Saturday, 27 September 2025

கோகுல் பிரசாத்


One battle after another படத்தில் வரலாறு குறித்த அவநம்பிக்கை இடம்பெறுகிறது. அது வருங்காலம் குறித்ததாகவும் இருக்கிறது. ‘Make America great again’ போன்ற கோஷங்கள் எவ்வளவு அபத்தமானவை என மெல்லிய கசப்புடன் குறிப்புணர்த்துகிறார்கள். ஏனெனில் ஒருபோதும் அமெரிக்கா மகத்தான நாடாக இருந்ததில்லை. அதன் ‘founding fathers’-ஆக அறியப்படுகிற அனைவருமே எதோவொரு வகையில் இழிவானவர்களே. 

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் எத்தனை உயரிய மனிதர் என நினைவுகூரும் அதே நேரத்தில், அவர் தன் வாழ்வின் கடைசிக்காலம் வரை கறுப்பின அடிமைகளை வைத்திருந்தார் என்பதை மறக்கலாகாது என டிகாப்ரியோ சொல்கிறார். ஃபிலிப்பைன்ஸில் ரூஸ்வெல்ட் கட்டவிழ்த்த அரச பயங்கரவாதமும் பள்ளிகளில் கற்றுத்தரப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார். எதையும் கறுப்பு வெள்ளையாக அணுக முடியாது என்பதே கடந்தகாலம் எப்போதும் உணர்த்தும் பாடம். இங்கு யாரும் புனிதர்கள் அல்ல, அதீத வியந்தோதுதல்களுக்குத் தகுதியானவர்களும் அல்ல. பிறை நிலவைச் சூழ்ந்திருக்கும் இருள்போலக் கீழ்மையே உலகை ஆக்கிரமித்திருக்கிறது. நமக்குக் கிடைப்பதோ மெல்லிய வெளிச்சம். இன்றும் என்றும்.

பொற்காலம் என்கிற விஷயம் இருந்ததே இல்லை என்கிறார்கள். அதுவொரு அசட்டு நம்பிக்கை. ஆனால் அதற்காகச் சோர்ந்துவிடக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள். கடலில் நிலம் நகர்வதைப்போல மெல்ல மெல்ல முழுமையான விடுதலையை நோக்கி நாம் அடியெடுத்து வைத்தாக வேண்டும். இதில், அரசுத் தரப்பின் இரும்புப்பிடியைக் காட்டும்போதே போராளிக் குழுக்களின் தவறுகளையும் சேர்த்துச் சுட்டுகிறார்கள். ஓர் அப்பாவி சிவிலியனைக் கொன்றதும் படத்தின் நாயகி பெர்ஃபிடியா திடுக்கிடும் தருணம் ஒரு உதாரணம். அப்போதே அக்குறுங்குழுவின் வீழ்ச்சி தொடங்கிவிடுகிறது.

நாம் அரச புல்டோசர்களால் நசுக்கப்படுவோம் எனத் தெரிந்தும் புல் போல முளைத்துக்கொண்டே இருக்கவேண்டும். அதுவொன்றே அதிகாரத்துக்கு எதிராக அறைகூவல் விடுக்கும் வழிமுறை. ஆனால், படத்தில் இதெல்லாம் bleak-ஆக வெளிப்படாமல் மிக மேலோட்டமாகக் கடந்துசெல்கின்றன. டரண்டினோ படம் மாதிரி ஒருகட்டத்துக்கு மேல் மைண்ட்லெஸ் ஆக்‌ஷனாக இருக்கிறது. பால் தாமஸ் ஆண்டர்சனிடம் கூடுதலாக எதிர்பார்த்தேன் என்பதால் ஏமாற்றமே மிஞ்சியது.

இது அமெரிக்காவின் வரலாறு மட்டுமல்ல. உலகெங்கும் எப்படியோ பிற்போக்குக் கருத்தியல்கள் புதிய புதிய வடிவங்களை எடுத்து வேறு முகமூடிகளை மாட்டிக்கொள்கின்றன. அவற்றுக்கு பாலிஷான கொள்கை முலாம் பூசப்படுகிறது. அவற்றுக்கு எதிரான சவால்கள் எப்போதும் நீடித்திருக்கும். நம்மால் ஆவது, சளைக்காமல் போராடுவது ஒன்றே. என்றேனும் ஒருநாள் கடலைக் கடந்து இரு நிலங்கள் முட்டி ஒரு மாமலை எழுந்துவிடாதா என்ன!

No comments:

Post a Comment