22.09.2017
பதிவு - 51
நூலிலிருந்து நெசவு
*நாஞ்சில் நாடன்*-2
மிகவும் சமூக அக்கறையோடு தன்னுடைய கட்டுரைகளில் கோபம் கொப்பளிக்க வார்த்தைகளை உபயோகப்படுத்தும் திரு. நாஞ்சில் நாடன், தன்னுடைய ஆரம்ப கால சிறுகதையை ஒரு இலக்கிய நண்பர் ஒருவரிடம் காண்பித்த போது, அவர் இப்படி கூறினாராம். " It is not better than toilet paper". அது என்னை மிகவும் ஊக்குவித்தது, என்று நாடன் அதை மிகச்சுலபமாக எடுத்துக்கொண்டதாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். பின்னாளில் இவர்தான் "சாகித்ய அகாடமி" விருது வாங்கினார். இதில் நாம் தெரிந்து கொள்வது, விமரிசனங்கள் எப்படி இருந்தாலும் அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே நம் முன்னேற்றத்துக்கான விதை!
30 கவிதைகளையும், 50 சிறுகதைகளையும், ஆறு நாவல்களையும், பல கட்டுரை தொகுப்புக்களையும் எழுதிய இவர் தனது நோக்கமாக கூறுவது "அதிக எண்ணிக்கை என்பது முக்கியமல்ல; ஐம்பது ஆண்டுகளாவது வாழ்ந்திருக்கக்கூடிய படைப்புக்களை படைப்பது" என்பதுவே என்கிறார்.
மேலும் கூறுகையில், எல்லா கலைகளுக்கும் ஒரு நோக்கம் உண்டு. சமுதாய சீர்கேடுகளை களைய, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, சக மனிதனை புரிந்து கொள்ள, மேம்படுத்த, சகல ஜீவராசிகளையும் நேசிக்க என்ற கணக்கற்ற நோக்கங்கள் உண்டு. அதை தேடி புரிந்து கொள்வதும், தேடி கண்டடைவதும் வாசகன் ஒவ்வொருவருடைய கடமை என்கிறார். சீரிய கருத்து!
அருள், இரக்கம், கொடைத்தன்மை, பண்பு நயம், சகமனிதனை நேயத்துடன் நோக்கும் போக்கு இவையெல்லாம் இவர் கதைகளில் வெளிப்படும் அம்சங்கள். இவைகளை பெற்றுணர்வதற்கே நாம் புத்தகங்களை படிக்க வேண்டும்.
*இலக்கிய உலகம்*
இவருடைய படைப்புகளை படிக்கும் போதும், குறிப்பாக, இவரது நேர்காணலில் இவர் குறிப்பிடும் எழுத்தாளர்களின் வரிசையும் என்னை ஓர் ஆழ்ந்த ஏக்க நிலைக்கு கொண்டு செல்வதை உணர்ந்திருக்கிறேன். கவிஞர் கலைக்கூத்தன், வண்ணதாசன், தீபம் நா. பார்த்தசாரதி, புதுமைப்பித்தன், நீல.பத்மநாபன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஆ.மாதவன், லா.சா.ரா, தி.ஜானகிராமன், கு.ப.ராஜகோபாலன், கி.ராஜநாராயணன், தோப்பில் முகமது மீரான், ஜெயமோகன், க.நா.சு, வெங்கட் சுப்ரமணியம், நகுலன், தி.க.சி, வல்லிக்கண்ணன், ஞானி போன்ற தமிழ் எழுத்தாளர்கள் வரிசையைப் பற்றியும், அவர்களிடம் இவர் கண்டு கொண்டது, கற்றுக்கொண்டது என தமிழ் எழுத்து வரலாற்றை ஒரு ரீவைண்ட் செய்து பார்ப்பது போல ஒரு உணர்வு இவரின் பேச்சில் இருக்கிறது. அப்போதுதான் புரிகிறது நமக்கு ஒன்றுமே தெரியவில்லையே! நாம் இன்னும் ஒன்றுமே படிக்கவில்லையே! நமக்கு, இன்னும் நிறைய படிக்க வேண்டிய எழுத்துக்கள் ஏராளம் இருக்கிறதே! என்ற ஏக்கப்பெருமூச்சு எமக்கு வருவதை நன்றாகவே உணர முடிகிறது. வாழ்வது ஒரு முறை. வாழப்போகும் நாட்கள் பனிக்கட்டி போல கரைந்து கொண்டே போகிறது. படிக்க வேண்டியது இன்னும் மலை போல குவிந்து வா, வா, எங்களை எடுத்துப் பருகு என அன்போடு அழைக்கிறது.
ஒரு ஸ்பெஷல் மிக்ஸி கண்டுபிடித்து, எல்லா நூல்களையும் ஒட்டு மொத்தமாக போட்டு அரைத்து அப்படியே குடித்து விடும் வசதி இருந்தால் எப்படி இருக்கும் என மனம் கண்டபடி யோசிக்கிறது!
*சிறுகதை Vs நாவல்*
பலரது சிறுகதை, மற்றும் நாவல் இவற்றை நீங்களும் நிறைய படித்திருப்பீர்கள், நண்பர்களே!
இவை இரண்டுக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம் என்பதை நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா?
பல நாட்களாக ஒரு வேட்கையில் தெரிந்து கொள்ள தேடிக்கொண்டு இருந்த நான் இவரின் "நேர்காணல்கள்" என்ற புத்தகத்தில் விடை கண்டுபிடித்தேன். நாஞ்சில்நாடன் கொடுக்கும் விளக்கம், சிறுகதை என்பது, "ஒரு மாட்டைப் புல்வெளியில் ஒரு முளையில் கட்டி வைப்பது போல. அது மேய்வதற்கான இடம் தீர்மானிக்கபட்டது". நாவல் என்பது "கட்டப்படாத மாட்டைப்போல. அதற்கென்று ஒரு எல்லை கிடையாது. அது சுதந்திரமான களம். நீங்கள் எதைப்பற்றியும் பேசலாம்", என்கிறார்.
*முயற்சி திருவினையாக்கும்*
சங்க இலக்கியங்களில் மிகுந்த ஞானம் உள்ள நாடன், சங்க இலக்கிய கவிதையிலிருந்து ஒரு மேற்கோளை வைக்கிறார்.
" கோப்பெருஞ்சோழனின் யானையைப் பற்றி முத்தொள்ளாயிரத்தில் ஒரு கவிதை இருக்கிறது. பகை மன்னனின் வெண்கொற்றைக் குடையையெல்லாம் பட்டத்து யானை பிடுங்கி எறிந்து கொண்டிருந்ததாம். நிலாவும் கிட்டத்தட்ட அந்த வெண்கொற்றக்குடை மாதிரி இருந்ததால் அதையும் பிடுங்கி எறிய தன் தும்பிக்கையை சந்திரனை நோக்கி வானத்தில் நீட்டியதாம். அது போலத்தான் முயற்சி செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. 'வானத்தைக் குறி வைத்தால்தான் பாட்டி மூக்கையாவது தொட முடியும்'. முயற்சி திருவினையாக்கும் என்பதை இவ்வளவு எளிமையாகவும், இலக்கியத்தரமாகவும் வெளிப்படுத்தவல்ல திறமையான எழுத்து நாயகர் நாஞ்சில்நாடன். இப்படி கூறும் இவர் எழுதிய இன்னொரு நூல் "கைம்மண் அளவு", என்ற கட்டுரைத் தொகுப்பு. இவர் கற்றுக்கொண்டதே கைம்மண் என்றால் நாமெல்லாம் எங்கே நிற்பது. அடக்கம் மனிதனை மாமனிதன் ஆக்கும்! மாமனிதர் நாஞ்சில் நாடனின் 'கைம்மண் அளவு' எவ்வளவு என நாளை வாசிப்போம்.
அன்புடன்,
நாகா.
22.09.2017
No comments:
Post a Comment