#கற்கை_நன்றே_171
கனவுவாழ்க்கை என்றால் என்ன?
இன்றைய நம் வாழ்க்கை 10 ஆண்டுகளுக்கு முந்தைய நம் கனவாக இருக்கவேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கவேண்டும் எனக் கனவு கண்டு அதை நிறைவேற்ற இந்த நொடியில் இருந்து வாழ்க்கையைத் துவக்கவேண்டும்.
இன்று உச்சத்தில் இருக்கும் யாரும் தற்செயலாக அதை அடையவில்லை. வெறியுடன் திட்டம்போட்டு உழைத்தே சாதித்தார்கள்.இப்போது இருக்கும் அறிவு அப்போது இருந்திருந்தால் பல முட்டாள்தனங்களைச் செய்திருக்கமாட்டேன். ஆனால் அறிவு வந்தபின்னர்தானே நம் முட்டாள்தனங்கள் நமக்கே தெரிய ஆரம்பிக்கின்றன?
58-59 வயதுக்கு மேல் வேலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. அதன்பின் 70, 80, 90 - எந்த வயதுவரை வாழ்வோம் எனத் தெரியாது. ஆனால் 90 வயதில் நாம் படுக்கையில் இருக்கிறோமா, மாரத்தான் ஓடுகிறோமா என்பது நம் மத்திம வயது ஃபிட்னஸால் தீர்மானம் ஆகிறது. அதனால் அடுத்த 10 ஆண்டுகளில் ஃபிட்னஸுக்கு முக்கிய முன்னுரிமை தரவிருக்கிறேன்.
இந்த வயதில் என்ன எடை பளுதூக்குகிறேனோ அதை 59 வயதிலும் தூக்கவேண்டும். இப்போது ஓடுவதைவிட வேகமாக, கூடுதல் தொலைவு 58 வயதில் ஓடவேண்டும். இருக்கும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடி நல்ல நட்புவட்டத்தைத் தொடர வேண்டும். சமூகத்தில் இருக்கும் மதிப்பையும், மரியாதையையும் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும்.
20 ஆண்டுகளில் சம்பாதித்த பெயரைக் கெடுக்க ஒரே வினாடி போதும். பல உதாரணங்கள் உலகில் உண்டு. பிள்ளைகளை நல்லபடி படிக்கவைத்து கெரியரை அமைத்துத் தரவேண்டும். மற்ற பொருளாதார நோக்கங்கள், குறிக்கோள்கள் ஏதுமில்லை. இதுதான் 10 ஆண்டுகளுக்குப் பின்னான என் கனவு வாழ்க்கை. அதை வாழவேண்டுமெனில் இந்த வினாடிமுதல் முயற்சிகளைத் துவக்கவேண்டும்.
அதைச் செய்யாமல் 10 ஆண்டுகளை ஜாலியாகக் கழித்துவிட்டு அதன்பின் மீண்டும் தொடர்ந்து வேலைக்குப் போய்க் கஷ்டப்படுவது என்பது என் முட்டாள்தனம். நீங்களும் பத்தாண்டு கனவுகளைக் காணுங்கள். அவற்றை நோக்கி உழையுங்கள். இதன்மூலம் உங்கள் கனவு வாழ்க்கையை வாழ்வீர்கள்.
நன்றி:நியாண்டர் செல்வன்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment