Sunday 29 October 2017

சதிஷ்

*புரிந்துகொள்பவராக இருப்பது தொடர்பாக*

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவருக்கு
ஒவ்வொரு நாடகத்திலும் கடைசி இருக்கைதான் ஒதுக்கப்படுகிறது

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவர்
ஒவ்வொரு விவாதத்திலும் கடைசியாக தன் தோல்வியை
மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறார்

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவர்
ஒருவர் தாமதமாக வருவதைப்புரிந்து கொள்கிறார்
ஒருவர் சீக்கிரமாக வருவதைப்புரிந்து கொள்கிறார்
ஒருவர் வராமலேயே இருப்பதையும் புரிந்துகொள்கிறார்
அவர் ஒவ்வொருவருக்கும் எல்லையற்ற தேர்வுகளை அளிக்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவர்கள்
தன் கைகளை
உங்கள் மேசை மேல் வைக்கிறார்
நீங்கள் அதன் அன்பின் மிகுதியால் ஒரு சுத்தியால் அடிக்கிறீர்கள்
அது அவரால் புரிந்து கொள்ளப்படுகிறது
வலியைப்புரிந்துகொள்தல் பற்றி அவருக்கு சில தீர்க்கமான புரிதல்கள் இருக்கின்றன.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவருக்கு
ஒரு சிறு உதவி தேவைப்படுகிறது
அது நிர்த்தாட்சணமாக் மறுக்கப்படுகிறது
ஒரு மறுப்பு என்பது எப்போதும் புரிந்துகொள்வதற்கானது
என்பதில் அவர் நிச்சயத்தோடு இருக்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவரால்
தனக்கு ஏன் ஒரு விலையுயர்ந்த பரிசு தரப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளமுடிவதில்லை என்றபோதும் அதற்குத்தான் தரவேண்டிய  விலையை அவர் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவர்
ஒரு அந்தரங்கமான தருணத்தில்
ஒரு அந்தரங்கமான உணர்ச்சியால் அவமதிக்கப்படுகிறார்
அதைப் புரிந்து கொள்வது அவ்வளவு புதிரானது
அவ்வளவு கடினமானது
ஆயினும் அவர் அதனைப் புரிந்து கொண்டவராகவே புன்னகை செய்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவரிடமிருந்து
எதையும் மறைக்க வேண்டியிருப்பதில்லை
எதற்காகப்பயப்பட வேண்டியதுமில்லை
ஒரு மெழுகு பொம்மையிடம் ஒரு சுரோவியத்திடம்  பாதுகாப்பாக இருப்பது போல் நாம் அவரிடம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவரை
எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஒரு பட்டியலில் இருந்து நீக்கலாம்
ஒரு பட்டியலில் சேர்க்கலாம்
அவருக்கு ஒரு பட்டியலைப் புரிந்துகொள்வதைப்போல சுலபமானது வேறு எதுவுமில்லை.

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவர்
உங்களுக்கு எவ்வளவோ சுதந்திரம் தருகிறார்
அவர் நீங்கள் எப்படி வளர்ந்தீர்களோ அப்படியே இருக்கவிடுகிறார்
நீங்கள் எதையுமே புரிந்துகொள்ளாதவராக இருப்பதன் மீது அவர் எந்தப்புகாருமற்று இருக்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவரைத்தான்
இன்னும் கொஞ்சம் புரிந்துகொள்ளும்படி வற்புறுத்துகின்றோம்
அவர் எப்போதும் புரிந்துகொள்பவராக இருப்பது குறித்து சில நேரம் களைத்துப்போகிறார்
அப்போது புரிந்து கொள்பவராக இருப்பதன் உன்னதம் பற்றி
அவருக்கு மேலும் கற்றுத்தருகிறோம்.

-மனுஷ்யபுத்திரன்

No comments:

Post a Comment