலிருந்து விடுபட முயன்றார்.அவர் தன்னிலை இழந்தார். அவரது சக நடிக நண்பர்கள் அந்த இரவு நிகழ்ச்சியை எப்படியோ சமாளித்தார்கள். ஆனால் அவருக்கு தொடர்ந்து பல வாரங்கள் இதே நிலைமை நீடித்தது.

 மெளரிஸின் வார்த்தைகள் குழற ஆரம்பித்தன.அவர் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். “நான் தோல்வி அடைந்தவன். தோற்றவனாக இருப்பது எனக்குள் பீதியை ஏற்படுத்துகிறது. இனிமேல் எனக்கு எதிர்காலமே இல்லை” என்று டாக்டரிடம் அழுது புலம்பினார் மெளரிஸ். 

அவர் தமது சுய நம்பிக்கையை இழந்துவிட்டார். எப்போதும் பயம்... பயம்...பயம் மட்டுமே. பயங்களே அவரைச் சூழ்ந்திருந்தது. சில நாட்களுக்குப் பிறகு மெளரிசிடம் டாக்டர் சொன்னார்: “மெளரிஸ், இந்த கிராமத்தில் உள்ள சிறிய அரங்கில் நீங்கள் ஒரு நிகழ்ச்சியை நடத்துங்களேன்.” “எனக்கும் ஆசைதான். ஆனால்.. நிகழ்ச்சியின் நடுவில் என் மனம் வெறுமையாகிப் போகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?” மெளரிஸ் பதற்றத்துடன் கேட்டார். டாக்டர் மென்மையாகச் சொன்னார்: “இங்கே உத்தரவாதங்கள் எதுவும் கிடையாது, ஆனால் தோற்று விடுவோமா என்ற பயத்தை நீங்கள் அறவே துடைத்து எறிந்து விடுங்கள் என்றார். 

 நடிப்பிலிருந்து ஓய்வு பெற பயம் ஒரு காரணமே இல்லை: அது ஒரு சாக்குப்போக்கு, அவ்வளவுதான். துணிச்சல் மிக்க மனிதன் பயத்தை ஏற்றுக் கொள்கிறான். ஆனால், அதையும் மீறி அவனுடைய பயணம் தொடர்கிறது.”

 அந்த கிராமத்து மேடையில் மீண்டும் மெளரிஸ் தோன்றியபோது, அவருடைய மனம் சொல்ல முடியாத பயத்தாலும், தாங்க முடியாத துயரத்திலும் சிக்கித் தவித்தது. ஆனாலும் அவர் வெகு நேர்த்தியாக நடித்தார். அவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது. “எனக்குத் தெரியும், நான் பயத்தை வெல்லவில்லை. அதை நான் ஏற்றுக் கொண்டேன், ஆனால் அதையும் மீறி நான் செயல்பட்டேன். இந்த வழிமுறை எனக்கு வெற்றியைத் தந்தது.” அன்றைய இரவுக்குப் பின், எல்லா நாட்களிலும் மெளரிஸ் பார்வையாளர்களின் முன்னால் தோன்றத் தொடங்கினார்.
இங்கே உத்தரவாதங்கள் எதுவும் இல்லை. ஆனால் நான் பயப்படுகிறேன் என்னும் ஒரே காரணத்துக்காக, கலைத்துறையில் இருந்து நான் விலக விரும்பவில்லை. இது என்னுடைய சுய அனுபவம் எனக்கு கற்றுத்தந்த பாடம்.என்கிறார்

எல்லா விஷயங்களுமே பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருக்கும் ஒரு உன்னத கணத்துக்காக நீங்கள் காத்துக் கொண்டிருந்தால், ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு சூழல் வராமலேயே போய்விடலாம். அப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தால் மலைகளில் ஏற முடியாது, பந்தயங்களில் வெற்றி பெற முடியாது, நிலையான மகிழ்ச்சி ஒருபோதுமே எட்டப்பட்டிருக்காது.” எனவே, நாம் பயப்படுபவனாக இருந்துவிடக்கூடாதே என்று நினைத்து நீங்கள் பயப்படாதீர்கள். பாசாங்கு எதுவுமில்லாமல் உங்கள் பயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பின், அந்த பயம் உங்களைத் தொடுவதற்கு முன்னால் நீங்கள் இருந்த மனநிலையிலேயே செயல்பட ஆரம்பியுங்கள். பயத்தை புறக்கணித்து விட்டு, உங்கள் பாதையில் தொடர்ந்து செயலாற்றுங்கள்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment