Monday, 14 July 2025

130


#கற்கை_நன்றே_130

'எந்த மரத்தை வெட்டப்போகிறோமோ அந்த மரத்தின் நிழலில்தான் அதை வெட்டுவதற்கான கயிறையும் கோடாரியையும் வைக்கிறோம்
-வண்ணதாசன்

மானுடத்தின் கைமலர்களாக
அன்பும் வெறுப்பும் உள்ளதென இளங்கோ கிருஷ்ணன் ஒரு கட்டுரையில் கூறுகிறார்.மேலும் அவர் இரண்டிற்கும் இடையேயான வேறுபாட்டை கூறும் போது..

 ஒரு தட்டில் அன்பையும் இன்னொரு தட்டில் வெறுப்பையும் வைத்தால் நாம் முன்னதை எடுக்கவே எப்போதும் விரும்புவோம். நாம் நம்மை நேசிப்பது போல எல்லோரையும் நேசிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சில சமயம் நினைப்போம். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமே இல்லை. 

ஒருமுறை ஜெனே உன்னை மகிமைப்படுத்த என்னை ஏன் சிறுமை செய்கிறாய். போதுமான அளவு வெறுப்போடு இரு' என்று சொன்னபோது நான் நிஜமாகவே அதிர்ந்தேன். நம்மிடமிருந்து தன் இருப்பைக் கோரும் மற்றமையின் குரல் அது. கீழ்மைகள் எவ்வடிவில் இருந்தாலும் கீழ்மைதான்.பிறரை வெறுப்பதால் நாம்சாதித்துவிட்டதாய் நினைப்பது அப்போதைய சூழலில் அர்த்தம் பெறலாம்.ஆனால், வெறுப்பால் ஒருபோதும் நம்மை பலமாக்கிவிட முடியாது. வெறுப்போடு வாழ்கிறோம் என்பது ஒரு பலவீனம். 

வெறுப்பைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆழமான காழ்ப்புகளால் கடும் விஷத்தைக் கக்கிய தருணங்கள் உண்டு. என் மனமே நடுங்குமளவு கடும் விஷம். விழுந்த இடம் பொசுங்கும் ஆலகாலம். இவ்வளவு கசப்பு, இவ்வளவு
விஷம் என்னிடம்தான் இருந்ததா என்று நினைத்துத் துன்புறுவேன்.

 உண்மையில் என்னால் யாரையுமே எப்போதும் வெறுக்க முடியாது. அன்பின் தத்தளிப்பும் பிரிவின் ரணமும் உலர்ந்துபோன ஓர் இயல்பான நாளில் 'நான் இப்போ என்ன செய்துட்டேன். பேச மாட்டேங்கிற... பேசு.' என்று போய் நிற்பேன். மன்னிப்புக் கேட்பேன். பெரும்பாலான சமயங்களில் மனிதர்கள் என்னை மன்னித்திருக்கிறார்கள். ஒருவேளை மன்னிக்கத் தயாராய் இல்லை என்றாலும் சகித்துக்கொண்டு 'சரி போய்த் தொலை' என்றாவது சொல்லியிருக்கிறார்கள். இதுதான் மனிதர்கள் இயல்பு. மனிதர்களின் மேன்மை. 

இதை எல்லாம் புரிந்தும்தான் நாம் வெறுப்பைக் கக்கிக்கொண்டே இருக்கிறோம். குறைந்தபட்சம் நான் அதைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், அப்படிச் செய்யக்கூடாது என்கிற மனநிலை எனக்கு எப்போதும் உண்டு. குறைந்தபட்சம் கருத்தியல் அளவிலாவது என்னால் இப்படி இருக்க முடிகிறது என்று ஆசுவாசம் அடைகிறேன். மனிதர்கள் மேல் அன்பாய் இருப்பது ஏன் அவசியம் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அது அவசியம் என்று மட்டும் தோன்றுகிறது. 

எல்லோரையும் ஒன்றாகப் பார்ப்பதற்கு மகத்தான அன்பு ஒன்று வேண்டும்

எல்லோரையும் ஒன்றாக நடத்துவதற்கு எல்லையற்ற வெறுப்பு ஒன்று வேண்டும் என்பார் மனுஷ்.
அன்பைத் தேர்ந்தெடுப்போம் முடிந்தவரை

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment