@மணி
கி.பி 15ம் நூற்றாண்டில் தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ்நாட்டிற்குள் புகுந்தது.அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காக கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டும் பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே கறி எனப் பின்னர் வழங்கப்பட்டது.
-தொ.பரமசிவன்
#அமுதசுரபி இதழில் (மே மாதம் - 1993)
24 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டு நூலகம் பகுதியில் இடம்பெற்ற நேர்காணல்
==================
முனைவர் ஔவை நடராசன்
-----------------
படிக்கவேண்டியவற்றைப் பதிவு செய்து கொண்டு கேட்பது நல்லதல்லவா?
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஔவை நடராசன் அவர்கள் இல்லம், இல்லத்தின் பெயர் ‘தாரகை’. அழகிய நாயின் படத்தை வரைந்த பலகையில் ‘விழிப்போடு வருக’ என்று எழுதப்பட்டுள்ளது. உள்ளே நுழைகிறோம்.
அதோ, அந்த மாடியில் உள்ள அறையைச் சுற்றிப் பார்க்கிறோம். நான்கு பக்கச்சுவர்களே தெரியாத வகையில், புத்தகங்களே காட்சி அளிக்கின்றன. இதேபோல, ஒவ்வோர் அறையிலும் புத்தகங்கள்.
இவரது வீட்டு நூலகத்தில் அனைத்துப் பொருள்களைப் பற்றியும் (Subjects) நூல்கள் உள்ளன. இவற்றுள் தத்துவம், ஆங்கிலம், தமிழ் இலக்கிய நூல்களே அதிகம். அந்த வகையில் சுமார் 3000 நூல்கள் இங்கே உள்ளன.
கவிஞர் முருகுசுந்தரம், ஒளவையைப் பற்றிக் குறிப்பிட்டபோது, "சங்க நூல்கள் முதல் சயன நூல்கள் வரை சரியாகப் படித்தவர்" என்று பாடியிருக்கிறார்.
இந்த நூலகத்தில் பொது அறிவு பயணக் கட்டுரைகளுக்கான பிரிவுகளும் உண்டு. இங்குள்ள நூல்களுள் 70 சதவிகிதம் அட்டை கிழிந்த, மேலட்டை அவிழ்ந்த பழைய புத்தகங்களேயாகும்.
"என்னுடைய துணைவியாரிடம், அண்மைக்காலத்தில் வெளிவந்த மருத்துவ நூல்கள் மிகுதியாக இருக்கும். பழைய மருத்துவ நூல்கள் இரண்டாண்டுக் காலத்தில் பயனை இழந்துவிடுமாம். ஆனால், என்னிடமோ பழைய நூல்களே அதிகம் இருக்கும்" என்று கூறும் துணைவேந்தர் அவர்கள், "புத்தகங்களைப் பாதுகாப்பது என்பது எளிதான செயல் அல்ல.
பொருள்வாரியாகப் பிரித்து வைக்கவும் நேரமில்லை, அவ்வாறு பிரித்து வைக்கவும் முடிவதில்லை. காரணம், நூல்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. வயதாக வயதாகச் சோர்வும் ஏற்படுகிறது" என்றார்.
"நான் படுக்கப் போகுமுன், குறைந்தது பத்துப் புத்தகங்களையாவது இன்று வரையில் எடுத்துக் கொண்டு போகிறேன். அப்போதுதான் எனக்குத் தூக்கமே வரும்" என்று கூறும்போதே, நாம் சுற்றும் முற்றும் பார்க்கிறோம். அவர் சொன்னது உண்மைதான் என்பதைப் புரிந்து கொள்கிறோம். ஆம் புத்தகங்கள் தலையணையைச் சுற்றி ஆங் காங்கே சிதறிக் கிடப்பதைப் பார்க்கிறோம்.
இவரிடமுள்ள பெரும்பாலான நூல்கள் அட்டை இல்லாமல்தான் இருக்கும். புத்தகம் கைக்குக் கிடைத்ததும், அதன் அட்டையை எடுத்து விடுவாராம். இவர் "இது என்னிடமுள்ள கெட்ட பழக்கம்" என்கிறார் இவர்.
இதுகுறித்துக் கவிஞர் முருகசரவணன் அவர்கள் கூறும்போது,
"அக்கால ஒளவைக்கும் அதுதான் பிடிக்கும். அதாவது, அதியமானின் படைக் கொட்டிலை ஒளவையார் பார்வையிட்டபோது, அங்கே உள்ள படைக்கலன்கள் எல்லாம் உடைந்தும் சிதைந்தும் கிடந்தனவாம். ஆனால் எதிர் மன்னனின் கொட்டிலில் உடைவாள்கள், வேல்கள் பலபலவெனக் காட்சியளித்தனவாம். அவையெல்லாம் போர் முகம் காணாதவை. போருக்குச் சென்றவையோ கூர் மழுங்கிக் காணப்படுமே அதைப்போல், இக்கால ஒளவை வீட்டிலுள்ள புத்தகங்கள் புத்தம் புதியதாக இல்லை படித்துப் படித்துப் பயன்படுத்தியதால் பழையதாகி விட்டிருப்பதை - பாழாகி நிற்பதைப் பார்க்கலாம்" என்பாராம்.
"யார் வீட்டுக்குப் போனாலும் அங்குள்ள புத்தகங்களைத் தான் முதலில் பார்க்கச் செல்வேன், நல்ல புத்தகங்களாய் இருந்தால், அவற்றைக் கேட்டுப் பெற்றுக் கொள்வேன். ஆனால், படித்துவிட்டு உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்க முயல்வேன்.
"தள்ளாத காலத்தில், தம்மிடமுள்ள நல்ல நூல்களை வேறு ஏதாவது நூலகத்துக்கு அனைவரும் தந்துவிடுவது நல்லது இல்லையென்றால், அதன் மதிப்பு தெரியாதவர்களால், அவை பிற்காலத்தில் பாழ் பட்டுப் போகும், எவருக்கும் பயன்படாமலும் போகும். ஆகவே, உயிரோடு இருக்கும்போதே வழங்குவது நல்லது. பழம்பெரும் நூல்களை, பெரிய நூலகங்களுக்குத் தந்து விடுவது நல்லது"
நூலின் அருமை தெரிந்தவர்கள் நூல்களைச் சேர்த்து வைக்கின்றார்கள். அவை சிறு நூலகமாகவே வீட்டில் உருவாகிவிடுகின்றன அவ்வாறு பல நூலகங்கள். பலருடைய இல்லங்களில் அமைந்துள்ளன. அம்மாதிரியான நூலகங்களில் இவரைக் கவர்ந்தது எவையெவை?.
மூதறிஞர் பள்ளியகரம் நீ.கந்தசாமி அவர்கள் தம் வீட்டில் வைத்திருந்த நூலகம். திருச்சிற்றம்பலம் அறிஞர் மு.அருணாசலம் அவர்களின் அழகிய நூலகம். இது எட்டடி உயர அலமாரிகளில் எழிலுற வைக்கப் பெற்றதாகும். வாகீசக் கலாநிதி கி.வா. ஜகந்நாதன் வீட்டு நூலகம் அரிய தொகுப்பாகும். அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வைத்துள்ள நூலகமும் சிறப்பான நூல்களைக் கொண்டதாகும். டாக்டர் சி.பா. அவர்கள் அருமையான நூலகம் வைத்திருக்கிறார். இவை தவிர, மறைமலையடிகள் நூலகம் நமக்குப் பெருமை சேர்க்கும் மாபெரும் நூலகமாகும்..
"சிலர் படிக்கும்போது, புத்தகங்களில் குறிப்பெழுதுவார்கள். முக்கியமானவற்றை அடிக்கோடிட்டு வைப்பார்கள். இந்தப் பழக்கம் எனக்கும் உண்டு. என் தந்தையார் படிக்கும்போது முக்கியமானவற்றைக் கோடு கிழிப்பார்கள். அது மட்டுமல்ல, ஏற்க முடியாது" - "என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? 'சபாஷ்' பலே! என்றெல்லாம் எழுதிவைப்பார்.
"நான் படிக்கும் விதமே தனி. சில புத்தகங்களை முதலிலிருந்து படிப்பேன் சில புத்தகங்களைக் கடைசியிலிருந்து படிக்க விரும்புவேன். வேடிக்கைதான்" என்று கூறும் துணைவேந்தர் அவர்கள், "படிக்கிற பழக்கம் வளர என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்ட போது, "எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த நூல்களிலிருந்து யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள், தேர்வுகள் இல்லை என்றாலே, படிக்கிற பழக்கம் தானாக வந்துவிடும்" என்றார் சிரித்துக் கொண்டே.
"தொலைக்காட்சி, வீடியோ, ஆடியோ வசதிகள் பெருகி வருவதால், புத்தகங்கள் வாங்குவது என்பது இயலாமற் போய்விடுகிறது. படிக்க வேண்டியவற்றை ஒலியிழைகளாக வெளியிட்டுப் பதிவு செய்வதைக் கேட்பது நல்ல கருத்து.
"என் தம்பி மெய்கண்டான் DM என்ற முதுகலை மருத்துவ நுணுக்கத் தேர்வில் முதலாவதாகத் தேறியவர். மதுரையிலிருந்து இராமநாதபுரத்துக்குக் கார் ஒட்டிச் செல்லும் இடைப்பட்ட தூரத்தில், தாம் படிக்க வேண்டியவற்றை ஒலியிழை வாயிலாகவே கேட்டுத் தேர்வு எழுதியவர். "இனிய இசையை ஒலிக்கச் செய்யும் கருவியைக் காதில் வைத்துக் கொண்டு கேட்டு மகிழ்வது போல, நல்ல உரை களையும் இவ்வாறு கேட்டு மகிழலாம்.
"கவிதைகளைக்கூட, நாம் அவற்றை எழுதிய கவிஞரின் குரலாலேயே கேட்பது இன்னும் சுவையாக இருக்கும் கவிஞர் வைரமுத்து இவ்வாறு தம் கவிதைகளைத் தாமே தம் குரலில் வழங்கியிருக்கிறார்" என்றார் துணைவேந்தர். "வீடு கட்டுவோர். வரைபடத்துக்கு விண்ணப்பிக்கும்போது, நூலகத்துக்கென்று அறை இருந்தால்தான் உரிமம் வழங்கப்படும் என்று ஒரு சட்டத்தையே கொண்டு வரலாம் என்று கூறும் இவர், இன்னொரு கருத்தையும் கூறினார்.
"புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவோர், புத்தக அலமாரியோடு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்". "ஐந்து மாடி அல்லது பத்து மாடிக் கட்டடத்தில் மின்னேணியில் லிஃப்ட்டில் சென்று கொண்டிருக்கிறோம். மின்னேணி திடீரென்று நின்று விடுகிறது. எப்போது அது இயங்குமோ தெரியாது. அந்த நிலையில் அந்த மின்னேணியில் நான்கைந்து நூல்கள் வைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? பொழுது போவதும் தெரியாது நூலைப் படித்த மாதிரியும் இருக்குமல்லவா? இதே போல இரயில், பேருந்து ஆகியவற்றிலும் சிறு நூலகத்தை வைக்கலாமே என்று கூறினாராம் நேரு. இந்த யோசனையையும் செயல்படுத்தலாமே!
"புத்தக அலமாரியில் நாம் தேடுகிற நேரத்தில், நாம் தேடுகிற புத்தகம் கிடைக்கவில்லை என்றால், அதைவிடத் துன்பம் உலகத்தில் வேறு எதுவும் கிடையாது" என்று கூறும் துணைவேந்தர் அவர்கள் ஒரு நல்ல புத்தகத்தைக் கையில் எடுத்தவுடனே, உடனடியாகத் தேவைப்படுவது எழுதுகோல்.
அதாவது,அதில் உள்ள நல்ல கருத்துகளை உடனே குறிப்பெடுத்துக் கொள்வதற்காக" என்று தம் அனுபவத்தைக் கூறுகிறார். டாக்டர் ஒளவை அவர்களின் வீட்டு நூலகத்தைவிட்டு வெளியே வருகிறோம். ஒரு முழுமையான புத்தக உலகத்தைவிட்டு வெளியே வருவது போன்ற பிரமை ஏற்படுகிறது.
- நேர்காணல் பி.வி. கிரி
No comments:
Post a Comment