நன்றி:திரு ரஞ்சித்
தேர்ச்சிபெற்ற தொடர் வாசிப்பின் இயலாமையும், எளிதில் நுணுக்கங்களை புரிந்து கொள்ளும் போதிய பயிற்சின்மையும், ஒரு சமயம் ஆழ்ந்த அமைதியிலும், ஒரு சமயம் எழுச்சி மிகுந்தும், ஒரு சமயம் பின்னல் பின்னலாக முடிச்சுகள் போட்டபடியிலுமாக செல்லும் ஒரே பத்தியிலோ அல்லது ஒரு பக்கத்திலோ, என்னை மீறிச் சென்று விட்ட உணர்ச்சியின் அல்லது பிரக்ஞையின் பிடியை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வருவதிலும், மீண்டும் தொடரும் முன் அதுவரை வாசிக்கப்பட்டதன் பாதிப்பை அசைபோடுவதிலும், இளைப்பாறுவதிலும் வாசித்ததை மீண்டும் பின்னே புரட்டி வாசிப்பதிலும் மெல்ல தாமத நடை போடும் வேகம் என்றுமே அதிருப்தியளித்ததோ, அல்லது ஒரே மூச்சில் 400 பக்கம் 500 பக்கம் வாசித்து விடும் மேதாவிகளின் மீது பொறாமையளித்ததோ இல்லை.
மாறாக, உணர்ந்துவிட்ட இனிப்பின் சுவை உடனே சலித்தோ, அல்லது வேறொன்றுக்கோ தாவிச்சென்று விடும் சுவாரஸ்யமின்மையை போக்கி, அயற்சியால் விட்டுக்கொடுத்துவிட முடியாத பிடிமானத்தையும், மெல்ல மெல்ல துலங்க வைக்கும் தொடர் தேடலையும் விழிப்பையும் தக்க வைக்கும், எட்டியதின் பரவசத்தை முழுமையாகவும் உணர வைக்கும் இந்த நிலையான இயலாமையும் நிச்சயம் தேவைப்படுகிறது.
ஒருவேளை, ஒரேநாளில் ஒரு புத்தகத்தை முடித்துவிடும் பயிற்சியில் தேர்ச்சி பெற்றாலும், சுயமான அங்கீகரிப்பில் முழுதிருப்தியுடன் ஏற்றுக்கொண்டும், ஆரம்ப நிலையின் கட்டுக்கோப்பின்மையைக் கேலி செய்யாமலும், அப்போதும் எனக்கு முன்னால் இருக்கும் சான்றோர்களின் புலமையில் எள்ளளவும் பொறாமைப்படாமலும் தொடர்வதற்கு, நகர்ந்து செல்லும் எந்த வொரு புள்ளிக்கும் எந்த காலத்திலும் அதற்கான, பின்னோக்கிச் செல்ல முடியாத, முடிவில்லாத, எட்டவே முடியாத இறந்தகாலமும், எதிர்காலமும் ஒருசேர இருக்கவே செய்யும் என்ற நடுநிலைத்தன்மையுடன் வைத்திருக்கும் எளிமையான தெளிவு எப்போதும் இருக்கிறது.
No comments:
Post a Comment