Sunday, 29 October 2017

எளியது-மணிகண்டபிரபு

எளியது

ஓய்வு நேரத்தில்
உயிரூட்டிய செல்பேசியில்
வந்துவிழும் குப்பைகளை
விரல்களால் தடுக்கமுடியாமலும்

அப்போதுதான் அறிந்த
புதிரின் பதிலை
ஆயுளின் துவக்கத்தில்
அறிந்தது போல்
காட்டிக் கொள்வதும்

வந்த தகவலையெல்லாம்
அமிழ்த்திப் பிடித்து
அடுத்தவருக்கு அனுப்பி
அப்டேட்டாக இருப்பதும்

கருத்துச் சொல்லும் பெயரில்
காதினை நுழைக்காமல்
மூக்கினை நுழைத்து
மாட்டிக்கொள்வதும்

குறைந்து போன
செல்போன் சார்ஜினால்
கடந்துபோகும் செய்தியினை
தவறவிட்ட பதைபதைப்பும்
படபடப்பும் எப்போதும்

இது ஏதுமற்ற
இயல்பான நிலையில்
இருந்தான் ஒருவன்
சாதாரண செல்பேசியோடு.."!

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment