Sunday, 29 October 2017

தங்கத்தின் பதிவு

*சமைக்காமல் சும்மா சாப்பிட்ட மட்டும் செய்கிற ஆண்களாகிய நம்மை "சாப்பாட்டு ராமன்" என்று சொல்வதில் தர்க்க ரீதியாக யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது.*

*கிராமத்தில் வாழ்ந்த நாட்களில் தரையோடு தரையாக பதிக்கப்பட்டிருக்கும் எங்கள் வீட்டு அடுப்பின் முன்னால் ஒரு பலகையைப் போட்டு அதன் மீது எங்கள் வீட்டு பாட்டி அமர்ந்து விறகை உள்ளே தள்ளிக்கொண்டும் 'சிம்' வேண்டுமானால் விறகை வெளியே இழுத்து விட்டுக்கொண்டும் சரியாக எரியவில்லை என்றால் ஊதுகுழலால் ப்பூ... ப்பூ... என்று ஊதிக்கொண்டும் அமர்ந்திருக்கும் அந்த அழியாச் சித்திரம். கனத்த சரீரம் அவளுக்கு, சட்டை போடும் பழக்கமில்லாத காலத்தைச் சேர்ந்தவள். நரைத்துக்கொண்டிருந்த வளமான தலைமுடியைக் கொண்டைபோட்டிருப்பாள். நிதானமாக இருந்து சமைப்பாள். அவள் வைத்தது போல ஒருநாளாவது வாழைக்காய்ப் பொறியல் வைத்துவிட வேண்டும் என நானும் பலமுறை முயன்றும் தோற்றுத்தான் போயிருக்கிறேன். ஈரப்பிசுபிசுப்பு கொஞ்சமும் இல்லாத எண்ணெயின் பளபளப்பு சற்றும் தெரியாத, இப்போதெல்லாம் தொலைக்காட்சிச் சமையல்களில் சொல்கிறார்களே 'க்ரிஸ்ப்பி' யாக என்று அதற்குச் சரியான உதாரணம் என் பாட்டியின் வாழைக்காய் பொரியலும் அதைவிடப் பிரமாதமான வெண்டைக்காய்ப் பொரியலும்தான். க்ரிஸ்ப்பி என்கிற வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு பருத்த எங்கள் பாட்டியின் உடம்பும் அவளுடைய வாசனையும்கூட ஞாபகம் வந்து சில சமயம் கண்ணீர்கூட வந்துவிடும்.*

  -ச.தமிழ்ச்செல்வன்
(ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்) நூலில் இருந்து.

No comments:

Post a Comment