Thursday, 31 July 2025

141


#கற்கை_நன்றே_141

நாம் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் அடையலாம். அதை அடையும் வரை விடாது முயற்சி செய்தால்

-ஹெலன் கெல்லர்

ஒரு ஜென் குரு ஆசிரமத்தில் செடிகளுக்கு நீர் நிரப்ப சீடனை பணித்தார். அவனும் இரு வாளிகளில் கொண்டுவந்து.. நீர் நிரப்பிய பின்பும் அதில் சிறிது நீர் இருந்தது.அதனை அருகில் விசிறியடித்தான்.அப்போது பின்னாலிருந்து குரு முதுகில் ஒரு அடி போட்டார்.கோபத்துடன் குருவிடம் நான் இந்த சிறிதளவு தண்ணீர் ஊற்றாததால் செடி பெரிதாக வளருமா? என்றார்..

குரு சொன்னார்.. நான் உன்னை அடித்தது செடியின் வளர்ச்சிக்காக அல்ல..உன்னுடைய வளர்ச்சியை மனதில் வைத்துதான்.சிறிதளவு நீரைக் கூட வீணாக்கும் நீ.. நாளை சிறு காரியத்திலும் கவனமின்றி வீணடித்துவிடுவாய்.எந்த ஒரு சிறியதையும் முக்கியமானது போல் நினை என்றார்.

நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு, அல்லது மூன்று சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்திருப்பீர்கள். 

மற்றச் செயல்கள் எல்லாம் கவனமின்றி, உங்கள் மனம் ஒருமுகப்படாமல் செய்யப்பட்டவையாக இருக்கும். வேலை மும்முரத்தில் இருப்பதை விட குருட்டுச் சிந்தனையில் இருக்கும் நேரமே அதிகம் என்கிறார்கள். 

மனித மனம் மிகப் பெரும் சக்தி வாய்ந்தது. அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டு விட்டீர்களென்றால், அற்புதமான பல செயல்களைப் புரிவீர்கள். நேரம் என்பது இரண்டாம் பட்சம்தான். இப்போது கிடைக்கும் நேரத்தின் பெரும்பகுதியில் என்ன செய்கிறோம் என்பதையே உணராமல் செய்து கொண்டிருப்பதால் சரியான பலனின்றிப் போகிறது.

ஆண்ட்ரூ கார்னகி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருந்தவர். அவர் மிகக் குறுகிய காலத்தில் பணக்காரரானது அமெரிக்க அரசுக்கு சந்தேகத்தை உண்டு பணணியது.புலன் விசாரணைகள் நடத்தியும் அவர்களால் குற்றங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை நேரடியாகச் சந்தித்தனர். எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் சேர்த்தீர்கள்? என்று கேட்டனர்.கார்னகி சொன்னார், என்னால் தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தி வைத்திருக்க முடியும். உங்களால் முடியுமா என்றுபாருங்கள்!
அவர்கள் முயற்சி செய்தார்கள், தோற்றுப் போனார்கள்.

கார்னகி சொன்னார் ,உங்களால் ஐந்து நிமிடம் கூட மனதை ஒருமுகப்படுத்தி வைக்க முடியவில்லை.நீங்கள் சொன்னதிலிருந்து தவறாமல், முழுமையாகச் செயல்பட உங்கள் மனதைத் தயார்ப்படுத்திவிட்டால், எந்தத் தொழிலையும் எந்த சிரமும் இல்லாமல், மிக எளிதாக செய்து முடிக்க இயலும் என்றார்.

ஒளியிலிருந்து கற்றுக்கொள்ள 
எதுவும் இல்லை.
எல்லாவற்றையும் ஒளி
இருளிடமிருந்துதான்
கற்றுக்கொண்டிருக்கிறது என்பார்
வண்ணதாசன்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 30 July 2025

140


கற்கை_நன்றே_140

மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை, நீங்கள் அவனுக்கு காட்டினால், அவன் மேம்படுவான்

-ஆண்டன் செகாவ்

நாம் எல்லாரும் மிகவும் நல்லவர்களே பொதுவெளியில்.. ஆனால் உள்ளுக்குள் ஒரு சிங்கமோ நரியோ உறங்கிக் கொண்டிருக்கும். மு.வ வின் நாவலில்.ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள தோழியை வற்புறுத்துவாள். அதற்கு அப்பெண்.. நாம் ஒருவரை பார்த்து பேசுவது ஓரிரு நிமிடமோ, ஒரு நாள் என்பது மட்டும்தான். அதில் நான் நல்லவள் போல் நடப்பேன்.. இனிமையாக பேசுவேன். ஆனால் அது என் வாழ்நாளெல்லாம் தொடர் முடியுமா? என்பாள்.அது போல் திருமணத்தில் நடிக்க முடியாது என்பாள். இது தான் உளவியல் உண்மை. ஆனால் முயற்சித்தால் இது முடியும் அல்லவா!

ஏன் தீமை என்ற ஒன்று இருக்கிறது? ஏன் மக்கள் சுயநலமாக இருக்கிறார்கள்? ஏன் அநீதி வெல்கிறது? இவை எல்லாம் தவறான கேள்விகள். தீமை, குற்றம், அநீதி. இதுதான் உலகின் இயற்கை நிலை. நன்மை, நீதி, தருமம், ஒழுக்கம், நேர்மை. இவை எல்லாம் கற்பிக்கப்பட்டவை. அதனால்தான் அரிதாகக் காணக்கூடியவையாக உள்ளன. 

நாம் உண்மையில் கேட்கவேண்டிய கேள்வி ‘ஏன் நன்மையும் நீதியும் இன்னமும் இருக்கின்றன?’ என்பதே. நன்றாகப் பயிற்சி கொடுக்கப்பட்ட வீட்டு நாய் ஆபத்து என வந்தால் வளர்த்தவனைக்கூடக் கடிக்கும். உணர்ச்சிவசப்பட்ட சூழலில், கூட்டமாக இருக்கும் சூழலில், கோபமாக இருக்கும் சூழலில் கற்பிக்கப்பட்ட ஒழுக்கங்கள் காற்றில் பறந்து, நம் மிருக உணர்வுகளே ஆதிக்கம் செலுத்தும். அப்போது வருந்தத்தக்க செயல்களைச் செய்வோம். 

உணர்வு நம் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர் ‘ஏன் அப்படிச் செய்தோம்’ என வருந்துவோம். இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையே இடைவிடாது நடக்கும் போராட்டம் இது. கெட்ட செயல்களைச் செய்ய யாரும் யாருக்கும் கற்பிக்கவேண்டிய அவசியமே இல்லை. 

பிறப்பில் இயற்கை தானாகக் கற்பித்துவிடும். ஆனால் நல்ல செயல்களை, நல்ல வழக்கங்களைக் கற்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். போதனை செய்துகொண்டே இருக்கவேண்டும். ஒரே ஒரு தலைமுறைக்கு அதைச் சரியாகச் சொல்லிக் கொடுக்கத் தவறினாலும்கூட சங்கிலித்தொடர் அறுந்துவிடும்.

உலகில் தீமை செழித்து வளர என்ன செய்ய வேண்டும்?

நல்லவர்கள் எல்லோரும் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்தாலே போதும். பூனை வளர்க்காதது எலிகளை வளர்ப்பதற்குச் சமமாகும்.
எனும் பொன்மொழி.

ஆகவே நல்லவைகளை நமக்குள்ளேயே வளர்த்தெடுக்க முயல வேண்டும்.அது காலம் எடுக்கும் ஆனாலும் நல்ல பண்பு என்பதால் முயற்சித்துப் பெறுவோம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

96


#Reading_Marathon2025
#25RM055

Book No:96/100+
Pages:-206

நிறை செம்பு
நீரில் விழும் பூக்கள்
-கழனியூரன்

கிராமிய எழுத்துக்களையோ நாட்டார் வாழ்வியல் குறித்த செய்திகளை படிக்கும் போது நம்மளுக்கு வாசிப்பு அனுபவத்தோடு ஆச்சரியமும் ஏற்படுகிறது நாம் பார்க்கத் தவறிய அல்லது நம்முடைய முன்னோர்களின் வாழ்வியல் முறைகளை நாம் கண்டுகொள்ள பெரிதும் உபயோகமாய் இருப்பது நாட்டார் வழக்கில் தான் நாட்டார் மக்களின் நம்பிக்கை எவ்வாறு எல்லாம் அக்காலத்தில் இருந்து வந்தது என்பதனை செவி வழியாக கேட்டு அதனை பதிவு செய்வது என்பது மிகப்பெரிய வேலை அந்த வேலையை களனியூரன் அவர்கள் அடுத்த தலைமுறை மக்களுக்கு கொடுத்துள்ளார்.

தமிழர் நாட்டார் மரபுகளில் மறைந்து போன அல்லது பதிவு செய்யப்படாத பல வரலாற்று தடயங்களை ஆய்வு மூலமாக புத்தகங்கள் விளக்குகின்றன இந்நூல் நம் நிலம் சார்ந்த மக்களின் வாழ்க்கை மரபு மற்றும் எதார்த்தங்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாய் குறித்த வரலாற்று தகவல்களை சுவாரசியமாக பதிவு செய்துள்ளார். உதாரணத்திற்கு சாணம் மெழுகிய வெற்றி தரையில் படுத்து உறங்கிய ஆதி மனிதன் பாய்களை பின்ன ஆரம்பித்தான். தென்னை ஓலையில் பாய்களை தயாரித்து வெளிப்புறமாக வரும்படி பின்னியது..அது அவனுக்கு சுகமாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. இதேபோல் பனை ஓலையை வெட்டி  விசிறி போல் விரித்து அதன் மேல் மண்ணை அல்லது மணலை அள்ளிப் போட்டு வைத்தால் படுப்பதற்கு பனை ஓலையால் ஆன இரண்டு பாய்கள் கிடைத்து விடும்.இப்படி பாய்களின் வரலாறும் அதனை பயன்படுத்திய முறைகளும் பாய்கள் எவ்வாறு எல்லாம் மேம்பட்டு கொண்டு வந்தன என்பதையும் கூறியுள்ளார்.

நாட்டார்களின் நம்பிக்கைகள் என்றாலே அவை மூடநம்பிக்கைகள் என்பது தான் நம் நினைவுக்கு வரும். காரண காரிய தொடர்புகளுக்கு உட்பட்டு சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிந்ததை தனனம்பிக்கை எனவும்,அவை இல்லாமல் காரண காரிய தொடர்பின் வாயிலாகவோ விளக்க முடியாதவற்றை மூடநம்பிக்கை எனவும் நாட்டுப்புறவியல் துறை சார்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். தனிமனிதர்களின் நம்பிக்கையாக உதித்து காலப்போக்கில் அவை சமுதாய நம்பிக்கைகளாக மாற்றம் பெறுகின்றன அதற்கு உதாரணமாக ஒரு கதையையும் இதில் கூறியிருக்கிறார்.
 

துக்க வீட்டிற்கு வந்தவர்களை வா என்று கேட்கக் கூடாது. அதேபோல் போகும்போது போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளாமல் கிளம்புவது நல்ல நம் பிள்ளைக்கு அடையாளம் சொல்லாமல் கொள்ளாமல் போகிறது என்ற பழமொழி இதன் அடியாக பிறந்தது. இது ஒரு உளவியல் சார்ந்த நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

முயல் நட்டிய வேலியைத் தாண்டாது வெட்டிய குளத்தில் தண்ணீர் குடிக்காது.இது வேட்டைக்காரர்களின் நம்பிக்கை இது.

ஆதிமனிதன் காடுகளில் வாழ்ந்தான். இப்போது இருப்பது போன்று அப்போது மருத்துவர்கள் இல்லாவிடில் மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் வைத்தியம் பார்த்தவர்கள் தான் நாட்டு வைத்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர். மிருகங்களுக்கான நாட்டு வைத்திய முறைக்கு வாகடம் என்று பெயர். இத்தகைய வைத்திய முறை வாய்மொழி வடிவிலேயே பாதுகாக்கப்பட்டு வந்தது. இதில் குதிரை வாகடம் கழுதை வாகடம் பசு வாகடம் என்று தனித்தனி நூல்களும் பின் நாட்களில் எழுதி வைக்கப்பட்டன. திருநெல்வேலியில் ஆசிரியர் அவர்கள் தொகுத்த நோய்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு எந்த வகையான நோய்கள் வரும்.. அமுரி நோய், இந்து நோய், குதிரை படுவன் என பல்வேறு நோய்களும் அதற்கான தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அறிவியல் சார்ந்த நம்பிக்கைகளாக தென்கோடியில் வெள்ளி தோன்றினால் அந்த ஆண்டு பஞ்சம் நிலவும் .கர்ப்பிணி பெண்கள் மலை ஏறக்கூடாது ஏனெனில் கரு கலைந்து விடும். ஈர ஆடைகளை அணிந்து கொண்டு மங்கள காரியங்களில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் அதிக நேரம் உடுத்திக் கொண்டு இருப்பதால் தன் உடலின் தட்பவெப்ப நிலை சீர்குலையும். விக்கலை நிறுத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது. அன்னத்தை வீசி எறிய கூடாது அதாவது வீசி எறிந்து வீணாக்கக்கூடாது. மூஞ்சூர் எலியை கொன்றால் தலைவலி வரும் என்பது மூஞ்சூர் என்பது அரிய வகை உயிரினம் அதனை அழியாமல் காக்கும் பொருட்டு அவ்வாறு சொல்லி இருக்கிறார்கள். வெறும் உரலை ஆட்டக்கூடாது. அவ்வாறு ஆட்டினால் அதன் உட்புறம் கல் கரைந்து அதிகமான சத்தம் ஏற்படும்.

இவை தவிர மறைவாய் சொன்ன கதைகள், குழந்தைகளுக்கு பாடும் தாலாட்டு, முஸ்லிம் நாட்டார் இயல் தாலாட்டு, அன்னபூரணியின் அவல கதை, விடுகதை, பேய் கதைகள், புராண விருச்சத்தில் வரும் கிளைக் கதைகள் எவ்வாறு நாடாரியோடு தொடர்பு கொண்டு உள்ளன என்பதை பற்றியும் அங்கு நாட்டாரியியலில் மக்களை ஆண்ட சிறு அரசர்கள் பற்றிய கதைகளும் தெருக்கூத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் நிலவியல், வாழ்வியல், மற்றும் மரபுகள் பற்றிய புதிரானத் தொடர்புகளை ஆராய்கிறார்.கடந்த காலங்களோடு இணைந்திருக்கும் மரபு அம்சங்கள் எவ்வாறு தொடர்ந்து வாழ்வோடு இன்று நிறைந்துள்ளன என்பதை இந்நூல் விவரிக்கிறது.நமக்குத் தெரிந்த மரபு, மரபு வழக்கங்கள் மீது புதிய பார்வையை ஏற்படுத்துகிறது

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday, 29 July 2025

139


#கற்கை_நன்றே_139

கற்றாரை கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உசுக்கும் பிணம்
-ஒளவையார்

கொன்றைப் பூ மாலையை  அணிந்த சிவபெருமானைக் குறிக்கும் வகையில் இதன் தலைப்பு கொன்றைவேந்தன் என பெயர் சூட்டப்பட்டது. ஆத்திச்சூடி என்பதே ஆத்திப் பூ மாலையை அணிந்த விநாயகன் என்பதை குறிப்பது. இது பலருக்கும் தெரியாது.

தனிமனித ஒழுக்கங்களை இவ்வளவு மிக எளிதாக சொன்னவர்கள் ஒளவையைத்தவிர யாரும் இருக்க முடியாது.இளமையில் கல் என்பது இந்த வரிகளுக்காகவே சொல்லப்பட்டிருக்கலாம்.

கொன்றை வேந்தன் 91 வரிகள் உள்ளன.இதில் உள்ள தெரியாத வரிகளை குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

* ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 

நிறைய பொருள் தேடுவார்கள் தானும் அனுபவிக்காமல் மற்றவர்களுக்கும் கொடுக்காமல் வாழ்வது தேனீக்கள் தேனை சேகரித்து வைத்து தானும் உண்ணாது,பிறர் அணுகவும் அனுமதியாது. ஒருநாள் தேனீக்களை விரட்டிவிட்டு தேனை எடுத்துக் கொண்டு செல்லும் கதை போலத்தான் உலோபிகள் சேமித்துக் கொள்ளும்

* ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு 

ஒரு ஊரில் நிலைத்து வாழா விட்டால் உனக்கு எப்படி நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். ஆகவே நல்ல நண்பன் துணையோடு ஒரு ஊரில் நீடித்து  வாழவேண்டும் என்பதே பொருள்

*அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

நம்முடைய முக்கிய உணவுப்பொருள் அரிசி அதாவது நெல். நம் வாழ்க்கைக்கு அவசியமான பல பொருட்கள் எல்லாம் வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது நம் உடலில் வலு இருக்கும் காலத்திலேயே பணத்தை சேமித்து கொள்ள வேண்டும். சம்பாதித்தால் மட்டும் போதாது சேமிக்கும் பழக்கம் வேண்டும். உரிய காலத்தில் சேமித்து வைத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாய் வாழலாம்.அஃக்கம் என்றால் தானியம்

* காவல்தானே பாவையர்க்கு அழகு 

பெண்கள் தங்களுக்குத் தாங்களே காத்துக் கொள்ளும் காவலே சிறந்தது. பிறர் காவல் காக்க முடியாது.

* கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் 

உன்னிடம் வல்லமையுள்ளது, வெல்லும் திறமை உள்ளது, கூரான ஆயுதம் உள்ளவனைப் போல.  ஆனால் செருக்குற்று நான் வெல்லுவேன் கொள்ளுவேன் என்று வீராப்பு பேசாது அமைதியாக இருக்க வேண்டும்.

தற்புகழ்ச்சி ஆகாது

* கேட்டில் உறுதி கூட்டும் உடைமை

 வெற்றி தோல்வி வரும்போது சிலர் வியாபாரத்தை விட்டு விடுவார்கள். மனம் தளர்ந்து போவார்கள். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. துன்பம் வரும்போது தான் மன உறுதி பெற வேண்டும். அந்த உறுதி முயற்சியை ஊக்குவிக்கும். நஷ்டத்தை ஈடுகட்ட இழந்த பொருளை மீட்டுத் தரும். ஆகவே மனம் தளரக்கூடாது.

* கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு 

ஒரு வீட்டில் தீப்பற்றினால் பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவும்.அதுபோல் வம்பு பேசுதலில் விருப்பமுடைய ஒருவனிடம் போய் நீ கோள் சொல்வாய் ஆனால் அது தீயை விட வேகமாக பரவும்

*கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை

பிறரின் குற்றங்களை பெரிதுபடுத்தி சொல்லிக்கொண்டே இருந்தால்

பகை வளரும். அவர்கள் உங்களிடமிருந்து ஒதுங்கிப் போய்விடுவார்கள்.கெளவை-பழிச்சொல்

*சீரைத் தேடின் ஏரைத் தேடு

சீர்-சிறப்பு,ஏர்-கலப்பை.சிறந்த வாழ்க்கை வாழ விரும்பினால் உழவு செய்

(கடைக்குட்டி சிங்கக்கதையை அப்பவே சொல்லியிருக்கார்)

*சேமம் புகினும் யாமம் உறங்கு

சரியானபடி தூங்கவில்லையானால் உடல்நலம் கெடும்.இரவுக்காவல் செய்தாலுமே கொஞ்ச நேரமாவது தூங்க வேண்டும்
(ஜியோ யூசர்ஸ் கவனிக்கவும்)

*சோம்பர் என்பவர் சோம்பித்திரிவர்

சோம்பேறியாக இருப்பவர்கள் சோற்றுக்கு ஏங்கிச் சாவர்

*தையும் மாசியும் வைஅகத்து இரு

வைக்கோல் வேய்ந்த வீடு குளிருக்கு அடக்கம்.தை,மாசி பனியாயிருக்கும்.கூரையில் வேய்ந்த வைக்கோலில் உறங்கினால் உடல்நலன் பேணலாம்.

*நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவார்

தோற்றத்தை கண்டு எடை போடக்கூடாது.அவர்களிடம் ஏதேனும் ஒரு செயல் இருக்கும்.அதன் மூலம் அவர்கள் உயர்ந்தவர்களாக போற்றப்படுவார்கள்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

95


#Reading_Marathon2025
#25RM055

Book No:95/100+
Pages:-112

கணிதத்தின் கதை
-ஆயிஷா இரா.நடராசன்

எண்களே கடவுள், கடவுளுக்கு புரியும் ஒரே மொழி கணிதம் என எண்களையும் வடிவங்களையும் பிரபஞ்சத்தை குறித்த ஆய்வுக்கு அடிப்படையாக அமைந்தது கணிதம் தான்.கணிதம் என்பது ஒரு ஏட்டுச் சுரைக்காய் என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம் .ஆனால் பின் நாட்களில் பொறியியலில் பொருளாதாரத்தில் என பல்வேறு துறைகளில் அதிகம் உதவியாக இருந்தது கணிதம் மட்டுமே.

கிரேக்க சொல்லான மாத மேட்டிக்கா என்பதற்கு கற்க முடிந்தது (things that are learned )என்று பொருள். அந்த வார்த்தையில் இருந்து தான் மேத்தமேடிக்ஸ் எனும் இன்றைய கணிதம் குறித்த உலகளாவிய சொல் வந்து இருக்க வேண்டும் என்கிறார்கள். இவ்வாறு ஆதி காலத்தில் இருந்து எண்கள் எவ்வாறெல்லாம் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது என்பது குறித்து வரலாற்று பதிவுகளை முதல் பகுதியில் எழுதியுள்ளார். தசம என் முறைகள் இந்தியர்கள் பயன்படுத்திய என் உருக்கள் என  இந்தியாவை மையப்படுத்தி துவங்கிய கணித புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்து முதலில் கிரேக்கத்தில் தான் மையம் கொண்டு வீசத் துவங்கியது என்று முடிக்கிறார்கள்.

எண்களாக இருந்த கணிதம் வடிவ கணிதமாக பிறந்ததின் கதையை கிரேக்கர்கள் தத்துவ மேதைகளின் வழியே தேற்றங்கள் உருவாக்குவதில் ஈர்க்கப்பட்டு வடிவ கணிதம் பிறந்த கதைகளை சொல்லி.. அதன் பயன்பாடுகளையும் அதை எவ்வாறு எல்லாம் இருந்தது என்பதனை கால வரிசைப்படி கூறுகிறார்கள். அப்போலினஸ் பூமியின் சுற்றளவை அளந்து அறிவித்த எராஸ்டோஸ்தீனஸ் திருகு என்னும் நீர் உயர்த்தியை பரவலாக பயன்படுத்துவதன் அடிப்படையாக இருந்தது கணிதம் தான் நம்பு போல் தத்துவத்தை உருவாக்குவதற்கு ஆர்க்கிமிடிசுக்கு பயன்பட்டதும் கணிதம் தான்.

இன்னும் 212 ல் ரோம படையெடுப்பு கிரேக்கத்தின் மீது நடந்த போது ஆர் கே டி எம் எஸ் ஐ கொல்வதற்கு வீரன் ஒருவன் வந்தான் அப்போதும் கூட கணித வரையறைகளை நிறுவிட முயன்று கொண்டிருந்த ஆற்கடிமிஸ் கொஞ்சம் இரு இந்த வட்டத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று மெல்லிய குரலில் கூறியதையும் கேட்காமல் இரக்கமின்றி குத்திக் கொன்றான் அவன் ஆர்க்கிமசின் பொறியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை இயந்திரங்களை ரோம மக்கள் எடுத்துக் கொண்டார்கள் ஆனால் அவரது கணித பாரம்பரியத்தை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

 கணிதத்தில் எக்ஸ் என்பது முக்கியமான ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. அதன் தோற்றமும் பயன்பாடுகளும் அது பிறந்து வந்த கதைகளையும் இந்த புத்தகத்தில் எடுத்துரைத்து உள்ளார். ஏற்கனவே மாய சதுரங்கள் உருவான கதை எண்ணிற்கும் வடிவத்திற்கும் உள்ள தொடர்புகள் அதனை கண்டறிந்த அறிஞர்கள்.. கணித சாம்ராஜ்யத்தின் கடைசி சக்கரவர்த்தியாக விளங்கிய ராமானுஜத்தின் பங்களிக்கும் ஆர்டியின் பங்களிக்கும் இந்த புத்தகத்தின் கடைசி அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
கணிதம் என்றாலே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயமும் தொல்லையும் உண்டு. ஆனால், கணிதத்தின் தோற்றம், வளர்ச்சி, உலகின் பழங்கால நாகரிகங்களில் கணிதம் எவ்வாறு பிறந்தது, எண்கள் எங்கு உருவானது, கணித நபர்கள், சமூக வளர்ச்சியில் கணிதத்தின் பங்கு போன்றவை இந்நூலில் மிக எளிமையாகவும் சுவாரசியமாகவும் விளக்கப்படுகின்றன.

பாபிலோனியர், மாயன், செவ்விந்தியர் போன்ற பழங்கால நாகரிகங்களில் ‘எண்’ பற்றிய ஆராய்ச்சி, கணிதவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை கதையின் வடிவில் உரைநடை அமைப்பில் எழுதப்பட்டுள்ளன.

வரலாற்று நிகழ்வுகளையும் கணிதப் புதிர்களையும் கதைகளாக சொல்லும் இந்த நூல், கணிதம் பற்றிய பயத்தை மறக்கச் செய்து பள்ளி மாணவருக்கே தூண்டும் தளமாக அமைந்துள்ளது. மிகவும் எளிய சொற்கட்டமைப்பும், கதையின் நடைமுறையும் சிறுவர் மதிப்பீட்டில் ஏற்றவையாக அமைந்திருக்கிறது.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

94


#Reading_Marathon2025
#25RM055

Book No:94/100+
Pages:-136

மருந்தென வேண்டாவாம்
-மருத்துவர் கு.சிவராமன்

மருந்தென வேண்டாவாம் என்னும் திருக்குறளின் பொருள்.. முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. நாகரீகம் என்ற முறையில் துரித உணவு வந்த பிறகு நோய்களும் வயோதிகமும் கொள்ளை புறம் வந்து வட்டது. அதனை களைவது குறித்தும் ,உணவில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மருத்துவர் கு சிவராமன் தனக்கே உரிய பாணியில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். முழுக்க முழுக்க உணவு குறித்தும் உணவு முறை குறித்தும் மருந்தாக பயன்படும் உணவுகள், ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற உணவுகள் என 29 தலைப்புகளில் இந்த நூல் வெளிவந்துள்ளது.

மகனுக்கு பிடித்த உணவுகளையும் சத்தான உணவினை ஊட்டுவதிலும் அன்னை தான் முதல் ஆசான். அன்னையின் இதயம் தான் நமக்கு முதல் பள்ளிக்கூடம். அக்கறையுடன் சத்தான உணவினை அவர்தான் நமக்கு முதன் முதலில் அளித்தார். வயோதிகத்தில் முதல் மருந்தாக உணவு தான் நமக்கு பயன்படும் என்பது குறித்து விரிவாக சொல்லி இருப்பார் அதேபோன்று குழந்தை பருவம் என்பது வாழ்நாள் எல்லாம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடிப்படை அவர்கள் குழந்தை பருவத்தில் சாப்பிடும் உணவு வகைகள் தான் உள்ளது. குழந்தைக்கு உணவு ஊட்டுவது என்பது அறிவியல் இல்லை, ஒரு கலை எனக் கூறி ,வாழைப்பழத்தில் பொட்டாசியம் இருக்கிறது என்று குழந்தைக்கு தெரியாது. அதனை அவர்களுக்கு கொடுக்க வேண்டிய புத்தி பெற்றோர்களுக்கு தன் அறிந்திருக்க வேண்டும் என்கிறார்.

மழைக்காலம் ஊரெல்லாம் மழையினால் மன உளைச்சல் நேரும்போது வீட்டில் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு அதிகரிக்கும். அப்போது நெற்றியில் நீர் கோவை மாத்திரையோ அல்லது சுக்குப்பற்றோ போட்டு விடுவது நல்லது. இருமல் துவங்கி விட்டால் ஒரு ஸ்பூன் தேனில் 2-3 மிளகை பொடி செய்து போட்டு அதை இளஞ்சூடாக்க வேண்டும். தேன் திரிந்து பொங்குகையில் 15 மில்லி தண்ணீரில் கலந்து ஒரு பாலாடையில் வைத்து குழந்தைக்கு கொடுக்க இரவில் இருமல் வராது .கோழையாக இருப்பின் வாந்தியாக சளி உடனே வந்து விடும் என்று மருத்துவ குறிப்பும் சொல்கிறார்.

உணவு அறிவு என்பது இனிவரும் நாட்களில் அத்தியாவசியமானது என்பதை எடுத்துரைக்கிறார். தண்ணீர் கோடையின் முதல் மருந்து. ஐந்து சதவீதம் நீர் இழப்பு நமக்கு மரணத்தை தருவிக்கும். இரண்டு சதவீதத்துக்கு மேல் நீர் இழப்பு வருகையில் தாகம் அதிகரிக்கும். ஆனால் இந்த தாக உணர்வு குழந்தைக்கு முதியோருக்கும் அதிகம் இருக்காது. கோடையில் மூன்றை முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்துவது மிக மிக அவசியம். ஏனென்றால் நாம் 600 கிலோ கலோரி உடல் செயல்திறன் பெற உடல் ஒரு லிட்டர் வியர்வையை வெளியேற்றுகிறது. தாகம் தணிக்க வாயு ஏற்றப்பட்ட பன்னாட்டு குளிர்பானங்கள் நல்லதல்ல .அவை பசியை கெடுத்து குடல் புண் உண்டாகி எலும்பு வன்மையையும் சிதைக்கிறது. ஆகவே உள்ளம் கேட்க வேண்டியது கோடையில் மோர்.. அதன் சிறப்பு அம்சங்களை விரிவாக சொல்லி இருக்கிறார்.

கண்ணாடியில் எப்போதும் இல்லாமல் வெள்ளை வெளேர் எனறு கொஞ்சம் தெரிய ஆரம்பித்தால் அழகு சாதன பொருட்களினால் ஏற்பட்ட மகிமை அல்ல உடலில் அணிமியா என்னும் இரும்புச்சத்து குறைபாடு ஆகும் அதனை பெறுவதற்கு இரும்புச்சத்தை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம். புலால் உணவு கீரைகள் முருங்கைக் கீரை பொறியல் கம்பு ராகி என எடுத்துக் கொள்ளலாம். வெள்ளை அரிசியைவிட கைக்குத்தல் புழுங்கலில் இரும்பு சத்து அதிகம். இரும்புச்சத்து உடலில் சரியாக உட்கிரகிக்கப்பட விட்டமின் சி சத்தும் போலிக் அமிலமும் அவசியம். ஆதலால் அடிக்கடி நெல்லிக்காய் சாறு நெல்லிக்காய் சாப்பிடுவது இரும்பை உடலில் பத்திரமாய் சேர்க்க உதவிடும் எனக் கூறுகிறார். உங்களுக்கு தேவையான இரும்புச்சத்தை அதை காந்தமாய் உணவில் இருந்து கவர்ந்திழுக்க செய்தால் போதும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் என்கிறார் வள்ளுவர். உணவு தேவை இல்லாமல் விருந்தாகி தேவை அதிகமாக செல்லும்போதுதான் மருந்தின் அவசியம் துவங்குவதை உணர்த்தி இருப்பார். இன்றைக்கு ஒரு நாள் தானே என்ற சமாளிப்புடன் அடிக்கடி அரங்கேறும் விருந்துகள் தரும் உடல் நல கேடுகள் ஏராளம்.

சமீபத்தில் வெளியான ஒரு செய்தியில் வட மாநிலத்தில் ரீல்ஸ் மோகத்தில் குழந்தையை பசு காம்பின் வழியே நேரடியாக பால் குடிப்பதை ஒருவர் பகிர்ந்து இருந்தார். மருத்துவர்கள் அதில் பல நுண்ணுயிரிகள் உள்ளன என்றும்.. பசும்பாலை பொருத்தவரை காய்ச்சி குடித்தால் மட்டுமே பாக்டீரியாக்களை நுண்ணுயிரிகளை அகற்றிவிட்டு சத்தான பால் நமக்கு கிடைக்கும். இல்லை எனில் அதுவே நமக்கு தீங்காக அமைந்து விடும் என்று கூறியுள்ளனர். அதேபோல் அப்படியே சாப்பிடலாமா கட்டுரையிலும் இதே போன்ற பல உணவு வகைகளை அப்படியே சாப்பிடலாமா என்பது குறித்து விளக்கி இருக்கிறார்.

தண்ணீர் உடலின் ஆரோக்கியத்தை காண அடிப்படை சுத்தமான பாதுகாப்பான தண்ணீரை தேடி சரியான அளவில் தினசரி அருந்துவது நமது கடமை பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை சேமித்து வைத்து அருந்துவது நல்லதல்ல சில வகை பிளாஸ்டிக் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் பாட்டில் செய்யும் போது பயன்படுத்தப்படும் ரசாயனத்தை மிக நுண்ணிய அளவு அதில் கரைகின்றன என்று செய்திகள் வருகின்றன. பிளாஸ்டிக் பாட்டிலை தவிர்ப்பதும் கூட நல்லது தான் என்கின்றனர் .தற்போது குழந்தைகள் பெருமளவில் சில்வர் பாட்டிலுக்கு மாறி உள்ளன என்பது ஆரோக்கியத்திற்கான பிள்ளையார் சுழி எனலாம்.

ஒவ்வொரு கட்டுரைகளிலும் ஆரோக்கியத்திற்கான ஆணிவேர் இருக்கிறது. அதனை முறையாக படித்து பயன்படுத்தும் போது நாம் செய்ய தவறிய நல்ல விஷயங்களும் செய்து கொண்டிருக்கும் தவறுகளையும் அருகில் அமர்ந்து சுட்டிக்காட்டியுள்ளார் கட்டுரைகளில் 

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday, 28 July 2025

139


#கற்கை_நன்றே_138

என்னுடைய பரிசோதனைகள் மூலம் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், ஒருவன் கனவு காண வேண்டும், அந்தக் கனவை நனவாக்க முயற்சி செய்ய வேண்டும். அந்தக் கனவு ஒருநாள் அவனையும் அறியாமல் நனவாக வந்து அடையும்'

-தோரோ எழுதிய 'வால்டன்'. புத்தகத்தில்

சமீபத்தில் குறைவாக படிப்போரின் கணக்கு தேர்வுத்தாளில் சில மாணவர்களின் மதிப்பெண் குறைந்தது பற்றி பார்த்த போது.. தொடர்ந்து ஒரு மாணவன் ஒரே தவறு செய்து வந்தான்.அந்த தவறு நிவர்த்தி செய்யவேண்டியப் பட ஒன்றுதான்.ஆனால் அது பயிற்சி மூலம் தான் மாற்றப்படவேண்டிய ஒன்று.பயிற்சி என்றாலோ தொடர்ந்து ஒரு செயல் செய்ய வேண்டுமென்றாலோ இன்று பலருக்கு விரக்தி மனமே வருகிறது. பொறுமை இல்லை.உடனே நடக்க வேண்டுமென அவசர புத்தி வற்புறுத்துகிறது. ஆனால் மாற்றம் மெதுவாகவே நிகழும்

இதுகுறித்து சின்னஞ்சிறு பழக்கங்களில் ஜேம்ஸ் கிளியர் எடுத்துக்காட்டுடன் கூறியுள்ளார்..

குளிரான ஓர் அறையில் உங்களுக்கு முன்னால் ஒருமேசையின்மீது ஒரு சிறிய பனிக்கட்டி வைக்கப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். தற்போது அந்த அறையில் இருபத்தைந்து டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. பிறகு அந்த அறை மிகவும் மெதுவாகச் சூடேற்றப்படுகிறது. இறுதியில் 32 டிகிரியில் பனிக்கட்டி உருகத் தொடங்குகிறது. இந்த ஒரு டிகிரி மாற்றம் முந்தைய பல ஒரு டிகிரி மாற்றங்களிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டிருக்கவில்லை. ஆனால் அது ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.

ஒரு கணத்தில் நிகழுகின்ற ஒரு பெரிய மாற்றம், முந்தைய பல கணங்களில் நிகழ்ந்த சிறுசிறு மாற்றங்களின் கூட்டு விளைவுதான்.

மூங்கில்கள் நிலத்திற்கு அடியில் தம்முடைய பிரம்மாண்டமான வேர்ப்பின்னல்களை வளர்த்தெடுப்பதில் முதல் ஐந்து ஆண்டுகளைச் செலவிடுகின்றன. பிறகு ஆறு வாரங்களில் அவை தொண்ணூறு அடிகள் உயரத்திற்கு விண்ணளாவ வளருகின்றன.

பழக்கங்களும் இதே போன்றவைதான். எந்தவொரு தேடலின் ஆரம்பகட்டத்திலும் இடைப்பட்ட நிலைகளிலும் பல ஏமாற்றங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும். நீங்கள் ஒரு நேர்க்கோட்டில் வேகமாக முன்னேறப் போவதாக எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் எந்த முன்னேற்றத்தையும் உங்களால் பார்க்க முடியாது. அது உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். நீங்கள் முன்னோக்கிச் செல்லுவதற்கு பதிலாக ஒரே இடத்தில் சிக்கிக் கிடப்பது போன்ற உணர்வை நீங்கள் அனுபவிப்பீர்கள். சக்தி வாய்ந்த விளைவுகள் மிகத் தாமதமாகவே உருவாகும். 

“நான் ஒரு மாதமாக தினமும் ஓடிக் கொண்டிந்தும்..உடலில் ஏன் எந்த மாற்றம் நிகழவில்லை?" என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இதை நான் 'தேக்கச் சிந்தனை'என்கிறார்கள். இந்த வகையான சிந்தனை உங்களை ஆட்கொள்ளத் தொடங்கினால், நல்ல பழக்கங்களை நீங்கள் சுலபமாக விட்டுத்தள்ளத் தொடங்கிவிடுவீர்கள். ஆனால், ஓர் அர்த்தமுள்ள வித்தியாசம் ஏற்பட வேண்டுமென்றால், இந்த வகையான சிந்தனையையும் தாண்டித் தாக்குப்பிடிக்கக்கூடிய அளவுக்குப் பழக்கங்கள் தொடர வேண்டும்.

தேக்கச் சிந்தனையிலிருந்து நீங்கள் விடுபடும்போது, ஒரே இரவில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக மக்கள் கூறுவர். வெளியுலகம் அந்த இறுதி விளைவை மட்டுமே பார்க்கிறது, ஆனால் அதற்கு முந்தைய அனைத்து நிகழ்வுகளையும் அது ஒதுக்கிவிடுகிறது. ஆனால், நெடுநாட்களுக்கு முன்பு நீங்கள் முதலீடு செய்த உழைப்புதான் அந்த மகத்தான இறுதி விளைவைச் சாத்தியமாக்கியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எல்லாப் பெரிய விஷயங்களுமே சிறிய துவக்கங்களிலிருந்துதான் வருகின்றன. தனியொரு சிறிய தீர்மானம்தான் ஒவ்வொரு பழக்கத்தின் விதையாக இருக்கிறது. ஆனால் அந்தத் தீர்மானம் மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்படும்போது, அதிலிருந்து ஒரு பழக்கம் உருவாகிறது, பிறகு அது வலுப் பெறுகிறது. 

