வாசிப்பில் ஏற்படும் விரக்தி குறித்து எழுத்தாளர் பாவண்ணனிடம் கேட்டிருந்தேன்.அதற்கு அவர் அனுப்பிய பதில் இதோ..
அன்புள்ள மணிகண்டபிரபுவுக்கு..
பல காரணங்களால் இப்படிப்பட்ட விரக்திகள் நேர்வதுண்டு. குறிப்பிட்ட சிலவற்றை இப்படித் தொகுத்துக்கொள்ளலாம்.
1. பல துறைகள் சார்ந்து பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள நாம் ஒரே நேரத்தில் முனைவோம். ஆனால் நம்மிடம் அதற்கான நேரமோ, வாய்ப்போ கிடைப்பதில்லை. அந்த ஏக்கம் ஒரு தருணத்தில் விரக்தியாக மாறக்கூடும்.
2. வாசகனாகவும் செயல்பாட்டாளனாகவும் ஒருவர் செயல்படுகிறார் என வைத்துக்கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் செயல்பாட்டாளனாக வினையாற்றுவது என்பது கிட்டத்தட்ட தன் வாழ்வையே பிணையாக வைப்பதற்கு இணையானதாகும். ஒரு வாசகனாக நாம் கனவில் நினைத்திருக்கும் புத்தகத்தொகை அப்படியே நம் கண்முன்னால் ஒரு மலைபோலக் குவிந்திருக்கும். செயல்பாடுகள் நம்மை வேறொரு திசையில் இழுத்துச் செல்லும். இந்த இழுபறியில் எதார்த்தத்தில் நாம் நம்முடைய கனவிலிருந்தே விலகிவிலகிச் செல்வோம். இந்த விலகலும் ஒரு தருணத்தில் விரக்தியாக மாறக்கூடும்.
3. நடைமுறையில் நம் ஐயங்களை தீர்த்துக்கொள்ள சரியான ஒரு நட்பு அமையாத நிலையில் ஒரு சலிப்பு சில சமயங்களில் நேரலாம். இந்தச் சலிப்பும் ஒருவகை விரக்திக்கு வழிவகுத்துவிடும்.
4. காரணமே இல்லாமல் , வாழ்வில் நாம் சந்திக்கும் சில நடைமுறைச் சலிப்புகள் கூட ஒரு சோர்வையூட்டி விரக்தி கொள்ள வைக்கும்.
இது அனைவருக்கும் நிகழ்வதுதான். சோர்வுற வேண்டாம்.
இந்த மாதிரி தருணங்களில் நாம், சற்றே ஓய்வுகொள்வதுதான் நல்லது.
ஒரு பெரிய நடை, அல்லது ஒரு சிறிய பயணம் அல்லது ஒரு திரைப்படம் அல்லது மனத்துக்குப் பிடித்தவரோடு நீண்ட ஒரு உரையாடல் நிகழ்த்துவது என ஏதேனும் ஒன்றைச் செய்து நம்மை நாமே மீட்டெடுத்துக்கொள்ளலாம்.
இன்னொரு வழியும் இருக்கிறது. புதினங்களை மட்டுமே தொடர்ந்து படிக்காமல் மிக எளிய ஒரு பயண நூலை எடுத்து ஒரு மாறுதலுக்காகப் படிக்கலாம். அல்லது நிலவியல் தொடர்பான அல்லது வரலாறு தொடர்பான ஒரு நூலை மாற்றிமாற்றிப் படிக்கலாம்.
எக்காரணத்தை முன்னிட்டும் வாசிப்பை நிறுத்திவிடக்கூடாது. நம்மை பின்னால் இழுக்கக்கூடிய காரியங்களே ஒவ்வொன்றாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நம்மை முன்னோக்கிச் செலுத்தி நிலைபெற உதவும் ஒரே விசை வாசிப்பு மட்டுமே. அதை இழந்தால் நாம் பார்வையற்றவர்களாகிவிடுவோம்.
ஒருநாளும் திரும்பிப் பார்க்கவேண்டாம். முன்னோக்கி நடந்துகொண்டே இருங்கள்
அன்புடன்
பாவண்ணன்
No comments:
Post a Comment