Sunday 29 October 2017

மனுஷ்

துயரத்திற்குள் நாம் எப்போதும் யாரிடமோ நீதிகேட்டுப் போராடிக்கொண்டே இருக்கிறோம். அது உங்கள் காதலை நிராகரித்த ஒருவராக இருக்கலாம். உங்களுக்கு துரோகம் செய்த ஒருவராக இருக்கலாம். உங்கள் வெற்றியைத் தட்டிப் பறித்த ஒருவராக இருக்கலாம். நீங்கள் எப்போதும் உங்கள் துயரத்தின் வழியே உங்களுக்கு நீதி கிடைக்குமென்று நம்புகிறீர்கள் அல்லது அந்தத் துயரம்தான், நீதிக்காக நீங்கள் நடத்துகிற போராட்டமாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால், உங்கள் குரல் உங்களுக்கேகூட சரியாகக் கேட்பதில்லை. உங்களது துயரத்தின் பனிப்பொழிவில், உங்கள் முகமே உங்களுக்குத் தெரிவதில்லை. துயரத்தின் வழியே நீங்கள் கேட்கும் நீதி என்பது, தண்ணீருக்கு அடியிலிருந்து பாடும் பாடலைப் போன்றது. அது தற்கொலை செய்துகொள்பவர்கள் கேட்கும் நீதியைப் போன்றது. இந்த உலகம் உங்கள் கண்ணீரைத் துடைக்க கரங்களை நீட்டாது என்பது மட்டுமல்ல, உங்களுக்கு ஒரு கைக்குட்டையைக் கூட தராது என்பதை நீங்கள் புரிந்துகொள்வதற்கு அதிக நேரமாகப் போவதில்லை..

- மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment