#கற்கை_நன்றே_126
சந்தேகிப்பது நல்லது. சந்தேகித்தால், தொடர்ச்சியாக நீங்கள் சந்தேகித்துக் கொண்டே வந்தால், நீங்கள் சந்தேகிக்கவே முடியாத கற்பாறை போன்ற ஒரே ஒரு நிகழ்வு மிச்சப்படும்.அதுவே உங்களின் இருத்தல். பின் ஒரு புதிய தேடல் எழும்
-ஓஷோ
தேடல்கள் தான் மனித வாழ்வை உயிர்ப்புடம் வைத்திருக்கும். தேவைகள் நிறைவு செய்தாலும் தேடல்கள் இருந்து கொண்டே இருப்பது உயர்வதற்கான வழியாக இருக்கும்.டாக்டர் மெ ஞானசேகர் தேடலை நோக்கி கைகுலுக்குவோம் எனும் கட்டுரையில்..
இங்கிலாந்து நாட்டின் தொழில் அதிபர் ஜேம்ஸ்டெலி என்பவரும், ஆங்கில பேராசிரியரும் நண்பர்கள். இருவரும் உரையாடும் போது.. மொழிகளும்,வார்த்தைகளும் பல்வேறு நாட்டு மொழியிலிருந்து கொஞ்சம் மாறுபட்டுத்தான் உருவாகிறதே தவிர,புதிதாய் ஒரு வார்த்தை கூட உருவாகவில்லை என்றார்.டேலி, பேராசிரியரிடம் முயற்சி செய்தால் புதிய பொருளுள்ள வார்த்தை கிடைக்கும் என்றார்.பேராசிரியர் இதனை மறுத்தார்.
டேலி ஊர் முழுக்க சுவர்களில் Q,U,I,Z என எழுத உத்தரவிட்டார். தெருக்களில் சென்ற மக்கள் அதனை பார்த்து அர்த்தம் கேட்டார்கள். இதன் பதில் டேலிக்கு தான் தெரியும் என்றனர்.டேலியிடம் Quiz என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு, அதற்கு அவர் 'என்ன? என்றுதான் அர்த்தம் அதாவது வினா எனக் கூறினார்.தேடலில் புதிய சொல் கண்டுபிடிக்கப்பட்ட மகிழ்ச்சி இருவருக்கும்.
ஒரு பெண்மணியின் கணவர் இறந்தவுடன் அந்த மனைவிக்கு சொல்லொனா துயரம்.அவளும் தற்கொலை செய்து கொள்ளலாமா என யோசித்தாள்.பெரிய படிப்பு படித்து அயல்நாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் எனும் தனது மக்ளின் இலட்சியத்தை நினைத்துப் பார்த்தவுடன் தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்ததால் பொறுத்துக் கொள்கிறாள்.இலட்சியமும் தேடலும் கிடைத்தவுடன் ஒவ்வொரு பிரச்சனையும் எதிர்கொள்வது கடினமாய் இல்லை என அறிகிறாள். ஆகவே தேடல் நம் வாழ்க்கைக்கு உன்னதமான அர்த்தத்தையும் கொடுக்கிறது.
இன்று தேடல் என்றவுடன் கூகுள் chatgpt என்று ஆகிவிட்டது. சுயமான தேடலோ புத்தகம் வாசிப்பதோ குறைந்து விட்டது. க்ரியா ராமகிருஷ்ணனிடம் தமிழ் அகராதி தயாரித்த போது சிலர் கேட்டனர்.. அனைவர் கைகளிலும் அலைபேசி உள்ளது. அதிலேயே அர்த்தங்கள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? எனக் கேட்டபோது.. உண்மைதான் அலைபேசியில் நீங்கள் தேடும் ஒரு சொல்லுக்கு மட்டும் அர்த்தம் கிடைக்கும். ஆனால் நீங்கள் அகராதியில் ஒரு சொல் தேட முனைகையில் ஐந்தாறு வார்த்தைகளை தேடித்தான் அதை கண்டடைவீர்கள். அந்த ஐந்தாறு வார்த்தைகள் உங்கள் தேடலில் போனசாக கிடைத்தவை.
பயன்படுத்தப்படாத பணம் அதன் மதிப்பை இழக்கிறது. பயன்படுத்தப்படாத திறமை மங்கிப் போகிறது. பயன்படுத்தப்படாத ஆற்றல் குறைந்துவிடுகிறது. பயன்படுத்தப்படாத கருவிகள் துருப்பிடித்துவிடுகின்றன. பயன்படுத்தப்படாத நேரம் காணாமல் போய்விடுகிறது. பயன்படுத்தப்படாத அறிவு ஒரு சுமையாகிவிடுகிறது. பயன்படுத்தப்படாத அனைத்தும் முறைதவறிப் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் மஹாத் ரயா
வளர்ச்சி தொடர்கின்ற போது இன்னும் பல மாற்றங்கள் உலகில் வரும். ஆனால், இவை அனைத்துமே தேடல் மூலம் விளைந்த அற்புதங்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.வாழ்க்கை உள்ள வரை,உலகம் உள்ளவரை தேடல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். ஆனால், இந்தத் தேடல்கள் எல்லாம் மனிதக் குலத்தின் மாண்புமிக்க வளர்ச்சிக்கு உதவுவதாக அமைய வேண்டும். இந்தத் தேடல்தான் அனைத்தையும் பாதுகாக்கும் அல்லது நெறிப்படுத்தும்.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment