மீள்!
தனி மனிதனுக்குள் தான் எத்தனை போராட்டங்கள்? அன்பு செலுத்துவதால் உளைச்சல்கள், அன்பு கிடைக்கவில்லை என ஏக்கங்கள்!
எத்தனை கிடைத்தாலும் இன்னும் ஏதோ ஒரு வெற்றிடம் ....பூர்த்தி செய்ய தேடல்கள்!
பேச நினைக்கும் சிலவற்றை பேசமுடியாமல் தனக்குள் முடங்கிக்கொள்ளும் வேதனைகள்!
கிடைத்ததை நிலைக்க வைக்க போராட்டங்கள்! எடுக்க வேண்டிய ஆயுதம் அமைதியும் அன்புமா, ஆக்ரோஷமும் வீச்சுமா என தெரியாமல் தவிக்கும் தவிப்புகள்!
உரிமைப் போராட்டங்கள், கடமைச் சுமைகள்!
உள்ளே குமுறி, வெளியில் புன்னகை பூக்க வேடம் தரிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள்!
அடுத்தவர் தேவை பூர்த்தி செய்ய, சமுதாயத்தில் தலைகுனிவு வராமல் இருக்க, தன் தேவை தவிர்த்து, சுயம் இழந்து நாட்களை கடத்த வேண்டிய நிர்பந்தங்கள்!
நிற்க....ஏன் இத்தனை போராட்டங்கள்?
நாம் வாங்கிய பொருளும் நமதில்லை, நாம் உறவாடும் மனிதர்களும் நம்மவர் இல்லை! பொருள்கள் வீணாகலாம், தொலையலாம். மனிதர்கள் வருவார்கள் போவார்கள். அன்புகள், அக்கரைகள் வரும் போகும். இது யார் தவறுமில்லை! இயற்கை!
அன்பு செலுத்துவோம், கடமைகள் ஆற்றுவோம், நிலைக்க வேண்டியவை நிலைக்கும், நிலைக்க வேண்டாதவை நகரும். மனம் முழுவதும் அன்பால் நிறைப்போம், நமக்கான அன்பு, பிறருக்கான அன்பு என!
மரங்கள் இலை உதிர கவலைப்படுவதில்லை....உதிரும் ஒவ்வோரு இலைக்கும் புதிய இலை தளிர் விடும். இலையுதிர் காலத்தில் அத்தனை இலைகளும் கொட்டி மரம் தனித்து நிற்கும். ஆனால் அப்பொழுதும் தன் கம்பீரம் தொலைப்பதில்லை! சுவாசிப்பை நிறுத்துவதில்லை! வீசும் காற்றை தடுப்பதில்லை! மழையில் நனைந்து சிலிர்க்க தவறுவதில்லை, சுட்டெரிக்கும் சூரியனை சந்திக்க பயம் கொள்வதில்லை!
வசந்தம் வரும், இலைகள் புதியதாக வந்து ஒட்டிக்கொள்ளும், பூக்கள், காய்கள் என குலுங்கும். இவையெல்லாம் தனித்து நிற்கையில் அது முடங்கி போய் இருந்தால் சாத்தியமாகாது.
மனிதன் மட்டும் ஏன் முடங்க வேண்டும்? இலையுதிர் காலமும், வசந்தமும் காலத்தின் கட்டாயங்கள். இயற்கையின் விதிகள். இயற்கையை மிஞ்சி எதுவும் உண்டோ? போக வேண்டிய உயிரை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து சோறிட முடியுமா? அனைத்துக் கதறினால் உயிரற்ற கைகள் நம்மை அனைத்து தேற்றுமா?
உயிரோடு நம்மை விட்டு போனால் என்ன, உயிர் துறந்து நம்மை விட்டு போனால் என்ன? நாம் நேசித்தவர் உயிர் போனால், நம் நேசம் இல்லையென்றாகி விடுமா? உயிரோடு நம்முடன் இருந்த உடல் நம்மை விட்டு விலகினால் என்ன நம் அன்பு இல்லையென்றாகி விடுமா?
உயிர் போன உடலை என்னுடன் தான் வைத்துக்கொள்வேன் என நினைத்து செயல் பட்டால், அழுகி புழுக்கள் நெளிந்து நாற்றமெடுக்காதா? அந்த நாற்றத்தில் நாம் வாழ முடியுமா? மூக்கை அழுத்திப்பிடித்தால் மூச்சுத்திணறல் ஏற்படாதா? அங்கிருந்து புழுக்கள் நகர்ந்து நம்மேல் படராதா?
மனம் விட்டுப்போன உறவுகளின் உடல்கள் மட்டும் நாம் பிடித்துவைத்தாலும் பலன்கள் இதுவே! மற்றவருக்கு நாற்றமடிக்காமல் இருக்கலாம். நமக்குள் நாறும் தானே?
மரத்தைப் போல் கம்பீரமாக நிற்போம். காலை இளஞ்சூரியனை வரவேற்போம், வெளியில் இதமாக வீசும் காற்றை நன்றாக உள்ளிழுத்து சுவாசிப்போம். வீறு நடை போட்டு கடமைகள் ஆற்றுவோம்.
இலையுதிர் காலங்கள் வரும், ஏன் இடையே புயல் காற்றுகள் கூட வீசும். அடித்துச்செல்லப்படாமல் இருக்கும் பட்சத்தில் வசந்தங்களும் மீண்டும் வரும். மனதை திறந்து வைப்போம், பார்வையை விசாலமாக வைப்போம், அன்பை நிறைத்து வைப்போம், இயற்கையை ஆசானாக கொள்வோம். அது நம்மை வழி நடத்தும் மண்ணில் புதையும் வினாடி வரை!
No comments:
Post a Comment