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 27 July 2025

137



#கற்கை_நன்றே_137

“பெரிய மனிதர்கள், சிறிய மனிதர்களைத் தாங்கள் நடத்தும் விதத்தின்மூலம்தான் தங்கள் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றனர்,”  -கார்லைல் 

விமர்சனங்கள் இந்த நாகரிக உலகில் தவிர்க்க முடியாதது. ஆனால் விமர்சனம் என்ற போர்வையில் அவதூறும் காழ்ப்புணர்வும் அதிகம் வெளிப்படுவது அதிகரித்து வருகிறது.நேர்மையான விமர்சனம் என்பது அக்கறையில் சொல்லப்படுவது. அது தற்போது குறைந்து வருகிறது.நண்பர்களை பெறுவது எப்படி எனும் புத்தகத்தில் விமர்சனம் எவ்வாறு இருக்க வேண்டும் என உதாரணம் காட்டபட்டுள்ளது..

விமர்சனம் வீணானது. ஏனெனில், அது ஒருவரைத் தற்காப்பு நிலைக்கு இட்டுச் செல்வதோடு, வழக்கமாகத் தன்னை நியாயப்படுத்தவும் தூண்டும். விமர்சனம் ஆபத்தானது. ஏனெனில், அது ஒருவரது பொக்கிஷமான பெருமிதத்தைக் காயப்படுத்தி, அவரது முக்கியத்துவத்திற்கு ஊறு விளைவித்து, அவரது கோபத்தைத் தூண்டுகிறது.

1842ம் ஆண்டின் இலையுதிர்காலத்தில், ஜேம்ஸ் ஷீல்ட்ஸ் என்ற, போர்க் குணம் கொண்ட ஓர் அரசியல்வாதியை லிங்கன் கேலி செய்தார். ‘ஸ்பிரிங்ஃபீல்ட் ஜர்னலி’ல் தன் பெயரை வெளியிடாமல் அவர் ஜேம்ஸ் ஷீல்ட்ஸைப் பற்றி ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தார். அதைப் படித்த ஸ்பிரிங்ஃபீல்ட் நகரமே சிரிப்பால் அதிர்ந்தது. எளிதில் உணர்ச்சிவயப்படும் குணமுடைய ஷீல்ட்ஸ், கோபத்தால் கொதித்தார். அக்கடிதத்தை எழுதியது லிங்கன் தான் என்பதை ஷீல்ட்ஸ் கண்டுபிடித்து சண்டைக்கு அழைக்கிறார். லிங்கன் சண்டையிட விரும்பவில்லை. அவர் அத்தகைய சண்டைகளை எதிர்த்தார். 

ஆனால் அவரால் இதிலிருந்து வெளியேற முடியாத சூழல். அவருக்கு விருப்பமான ஆயுதத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு லிங்கனுக்குக் கொடுக்கப்பட்டது. அவரது கைகள் மிகவும் நீளமாக இருந்ததால், குதிரைப் படையில் பயன்படுத்தும் அகன்ற வாளை அவர் தேர்ந்தெடுத்தார். வெஸ்ட் பாயின்ட் பட்டதாரி ஒருவரிடம் வாட்சண்டைப் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

 குறிப்பிட்ட நாளன்று, மிஸ்ஸிஸிப்பி நதிக் கரையில் சாகும்வரை சண்டையிடுவதற்கு இருவரும் தயாராக இருந்தனர். ஆனால் கடைசி நிமிடத்தில், அவர்களது சகாக்கள் தலையிட்டு அச்சண்டையை நிறுத்தினர். லிங்கனின் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த மிகவும் மோசமான சம்பவம் அதுதான். மக்களைக் கையாளும் கலையில் ஒரு விலைமதிக்க முடியாத படிப்பினையை அது அவருக்குக் கற்றுத் தந்தது. அதன் பிறகு, பிறரை அவமதிக்கும் கடிதங்களை அவர் ஒருபோதும் எழுதவில்லை, யாரையும் கேலி செய்யவில்லை. அப்போதிலிருந்து அவர் யாரையும் எதற்காகவும் விமர்சிக்கவும் இல்லை.

கேலியோ கிண்டலோ பிறர்மனதை நோகடிக்க செய்யக்கூடாது. அவ்வாறு கேலி செய்ய நேர்ந்தால் தன்னைத் தானே பகடி செய்து கிண்டல் செய்தால் யாருக்கும் எந்த வருத்தமும் ஏற்படாது.நல்ல நட்புகளை பெறுவோம்..அதை எந்த நாளும் இழக்காமல் காப்போம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Thursday, 24 July 2025

மழையை நேசிப்பவனின்கையில் குடையிருக்கிறதுநேசிக்காதவனின் கையில்மழையிருக்கிறது-முபாரக்

93


#Reading_Marathon2025
#25RM055

Book No:93/100+
Pages:-248

சலூன்
-க.வீரபாண்டியன்

பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று 
முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்.

-நா.முத்துக்குமார்

எல்லோரும் சிறுவயது முதல் மாதந்தோறும் செல்லும் இடம் சலூன் கடை. குழந்தையா இருக்கும்போது பலகை மேல அமர்ந்து முடி வெட்டியது ஒரு காலம் இயற்கை பலருக்கு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சலூன் கடைக்கு செல்லும் வாய்ப்பை தருவதில்லை சலூன் கடைகள் என்றாலே நமக்கு மனதுக்கு பிடித்தவர் முடிவெட்டினால் தான் குடும்ப மருத்துவர் நமக்கு நோய்க்கான சிகிச்சை அளித்தது போல ஒரு மனதிருப்தி அடுத்த முறை செல்வது வரை இருக்கும் வேறு யாரையும் யாரேனும் முடிவெட்டி விட்டாலோ மனதுக்கு ஒப்பவே ஒப்பாது மீண்டும் அவரிடம் சென்று முடிவெட்டினால் தான் மனம் திருப்தி அடையும். 

பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் போது முடியை ஒட்ட வெட்டி விடுங்கள் என்பதுதான் ஒவ்வொரு குடும்பத்தினரும் வேதவாக்கு ஆகும். கையில் பிடிக்க முடி இருக்கக் கூடாது என்பது ஒரு காலத்தில் ஒழுக்கத்தின் மதிப்பீடாக பார்க்கப்பட்டது. கண்ணாடி டப்பாவில் இருந்து பீச்சி அடிக்கும் தண்ணீருக்காக வெட்கப்படாத ஆண்களே இருக்க முடியாது அந்த குதூகலம் இளமையில் அவசியம் அனுபவிக்க வேண்டிய ஒன்று. முன்பு வானொலி ஒலித்துக் கொண்டிருக்கும் அழகிய பாடல்கள் கேட்கும். இன்று தொலைக்காட்சி வந்த பிறகு அதில் பார்க்கும் படங்களும் கேட்கும் பாடல்களும் என்றும் இனியவை தான்.

கதையின் நாயகன் ஆனந்தன் முருகையா அமெரிக்கா செல்வதற்காக அவசரமாய் விமான நிலையம் செல்லும் போது அங்கே முடி வெட்டும் நிலையம் இருக்குமா என்று தன் நண்பரிடம் கேட்கிறார் அவர் இல்லை என்று சொன்னவுடன் அமெரிக்காவில் சென்று வெட்டிக் கொள்ளலாம் என்று கிளம்பும்போது அங்கே பேருந்து ரயிலுக்கு முன்பதிவு செய்வது பல முடி வெட்டுவதற்கும் முன்பதிவு செய்ய வேண்டும் என நினைக்கும் போது ஆச்சரியம் துளிர்க்கிறது அவருக்கு. அப்போது தான் டெல்லியில் பயின்ற போது முடிவெட்டிய தாத்தாவை நினைவு கூறுகிறார். அப்போது தான் முடிவெட்டிய சிறு வயது முதல் யார் யாரெல்லாம் முடிவெட்டினார் என்பதை நினைவு கூறுகிறார்.. நமக்கு ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் பள்ளியில் பாடம் நடத்தினார் அதுபோல சிறுவயதில் மதுரை செல்வம் அண்ணன், பள்ளியில் பயிலும் போது முத்தையா தாத்தா கல்லூரியில் பயிலும் போது ரோஸ் பவுடர் முகத்தில் தெளிக்கும் மாணிக் பாட்ஷா, டெல்லியில் சந்தித்த மோகன் தாகூர் பிறகு நாகன்னா என ஒவ்வொரு கதாபாத்திரங்களில் வாழ்வியல் நினைவுகளோடு நாவல் பயணிக்கிறது.

எந்த கடையில் முடி வெட்டலாம் என்பது முதன்முறையாக புதிய ஊரில் முடிவெட்ட செல்பவருக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். மூன்று கடைகளிலும் இளைஞர் யாரேனும் முடி வெட்டுகிறார்களா என்பதை முதலில் நாம் பார்ப்போம். அவ்வாறு இளைஞர்கள் முடிவெட்டினால் நம்பி அந்த கடைக்கு நுழைவோம் அப்படித்தான் ஆனந்தும் நுழைகிறார் ஒரு கடையில்.

அமெரிக்காவில் வேலை நிமித்தமாக செல்லும்போது கேத்தரின் எனும் பெண்ணுடன் நட்பாக பழகி வருகிறார். அப்போது ஆனந்தனுக்கு கண்ணில் ஒரு பிரச்சனை வரவே மருத்துவர்கள் சில நாட்களுக்கு கணினியை பார்க்கக் கூடாது என கட்டளை இடுகிறார்கள். பின்பு டெல்லியில் வேலை கிடைத்தவுடன் அங்கு வருகிறார். தான் ஆசையாக முடிவெட்டிய கடைகளை பார்க்கிறார் ஆனால் மோகன் தாகூர் அங்கு இல்லை.

சூளைமேட்டில் இருக்கும் குட்டி என்பவரிடம் முடிவெட்டிக் கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடைபெற்ற விபத்தில் சலூன் கடைக்காரர் முத்தையா தாத்தா இறந்தது பெரும் சலனத்தை ஏற்படுத்துகிறது. முத்தையா தாத்தா உடன் ஆன சலூன் கடை நினைவுகள் பகிர்ந்து கொள்கிறார் நம்மிடம்.

கல்லூரியில் படிக்கும் போது தன் மாணிக்கம்
 சலூன் நினைவுகளை பகிருகிறார் முடி நரைத்தல் வழுக்கை விழுதல் போன்ற பல்வேறு விதமான முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வினை நொடிப்பொழுதில் நமக்கு தருபவர் தான் மாணிக்கம். ஹாஸ்டலில் பயில்வோர் பெரும்பாலும் உடன் இருக்கும் மாணவர்கள் இன்னொரு மாணவருக்கு முடி வட்டி விடுதல் மிகவும் இயல்பான சூழல்.அது போலவே விடுதியில் இருக்கும் சேரன் எனும் மாணவன் முடி வெட்டுவதில் கைதேர்ந்தவன்.
ஆனால் முடி வெட்டுவதில் சிலர் முத்திரை குத்தியதால் சாதி சம்பந்தமான பிரச்சனை எழுந்ததால் சேரன் முடி வெட்டுவதை கைவிட்டு விட்டான்.

அதன் பிறகு ஹைதராபாத்தில் நாகண்ணா தனக்கு முடிவெட்டிய நினைவுகளை பகிர்கிறார். அன்பும் மரியாதையும் கலந்த நாகண்ணாவின் பேச்சு மீண்டும் மீண்டும் பலரையும் கிடைக்க வரத் தூண்டும். தான் பணிபுரிந்த பன்னாட்டு கம்பெனியில் அமெரிக்காவுக்கு நான் சென்றது போலவே அங்கிருந்த கேத்தரினா இந்தியாவுக்கு வந்தார். அவர் என்னுடைய சீனியர் வேலையிலும் வயதிலும் ஆனாலும் நட்புடன் பழகக்கூடியவர். கேத்தரின் சமூக செயல்பாடுகளில் ஆர்வம் மிக்கவர் அமெரிக்க அரசியல் குறித்தும் உலகப் பார்வை குறித்தும் தன்னுடைய ஆழமான கருத்துக்களை உரையாடலும் போது தெரிவிப்பார். திருப்பதியில் இருவகையான நாவிதர்கள் இருந்தனர் ஒருவர் தேவஸ்தானம் மூலமாக நியமனம் பெற்றவர்கள் மற்றவர்கள் தற்காலிக பணிகளில் கூலிமுறையில் ஈடுபடுபவர்கள். ஆனால் அதிலேயே அவ்வாறு நாகண்ணா இல்லாமல் தன்னுடைய தொழில் முறை பயிற்சியில் காலத்துக்கு ஏற்ற மாதிரி இக்காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னுடைய முடிவெட்டுதலை மாற்றிக் கொண்டார். அவருடைய மனைவியும் ஒப்பனை செய்ய ஆரம்பித்ததால் வாழ்வில் முன்னேற தொடங்கினர்.

தனக்கு முடி வெட்டிய ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து அமர்ந்து உரையாடினால் எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்கிறான் ஆனந்த். ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உள்ள கேள்விகளையும் பதில்களையும் உரையாடுவதன் வழியே சாதி குறித்து மதம் குறித்து சமூகம் சார்ந்த சிந்தனைகள் குறித்து உரையாடுகிறார்கள்.

*பரந்த சமதள பரப்பில் ஓடும் நதியைப் போல மனம் எவ்விதமான சப்தமும் எழுப்பாமல் காட்சிகளோடு மட்டும் ஓடிக் கொண்டே இருக்கிறது.

*ஆழ்மனது தேங்கி கிடப்பவற்றை கலக்கி விட்டு கலங்கி நினைவுகளை நிதானமாக மேலே மிதக்க விடுகிறது. நேரமாக நேரமாக நினைவுகள் இருட்டு குகைக்குள் இருந்து வரும் மிருகத்தைப் போல துல்லியமாகவும் துணக்கமாகவும் தெரிகின்றன.

*தனக்குத் தேவையானவற்றை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பருவத்தில் தான் உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது.

*மனிதன் காலமெல்லாம் ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டிய புதிர்கள் இருக்கின்றன புதிர்கள் அவிழ்ந்து விட்டதாக நினைக்க நினைக்க வினோதங்கள் தலைகாட்டுகின்றன.

*எல்லா குழப்பங்களில் இருந்தும் வெளிவந்துவிட வேண்டும் என்று தான் மனிதன் கடுமையாக முயற்சி செய்கிறான்.

இறந்தவர்களுக்காக முடியை எடுக்கும்போது நாவிதரின் கைகள் தன்னுடைய துத்தகத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்வது போல இருந்தது. அவர்களுக்கும் குடும்பங்கள் உண்டு .கஷ்டங்கள் உண்டு என்று ஒரு நாவிதரின் பார்வையில் இருந்தும் இந்த நாவல் பயணிக்கிறது. சக மனிதர்களை காவியம் ஆக்கியது போல சலூன்  கடைக்காரர்களையும் ஒவ்வொரு நிமிடம் நினைக்க வைத்திருப்பார் இந்த நாவல் முழுவதும்

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday, 23 July 2025

136

#கற்கை_நன்றே_136

தனிமை இரண்டு விதம்.

தனிமையாய் ஆகுவது..
தனிமையாய் ஆக்கப்படுவது.

இரண்டுமே..
வெவ்வேறு பாடங்களை 
கற்றுக் கொடுக்கிறது.

-பாலகுமாரன்

தனிமை என்பதன் பொருளே மற்றவர்களின் சிந்தனையோட்டம் நம்மைப் பாதிக்காமல் இருப்பதுதான். மற்றவர்களின் சிந்தனை நம்மைப் பாதித்தால் நாம் எதிர்வினை மட்டுமே ஆற்றுவோம். யார் சிந்தனையும் நம் மேல் படாத நேரங்களில் மட்டுமே சுயமாகச் சிந்திப்போம் என்கிறார் நியாண்டர் செலவன்..மேலும் தனிமையின் பொருள் குறித்து கூறுகிறார்..

ஊடகம், தொலைக்காட்சி, செல்ஃபோன், நேரடி உரையாடல். அனைத்தையும் தவிர்த்துவிட்டு ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது தனிமையில் இருக்கவேண்டும். அதற்காகப் பூட்டிய அறைக்குள் உட்கார்ந்திருக்கக் கூடாது. எழுந்து நடக்கவேண்டும். இது நான் சொல்வதல்ல. தத்துவஞானிகள் பலரும் சொல்வது இதுவே.

 ‘உலகை மாற்றும் சிந்தனைகள் அனைத்துமே தனிமையில் நடந்து செல்கையில் தோன்றுபவையே’ என்கிறார் நீட்சே. சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு அவரது நீண்ட நடைப்பயணத்தில் உருவானதே. தன் மாலை நேரத் தனிமை நடையை எப்போதும், எதற்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டார் டார்வின். 

கவிஞர் வில்லியம் வர்ட்ஸ்வர்த்தின் கவிதைகள் அவரது நடையில் உருவானவையே.நீட்சே ஒரு நோட்டு, பென்சிலுடன் நடப்பார். நடக்கையில் தோன்றும் சிந்தனைகளை எழுதி வைத்துக் குறிப்பு எடுத்துக்கொள்வார். மீண்டும் நடப்பார். அவர் அளவுக்கு நடந்த தத்துவஞானிகள் யாருமிலர். அவர் நடந்துகொண்டே சிந்திப்பதைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். 

‘எத்தனைக்கு எத்தனை குறைவாக உட்காரமுடிகிறதோ அத்தனை குறைவாக உட்காருங்கள். சுதந்திரமான வெளியிலும் சுத்தமான காற்றிலும் உருவாகாத எந்தச் சிந்தனைகளையும் நம்பாதீர்கள். அனைத்துத் தீமைகளும் கசடுகளும் உட்கார்ந்து சிந்திப்பதில் உருவாகின்றவையே.’ ஒரு நாளைக்கு எட்டுமணிநேரம் நடப்பார் நீட்சே. இப்படி நடந்து குறிப்புகள் எழுதியே உலகை மாற்றிய பெரும் நூல்களை எழுதி முடித்தார். 

ஓடுவது உடற்பயிற்சிக்கு. கூட்டமாகப் பேசியபடி நடப்பது சோசியலைஸிங் செய்ய. தனிமையில் நடப்பது மனதுக்கான பயிற்சி.  முழுநேரமும் தனிமையில் இருக்கமுடியாது. முழுநேரமும் மற்றவர்களுடன் இருக்கவும் முடியாது. தினம் கொஞ்ச நேரம் நாம் நம்முடன் மட்டுமே இருக்கவேண்டும். நம் வாழ்க்கையே அதனால் மாறும். ‘ஆய்வுகள் பலவும் இதனால் மூளையின் ஹிப்பாகாம்பஸ் பகுதி பெரிதாவதாகவும், மூளையின் பழைய செல்கள் உதிர்ந்து புதிய செல்கள் வளர்வதாகவும் கூறுகின்றன. ஏனெனில் நடக்கையில் மூளைக்குக் கூடுதலாக ரத்தம் பாய்கிறது. அப்போது தோன்றும் சிந்தனைகள் புதிதானவையாக இருக்கும்.

