Saturday, 21 October 2017

ஈ நாடு

*ஈ நாடு*

அது ஈ நாடு

ஈக்களே அதிகமாக இருப்பதால் ஈ நாடு

ஈக்களுக்கு கழிவுகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

கழிவுகள் தங்கள் நாற்றத்தால் ஈக்களைக்
கவர்ந்து இழுக்கும்

எந்தக் கழிவில் நாற்றம் அதிகமோ
அந்தக் கழிவில் ஈக்கள் அதிகமாக மொய்க்கும்

எந்த இடத்துக் கழிவு என்பதைப் பொறுத்தும்
கழிவுகளுக்கு மவுசு உண்டு.

சில ஈக்கள் புத்திசாலிகள். எந்தக் கழிவுக்கு
மவுசு இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு
அங்கே போய் மொய்க்கும்.

சில ஈக்களுக்கு மந்தபுத்தி. எந்தக் கழிவுக்கு
மவுசு என்று சுயமாக கண்டுபிடிக்கத் தெரியாது.
அதனால் எங்கே கூட்டம் அதிகமாக இருக்கிறதோ
அங்கே போய் மொய்க்கும்.

சில ஈக்களுக்குச் சலனபுத்தி. ஆதாயம் எதில்
என்று தீர்மானிக்க முடியாமல் இந்தக் கழிவுக்கும்
அந்தக் கழிவுக்கும் தாவிக்கொண்டிருக்கும்.

கூட்டத்தைப்பொறுத்தும் கழிவுகளுக்கு
மவுசு கூடும்.

கழிவுகளுக்குள் போட்டி நடக்கும்.

கழிவுகளுக்காக ஈக்கள் சண்டை போடும்.

ஈ நாட்டிலும் பத்திரிக்கைகள் உண்டு. அவற்றில்
தேசிய ஏடுகளும் உண்டு.

தேசிய ஏடுகள் தேசிய கழிவை ஆதரிக்கும்.

நடுநிலை ஏடுகள் உண்டு. அவை கூலி
அதிகமாக கொடுக்கும் கழிவை ஆதரிக்கும்.

எந்தக்கழிவுக்குக் கும்பல் அதிகமாகச்
சேருகிறதோ அந்தக் கழிவுக்கத்தான் ஈ நாட்டில்
அதிகாரம் கிடைக்கும். அதற்கு ஈ நாயகம்
என்று பெயர்.

தங்கள் நாட்டில் ஈ நாயகம் இருப்பதில்
ஈக்களுக்கு ரொம்பப் பெருமை.

ஈ நாட்டில் கொஞ்சம் பூக்களும் உண்டு.
ஆனால் கழிவுகள் நாற்றத்தில் பூக்களின் வாசம் எடுபடுவதில்லை.

ஈ நாட்டில் கொஞ்சம் தேனீக்களும் உண்டு.
அவற்றிலும் சில தேனீக்கள் ஈக்கள்
ஆகிவிடும்.

தேனீக்கள் சிறுபான்மை, அதனால் ஈ நாட்டில்
ஆட்சி ஈக்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

தேனீக்களையும் ஈக்களே ஆளும்.

இதுதான் ஈ நாயகம். தங்கள் நாட்டில்
ஈ நாயகம் இருப்பதில் ஈக்களுக்கு ரொம்பப் பெருமை.

  *-அப்துல் ரகுமான்*

No comments:

Post a Comment