*விறையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகய
'நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்' என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம! நாணுதும், நும்மொடு நகய
விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே!
-நற்றிணை
*தலைவி தவைனிடம் கூறுகிறாள்*
*புன்னைக் காய்களைக் கொண்டு மணலில் அழுத்தி விளையாடிக் கொண்டிருந்தோம்*
*மணலில் அழுத்திய புன்னைக் காய்களில் ஒன்றை எடுக்க மறந்து போனோம்*
*அந்த புன்னைக் காய் முளைவிட்டு வளர்ந்தது. நாங்கள் அதை நீர் விட்டு வளர்த்தோம்*
*அதனை கண்ட எம் அன்னை 'நீ வளர்த்த இம்மரம் உனக்குத் தங்கை போன்றது' என்று கூறினாள்*
*ஆகையால், தலைவனே இப்புன்னை மரத்தின் நிழலடியில் உன்னோடு காதல் கொண்டு, நகைத்து விளையாடி இன்புறுவதற்கு, நாணம் அடைகிறேன்*
*தான் வளர்த்த மரத்தை தன் உடன் பிறப்பாக எண்ணும், உயர்ந்த பண்பாட்டுக்கு உரியவர்கள் நாம் என்பதை மெல்ல மெல்ல மறந்து கொண்டிருக்கிறோம்*
No comments:
Post a Comment