‘சமூக வலைத்தளங்களில் பிறரது மகிழ்ச்சி, இன்பம், துன்பம், ஆவேசம், அறச்சீற்றம் அனைத்தும் நம்மைப் பாதிக்கின்றன. நம்மை அறியாமல் அவற்றுக்கு நம் மனதில் இடம்கொடுக்கிறோம்.அவற்றிற்கு இடம் தராமல் தனிமை பழகுவோம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

92


#Reading_Marathon2025
#25RM055

Book No:92/100+
Pages:-248

பருக்கை
-வீரபாண்டியன்

மலைவாழை அல்லவோ கல்வி என்ற வரிகள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ள கல்வியை எப்பாடுபட்டேனும் பெற துடிக்கும் ஏழை மாணவர்கள் பெருநகரங்களுக்கு படையெடுத்துச் செல்வது கல்வியை வென்றெடுக்கத்தான். அந்த வகையில் ஊர் புற கிராமங்களில் இருந்து சென்னைக்கு முதுகலை பட்டப் படிப்புக்கு வரும் மாணவர்கள் விடுதியில் தங்கி பயில்கின்றனர். ஒருபுறம் கல்லூரி மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபட்டு, விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் வந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம் .

ஆனால் மறுபுறம் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலையாக.. சமையல் உதவியாளராக, பரிமாறுபவர்களாக ,பல்வேறு பரிணாமங்களை எடுத்து தங்களுடைய பொருளாதார நெருக்கடிகளை தாங்கிக் கொண்டு கல்வியையும் பயின்று வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில் சிலம்பு செல்வா சுரேஷ்,சக்தி ஆகியோர் பட்ட மேற்படிப்புக்காக விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். கிடைக்கும் சொற்ப நேரங்களில் படிப்புடன் சேர்ந்து கேட்டரிங் ஏஜென்டிடம் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நான்கு மாணவர்களின் வாழ்வியல் சித்திரம் தான் இந்த நாவல் நாவலின் மையப் பகுதியாக சாப்பாடு முக்கிய கதாபாத்திரமாக வந்து கொண்டே இருக்கிறது.
விடுதிகளில் சரியான உணவு வழங்காமல் இது போன்ற உணவு வகைகளை சுவைத்துப் பார்க்க மாணவர்களை தூண்டுகிறது ஒவ்வொரு பந்தி முடிந்தவுடனும் பசியுடனும் கடைசி பந்துக்காக காத்திருக்கும் அவர்களின் ஏக்கம் கண் முன் வருகிறது.

இந்த கதையின்  மாந்தர்கள் திருமண நிகழ்வுகளில் பங்கேற்று உணவு பரிமாறும் மாணவர்களாக இருந்து வருகின்றனர். பணத்தின் தேவை அவர்களை இந்த சூழலுக்கு தள்ளி இருக்கிறது. சென்னையின் முதல் பாரம் தண்ணீர் கேனை சுமப்பதில் தான் துவங்கியது என்று சக்திவேல் எனும் மாணவர் எழுதியிருப்பார் .அதே நேரம் சுரேஷ் என்பவர் அந்த நள்ளிரவிலும் கூட புத்தகத்தை எடுத்து திருமணம் மண்டபத்தில் படித்துக் கொண்டு படிப்பு தன் பிடிமானம் என்று விளக்குகிறார்.

இன்னொரு மாணவர் எத்தகைய சூழலிலும் தம் கஷ்டங்களை பகடி செய்து கவிதை சொல்லுவார். இளம் மாணவர்களுக்கே உரிய எள்ளலுடன் கதை நகர்கிறது.ஒவ்வொரு முறை பந்தியில் பரிமாறும் போது ஆர்வம், கோபம், அமைதி அனைத்தும் அவர்களுக்கு வருவதை இயல்பாய் சொல்லியிருப்பார்.

ஆய்வுப் படிப்பு கேட்டரிங் வேலை என தொடர்ச்சியாக மாறி மாறி சென்று கொண்டிருக்கும்போது ஒரு முறை இனி வேலைக்குச் செல்லக்கூடாது என முடிவெடுக்கின்றனர். அப்போது பாடம் நடத்தும் ஆசிரியர் ஒரு இடத்தில் சாப்பாடு போடுவது ஒரு வேலை இல்லை தர்மம் என்கிறார். அது இவர்களின் தீர்மானத்தின் மீது தீக்குச்சி கிழித்து போட்டது போல இருக்கிறது. மனித ஆசைகள், முடிவுகள் எல்லாமே அப்படித்தானே நிலையில்லாத வாழ்க்கையில் சிலவற்றை நிலைப்படுத்த விரும்பும் போது ,நிலையாமை வந்து பாடம் புகட்டி விட்டு போகிறது என்று சரியான தருணத்தில் விளக்கி இருக்கிறார்.

இந்நாவலில் அவ்வப்போது வரும் ஒன்லைனர்கள் சுவாரஸ்யம் தருகின்றன..

*பூனைக்கு யார் மணி கட்டுவது? என்பது போல் யார் முதலில் தட்டை தூக்கிக்கொண்டு போவது என்று விழாவுக்கு வந்தவர்கள் ஆளாளுக்கு பார்த்துக் கொண்டிருந்தனர்.

*இத்தனை பிரச்சனைகள் வீட்டிலிருந்தாலும் வீடு தான் அவனது சந்தோசம். அங்கு தன் அவனது ஆத்மா உலாவி கொண்டிருக்கிறது
 
*ஒவ்வொருவரும் சாப்பிட்டு முடித்து எழும்போது, என் வயிறு என் கையைப் பிடித்து இழுத்தது 

*சாப்பாட்டுக்கும் பணத்துக்கும் என்ன வித்தியாசம் தான் 

சாப்பாட்ட serve பண்ண முடியும்
Save பண்ண முடியாது 
பணத்தை save பண்ண முடியும்
Serve பண்ண முடியாது

*இது என்ன ஒரு பூ.. புத்தகத்தில் தேன் எடுத்துக் கொண்டிருக்கிறது

இத்தனை மலைகளைத் தாண்டி வந்தது இந்த தேனுக்காக தானா?

உரையாடல்கள் வழியாகவும் அவர்கள் வேலை பார்ப்பதில் வழியாகவும் நாவல் பயணிக்கிறது. 
இயல்பான உரையாடல்களின் வழியே சாமானிய மக்களின் வாழ்வியலை நாவல் படம் பிடித்து காட்டுகிறது. பெரிய திருப்புமுனைகள் ஏதும் இந்த நாவலில் இல்லை கதை நேர்கோட்டிலேயே பயணிக்கிறது வரக்க வேறுபாடுகள் மாணவர்களை எவ்வாறு எல்லாம் அலைகழிக்கிறது என்பதை பேசுகிறது.

படிப்பு முடிந்து செல்லும் மாணவர்கள் பேருந்து நிலையம் வந்த போது புதிதாக வெவ்வேறு ஊர்களில் இருந்து பல மாணவர்கள் இறங்குவதை குறிப்பால் உணர்த்துகின்றனர். அவர்களும் நாளை கேட்டரிங் வேலைக்கு செல்வதோ அல்லது கிடைக்கும் சில பல வேலைகளில் செய்வதோ என அடுத்த தலைமுறையாக அவர்களை பார்ப்பதோடு பேருந்து புறப்படுகிறது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 22 July 2025

135


#கற்கை_நன்றே_135

தலைவன் என்பவன் தன்னுடைய வழியறிந்து,
தன்வழி நடந்து, வழிகாட்டுபவனாகவும் இருப்பான்
-ஜான். சி. மேக்ஸ்வெல்

செய்திகளை இன்றியமையாமல் வலியுறுத்துவது தலைமைதுவத்தின் முக்கிய பண்பாகும்.ஒருமுறை ஐன்ஸ்டீனின் உதவியாளர், ஒரு கண்ணாடி பாத்திரத்தை கொண்டு வந்து கொண்டிருந்தார். அடிக்கடி ஐன்ஸ்டீன் பத்திரம் பத்திரம் எனக் கூறினர்.ஐயா நாந்தான் கீழே விடவில்லையே என்றார்.அதற்கு நீ பாத்திரத்தை சரியான முறையில் கொண்டுவரத்தான் எச்சரித்தேன். கீழே விழுந்தபின் எச்சரிக்கை செய்ய முடியாது அல்லவா? என்றார்.

ஒரு செய்தியை திரும்ப திரும்ப கூறுவதன் நோக்கம் அதனை சரியாக செய்ய வேண்டும் என்பதற்காகத் தான். ஒரு சிலர் தான் அந்த வேலையைச் செய்தால் எவ்வாறு நேர்த்தியாக செய்வேனோ அதேபோல்.நீயும் செய்யவேண்டும் எனும் நோக்கத்தில் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டே இருப்பார்.பிறர் கூறும் போது நமக்கு சற்று அலட்சியமாய் தோன்றலாம்.. நாமே நமக்கு சில வார்தைகளை கூறிக் கொண்டே இருந்தால் அதுவே சுய முன்னேற்றம்.

ஒரு பிரபல அணிக்காக விளையாடிய பேஸ்பால் வீரர் ஒருவர் ஒரு போட்டியின்போது மிகவும் களைத்துப் போய்விட்டார். வெப்பநிலை 101 டிகிரியாக இருந்தது. சுட்டெரிக்கும் மதிய வெயிலில் கடினமாக விளையாடியதில் அவர் சில கிலோ எடை குறைந்திருந்தார். போட்டியில் ஒரு சமயத்தில் அவர் மிகவும் தளர்ந்துவிட்டார். 

தான் இழந்து கொண்டிருந்த சக்தியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள  வழிமுறையைக் கையாண்டார். தன் தாய் கூறும் சமயப்பாடலான.."வெற்றிக்காக காத்திருப்பவர்கள் புது வலிமை கிடைக்கப் பெறுவார்கள்; கழுகுகளைப்போல தங்கள் இறக்கைகளைக் கொண்டு உயர எழுவார்கள்; அவர்கள் ஓடினாலும் களைப்படைய மாட்டார்கள்; நடந்தாலும் சோர்ந்து போக மாட்டார்கள்." இந்த அனுபவத்தைப் பெற்ற ஃபிராங்க் ஹில்லர் என்ற விளையாட்டு வீரர், விளையாட்டு மைதானத்தில் நின்று இந்த வரிகளைக் கூறும்போது, உண்மையிலேயே தன் வலிமை புதுப்பிக்கப்பட்டதாகவும், போட்டி முடிந்த பிறகும்கூடத் தான் சோர்வடையவில்லை என்றும் என்னிடம் கூறினார். 

"ஆற்றலை உற்பத்தி செய்யும் ஒரு சக்தி வாய்ந்த எண்ணத்தை நான் என் மனத்தில் விதைத்தேன்," என்று கூறி அவர் தன் உத்தியை விளக்கினார். நாம் எவ்வாறு உணர்கிறோம் என்று நாம் சிந்திக்கும் விதம், உடலளவில் நாம் உண்மையிலேயே எவ்வாறு உணர்கிறோம் என்பதில் ஒரு நிச்சயமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

நீங்கள் களைப்பாக இருப்பதாக உங்கள் மனம் கூறினால், உங்கள் உடல் இயக்கங்களும், நரம்புகளும், தசைகளும் அந்த உண்மையை ஏற்றுக் கொள்கின்றன. உங்கள் மனம் ஒரு விஷயத்தில் தீவிர ஆர்வத்துடன் இருந்தால், ஒரு நடவடிக்கையைக் காலவரையறை இன்றி உங்களால் செய்து கொண்டே இருக்க முடியும். 

பயமுறுத்தல்களால் நீங்கள் ஊக்கப்படுத்த முடியும், மேலும் பாராட்டுக்களாலும் ஊக்கப்படுத்த முடியும். ஆனால், இவ்விரண்டு வழிகளுமே தற்காலிகமானவைதான். சுயமாக ஊக்கமளித்துக் கொள்ளுதலே நிரந்தரமானது."என்கிறார் ஹோமர் ரைஸ்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

91


#Reading_Marathon2025
#25RM055

Book No:91/100+
Pages:-158

‘எழுதித் தீராத பக்கங்கள்’

- செல்வம் அருளானந்தம் 

விண்வெளி வீரர் யூரிககாரின் விண்வெளி பயணத்தில் பூமியைப் பார்த்து.. என் பூமி எவ்வளவு அழகாக இருக்கிறது. வெளியே வந்து பார்க்கும் போது தான் நாம் வாழும் வாழ்க்கை, ஊர், நாடு எவ்வளவு அழகென்று தெரியவரும். இப்புத்தகத்தின் முக்கிய அம்சமே ஊரைவிட்டு செல்லும் அகதியாக செல்லும் ஒருவன்.. இறுதவரை பிறந்த நாட்டை நினைத்து வாழ்வதுதான்.புலம்பெயர் வாழ்க்கையின் பெருந்துணை  பகல் கனவுகள்தான்.இறந்தபின் வரும் பிணம் எனும் பெயர்போல நாட்டை விட்டு சென்றால் அகதி எனும் பெயர்தான் சொந்தம்.

தழும்புகளைத் தடவிக்கொண்டே காயங்களை பற்றிப் பேசும் போது அதுவலியாகத் தெரியாது.. அனுபவமாகத் தெரியும்.கஷ்டமான வாழ்க்கையை பின்னால் எண்ணிப் பார்க்கும் போது அது சாகசமாகத் தெரியும். நாமா அந்த சவால்களைத் தாண்டி வந்தோம் என எண்ணத்தோன்றும்.எழுத்தாளர் இனப்போராட்டத்தால் புலம்பெயர்ந்த

துக்க அனுபவத்தினை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
வாழ்க்கை மற்றும் போராட்டங்களின் கசப்பையும், இனிமையையும் சமநிலையில் கூறுகிறார்.

தன்னைப்ப்போலவே அயல் நாட்டில் புலம்பெயர்ந்த ஒருவரை சந்தித்து உரையாடுகிறார்.அதில் கேலியும் கிண்டலும் தெரிகின்றன.மதுவுடன் சமையல் செய்யப்படும் ஆண்கள் கடந்த கால ஏக்கச் சுவைகளில் ஒன்றாகும்.புன்னகையும் வெரிகுட் எனும் வார்தையும் சிறந்த சமாளிப்பு எந்திரமாக பயன்படுகிறது.

பிரான்ஸ், கனடா,ஜெர்மன் என புலம்பெயர் வாழ்வு அமைந்தது. உணவுச்சாலையில் பாத்துரம் கழுவுதல்,துப்புரவு, வீட்டுவேலை என இவைமூன்றும்தான் பெரும்பாலும் வழங்கப்படும். மொழி தெரியாததால் அடிக்கடி வேலை இழப்பு என தன் அனுபவத்தை கூறுகிறார். ஒரு இடத்தில் விசா பேப்பரை அங்குள்ள அலுவலரிடம் காட்டிய போது.. அவர் சிறுகதை வாசிப்பது போல நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார் என்பார்.

அங்கு பணிபுரியும் ஒரு பெண் வெரிகுட் என்றாள்.அதற்கு பெரிய அர்த்தமெதுவும் அவளிடம் இருப்பதாக தெரியவில்லை என்று பகடி செய்கிறார்.

அயல்நாட்டு நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது கேளிக்கையில் ஈடுபடுவது என செல்லும் போது..உள்ளூரில் ஜாதி பார்க்கும் அவர்கள் அங்கு சென்றவுடன் யாரும்  ஜாதி பார்க்கவில்லை என்பது பெரும்வியப்பாய் பட்டது அவருக்கு.

ஆனால் அரசியல் பேசுகிறார்கள்.  தமிழ் தேசியத்துக்கும் கம்யூனிஸ்ட்டும் இடையில் வாக்குவாதம் செய்கிறார்கள்.ரசிக சண்டை எம். ஜி.ஆர், சிவாஜிக்குமிடையே நடக்கும்.

ஞாயிற்றுக்கிழமை சமையல் இடியாப்பத்துக்கு முயன்று முறுக்கு தின்று மகிழ்வதுதான்.மண்ணின் மனம் போல் இனிய மணம் ஏதுமில்லை.

அந்த வீட்டின் ஜன்னல் சுவரிலும் இருந்தது..கூரையிலும் இருந்தது எனும் வரி சிந்திக்க வைக்கும்படி இருந்தது.ஆசிரியர் தனது சொந்த அனுபவங்களை மிக நுட்பமாகவும், நேர்மையாகவும் பகிர்கிறார். குறும்பான நகைச்சுவை, வாழ்க்கைப் பெருமூச்சு, பழக்கம் மற்றும் சூழல் வித்தியாசங்கள் – என்பவற்றை ஒவ்வொரு கட்டுரையிலும் வாசகன் உணர முடிகிறது.

 முதல் தலைமுறை புலம்பெயர் வாழ்வில் வரும் சிரமங்கள், எதிர்ப்புகள், மற்றும் சோகம் வரை, மனதைத் துளைக்கும் வகையில் வெளிப்படையாகக் கூறுகிறார். துயரமான அனுபவங்களைக் கூட நகைச்சுவையாக எழுதும் அவர் செம்மையான மனநிலையை வெளிப்படுத்துகிறார்.

பிரான்சில் தங்கியிருக்குமிடத்தில் வேறு ஒரு தமிழர் தங்க வருகிறார். அப்போது போர் பதட்ட சூழல்..இருப்பது பிரான்ஸ் என்றாலும் இலங்கையில் நடப்பது அவர்களுக்கு பதட்டத்தையே தருகிறது.
தாயகம் பற்றிய ஏக்கமும் புதிய சூழலுக்கிடையே உள்ள ஒட்டாத வாழ்வும் அவர்களை அலைகழிக்கிறது. தனிமையான பொழுதுகளில் மெல்லிய விளக்கொளியில்  ஊரில் உள்ளவர்களை நினைக்க வைக்கிறதுஎன்பது நமக்கும் ஏக்கத்தை வரவைக்கிறது. 

தயக்கங்கள் சோர்வாக்கும் போது காரணத்தோடும் காரணம் இல்லாமலும் மகிழ்ச்சி தரும் வேளையில் சில இடங்களை தேடி வருவார்.பாரிஸ் நகர சுய நினைவுகளில் மூழ்குவதற்கான இடம் அது.தன்னைத் தவிரி எல்லாரும் சந்தோசமாய் இருப்பது எரிச்சல் தரும் விஷயம்.விதியை நோவதைத் தவிர வேறு என் செய்ய முடியும். வேறு நாட்டிற்கு பறக்க வேண்டிய நேரம் வந்து..அட்லாண்டிக்சமுத்திரத்தில் பறப்பதுடன் இந்த வாழ்வியல்  அனுபவம் தொடர்கிறது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 21 July 2025

134


#கற்கை_நன்றே_134

இந்த உலகை அறிந்துகொள்ளுதல்,
பயன்படுத்துதல் என
அறிவியலின் இரண்டு விளைவுகள் உள்ளன.அறிவு பயன்பாடாக ஆகிறது,பயன்பாடு மேலும் அறிந்துகொள்ள தூண்டுதலை அளிக்கிறது. அறிவை அறிவியல் என்றும் பயன்பாட்டை தொழில்நுட்பம் என்றும் அழைக்கிறோம். 
இவ்வாறு தொடர்ச்சியாக அறிவும் பயன்பாடும் வளர்ந்ததே இன்றை நவீன உலகை உருவாக்கியது என்கிறார் ரஸல்

மனிதர்களின் சுபாவங்களைப் பற்றி
நியாண்டர் செல்வன் சொல்லும் போது..

இருவகையான மோசமான மனிதர்களை நாம் வாழ்நாளில் சந்திப்போம். ஒருவர் வெறும் பயமுறுத்துபவர். இவர்கள் விரும்புவது வெறும் ஆதிக்கத்தை மட்டுமே.அவர்களிடம் இருக்கும் ஒரே சக்தி பயமுறுத்தல் மட்டுமே. 70-80% பேர் வெத்து மிரட்டலுக்கே பயந்து போய், நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கிப் போய்விடுவார்கள். 

