#கற்கை_நன்றே_176
வேலைதான் துயரத்தை லேசாக்கும். வேலையில் ஈடுபட்டிருக்கும்போது எப்பேர்ப்பட்ட மனிதனும் கனிகிறான்.
- பெருமாள் முருகன்
வேலையின் விளைவைப் பற்றி அதிகமாக ஆராயாமல் உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால் நிகழ்வது கடின உழைப்பு. பலன்தரும் உழைப்பினை மட்டுமே விதைத்து அதன் பலன்களை மீண்டும் மீண்டும் மீண்டும் விதையாக்கி பலன் பெறுவது புத்திசாலித்தனமான உழைப்பு என்கிறார்கள்.
ஆனால் உடல் உழைப்பு என்பது சில நேரங்களில் நமக்கு தேவைப்படுகிறது. உதாரனத்திற்கு வீட்டு வேலை, அலுவலகத்தில் செய்யும் ஏதேனும் ஒரு முக்கிய வேலைகள்,குழந்தைகளுகாக, குடும்பத்திற்காக நம் உடல் உழைப்பை கோருகிறது.டேவிட் கிரேசன் என்பவர் கூறுகிறார் சந்தோஷம் என்பது நான் கண்டறிந்தவரை பெரும்பாலும் கடும் உழைப்பால் ஏற்படுகிறது. வெறும் சிந்தனை, உணர்வு அல்லது உணர்ச்சியை அப்படியே சந்தோஷமாக அனுபவித்து விடலாம் என்று கற்பனை செய்வது சிலர் செய்யும் தவறாகும். அழகை அருந்த முடியுமா! சந்தோஷத்தை போராடிப் பெற வேண்டும்.
அது, மனிதர் வேலை செய்வதை விரும்புகிறது. வியர்வை, சோர்வு, சுய தியாகத்தை அது விரும்புகிறது. அதை உங்களால் அரண்மனைகளில் காண முடியாது. ஆனால் சோள வயலில், தொழிற்சாலைகளில், வேலை செய்யுமிடங்களில் அது தங்கியிருக்கும். வேலையில் மூழ்கி இருக்கும் அறியாக் குழந்தைக்கு அது மகுடம் சூட்டுகிறது. கடும் வேலையிலிருந்து சடாரென்று நிமிர்ந்து பார்த்தால் அதை நீங்கள் காணலாம். ஆனால் நீண்ட நேரம் அதை பார்த்துக் கொண்டிருந்தால் வருத்தப்படும் விதத்தில் அது மறைந்து விடும்.
கடும் உடல் உழைப்பில் ஏதோ சுகம் இருக்கிறது. ஒருவனது சிந்தனையே நின்று போகிறது. எந்த சிந்தனையும் இல்லாமல் பல மணி நேரம் எனக்குத் தெரிந்தவரை அடிக்கடி வேலை செய்திருக்கிறேன். மண்வெட்டியால் வெட்டுவது, மேலே தூக்குவது, மறுபடி குத்துவது என்று மறுபடி மறுபடி வேலை செய்யும் சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை இருப்பதில்லை.
பெரும்பாலும் முற்பகலில் நான் சோர்ந்திராத வேளையில் திடீரென்று உலகம் என்னைச் சுற்றி மலர்வது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அதன் அழகும் அர்த்தமும் என்னில் தோன்றி ஆழமான ஒரு சந்தோஷத்தை, முழுமையான திருப்தியைத் தரும்."
உழைத்து களைத்து எடுக்கும் ஓய்வு உன்னதமானது.உடலின் வலிமையை அதிகரித்து..ஒவ்வொரு செல்லிலும் புத்துணர்ச்சி பாய்ந்து நம் உடலுக்கு தெம்பு கொடுக்கிறது. மாரத்தான் ஓடும் நண்பர் நாகராஜ் ஒருமுறை சொன்னது..அதிகாலை 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். நாள் முழுவதும் உடல் தன் வேலையை தானே பார்த்துக் கொள்ளும் என்றார். முயன்று பார்த்த போது உண்மை என உணர முடிந்தது.
டிஜிட்டல் உலகத்தில் மனதிற்கு ஏற்றுக் கொள்ளும் சார்ஜர்கள் பல உண்டு.ஆனால் உடலுக்கு ஏற்ற சார்ஜர் உடலுழைப்பும், உடற்பயிற்சியும் மட்டுமே
கடின உழைப்பு என்பது உரிய காலத்தில் நீங்கள் செய்திருக்க வேண்டிய, ஆனால் செய்யத் தவறிய எளிய விஷயங்களின் குவிப்புதான்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment