*தமிழ் எழுத்தாளன்*
என்னுடைய அய்யா ஒரு கூத்துக் கலைஞர். இராமாயணக் கும்மி ஆடுவதில் அவர் ஹீரோ. இராமர் வேஷம் போடுவார். நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போதே என்னைத் தூக்கிக்கொண்டு போய்க் கூத்து நடக்கும் இடத்தில் உட்காரவைத்திருப்பார். மற்ற கலைஞர்கள் ஆடும்போது என் அப்பா சொல்லிக்கொடுப்பார். கூத்து ஆட்டம் சம்பந்தமான என் அப்பாவுடைய ஆர்வத்தின் விளைவாகத்தான் எனக்கும் வாசிப்பின்மீது ஆர்வம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
எல்லோரையும் போலப் பள்ளிக்குப் போகும்போது டீக்கடையில் தினத்தந்தி பேப்பரில் சிந்துபாத் கதை படிக்க ஆரம்பித்ததில்தான் தொடங்கியது. எனக்கு அதில் சலிப்புத் தட்டியபோது வேறொன்றைத் தேடிப் போக ஆரம்பித்தேன். இந்த இந்தப் புத்தகங்களைப் படி என்று சொல்வதற்கும், வழிகாட்டுவதற்கும் சரியான ஆள் யாரும் இருக்கவில்லை. இதில் என்னுடைய பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால் என்னுடைய தாய் மாமாதான் பூமணி. அவர் ஒரு எழுத்தாளர் என்பது எனக்குத் தெரியாது. நான் எழுத்து ஆர்வமுள்ளவன் என்பது அவருக்குத் தெரியாது. அவர் வேறு ஊர். நான் வேறு ஊர்.....
ஆரம்பக் காலத்தில் கி.ரா., பூமணி, பா. ஜெயப்பிரகாசம் ஆகியோர் எனக்கு முன்னோடியாக இருந்தார்கள். தினமணி கதிரில் 'முதல் பிரசவம்' எழுதியபோதுகூட இதைப் பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் இப்போது அவர்களை நெருங்கிவிட்டேன். அவர்கள் தோளில் கைபோடுகிற அளவுக்கு வந்துவிட்டேன். ஆனால் அழகிரிசாமிக்கு அருகில் போகும்போது என்னை பஸ்பமாக்குகிறார் என்று சொன்னேன். அவர் இன்னும் அண்ணாந்து பார்க்கிறளவுக்குப் பரண்மேல் இருக்கிறார். நான் தரையில் நின்று அவரைப் பார்க்கிறேன். அவருடைய கதைகள் எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே இருக்கின்றன. அவருடைய எளிமை, அவர் சொல்ல வரக்கூடிய விஷயங்கள் ஆகியவற்றை என்னால் எட்ட முடியவில்லை. நான் முயற்சி செய்து தோற்றிருக்கிறேன்.
- சோ. தர்மன் (சிபிச்செல்வனுடனான நேர்காணலில்)
No comments:
Post a Comment