இரண்டாவது வகை ஸ்ட்ரீட் ஸ்மார்ட். இவர்களும் வெத்துவேட்டுகள்தான். ஆனால் நேரடியாக மிரட்ட மாட்டார்கள். இவர்களிடம் இருக்கும் ஒரே தன்மை சூழ்ச்சி மட்டுமே. கிட்டத்தட்ட 90-99% பேர் இவர்களிடம் ஏமாந்துவிடுவார்கள். ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் நம் மேல் இருக்கும் கோபம், வஞ்சம் அனைத்தையும் வெளியே காட்டிக்கொள்ளவே மாட்டார்கள்.

 சொல்லப்போனால் இவர்கள் ஆள் பார்த்து நன்றாக நடந்துகொள்வதால் இவர்களுக்கு எதிரிகள் எனவே யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் உலகம் முழுவதையும் இவர்கள் வேட்டை ஆடுவார்கள். சூழ்ச்சியை வெல்லும் சக்தி படைத்த ஒரே ஆயுதம் அறிவுதான். 

அறிவுக்கும் சூழ்ச்சிக்கும் என்ன வேறுபாடு? சூழ்ச்சி முட்டாளின் ஆயுதம். சூழ்ச்சிக்கு ஆழ்ந்த திட்டமிடல் கிடையாது. கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி ஏமாந்தவனை ஏய்ப்பதே சூழ்ச்சி. 
ஒருவனிடம் அது செல்லுபடி ஆகாது என்றால் அடுத்த வினாடி இன்னொருவனை நாடி நகர்ந்துவிடுவார்கள். சூழ்ச்சிக்கு எல்லைகள், வரம்புகள், நீதி, நேர்மை ஏதுமில்லை. அறிவற்ற முட்டாள்களே பெரும்பாலும் சூழ்ச்சியில் ஈடுபடுவதால் அதன் பேட்டர்ன், சிக்னல்கள் அனைத்தையும் கண்டுபிடிப்பது மிக எளிது. 

அறிவு ஒருவரை வீழ்த்தும் அளவு மிக வலுவான ஆயுதம். ஆனால் அறிவாளி தன் அறிவைப் பெரும்பாலும் அப்படி வீணாக்குவதில்லை. சூழ்ச்சியும், அறிவும் மோதுகையில் அறிவு சூழ்ச்சியை வெகு விரைவில் அடையாளம் கண்டுபிடித்துவிடும். சில வகை யுத்திகளை மட்டுமே கையாண்டு வெற்றி பெறும் சூழ்ச்சி, அறிவாளி முன் அது பயனாகாது போவதைக்கண்டு திகைக்கும். அதன்பின் அறிவை விட்டு விலகி எளிதான இரையைத் தேடி நகர்ந்துவிடும்.

அறிவு தன் கோபத்தை அத்தனை எளிதில் வெளிக்காட்டாது. உடனடியாகவும் காட்டாது. அறிவு வெற்று மிரட்டல்களை விடுக்காது. பார்த்தால் பயப்படும்படியாகவும் இருக்காது. ஆனால் ‘இதை நீ இனியும் தொடர்ந்தால் பதிலுக்கு நான் இதைச் செய்வேன்’ என அறிவு மிகத்தெளிவான எல்லைகளை வகுக்கும். அறிவு மிகத் தெளிவாக, மிகத் தீர்க்கமாக, வரம்புகளுக்குட்பட்டு ஆனால் திரும்ப அந்தப் பிரச்சினையே எழாதவாறு ஒரே அடியில் விஷயத்தைத் தீர்க்கும்.

  சூழ்ச்சியை அறிவு, ராஜதந்திரம் என நினைத்து ஏமாறுவது மிகப்பெரும் தவறு. அதைவிட மிகப்பெரிய தவறு அறிவை பலகீனம் என நினைத்துத் தொடர்ந்து தவறுகள் இழைப்பது தான்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

ஜானகிராம்


நம்ம கையில் ஒரு கப் காபியை வைத்திருக்கிறோம். அப்போது, யாரோ ஒருவர் வந்து நம் மீது மோதிவிடுகிறார், நம் கையில் இருந்த கோப்பை தடுமாறி, காபி நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் கொட்டிவிடுகிறது. அப்போது, யாராவது நம்மிடம், "ஏன் காபியைக் கொட்டினாய்?" என்று கேட்டால், நாம, "யாரோ நம் மீது மோதிவிட்டார்கள்" என்று சொல்லுவோம்.

இது உண்மையில் தவறான பதில்.

நமது கோப்பையில் காபி இருந்ததால் நாம காபியைக் கொட்டினோம். கோப்பையில் தேநீர் இருந்திருந்தால், நாம தேநீரைக் கொட்டியிருப்போம். அந்தக் கோப்பைக்குள் எது இருக்கிறதோ அதுவே வெளியே கொட்டும். எனவே, வாழ்க்கையில் எதாவது ஒரு தருணம் நம்மை உலுக்கும் போது, நமக்குள் உள்ளது தான் வெளியே வரும். நாம தடுமாறாத வரை அதை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொள்வது எளிது.

"என் கோப்பையில் என்ன இருக்கிறது?" என்று நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். எனது வாழ்க்கை கடினமாக மாறும் போது, என்ன கொட்டுகிறது என்று கவனிக்க வேண்டும். அது, மகிழ்ச்சி, நன்றி, அமைதி மற்றும் பணிவு போன்றவையா அல்லது கோபம், கசப்பு, பாதிக்கப்பட்ட மனநிலை மற்றும் விரக்தி சோகமா?

காலமும் வாழ்க்கையும், நம்மிடம் ஒரு கோப்பையை மட்டுமே வழங்குகிறது, ஆனா, அந்தக் கோப்பையை எவற்றால் நிரப்புவது என்பதை நாம் தான் தேர்வு செய்கிறோம்.  

நமது கோப்பைகள் இரக்கம், அன்பு, நன்றியுணர்வு, மன்னிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றால் நிரம்பியிருக்கட்டும். 

-ஜானகிராம்

Sunday, 20 July 2025

133


#கற்கை_நன்றே_133

கனவு ஓர் அதிசயக் கண்ணாடி;
அதில் மனிதன் எதை மறைக்கிறானோ அதைக் காண்கிறான்

-உருது கவிதையில்

வாழ்வில் கனவு காண்பது இயல்பு. பலர் அதனை வெளிப்படுத்துவார்கள். ஆனால் சிலர் சொல்லாமல்.அதற்கான முயற்சியில்.தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இரையை கவ்வும் உன்னிப்பு இருக்கும் மிருகம் போல.. நாள் தோறும் தங்களை வலுப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.ஜெயித்ததும் சொல்வார்கள்.சிலர் நிறைவேறவில்லை யெனில் தங்கள் நெருக்கமானவர்களிடம்.மட்டும் புலம்புவார்கள்.இது குறித்து இணையத்தில் படித்த ஒரு கதை..

ஒரு ஓநாய் கூட்டம் இருந்தது. அந்த கூட்டத்திலேயே மிக பலவீனமான ஓநாய் சொன்னது - "ஒரு நாள் நான் மிகவும் வலிமையானவன் ஆவேன்."

இதைக் கேட்டு அந்த கூட்டத்திலிருந்த எல்லா ஓநாய்களும் சிரித்தன - ஒரே ஒரு ஓநாயைத் தவிர. சிரிக்காத ஒரு ஓநாய் - அந்த கூட்டத்தின் மிக வலிமையான ஓநாய்.

ஏனென்றால், வலிமையான ஓநாய்க்குத் தெரியும் - மகத்துவம் என்பது மனதிற்குள் ஒரு சிறிய கனவாகவே துளிர் விடும். வெளியே ஒரு கர்ஜனையாக அல்ல.

கனவுகள் வலிமை வாய்ந்தவர்களுக்கு மட்டுமே உரியவை அல்ல. அவை கவனிக்கப்படாதவர்களின் நெருப்பு, குறைவாக மதிப்பிடப்பட்டவர்களின் தீப்பொறி.

ஒரு கனவு காண்பவரைச் சாதிப்பவரிடமிருந்து பிரிப்பது வலிமை அல்ல — நம்பிக்கை. ஒரு மனம் தளராத நம்பிக்கையும், அமைதியான நெகிழ்வுத்தன்மையும், அந்த கனவை அடைந்தே தீருவேன் என்கிற ஸ்திரத்தன்மையும் மட்டுமே கனவு காண்பவரை அந்த கனவைச் சாதிப்பவராக மாற்றுகிறது.

ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் உத்வேகத்துடன் எழுந்து, வெறியோடு போராடி, காயமடைந்து, வடுப்பட்டு, அவமானப்பட்டு, மொத்த கவனத்தையும் ஓரிடத்தில் செலுத்தி உழைக்கும் பிரமாண்டமான குணம் அது.

ஆகவே ஏளனமாகச் சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்.நீங்கள் அவர்களைத் தவறு என்று நிரூபிக்க இங்கே இல்லை.

நீங்கள் உங்களைச் சரி என்று நிரூபிக்க இங்கே இருக்கிறீர்கள்.

உங்களை நீங்களே தொடர்ந்து கட்டமையுங்கள், உங்களை நீங்களே தொடர்ந்து நம்புங்கள். 

ஏனென்றால் ஒரு நாள், நீங்கள் மட்டுமே எப்போதும் அறிந்திருந்த மிக வலிமையான ஓநாயை இந்த உலகம் பார்க்கும் - பார்த்து மிரண்டு போகும்.

செய்யும் பணி எதுவானாலும் அதில் கரைந்து போய் உச்சத்தைத் தொடவேண்டும், மிகச் சிறந்த விளைவுகளைப் பெறவேண்டும் என்கிற கனவை வளர்த்துக்கொள்ளுங்கள். மிகச் சிறந்ததைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம் என்னும் மனநிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்பார் பா.ரா

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

90


#Reading_Marathon2025
#25RM055

Book No:90/100+
Pages:-133

#ஒரே_எழுத்தாளர்_12மாதம்_12புத்தகங்கள்

நிழல் முற்றம்
-பெருமாள் முருகன் 

திரையரங்கம் எனபது மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாய் இருந்தது. வார இறுதி, பண்டிகை நாட்கள் எதுவாய் இருந்தாலும் திரையரங்கம் தான் ஒவ்வொருவரும் செல்லும் இடமாகும். திரையரங்கில் வேலைக்கு செல்வது அல்லது திரையரங்கில் யாரேனும் ஒருவரை தெரிந்து வைத்தல்  என்பது அரசாங்க அலுவலகத்தில் ஒருவரை தெரிந்து வைத்திருப்பது மாதிரி.. அவ்வளவு மதிப்பு. அதேபோல தியேட்டர் கேண்டீனில் பொருள் விற்பவரும் நம் மதிப்புக்கு உரியவரே. எல்லாரும் கூட்டமாய் சூழ்ந்திருக்கும் போது அல்ட்சியமாய் அனைவரையும் பார்த்து கடந்து விட்டு செல்வார்.

திரையரங்கையும் அதில் பணியாற்றும் வேலையாட்கள் பற்றியும் பெருமாள் முருகன் எழுதிய
நாவல் இது. தமிழில் பிரபலமான இடைவிடாத வாசகர்களைப் பெற்ற நாவல்களில் ஒன்றாகும்.
இந்த நாவல் 1970களில் சேலம் 

நகரில் சிறிய சினிமா திரையரங்குப் பணியாளர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ளவர்கள் அனைவரும் பொருளாதார பின்புலமில்லாதவர்கள்

அந்த வகையில் சக்திவேல், நடேசன், பெரியசாமி, விசுவன், பூதன்— ஆகியோர் கதையின் முக்கிய பாத்திரங்கள்.இவர்கள் தியேட்ட்ரில் முறுக்கு, சோடா போன்றவை விற்கும் அன்றாடம் காய்ச்சிகள். இவர்களின் வேலை, அனுபவம், வாழ்க்கை சூழல்களின் உலகம் தான் நாவல்.

திரையரங்கின் அன்றாட நிகழ்வுகளை கண்முன் படம் பிடித்து காட்டியிருப்பார்.
"விருத்துப்போன தன் கால்களை இழுத்துப்பார்த்தான் நீண்டு விறகுக்கட்டை போல் உயிர்ப்பித்திருந்தது" எனும் வரி.. நீண்ட நேரம் டிக்கெட் எடுக்க காத்திருந்தவனின் நிலையை சொல்கிறது.டிக்கெட் கொடுக்கப்பட்டவுடன் "வரிசை கலைக்கப்பட்ட எறும்புகளாய் கூட்டம் சிதறியது" என்றும்.. காட்சிகள் இல்லாதபோது "திரையரங்கின் சுவர்கள் ஆசுவாசமாய் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தன'" எனும் வரியும் திரையரங்கு குறித்த நினைவுகளை சிந்திக்க வைக்கின்றன.

நாவலின் உள்ள கதை நகர்தல் எல்லாமே கட் பன்னின்னா சக்திவேல் என்ன செய்து கொண்டிருந்தார், மேனேஜர்,சைக்கிள் ஸ்டாண்ட், சோடா கடை முதலாளி செய்யும் செய்கைகள் என சினிமா பானி எடிட்டிங் விதத்தில்.அமைந்தது சிறப்பு.அடக்கமான மொழிநடையுடனும், துல்லியமான வாசகரை உருவாக்கும் எழுத்துக்களும் இந்நாவலின் தனிச்சிறப்பு.சமூகத்தில் கடைநிலை மனிதர்களின் வாழ்வியல் அனுபவங்களை, புறக்கணிக்கப்பட்ட சிறிய மனிதர்களின் கதையை, மிக நம்பகமான மற்றும் நேரடி நயத்துடன் வெளிப்படுத்துகிறது

 சொற்ப ஊதியத்துக்கு மனைவியை பிரிந்து பணி செய்யும் பணியாள், தந்தையை வெறுத்து திரையரங்க வேலைக்கு வந்த சக்திவேல், டிக்கெட்கொடுத்தது போகமீதி நேரம் தாயகட்டை, சீட்டாட்டம், ஊருக்குள் போஸ்டர் ஒட்டும் பணி,ஆட்கள் குறைவாய் இருந்தால் போய் அடுத்த காட்சிக்கு வரச் சொல்லுவது என தியேட்டர் அனுபவங்கள் கண் முன் வந்தது.

சோடா கடை முதலாளி வீட்டிற்கு பாதை அமைக்க போஸ்டர் ஒட்டும் பணியின் போது சேர்த்து அந்த வேலையை கொடுக்கிறார். ஐவரும் ஆசையாய் செல்கின்றனர். நிலத்தகராறு பங்காளிச்சண்டை நடக்கிறது.சண்டை முடிந்து நடேசன் தோளில் ஏதோ விழ அலறல்.சினிமா பாணி போல் கட்

அடுத்து சக்திவேல் தூங்கிக் கொண்டிருக்க சோடா கடைபூட்டு தியேட்டரில் உடைந்து களவு போயிருந்தது. எல்லோரையும் விசாரித்துக் கொண்டிருந்தார் சோடா கடை முதலாளி.நண்பர்களை ஒரு கட்டத்தில் இழந்த வெறுமையில் சக்திவேல் என்ன முடிவு எடுத்தான் என்பது கதை.

இந்நாவல் துப்பறியும்.கதையோ வாழ்வை புரட்டிப் போடும் நாவலோ அல்ல. திரையரங்கில் வாலிப வயதை நெருங்கியவர்கள் வாழும் வாழ்க்கை, அங்கே பிழைப்பு நடத்துபவர்களின் அனுபவங்கள் விவரிக்கப்படுகின்றன.
வெளிச்சம் குறைந்த வாழ்க்கையிலும் மனிதர்கள், சந்தோஷ நேரங்களை தங்கள் முறையில் எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்ற யதார்த்தவாதம் வெளிப்படுகிறது.

நாஞ்சில் நாடன் சொல்வது போல படைப்பின் மீது தத்துவச் சாயம் பூசாமலும், அல்லது தத்துவ சாயத்தில் முக்கி எடுக்காமலும் அசலான மனிதர்களின் வாழ்வியல் அனுபவங்களை இதில் பதிவு செய்துள்ளார்

தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday, 18 July 2025

டெட்டனஸ்


கால்களில் முள் தைத்து விட்டாலோ 
ஆணி பாய்ந்து விட்டாலோ 
விபத்து ஏற்பட்டு  லேசான காயம் முதல் பெரிய ரத்தக் காயங்கள் ஏற்படும் போது

விவரம் தெரிந்த பெரியவர்களும் உற்றார் உறவினரும்
"அந்த செப்டிக் ஊசிய போட்டுட்டு வந்துரு"
என்றும் 
"டிடி ஊசி போட்டாச்சா?" என்றும் வாஞ்சையுடன் விசாரிப்பதைப் பார்க்க முடியும். 

லேசான ரத்தக் காயம் ஏற்பட்டாலும் 
டிடி ஊசி போட வேண்டும் சரி.. 
எதற்காக அந்த  செப்டிக் / டிடி ஊசி  போடப்படுகிறது  என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? 

வாங்க பார்ப்போம்... 

800 கோடி ஹோமோசேப்பியன்ஸ் ( நவீன மனிதர்கள்) இப்புவியில் மூன்று லட்சம் வருடங்களாக  வாழ்கிறோம். 
ஆனால் 
உலகம் தோன்றிய காலந்தொட்டு 
முன் தோன்றிய முதல் மூத்தகுடிகள் 
யாரென்று பார்த்தால் 
நுண்ணியிரிகளான 
பாக்டீரியா 
வைரஸ் 
பூஞ்சை ஆகியன என்பது ஹோமோசேப்பியன்களாகிய  நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. 

இப்போதும் கூட நாம் "ப்ளேனெட்  ஆஃப் மைக்ரோப்ஸ்" ( நுண்ணியிரிகளின் கிருகம்) த்தில் கூட அனுசரித்து ஒண்டிக்குடித்தனம் நடத்தி வருகிறோம் என்று கூறினாலும் தகும்.

நமது உடலில் ட்ரில்லியன் செல்கள் இருக்கின்றன என்று நாம் மார்தட்டினாலும் 
அதையொத்த அளவில் பாக்டீரியாக்கள் நமது உடலில் வாழ்ந்து வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது. 

அத்தகைய பாக்டீரியாக்களில் 
நல்லவர்களும் உண்டு
தீயவர்களும் உண்டு. 

மனிதர்களுக்கு பேலியோலித்திக் காலம் தொட்டு  தீது விளைவித்து வரும் பாக்டீரியாக்களை வகுத்தால் அதில் 
முக்கியமானவையாக
"க்ளாஸ்ட்ரீடியம்" எனும் இந்தக் குடும்பம் வரும். 

க்ளாஸ்ட்ரீடியம் பெர்ஃப்ரிஞ்சன்ஸ் 
க்ளாஸ்ட்ரீடியம் டெஃபிசில் 
க்ளாஸ்ட்ரீடியம் பாட்டுலினம்  
என இந்த பரம்பரையின் வகையறாக்கள் நமக்கு தீது மட்டுமே செய்து பழக்கப்பட்டவை. 

அவற்றுள் முக்கியமான வகையறா தான்
"க்ளாஸ்ட்ரீடியம் டெட்டானி"
( Clostridium tetani) 
இந்த வகை பாக்டீரியாக்கள் 
நமது உடலுக்குள் புகுந்து நோய் உண்டாக்கும் போது 
கடுமையான தசை இறுக்கத்தை ஏற்படுத்தி 
தசைகளை முறுக்குவதால் "டெட்டானஸ்- தசை முறுக்கும் நோய்" என்று பெயரிடப்பட்டன. 

தமிழில் இந்த நோய்க்கு
"இரண ஜன்னி" என்று பெயரிடப்பட்டுள்ளது 

இரணம் = புண் / காயம்

ஆம்.. ஒரு காயமோ புண்ணோ ஏற்பட்ட பிறகு வரும் ஜன்னி = ஜுரம்  = காய்ச்சல் 
என்பதால் இந்த காரணப்பெயர் வந்தது. 

க்ளாஸ்ட்ரீடியம் டெட்டானி பாக்டீரியா 
உலகமெங்கும் கல் - மண் - புல் - முள் என்று சகலத்திலும் வியாபித்து இருக்கிறது. 

வெளியுலகில் இருக்கும் போது 
அதன் வித்திகளாக ( SPORES) 
அமைதியாக உயிரற்றவை போன்று இருக்கும். 

மனிதர்கள்/விலங்குகளில் உடலுக்குள் சென்று தோதான வாகான சூழல் ஏற்பட்டதும் மீண்டும் உயிர்பெற்று 
பல்கிப்பெருகி டெட்டானஸ் நோயை உண்டாக்கும். 

டெட்டானஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு 
நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட்டு 
தசைகள் அனைத்தும் இறுக்கமடைகின்றன.  

குறிப்பாக 
தாடை இறுகக் கட்டிக் கொள்ளும். இதை "பூட்டப்பட்ட தாடை" என்று கூறுகிறோம். 
இதனால் எதையும் உண்ணவோ பருகவோ முடியாது. 

நெஞ்சுப் பகுதி தசைகள் இறுக்கம் கண்டால் மூச்சு விட முடியாது. 

இன்னும் நோய் தீவிரம் அடையும் போது 
கழுத்து - முதுகு பகுதி தசைகள் அனைத்தும் ஒரு சேர தீவிரமாக இறுகிக்கொள்ள 
வில் போல நோயாளி வளைந்து படுக்கையில் கிடப்பார். 

இத்தகைய கொடுமையான பிணியைச் சந்தித்து முறையான தீவிர உயர் சிகிச்சை வழங்காமல் விட்டால் மரணம் தழுவுவது திண்ணம். 

இத்தகைய கொடூரமான நோய் தற்போது 
அரிதினும் அரிதாக மாறிவிட்டதற்கான முக்கிய காரணம் 

இந்த ரணஜன்னிக்கு எதிரான தடுப்பூசிகள் நமது தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இலவச தடுப்பூசிகளாக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதே என்றால் அதில் எந்த மிகையுமில்லை.

குழந்தை பிறந்த 
ஆறாவது வாரம் (PENTAVALENT 1)
பத்தாவது வாரம் ( PENTAVALENT 2) 
பதினான்காம் வாரம் ( PENTAVALENT 3)  என போடப்படும் 
ஐந்து நோய்களைத் தடுக்கும் 
பெண்டாவேலண்ட் ஊசியில் டெட்டானஸ் தடுப்பு மருந்தும் உள்ளது. 

அதற்குப் பிறகு 
முதல் பூஸ்டர் 
16 முதல் 24 மாதங்களிலும் ( DPT-1 

இரண்டாவது பூஸ்டர் 
ஐந்து முதல் ஆறு வயதிலும் (DT-2) 

அதற்குப் பிறகு 
10 வயதிலும் ( TdaP1) 
16 வயதிலும் (Tdap2) 
இந்த ரணஜன்னிக்கு எதிரான தடுப்பூசியை 
அரசு இலவசமாக மக்களுக்கு வழங்கி வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். 

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 
அவர்களின் முதல் மூன்று மாத கர்ப்ப காலத்திலேயே ஒரு மாத இடைவெளி விட்டு இருமுறை டெட்டானஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. 

 2015 ஆம் ஆண்டு முதல் 
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரணஜன்னி 
பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் ரணஜன்னி ஆகியவற்றை இந்தியாவில் இருந்து நீக்கியதில்- இந்தத் தடுப்பூசிக்கு முக்கியப் பங்கு உண்டு. 

2021ஆம் ஆண்டு 
எடுக்கப்பட்ட ஆய்வில் 
இந்தியாவில் 1240 டெட்டானஸ் நோய் தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பதிவு செய்யப்படாமல் சில ஆயிரம் இருக்கக் கூடும். 

கடந்த மார்ச் மாதம் கூட 
அஞ்செட்டி எனும் ஊரில் 
ஐந்து வயது சிறுவன் டெட்டானஸ் ஏற்பட்டு மரணமடைந்தது கவனத்தை ஈர்த்தது. 

இந்த சூழ்நிலையில் டெட்டானஸ் குறித்து 
தென்னிந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வுகளில் 
2001 முதல் 2010 காலத்தில் மைசூரில் உள்ள மருத்துவமனையில் 512 டெட்டானஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர் 

அதில் 379 பேர் ஆண்கள் 
133 பேர் பெண்கள் 

நோய் பாதித்து இறந்தவர்கள் 42.2% 

இறந்தவர்களில் அதிகமானோர் 40 வயதுக்கு மேல் இருந்தவர்கள். 

மற்றொரு ஆய்வில் 
2017 முதல் 2019 காலக்கட்டத்தில் 
பதிவு செய்யப்பட்ட 
58 டெட்டானஸ் தொற்றாளர்களையும் 
வைத்து பெறப்பட்ட முடிவுகள் 

டெட்டானஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 
பெரும்பான்மையினர் விவசாயிகள். 

வெறும் காலில் நடந்து செல்பவர்கள். 

அதிகமான காயங்கள் - கால்களிலும் பின் கைகளிலும்  ஏற்பட்டன. 
குண்டூசியை வைத்து பல் குத்தியும் சிலருக்கு டெட்டானஸ் ஏற்பட்டது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வில் 
டெட்டானஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 
18% மரணம் ஏற்பட்டுள்ளது. 

காயம் ஏற்பட்டவுடன் உடனடியாக 
காயம்பட்ட இடத்தை 
போவிடோன் ஐயோடின் திரவத்தைக் கொண்டு சுத்தம் செய்து கல்/ மண் போன்றவற்றை  நீக்கி விட்டு 
உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெற வேண்டும். 

சாதாரண காயம் என்றோ 
கல் / மண் போன்றவை பட்டு  அசுத்தம் அடையாத காயம் என்றோ 
முள் / ஆணி குத்தினாலும் ரத்தம் வராத காயம் என்றோ உதாசீனம் செய்யக்கூடாது. 

மேற்கூறிய அனைத்துக்கும் டெட்டானஸ் ஷாட் வழங்கப்பட வேண்டும். 

டெட்டானஸ் அறிகுறிகள் தோன்றியவுடனே 
தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் செய்யப்பட வேண்டும். 

உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி அதனுடன் 
டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் எனும் உடனடி முறிவு மருந்து ஆகியவை வழங்கப்படும். 
செயற்கை சுவாசக்கருவியில் பொருத்துதல். நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் தேவைப்படும் தன்மை. 
தசை இறுக்கத்தை சரிசெய்யும் தளர்வு மருந்துகள் என மூன்று முதல் நான்கு வாரங்கள் கடுமையான போராட்டம் நடக்கும். 

தற்போதைய சூழ்நிலையில் 
செயற்கை சுவாச கருவிகள், 
தசை தளர்த்தி மருந்துகள் 
டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதால் 
இறப்பு விகிதம் குறைந்துள்ளது. 

எனினும், 
எளிதான தடுப்பூசியால் தடுக்க முடிந்த ஒரு நோய் குறித்து விழிப்புணர்வு பெறாமல் 
இருப்பது தவறு. 

தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த பின்
ஆறாவது வாரம் 
பத்தாவது வாரம் 
பதினான்காம் வாரம் 

அதற்குப் பிறகு 16 முதல் 24 மாதங்கள் 

அதற்குப் பின் ஐந்து முதல் ஆறு வயதுக்குள் 

அதற்குப் பின் பத்து வயதிலும் 
பதினாறு வயதிலும் டெட்டானஸ் தடுப்பூசியை வழங்குவதை உறுதி செய்யவும். 

காயம் சிறிதோ பெரிதோ 
உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெறுவதை வழக்கமாகக் கொள்ளவும். 
ஏற்கனவே டிடி ஊசியை ஐந்து வருடங்களுக்குள் போட்டிருந்தால் தேவையில்லை. எப்போது போட்டோம் என்று சந்தேகம் இருப்பின் காயத்துக்கு பின்பு டிடி  தடுப்பூசி பெறுவது நல்லது. அதனால் எந்த பாதகமும் இல்லை. 

டெட்டானஸ் ஏற்பட்டு மரணமடைந்த சிலருக்கு காயமுற்ற பின் டிடி ஊசி போடப்பட்டும் டெட்டானஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம், 
ஏற்கனவே முறையான பூஸ்டர் தடுப்பூசிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெறாமல் விட்டு, காயம் ஏற்பட்ட பின் தடுப்பூசி போட்டாலும் 
அதற்குரிய எதிர்ப்பு சக்தி போதுமான அளவு வெளிப்படாமல் போவதால் டெட்டானஸ் கிருமி வென்று விடுகிறது. 

சமீபத்தில் டெட்டானஸ் ஏற்பட்டு இறந்த அஞ்செட்டி கிராம சிறுவனுக்கும் அவனுக்கு காயம் ஏற்பட்ட பின் உடனடியாக டிடி ஊசி போடப்பட்டது. ஆயினும் அவனுக்கு டெட்டானஸ் நோய் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது 

இது போன்ற சூழ்நிலையை கருத்தில் 
கொண்டு தயவு கூர்ந்து 
நமது பிள்ளைகளுக்கு அவர்கள் பிறந்த
முதல் வருட தடுப்பூசிகளை சிறப்பாக சரியாக வழங்கும் நாம்.. 

அவர்களின் ஐந்தாவது வயது (DT) , பத்தாவது வயது, பதினாறாம் வயது அதற்குப் பிறகு பத்து வருடம் ஒருமுறை டெட்டானஸ்  தடுப்பூசிகளையும் சரியாக வழங்கிடுவோம் என்று உறுதி ஏற்போம் 

டெட்டானஸை முற்றிலுமாக ஒழிப்போம் 

நன்றி 

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

Wednesday, 16 July 2025

132


#கற்கை_நன்றே_132

வேலை மகிழ்ச்சி தரும் போது,
வாழ்க்கை சந்தோஷமாகிறது.

வேலை கடமையாகும் போது,
வாழ்க்கை அடிமைத்தனமாகி விடுகிறது.

- மாக்சிம் கார்க்கி

நவீன காலங்களில வேலை என்பது வெறுப்பை கொட்டும் இடமாகப் பார்க்கப்படுகிறது.உற்சாகமற்ற வேலையை இனிப்பு போன சூயிங்கம்மை மெல்வது போல சாரமற்றதாய் பார்க்கப்படுகிறது. வேலை மீதான் உற்சாகம் குறைந்து கொண்டே வருகிறது. அதிக வேலை செய்பவர்களை பார்த்து.. குறைவால வேலை செய்பவர் ஏமாளி போல பார்க்கிறார்.இவ்லோ வேலை செய்றியே உனக்கு என்ன அவர்டா கொடுக்கப் போறாங்க? எனக் கேட்கிறார்கள்.மனம் உடனே ஒப்பீடு செய்து சுயபரிசோதனை செய்கிறது. அப்படி உழைக்கனுமா என எண்ணி நம்மை நாமே கேள்வி கேட்கிறோம். வேலை மீதான வெறுப்புனர்வோடு இந்த விரக்தியும் சேர்ந்து கொள்கிறது.

வேலைசெய்வதற்கான உற்சாகமின்மைதான் இதற்கெல்லாம் காரணமென நார்மன் வின்செண்ட் பீல் குறிப்பிடுகிறார்.அவர் மேற்கோள் சொல்கிறார்..

உளவியல் மருத்துவரான டாக்டர் ரோலோ மே. நியூயார்க்கில் ஒரு கூட்டத்தில் பேசியபோது,"வாழ்வில் திறம்பட இயங்குவதற்கு உங்களுக்கு உதவி செய்யும் ஓர் அம்சம்தான் உங்களுடைய ஆளுமை. ஒவ்வொருவரிடமும் இரண்டு விதமான ஆளுமைத் திறன்கள் இருக்கின்றன. நீங்கள் மற்றவர்மீது எப்படிப்பட்டதொரு தாக்கத்தை விளைவிக்கிறீர்கள் என்பது ஒன்று. மற்றவர்கள் உங்கள்மீது எத்தகைய தாக்கத்தை விளைவிக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்பது இரண்டாவது. இவை இரண்டும் சேர்ந்ததுதான் உங்களுடைய ஆளுமை," என்று குறிப்பிட்டார்.

டேல் கார்னகி வேலை குறித்த உற்சாகத்தைப் பெறுவதற்கு.. தான் வேண்டுமென்றே வேலை,பணம், சொத்துக்கள்,புகழை இழந்துவிட்டதாக கற்பனை செய்வேன்.கடும் வேதனையில் குதிப்பேன்.பின் நான் எவற்றையெல்லாம் இழந்திருக்கவில்லை என் கணக்கிட்டு பல மடங்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் மீட்டெடுப்பேன் என்றார்.

மற்றொரு உத்தி, உங்கள் வேலையை வேறு ஒருவர் எப்படிப் பார்ப்பார் என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அந்த நபர் அந்த வேலையை எப்படிச் செய்வார் என்று உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். தனக்குக் கொடுக்கப்படும் எந்த வேலையையும் மிகச் சிறப்பாகச் செய்யும் ஒரு நபராக அவர் இருக்கக்கூடும். சுவாரசியமற்றது என்று நீங்கள் கருதிய அந்த வேலைக்கு உயிரூட்ட அவர் எந்தவிதமான நடவடிக்கைகளை எடுப்பார்? அவற்றையெல்லாம் யோசியுங்கள்.

பின் அவற்றை உங்கள் வேலையில் பயன்படுத்தத் தொடங்குங்கள். ஆனால் உங்களால் அந்த நபரைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும். ஏனெனில், உங்கள் வேலையில் உங்களுக்கு அந்த நபரைவிட அதிக அனுபவம் இருக்கிறது. உங்களுக்கு நன்கு பரிச்சயமானதொரு வேலையில் உங்களால் புதிய கற்பனை வளமிக்க ஏதாவது ஒரு மாற்றத்தைக் கண்டிப்பாகப் புகுத்த முடியும். இப்புதிய அணுகுமுறை உங்களுக்கு உங்கள் வேலையில் உற்சாகத்தையும் வலுவையும் அளிக்கும்.

எந்தவொரு நாளையும் உற்சாகத்தால் நிரப்பினால்.. அந்த நாள் உங்களுக்கு தன்னால் முடிந்த அளவு அனைத்தையும் திருப்பி அளிக்கும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday, 15 July 2025

131


#கற்கை_நன்றே_131

ஒரு நாட்டை நிர்வகிக்கும்போது
எது எதிர்பார்க்கப் படுகிறதோ
அதைத் தலைமை செய்ய வேண்டும்.ஒரு போரை வெல்வதற்கு எது எதிர் பார்க்கப்படுவதில்லையோ
அதைச் செய்ய வேண்டும்

-தாவோ

எப்பொழுதாவது ஒரு சூழலில் தலைமைப் பொறுப்பு கிடைத்தால் பலரும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.எதுக்கு வம்பு பேசாம சிவனேனு இருப்போம் என பொறுப்புத் துறப்பு விளம்பரதாரர் நிகழ்ச்சி போல் தான் பலர் நடந்து கொள்கிறோம்.ஏன் எனில் தலைமைப் பண்பு என்பது பொறுமை, விரைந்து சிந்தித்து முடிவெடுக்கும் திறனில் இருப்பதால் பலர் ஏற்பதில்லை.பேர் புகழ் கிடைத்து ரிஸ்க் இல்லையெனில் அனைவ்ரும் தயார்.ஆனால் ரிஸ்க் இருப்பது தெரிந்தால் பின் வாங்கிவிடுவோம்.

உண்மையான தலைமைப் பண்பு என்பது பாராபட்சமின்றி எல்லோரும் பாராட்டும்படி நிறைவாக அழகாக முடிப்பதில் உள்ளது.தலைமைப் பண்புகள் நான்கு விதங்களில் அமைவதாக இறையன்பு குறிப்பிடுகிறார்..

முதலாவது, சர்வாதிகாரப் போக்கு. யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தாங்களாகவே தன்னிச்சையாக முடிவெடுத்து அதை அமல்படுத்துவது. இது ஆபத்தான போக்கு. வெறுப்பையும், ஈடுபாடின்மையையும் ஏற்படுத்திவிடும். இத்தகைய தலைவர்கள் தொடக்கத்தில் சிறந்தவர்களைப்போல தோன்றுவார்கள். நாளடைவில் எடுபடாமல்போய் வீழ்ச்சியடைவார்கள். 

இரண்டாவது, கண்டுகொள்ளாத தலைமை. யார் என்ன செய்தாலும் கவலைப் படாமல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் விட்டேத்தியாக இருப்பது இப்படிப்பட்ட தலைமை முறை. இது ஒரு கட்டத்தில் மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தி விடும். தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் ஆகிவிடுவார்கள். இறுதியில் நிர்வாகமே சீர்குலைந்துபோய்விடும். ஆற்றலற்ற ஒருவர்தான் இப்படிப்பட்ட பொறுப்பற்ற தலைமையை விரும்புவார்.

மூன்றாவது, தன்னைச் சற்று உயர்வாகத் தந்தையைப்போல நினைத்துக்கொண்டு பணியாற்றுவது. இதையும் மக்கள் விரும்புவதில்லை. சரிசமமாகத் தங்களை நடத்துவதைத்தான் விரும்புவார்களே தவிர தான் மட்டும் உயர்ந்தவர்போல எண்ணிக்கொண்டு ஏதோ நன்மை செய்வதைப்போல ஒவ்வொன்றையும் கையைப் பிடித்துக் கற்றுக்கொடுப்பவர்களை மக்கள் விரும்புவதில்லை. தனக்கான பரப்புவெளியை அனைவரும் விரும்புகிறார்கள்.

நான்காவது, ஜனநாயக முறைப்படி தலைமைப் பொறுப்பைச் செயல்படுத்துவது. அனைவரையும் கலந்தாலோசித்து, அவர்கள் சொல்லும் தீர்வுகளிலிருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுத்து, அது சிறந்தது என அனைவரையும் ஒப்புக்கொள்ள வைத்தல், பிறகு எல்லோரும் ஒருமனத்தோடு அந்தத் தீர்வைச் செயல்படச் செய்தல் ஆகிய கூறுகளின் மூலம் இத்தகைய தலைமைப் பொறுப்பு வெற்றிகரமாகத் திகழ்கிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு உரையில் தெரிவித்தது ''மனிதர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் குறுகியது. இதை நினைவில் கொண்டு இந்த வாழ்க்கையை வீணடிக்காதிருங்கள். உங்களது வாழ்க்கையை வாழ்வதற்குப் பதிலாக அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்தும், அடுத்தவர் சிந்தனையின் சாராம்சத்தையே சிந்தித்தும் வாழ்க்கையை வீணடித்துவிடாதீர்கள். பிறரது கருத்துக்களின் வீச்சுக்களுக்கு மத்தியிலே உங்களது உள்ளுணர்வின் வார்த்தைகளைக் கவனமாகக் கேட்க மறந்து விடாதீர்கள். உங்களது இதயமும், உள்ளுணர்வும் கூறுவதைக் கூர்ந்து - கவனமாகக் கேட்டு அதன்படி வாழுங்கள் ;சாதிக்க வேண்டும் என்ற பேராவலோடு இருங்கள்; அறிவுப் பசி எப்போதும் உங்களை ஆட்கொண்டிருக்கட்டும்!'என்றார்.

தலைமைப் பண்புக்கு தயக்கம் வேண்டாம்.அடுத்த திருப்பத்தில் கூட தலைமைப் பண்புக்கான வாய்ப்பு வரும்.அப்போது நாம் தயாராய் இருக்க வேண்டும்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

88


#Reading_Marathon2025
#25RM055

Book No:88/100+
Pages:-342

ஜெயலலிதா மனமும் மாயையும்
-வாஸந்தி

பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு சுவாரசியமானது.வாஸந்தி அவர்கள் எழுதிய இப்புத்தகம் அப்போதே பரபரப்பாய் விற்கப்பட்டது.புத்தகம் ஜெ வின் ஆரம்ப கால வாழ்க்கை முதல் அரசியல் வாழ்வு வரை சுவாரஸ்யமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஜெ வின் இளமைக்கால நண்பரின் பார்வைகள், பேட்டிகள், அவரின் சொந்த வாழ்க்கை போன்றவை சுவாரஸ்யமாய் கூறப்பட்டுள்ளது.

ஜெவின்ன் தந்தை வழித் தாத்தா டாக்டர் ரங்காச்சாரி மைசூர் மகாராஜாவின் நெருக்கமான நண்பரும் மருத்துவரும் கூட. கண்டிப்புக்கு பேர் போனவர். ஆனால் தன் மகன் ஜெயராமன் தந்தை பெயரை காப்பாற்றாமல் இருந்ததால் மனமுடைந்து ஒரு நாள் தாத்தா இறந்தார். அதன் பிறகு ஜெய விலாஸ் நிலை குலைந்தது. அவருக்கு இரு பிள்ளைகள் பப்பு எனும் ஜெயக்குமாரும் அம்மு என்ற ஜெயலலிதாவும் இருந்தனர்.

தன் அப்பா ஜெயராமின் மறைவுக்கு பின் குடும்பம் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகிறது.தன் அம்மாவின் தங்கை அம்புஜா விமான பணி பெண்ணாக தன் வாழ்க்கையை துவங்கி சினிமா நடிகை ஆகிறார். அதன்பிறகு அம்முவின் அம்மாவான வேதாவும் சந்தியாவாக மாறி திரைப்பட நடிகையாக மாறிவிடுகிறார். கணவருடைய ஈமக்கிரியை முடிந்தவுடன் தன் இரண்டு பிள்ளைகளுடன் பெங்களூருவுக்குப் பயணமானார்.

இவ்வாறு செல்லும் வாழ்க்கையில் அம்மாவுடன் படப்பிடிப்புக்கு செல்லும் அம்மு மெட்ரிகுலேஷன் பரிட்சை முடிந்த பின்
 வேண்டுகோளுக்கிணங்க விடுமுறை நாளில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து முடிக்கிறார். அதன் பிறகு கல்லூரி செல்ல விண்ணப்பித்து காத்திருக்கும் போது தான் வெண்ணிற‌ஆடை பட வாய்ப்பு வருகிறது.அவருக்கு கூட்டம் என்றால் பிடிக்காது யாரும் நெருங்கி வந்து பேசுவதும் பிடிக்காது. அரசியல்வாதி ஆனபின் மிகவும் ஆச்சரியப்பட்டவர்கள் அவரின் நண்பர்கள் தான். ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக இருந்தது ஆனால் காலம் மாற்றி அமைத்து விட்டது .

1984 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் சுதாங்கன் ஜெ விடம் யார் உங்களுடைய பர்சனல் எதிரி? ஆர்.எம்.வியா, கருணாநிதியா? என்று கேட்டதற்கு கருணாநிதி என்னுடைய அரசியல் எதிரி ஆர்.எம்.வி எனது பர்சனல் எதிரி என்றார். அதற்கான காரணத்தையும் அந்த பேட்டியில் சொல்லி இருப்பார் விரிவாக. சிவாஜிக்கும் ஜே வுககும்
 இடையே

எம்ஜிஆர் உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டுக்குச் சென்ற போதும், திரும்பி வந்த போதும் சரி.. அரசியல் நிகழ்வுகளில் ஜெ எதிர் கொண்ட பிரச்சனைகளையும், அதனை சமாளித்த விதங்களையும் தக்க எடுத்துக்காட்டுகளுடன் விவரமாக விளக்கியிருக்கிறார்கள். புரட்சித் தலைவரின் இறப்புக்கு பின் மார்ச் 25 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக வரலாற்றில் முக்கியமான விளைவை அன்று ஏற்படுத்தியது அன்று எழுந்த களேபரத்தில் தான் இன்னும் அரசியலில் தீவிரமாய் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

1990 க்கு பிறகான அரசியல் பிரவேசம் முதலமைச்சர் பதவியும் இரண்டாம் பாகத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. சசிகலா நட்பு மற்றும் தனது முன்னாள் தோழிகளான ஸ்ரீமதி, சாந்தி புலானி ஆகியோரை தொடர் பெற்ற நிலைக்கு சென்றது குறித்தும் இதில் அலசி உள்ளார். பத்திரிக்கையாளர் சோலை, பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோர்களின் பேட்டிகளும்  இடம்பெற்றுள்ளன. அதன் பிறகு நடந்த தேர்தலில் கட்சியின் வெற்றிகளும் தோல்விகளும் வரிசையாக சொல்லப்பட்டுள்ளன. 

வீரப்பன் வீழ்த்தியது , ஊழல் வழக்குகள்,சுனாமி பேரலை உருவாக்கிய அதிர்வு, ஒவ்வொரு தேர்தலிலும் ஏற்பட்ட கூட்டணி கணக்குகள், அப்போது நடந்த அரசியல் நிகழ்வுகள் ஆகியவை அனைத்தும் மிக சுவாரசியமாக கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் படி ஒவ்வொரு கட்டுரைகளும் அமைந்துள்ளன. அவரின் இறப்பு வரை இந்த புத்தகம் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் பதிவு செய்துள்ளது. தெரிந்த தகவல்களை நினைவூட்டியதும் தெரியாத சம்பவங்களை சொல்லி இருப்பதும் சிறப்பாக அமைந்தது.

 தொடர்ந்து வாசிப்போம் 

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி.......முருங்கைக் கீரையை அதிகம் வேக வைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.....அதனை அளவாக வேக வைத்து பதமாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள இரும்புச்சத்து முதல் அனைத்துச் சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும்......ஆனால், அகத்திக் கீரை இதற்கு நேர் எதிரானது. அதனை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது.....அதனை நன்றாக வேகவைக்க வேண் டும். ஏனெனில் அகத்தியில் இரும்புச்சத்து உள்ளிட்டவை மிக நிறைவாக உள்ளன.....அது நமது செரிமானத்துக்கு தாங்காது. ஆடு போன்ற விலங்கினங்களால்தான் அதனை பச்சையாகவும் அரைவேக்காடாகவும் சாப்பிட இயலும்.....மென்மையான சீரண மண்டலம் கொண்ட மனிதர்களா கிய நாம் அகத்திக் கீரையைச் சாப்பிட வேண்டுமானால் அதனை நன்றாக வேக வைக்க வேண்டும்.....இதுவே இப்பழமொழி சொல்லும் நேரடிப் பொருள். ஆனால், இது போலத்தான் ஒரு செயல் அல்லது ஒரு பொருள் ஒருவருக்கு குறைவாகத் தேவைப்படும். .....இன்னொருவருக்கு அதிகமாகத் தேவைப்படும். அதிகம் தேவைப்படுபவர் குறைவாக கிடைத்தாலும் நஷ்டமடைவார்.....குறைவா கத் தேவைப்படுபவர் அதிகம் கிடைத்தாலும் கையாளத் தெரியாமல் சிரமப்படுவார்.....இதனையே இப்பழமொழி உள்ளர்த்தமாகக் குறிக்கிறது.-படித்தது

பறவைகள் தூங்கும்போது நம்மைப்போலவே அவற்றின் மூளையின் இரண்டு அரைக்கோளங்களும் தூக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றன. ஆனால், வரிசையாக அமர்ந்து தூங்கும் பறவைகளில் இரண்டு விளிம்புகளிலும் அமர்ந்திருக்கும் பறவைகள் தமது ஒற்றை அரைக்கோளத்தை மட்டுமே தூங்குவதற்கு பயன்படுத்துகின்றன. இப்படி காவல் காக்கும் பறவைகளுடைய உடலின் ஒரு பகுதி, விழிப்போடு செயல்பத் தயாராக இருக்கும். இது ஆபத்தை உடனடியாக உணர்ந்து தன் கூட்டத்தைக் காக்க உதவுகிறது. இப்படி விளிம்பில் அமரும் பறவைகள் விழித்திருக்கும் தமது இன்னொரு அரைக்கோள மூளைக்கு ஓய்வுகொடுக்க 180 பாகை திரும்பியபடி அதுவரையிலும் விழித்திருந்த மூளைக்கும் உடல் பாகங்களுக்கும் ஓய்வு கொடுக்கின்றன.- Why we sleep நூலிலிருந்து.

Monday, 14 July 2025

130


#கற்கை_நன்றே_130

'எந்த மரத்தை வெட்டப்போகிறோமோ அந்த மரத்தின் நிழலில்தான் அதை வெட்டுவதற்கான கயிறையும் கோடாரியையும் வைக்கிறோம்
-வண்ணதாசன்

மானுடத்தின் கைமலர்களாக
அன்பும் வெறுப்பும் உள்ளதென இளங்கோ கிருஷ்ணன் ஒரு கட்டுரையில் கூறுகிறார்.மேலும் அவர் இரண்டிற்கும் இடையேயான வேறுபாட்டை கூறும் போது..

 ஒரு தட்டில் அன்பையும் இன்னொரு தட்டில் வெறுப்பையும் வைத்தால் நாம் முன்னதை எடுக்கவே எப்போதும் விரும்புவோம். நாம் நம்மை நேசிப்பது போல எல்லோரையும் நேசிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சில சமயம் நினைப்போம். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமே இல்லை. 

ஒருமுறை ஜெனே உன்னை மகிமைப்படுத்த என்னை ஏன் சிறுமை செய்கிறாய். போதுமான அளவு வெறுப்போடு இரு' என்று சொன்னபோது நான் நிஜமாகவே அதிர்ந்தேன். நம்மிடமிருந்து தன் இருப்பைக் கோரும் மற்றமையின் குரல் அது. கீழ்மைகள் எவ்வடிவில் இருந்தாலும் கீழ்மைதான்.பிறரை வெறுப்பதால் நாம்சாதித்துவிட்டதாய் நினைப்பது அப்போதைய சூழலில் அர்த்தம் பெறலாம்.ஆனால், வெறுப்பால் ஒருபோதும் நம்மை பலமாக்கிவிட முடியாது. வெறுப்போடு வாழ்கிறோம் என்பது ஒரு பலவீனம். 

வெறுப்பைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆழமான காழ்ப்புகளால் கடும் விஷத்தைக் கக்கிய தருணங்கள் உண்டு. என் மனமே நடுங்குமளவு கடும் விஷம். விழுந்த இடம் பொசுங்கும் ஆலகாலம். இவ்வளவு கசப்பு, இவ்வளவு
விஷம் என்னிடம்தான் இருந்ததா என்று நினைத்துத் துன்புறுவேன்.

 உண்மையில் என்னால் யாரையுமே எப்போதும் வெறுக்க முடியாது. அன்பின் தத்தளிப்பும் பிரிவின் ரணமும் உலர்ந்துபோன ஓர் இயல்பான நாளில் 'நான் இப்போ என்ன செய்துட்டேன். பேச மாட்டேங்கிற... பேசு.' என்று போய் நிற்பேன். மன்னிப்புக் கேட்பேன். பெரும்பாலான சமயங்களில் மனிதர்கள் என்னை மன்னித்திருக்கிறார்கள். ஒருவேளை மன்னிக்கத் தயாராய் இல்லை என்றாலும் சகித்துக்கொண்டு 'சரி போய்த் தொலை' என்றாவது சொல்லியிருக்கிறார்கள். இதுதான் மனிதர்கள் இயல்பு. மனிதர்களின் மேன்மை. 

இதை எல்லாம் புரிந்தும்தான் நாம் வெறுப்பைக் கக்கிக்கொண்டே இருக்கிறோம். குறைந்தபட்சம் நான் அதைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், அப்படிச் செய்யக்கூடாது என்கிற மனநிலை எனக்கு எப்போதும் உண்டு. குறைந்தபட்சம் கருத்தியல் அளவிலாவது என்னால் இப்படி இருக்க முடிகிறது என்று ஆசுவாசம் அடைகிறேன். மனிதர்கள் மேல் அன்பாய் இருப்பது ஏன் அவசியம் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அது அவசியம் என்று மட்டும் தோன்றுகிறது. 

எல்லோரையும் ஒன்றாகப் பார்ப்பதற்கு மகத்தான அன்பு ஒன்று வேண்டும்

எல்லோரையும் ஒன்றாக நடத்துவதற்கு எல்லையற்ற வெறுப்பு ஒன்று வேண்டும் என்பார் மனுஷ்.
அன்பைத் தேர்ந்தெடுப்போம் முடிந்தவரை

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

சந்தோஷம் என்பது இரண்டு துடுப்புகள் கொண்ட படகு. ஒன்று கொடுப்பது; மற்றது வாங்குவது. இரண்டையும் சமமாக நாம் பயன்படுத்தவேண்டும் என்பதே எளிய உண்மை.எஸ்.ராமகிருஷ்ணன்

87


#Reading_Marathon2025
#25RM055

Book No:87/100+
Pages:-128

கூத்தொன்று கூடிற்று
-லட்சுமி ஹர்

வாசிப்பின் மனநிலை சொற்களெங்கும் பரவிக்கிடக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. நேர்க் கோட்டுபாதையில் கதை சொல்வது வேறு. சொற்களின் வழியே மனதை ஈர்த்து சொற்களின் பாதையில் அர்த்தங்கள் எங்கும் சிதறிக் கிடக்கும் வண்ணம் ஒவ்வொன்றாய் நாமே எடுத்துச் சென்று கதையின் ஊடாக பயணிக்கும் அர்த்தங்களை தருகிறது. ஒரே மூச்சில் படிக்க முடியாது. கதைகள் இடையே தரும் ஆசுவாசம் அடுத்த கதையை படிக்க நேரம் எடுக்கிறது.ஒவ்வொரு கதையும் வார்த்தை சிக்கனத்தில் குறுநாவல் படித்த மென் உணர்வை தருகிறது.தலைப்புகள் அனைத்தும் ரசிக்கும் வண்ணம் இருந்தது.உதாரணத்திற்கு என்னுரை என்பது தான் தோன்றி தணல்.ஒரு கதையின் தலைப்பு 'நடக்கக் கற்றுக் கொண்ட மண்ணின் நிறுத்தற்குறிகள்.. அடடே சொல்ல வைத்தவை.

முதல்.கதையான மெழுகு இளைஞன் ஒருவன் மருத்துவமனை செல்லும் போது தேவாலையத்தின் வழியே கடந்து செல்கிறான்.அப்போது அங்கிருந்த கிழவியிடம் உரையாடல் நடக்கிறது.பின் திரும்பி வரும் மீண்டும் தேவாலயம் உள்ளே சென்று மனம் எழுப்பும் கேள்விகள் நம் அகத்தை தொட்டுப்பார்க்கிறது."எத்தனையெத்தனை வேண்டுதல்களின் உச்சரிப்புகள் அவ்விடத்தை நிரப்பிக் கொண்டிருந்தன" என சொல்லி கிழவியை செல்லமாய் விமர்சிகிறார்.

கூர்தீட்டிக்கொண்ட ஆயுதங்களாகச் செவியின் மடல்கள் மாறினாலொழிய உங்களால் அதன் உயிர்நிலையை அறிய முடியாது, திசையின் வேர்கள் எங்கும் ஊடுருவும் இசையை அனுபவிக்க ஒரே விதி..எனத் துவங்குகிறது கதவுச்சிறகு கதை.
சகமனிதர்களை வெறும் நம்பர்களாக எண்ணும் மனிதன் ஒருவன் லூதரின் பறவை பற்றிய ஆய்வுக்குழுவில் இணைகிறான்.அப்பயணமும் பறவைகளும் கற்றுக் கொடுக்கும் வாழ்கைப் பாடம் தான் இக்கதை. உங்களுக்குப் பரிசாக கிடைப்பது.உங்களுடனிருக்கும் ஒரு பறவையை ஒரு நாளும்.மறக்க வேண்டாம் என்பதே சாரம். தொழில் நுட்பத்தில் தோய்ந்த  மனிதர்களை பறவைகள் மீட்கிறார்கள்.செய்திகளின் ஆச்சர்யத்தில்.நுழைந்து நுழைந்து பேரியற்கைக்குள் மனிதன் ஒளிந்து கொள்கிறான்.

கிராமத்து வீட்டில் மூலைமுடுக்கெல்லாம் சிதறி இருப்பது ' உங்களோட மேல் கூரை அழியும்" என்பதால் அக்கிராமத்தில் புதிதாய் மேற்கூரையுடன் வீடுகட்ட தயங்குகின்றனர்.கிராமத்து நம்பிக்கை உடைபட்டதா? உயிர்பெற்றதா என்பதே கூடாரக் கரிசன கதை.கோவா திரைப்பட விழாவில் வூடி ஆலனின் திரைப்படங்களை காணப் போகும் நாளிற்காய் காத்திருந்தான் திரைக்கலைஞன். செல்லும் வழியில் இளநீர் ரம் ஸ்பெசல் அருந்துகிறான்.அங்கே ஒரு பெண் அவனுக்கு அறிமுகமாகிறாள்.'சுவைகள் அனைத்தும் ஒன்றே, 
அது மனிதர்களை சார்ந்து மட்டும் பொருந்துவது அல்ல என்றும் பிரித்தெறிய முயலாதே அதன் முடிச்சுகள் தரும் யாவற்றையும் அனுபவி என்றாள். அந்த சிந்தனை அவனை வாட்டியது. செயலின் மூலமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை உணர்த்தினாள் என்பதை ஆன் தி ராக்ஸ் கதை. பயணங்களில் கிடைக்கும் அறிவு வாழ்க்கையின் மாற்றத்தில் எவ்வாறெல்லாம் உதவுகிறது அல்லது சிந்தனையை தெளிவுபடுத்துகிறது என்பதனை கதை உணர்த்துகிறது.

பல வருடங்களாக மருத்துவத் துறையில் வெற்றிகரமான மருத்துவராக வலம் வந்தவர் சுகி. ஒவ்வொரு நாளும் அவரால் குணமடைந்தவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே இருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு முதுமை காரணமாக நினைவு மறதி ஏற்பட தொடங்கியது. அது சக மனிதர்களின் பார்வையை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதுதான் நடக்க கற்றுக் கொண்ட மண்ணின் நிறுத்தக்குறிகள் என்பது."இயலாமையை அவரது மூளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது" என்ற வரி கதையின் ஓட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

சர்வேயர் வருகிறாரா என்று பார்த்து சொல் என்ற அப்பா மகளிடம் சொல்ல வெளிச்சசாயில் கதை தொடங்குகிறது தன் பூர்வீக வீட்டினை விற்பதற்கு அப்பா தயாராகும் நிலையில் மகளுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அப்பாவின் நிலையை அறிந்து சம்மதிக்கிறாள். ஆனாலும் அவள் வைத்திருக்கும் குடை அவளுக்கு எல்லாமுமாக இருந்தது. அந்த குடை அவளுக்கு ஒரு உற்ற தோழியாக இருந்தது. ஒருமுறை வீடு விற்பதற்காக வந்த சர்வேயரிடம் அப்பா மழையில் செல்வதற்காக தான் ஆசையாய் வைத்திருந்த குடையை தந்து விடுகிறார். அதிலிருந்து சர்வேயரை அவள் தன் எதிரியாகவே நினைக்கிறாள். கதையில் "ரகசியத்தைப் பற்றிய ஒரு உரையாடலில் ரகசியத்தை தெரிந்து கொள்ள விருப்பம் இல்லையா? என்று கேட்பான். அதற்கு அவள் "காரணம் எப்போதும் அலுப்பை தரக்கூடியது என்கிறாள்."இடப்பெயர்வு என்பது வெளியில் சொல்ல முடியாத ஊமை வழி .நிகழ்ந்தவற்றை மாற்ற முடியுமா என்று யோசிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறாள்.

இமைகளின் வருடல்களால் பார்வையின் நோக்கை மட்டும் உண்மை என ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய உணர்வுக்கு அனைவரும் தள்ளப்பட்டிருந்தார்கள் என்ற கவித்துவ உணர்வுடன் உள்ள நிப்பாணக் கதை.. இக்கதையின் நாயகி ஜமீன் வீட்டின் மகள். தனது காதல் காரணமாக ஜமீன் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள் ஒரு கட்டத்தில் கணவனை இழந்து தன்னுடைய கைக்குழந்தை கழுகு தூக்கி செல்வதை பார்த்து பித்து பிடித்து நிர்வாணமாக மீண்டும் தன் ஊரின் வீதியின் வழியாக நுழைந்து ஜமீன் வீட்டை அடைகிறாள். அதில் அவளை பூட்டி வைக்கிறார்கள்.
கதையின் பிற்பகுதியில் நாயகன் எவ்வாறு நாயகியை தேடி வரும்போது உயிர் துறக்கிறான் என்பதை நேரடியாக பார்ப்பது போல விவரித்து இருப்பார்.

சந்திரன் மாமா இறந்துவிட்டார் அவரை காணச் செல்லும் போது வழிநெடுக சுமந்து வந்த அமைதியை அம்மா மட்டும் விசும்பல் அழுகையால் கெடுத்து வந்தார். 3 தங்கைகளுக்கு அண்ணனான சந்திரன் மாமா எவ்வாறெல்லாம் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.. ஓட்டுனராக இருந்தபோது தான் சந்தித்த சவால்களை இறப்புகளை விபத்துகளை பற்றி எல்லாம் சிறுவயதில் தொடக்கச்சொல்லி கொடுத்ததை நினைவு கூர்ந்து கொண்டே கதையில் பயணிக்கிறான். அவருடைய ஒட்டுமொத்த வாழ்வையும் நினைத்துப் பார்க்கும் கதை தான் அந்த சொல்லில் மட்டும் பதிவின் வாசனை கதை.

மூவேந்தர்களின் படையெடுப்பால் குறுநில மன்னனான மாதி தீவிர தன்மையோடு போரிடும் முடிவெடுக்கிறான். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் யுதிரம் கதை. சினிமாவில் உதவிய இயக்குனராக இருக்கும் ஒருவன் ஒரு பயணத்தில் ஒரு சவப்பெட்டியை கவனிக்கிறான் அது கருப்பு வண்ணத்தில் இல்லாமல் வண்ண வண்ண நிறத்தில் இருப்பதால் அதனை தனது அடுக்குமாடி குடியிருப்ப எடுத்து வருகிறாள்
 அங்கு இருக்கும் நண்பனுக்கும் இவனுக்கும் நடைபெறும் உரையாடலும் அந்த சவப்பெட்டி என்னவெல்லாம் செய்தது வண்ணங்களை தந்தது என திரில் கதை போல இந்த கதை அமைந்துள்ளது.
மரணம் தன்னை கதவாக மாற்றிக்கொண்டு தான் சந்திக்கும் மனிதர்களிடம் தனக்கான சாவியை அளித்துவிட்டு தன் வண்ணத்தினை மறைத்து வைத்துக் கொண்டு, தன்னை தைரியமாக அனுப்பும் மனிதனுக்காக காத்திருக்கிறது எனும் வரி கற்பனையின் அழகான அம்சமாக கருதப்படுகிறது.

கதைகள் இயல்பாக ஒரே வரியில் சொல்லாமல் மணல் விளையாட்டில் ஒளித்து வைக்கப்படும் கற்கள் போல கதைகள் தேடித் தேடிப் பிடித்து பின் தொடரும் அனுபவத்தை தருகிறது. கதையின் ஊடாக வரும் தத்துவ வரிகள் அந்த கதைகளை இன்னும் இறுக்கிப்பிடித்து மேலே செல்ல பயணிக்க உதவுகிறது .கதையின் மையம் ஓரிரு வரிகள் என்றாலும் அதனை சுற்றிய மொழி சரடு அதனை பிரித்துப் பார்த்தால் வரும் கதையின் மையம் என அழகிய மிட்டாய்களைப் போல ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது. ஏற்கனவே நாம் ஒரு வரியை படித்தவுடன் ஊகிக்கும் மனதை மாற்றிக் கொண்டு சொற்களின் வழியாக கதைகள் காட்டும் பாதையில் சென்று பயணிக்கும் போது பெருங்காட்டியின் மௌனமும் பிரம்மாண்டமும் நமக்குத் தெரியவரும்.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Sunday, 13 July 2025

129


#கற்கை_நன்றே_129

பிறரைப் பின்பற்றுவதற்காக நீங்கள் பிறக்கவில்லை, வழிநடத்துவதற்காகவே அவதரித்துள்ளீர்கள்.

நாம் எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் ஒரு வேலையை தனியே செய்ய வேண்டுமெனில் பிறர் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்கிறோம்.ஹோட்டலுக்கு சென்றால் பக்கத்து டேபிள் இலைதான் அறிவிக்கப்படாத மெனு கார்ட்.அவ்வாறு பிறரை பார்த்து செய்வது, போல நடந்து கொள்வது எல்லா நேரங்களிலும் வொர்க் அவுட் ஆகுமா?

இயல்பாகவே, பலர் அடுத்தவர்களைப் பின்பற்றுபவர்களாகவே உள்ளனர். சிறந்த மனிதர்களை முன்மாதிரியானவர்களாகப் பார்த்து, நாமும் அதுபோல் ஆக முயற்சிப்பது ஒரு நேர்மறையான பண்புதான். ஆனால், அவரிடம் நீங்கள் அடிபணியும் போது, அதுவே ஒரு பலவீனமாகிவிடுகிறது என்கிறார் மஹாத்ரயா ரா

ஒருவரைப் பின்பற்றுபவரை வேறு எவரும் பின்பற்றுவதில்லை. நீங்கள் பார்த்துப் பிரமிக்கும் ஒருவர், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைவிடச் சிறந்தவராக இருப்பார் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் ஒட்டுமொத்தமாக உங்களைக் குறைவாக மதிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் சொந்த சாத்தியக்கூறுகள் உங்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை. 

ஒரு நிறுவனம் என்ற முறையிலும் சரி, ஒரு தனிநபர் என்ற முறையிலும் சரி, முதல் சுற்றில் யார் வேண்டுமானாலும் என்னை வழிநடத்திச் செல்லட்டும். இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று, . . . என்று எத்தனை சுற்றுக்கள் வேண்டுமானாலும் அவர்கள் என்னை வழிநடத்தட்டும். ஆனால் ஏதோ ஒரு சுற்றில் நான் முன்னேறிச் சென்று, அதுவரை என்னை வழிநடத்தியவர்களை அச்சுற்றிலிருந்து நான் வழிநடத்துவேன் என்று நான் நம்ப வேண்டும்.

 நம் மேலதிகாரிகளைக் காட்டிலும் நாம் சிறந்தவர்களாக ஆக முடியும். நாம் பார்த்துப் பிரமிக்கும் ஒருவருக்கு எத்தனை வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் ஏற்படுகின்றனவோ, நமக்கும் அத்தனை சாத்தியக்கூறுகளும் அவற்றுக்கு அதிகமானவையும் வெளிப்படும். ஒருவருக்குச் சாத்தியப்படுவது அனைவருக்கும் சாத்தியம். ஒருவன் செய்ய முடிவதை எல்லோராலும் செய்ய முடியும். இன்னும் சொல்லப் போனால், சிறப்பாகவே செய்ய முடியும். எல்லாரும் ஐ.ஏ.எஸ் ஆகமுடியாது. ஆனால் ஐ.ஏ.எஸ் ஆகக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

கிரகாம் பெல் இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அவர் ஒரு பத்திரிகையாளரிடம் கூறிய கூற்று கூர்ந்து கவனிக்கத் தக்கது. "எந்த ஒரு மனிதர் தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிக்கின்றாரோ, அப்படிக் கூர்ந்து கவனித்த விஷயத்தை தன் நினைவில் தொடர்ந்து நிறுத்துகிறாரோ, ஒவ்வொரு விஷயமும் ஏன் நடக்கிறது?எப்படி நடக்கிறது ? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடைகாண முயல்கின்றாரோ, அவருடைய சிந்தனைகள் ஒருபோதும் வீணாவது இல்லை" என்று கூறினார்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

பஞ்சாயத்துபஞ்சம்'' என்ற சொல்லுக்கு ''ஐவர்'' என்றும் ''ஆயம்'' என்ற சொல்லுக்கு ''கூட்டம்'' என்றும் கழகத்தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. இந்த இரண்டு சொற்களும் இணைந்து (பஞ்சம்+ஆயம்) ''பஞ்யசாயம்'' என்ற சொல் உருவானது. பஞ்சயத்து என்ற சொல்லுக்கு ''village jury'' என்ற தமிழ் ஆங்கிலஅகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ''an assembly of five or more persons'' என்றும் விளக்கம் தருகிறது. இதனை ''ஐவர் கூடிய நியாய சபை'' எனவும் கழகத்தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.#info

Saturday, 12 July 2025

ட்விட்டர்


#TWITTER  இல் படித்த சில அருமையான tweets
*மணி

 > முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள், அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்..

 > துரோகிகளில் சிறந்தவனை தேடிக்கொண்டிருக்கிறேன், நண்பனாக்கிக்கொள்வதற்கு...

 > பார்வை அற்ற ஒருவருக்கு சாலையை கடக்க உதவினேன், சிறுது நேர கண் தானம் செய்த திருப்தி..

 > மன்னிப்பு என்றால் என்ன? பூக்களை கசக்கும் போது அது தரும் நறுமணம்...

 > சில நேரங்களில் தனிமை எனக்கு மிகவும் பிடித்துவிடுகிறது... ஏனெனில் அங்கு தான் முகமூடியின் அவசியம் எனக்கிருப்பதில்லை....

 > 'சாவ' வச்சு பணம் பாக்கறதுல வெட்டியானும் மீடியாவும் ஒன்னு

 > நம்ம வாழ்க்கையில எது வேணும் எது வேணாம்னு நாம தான் தீர்மானிக்கனும்.. அப்போதான் அது நமக்கு பிடிச்ச வாழ்க்கையா அமையும்..

 > ஓர் நிராகரிப்பில் வேதனையின் உச்சத்தில் விழிகளில் இருந்து தடையை மீறி விழுந்தது என்றாலும் சிறு காயங்களுடன் பிழைத்து கொண்டது தன்மானம்

 > வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்...." வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்..........."

 > ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை..

 > தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது

 > கல்வி கற்க புத்தகங்களை விட 'நோட்டுக்களே' அதிகம் தேவைப்படுகின்றன.!

 > பொறுமை உடையவர்களின் கோபம் பொல்லாதது!

 > பெண்மையை விற்பவள் மட்டுமல்ல கண்ணியத்தை விற்கும் ஆணும் விபச்சாரியே!!!

 வாழ்க்கை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி! ஒவ்வொருத்தர் கண்ணுக்கு ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும்! ஒரு சிலருக்கு புரியாம கூட போயிடுது!!

 > என் இறப்பு எவருக்கும் வருத்தம் அளிப்பதாக இல்லாமல் போனாலும், ஒருவர் கூட நிம்மதி பெருமூச்சு விடுவதாக அமைந்துவிடக் கூடாது!!!
 
 > மதிப்பே இல்லாத பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி தன் மதிப்பை கூட்டியவன் தான் இந்தியன்!!

 > ஒரு சில பிரிவுகள் வலியும் வேதனையையும், ஒரு சில பிரிவுகள் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் தரும்!!!

 > யாதொருவரின் அன்பிலும் தேங்கி நின்றுவிடாமல் விடை பெற்றுச் செல்வதே புத்திசாலித்தனம்..

 > உயிரற்ற மண்ணுக்கும் பசி! உணவான மனித உடல்கள் மீது!

>  "உங்கள் சொந்த ஊர் என்ன?" என்ற கேள்வி பெரும்பாலும் ஜாதியை தெரிந்துக் கொள்ளவே கேட்கப்படுகிறது!! எனக்கு ஊரே இல்ல போங்கடா!!!

>  உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்தாலும் அவை அனைத்தையும் உண்பதற்கு "மண்" உயிருடன் இருக்கும்... இதுதான் வாழ்க்கை....

 > பாம்புக்கு காது கிடையாது எனில், ’தவளை எப்படி தன் வாயால் கெடும்’. சொல்லுங்க.??

 > எனக்கு பயம் என் திறமை மீது அல்ல, உங்கள் எதிர்ப்பார்ப்பின் மீதே!!!
 
 > சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே இவ்வுலகம் நலம்விசாரிக்கும்! கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசிஎண்கள் கண்டிப்பாகபழைய செல்போனோட தொலைஞ்சுபோயிருக்கும்

 > வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு முதலில் தண்ணீர் கொடுப்பதுதான் பண்பாடு இப்ப வைபை பாஸ்வேர்ட் கொடுப்பதே சிறந்த பண்பாடு

 > எங்கிட்ட வேலையில்ல, பணமில்ல'னு கேவலமா பார்க்கும் அனைத்து உறவுகளுக்கும் , நான் சிரிச்சுகிட்டே ஒன்னுமட்டும் சொல்லிக்கிறேன் நா இன்னும் சாகலடா

>  நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில்.. நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி..

 > அன்பு நிறைய பேர்கிட்ட கிடைக்கும் ஆனா ஒருவரிடம் நாம் இழந்த அன்பை ஆயுளே அழிந்தாலும் இன்னொருவரிடம் பெற முடியாது

 > ஏதோ ஒரு உறவு தந்த ஏமாற்றம் தான் நிறைய ஆண்களின் வாழ்க்கை மற்றும் நடவடிக்கையின் மாற்றத்திற்கு காரணம்

 > இப்பவெல்லாம் "Silence Please"னு சொல்றதுக்கு பதிலா, ஒரு மோடம் வெச்சி "WIFI" Password குடுத்தா போதும் மயான அமைதி கெடச்சிடும்..   

 > பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை!

 > வாழ்க்கை எவ்வளவு வேகமாக பயணித்தாலும் இறுதி ஊர்வலத்தில் மெதுவாகத்தான் சென்று முடியும்!!

 > வாழத் தெரியாம சாமியார போனவங்கிட்ட எப்படி வாழறதுன்னு கேக்க போவுது ஒரு மூடர் கூட்டம்!!!

 > வேண்டாம் என விலகியவர்களும் வேண்டும் என இனைய வைக்கும் சக்தி #பணத்திடம் உண்டு..;-)

 > பேச்சிலர்கள் சமயலின் போது குக்கரின் உட்புறத்தை மட்டுமே துலக்குகிறார்கள் எங்களுக்கு சுத்தம்தான் முக்கியம்

 > காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.

 > திருக்குறளை... வாழ்றதுக்காக படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்க'தா அதிக பேரு..!

 > அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை!!

 > #Money மட்டுமே மதிக்கப்படுகிறது... மனிதம் பலரால் மிதிக்கப்படுகிறது..

 > முதுகில் குத்திய உன்னை திரும்பிப் பார்க்கிறேன், என்னுடனான நட்பின் மிச்சம் உன் பார்வையில் இருக்கிறதா என்று!!

 > அம்மா சுருங்கி "Mom" ஆனாள், அப்பா சுருங்கி "Dad" ஆனார், சகோதரன் சுருங்கி "Bro" ஆனான்,, இன்னும் சுருங்காதது நம் வாய் மட்டுந்தான்..

>  நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :- 
நம்மட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..! 
எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..!

 > 5000 ரூவா சம்பளம் வாங்கும்போது இருந்தா பற்றாக்குறை லட்ச ரூவா வாங்கும்போது வந்தா நாமதான் வாழ தெரியாம வாழ்றோம் அர்த்தம்

 > எவ்வளவோ மூட நம்பிக்கை இருக்கு, அதில ஒன்னா, பொது இடத்துல எச்சில் துப்பினா சாமி வாயில குத்தும்ன்னு சொல்லி வளர்த்து இருக்கலாம்

 > இதுவும் கடந்து போகும்.. கடந்து போனால் பரவாயில்லை.. ஏறி மிதிச்சி நம்மள சட்னி ஆக்கிட்டு தான் போகுது ...

>  எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை 
உண்டு...!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்...!!!

 > சிரிக்க நினைத்தால் சிரித்து விடுங்கள், மற்றவர்கள் பார்ப்பார்களே என கவலைப்பட்டால், அவர்கள் உங்களை ஆயுள் முழுதும் சிரிக்க விட மாட்டார்கள்

 > எல்லையை மீறினால் தான் சில நேரங்களில் நமக்கான எல்லையே தெரிகின்றது! #வாழ்வில்

 > தெய்வமாக மதிக்கும் அனைத்துக்கும் பெண்ணின் பெயர் வைத்த இந்த சமூகம் கீழ்தரமான கெட்ட வார்த்தைகளை அவர்கள் பெயரால் உ௫வாக்கியது ஏன் #முரண்

>  மண்டியிட்டு தான் வாழ வேண்டும் என்றால் இறந்து விட்டு போகலாமே,, மண்டியிட்டு வாழ்ந்து என்ன சாதித்து விட முடியும்..?

 > எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.

 > கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!!

 > நேர்மையாக சம்பாரித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை !

 > போக்குவரத்து விதிகளை சாகசமாய் மீறும் எமக்கு... அடுத்தவர் மீறுவதைக் கண்டதும் உடனே கோபம் வருகிறதே.... ஊருக்கு தான் உபதேசமோ

 > பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!!

 > பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்...

 > நாம் பைத்தியம் என்று ஏளனமாக பார்ப்பவர்கள் தான்., வாழ்நாள் முழுவதும் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள்..

 > முத்தத்தை கொடுக்கும் போது வாங்கி விட்டு, வாங்கிய பின் "ச்சீ எச்சி" என துடைப்பதில் இருக்குது மகள்களின் பேரழகு.. #மகளதிகாரம்

 > தவறே செய்யாவிட்டாலும் ஆசிரியர் மீதும் காவலர் மீதும் ஒரு வித இனம் புரியாத பயம் இருக்கத்தான் செய்கிறது!!!

 > நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், 'தன்னடக்கம்' என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!!

 > இந்த வாய்க்கரிசிமட்டும் நேற்று கிடைத்திருந்தால் பட்டினிச்சாவை ஓரிருநாள் தள்ளிப்போட்டிருக்கலாம்!!

>  சோகமாய் இருப்பவரிடம் இருந்து"என்ன ஆச்சு"என்ற கேள்விக்கு "ஒண்ணுமில்லை" என்று வரும் பதிலுக்கு 'உன் வேலைய பாரு' என்றே பொருள் கொள்ளவேண்டும்!!

 > காசுபணம் இல்லாம படிப்பவிட்டவன் நிறைய இருக்கான்! ஆனா காசு இல்லைனு பீடி,சிகரெட்,தண்ணி,கஞ்சா, குட்காவ விட்டவன் ஒருத்தன் கூட இல்ல! #வாழ்க்கை

 > லாரியில அழுது கொண்டே சென்றது..... ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்.......!!!

 > கஷ்டங்கள் பழகிக்கொண்டாலும் வலித்துக் கொண்டே தான் இருக்கிறது...

-மணி