Sunday, 21 September 2025

172


#கற்கை_நன்றே_172

வயது வேறு;அனுபவம் வேறு.
அனுபவம் வேறு;அதிலிருந்து பெறுகின்ற முதிர்ச்சி வேறு.
-ஜெயகாந்தன்

பொதுவாக வயதின் காரணமாக கிடைக்கும் மரியாதையை விட இளம் வயதிலேயே அறிவின் முதிர்ச்சி காரணமாக நல்ல மதிப்பு சிலருக்கு கிடைக்கிறது.அண்மையில் இணையத்தில் தாட்சயனி மஹாராஜன் எழுதிய பதிவு அனுபவம் குறித்த புதிய பார்வையை வரவழைத்தது..

மனிதனின் (பொதுவாக) முதிர்ச்சி எப்போது?

 ஒருவனை முதிர்ச்சியானவன் என்று கூறுவது வெறும் தோற்றத்தை வைத்தல்ல. அவன் எடுக்கும் தீர்க்கமான முடிவுகளை வைத்தே. அது அணைத்து நேரமும் லாபத்தை தான் பெற்று தரவேண்டியது இல்லை. லாபம் என்பது பணத்தோடு நிற்பதும் அல்ல. சரியான நேரத்தில், சரியான முடிவை, சமரசமில்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் எடுப்பதே முதிர்ச்சி என்று எனக்கு படுகிறது. வயதிற்கும் இந்த மனமுதிர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை பல வல்லுநர்கள் கூறுகிறார்கள். வெகுசிலருக்கு குறைந்த வயதில் கூட இது கிடைப்பதுண்டு. அதே போல வயதாகியும் சிலர் இம்முதிர்ச்சியை பெறுவதில்லை. 

பெருவாரியான மக்களை கணக்கில் கொள்ளும்போது நிச்சயம் ஒரு தோராயமான வயதை முதிர்ச்சி பெற்ற, பெரும் வயதாக  25-45 எனலாம். காரணம் இந்த வயதுகளில் இருப்போர் ஈடுபாட்டுடன், உடலுழைப்புடன் கூடிய முடிவுகளை எடுக்கிறார்கள். இந்த வயதில் இருப்போரிடம் சம அளவில் பல திறமைகள், தைரியங்கள், எண்ணவோட்டங்கள் எல்லாம் உள்ளது என்கிறேன்.

25 வயதிற்கு குறைவானவர்கள் நிச்சயம் திறமையும், இளம் ரத்தமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதே நேரம் அந்த வயதிற்கே உரிய மெத்தனம், சோம்பேறித்தனம் இருக்கிறது. கூடவே விளையாட்டுத்தனமும் தான். இது போல காதல் என்னும் பெருமாயை அவர்களது முன்னேற்றங்களை கட்டுக்குள் வைக்கிறது. காதல், கல்யாணம் இல்லாத வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை. அதே நேரம் அது ஒருவனது திறமையை, சுதந்திரத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும் நடக்கிறது.

இதற்கு நேரெதிராக 45 வயதிற்கு மேல், உடல் உழைப்பில் ஈடுபாடு குறைகிறது, புதிய முயற்சி செய்வதற்கு துணிச்சல் பிறப்பதில்லை. இருப்பது போதும் என்ற மனப்பாங்கு வந்துவிடுகிறது. நாட்கள் சீக்கிரம் கடந்தாலே போதும் என்ற வெறுப்பும் தொற்றிக்கொள்கிறது. மீண்டும் சோம்பேறித்தனம், இம்முறை இயலாததால் சோம்பேறித்தனம் குடிபெருகிறது. புதிய தொழிநுட்பம் பெற மனது விரும்புவது இல்லை. 'நோஸ்டால்ஜியா'விலேயே வாழ்ந்துவிட பிடிக்கிறது.

இதனாலேயே 25-45 வயது என்பது உழைக்க, சேமிக்க, உலகம் சுற்ற, அனுபவங்கள் கற்றுக்கொள்ள, கற்றவற்றை பயன்படுத்த, உருவாக்க ஏற்றது என்று எண்ணுகிறேன். இக்காலகட்டத்தில் அனைத்தும் சம அளவில் கிடைக்கப்பெறலாம். மனைவி, மக்கள், அறிவு, ஆற்றல், சமூக பொறுப்பு, தன்னையறிதல், பிற உயிர்களை நேசித்தல் என்று அவன் விரும்பியதை மனது உணரும் நேரம். தனது வாழ்க்கையை தீர்மானிக்க கிடைக்கும் காலம். இந்த வயதின் தொடக்கத்திலேயே ஒருவர் சிறப்பாக திட்டமிடுவதால், தனது ஓய்வு காலத்தை சிறப்பாக கட்டமைத்துக்கொள்ள முடிகிறது.

25 முதல் 45 வயதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்வோம்!

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment