Sunday, 13 July 2025

129


#கற்கை_நன்றே_129

பிறரைப் பின்பற்றுவதற்காக நீங்கள் பிறக்கவில்லை, வழிநடத்துவதற்காகவே அவதரித்துள்ளீர்கள்.

நாம் எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் ஒரு வேலையை தனியே செய்ய வேண்டுமெனில் பிறர் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்கிறோம்.ஹோட்டலுக்கு சென்றால் பக்கத்து டேபிள் இலைதான் அறிவிக்கப்படாத மெனு கார்ட்.அவ்வாறு பிறரை பார்த்து செய்வது, போல நடந்து கொள்வது எல்லா நேரங்களிலும் வொர்க் அவுட் ஆகுமா?

இயல்பாகவே, பலர் அடுத்தவர்களைப் பின்பற்றுபவர்களாகவே உள்ளனர். சிறந்த மனிதர்களை முன்மாதிரியானவர்களாகப் பார்த்து, நாமும் அதுபோல் ஆக முயற்சிப்பது ஒரு நேர்மறையான பண்புதான். ஆனால், அவரிடம் நீங்கள் அடிபணியும் போது, அதுவே ஒரு பலவீனமாகிவிடுகிறது என்கிறார் மஹாத்ரயா ரா

ஒருவரைப் பின்பற்றுபவரை வேறு எவரும் பின்பற்றுவதில்லை. நீங்கள் பார்த்துப் பிரமிக்கும் ஒருவர், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைவிடச் சிறந்தவராக இருப்பார் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் ஒட்டுமொத்தமாக உங்களைக் குறைவாக மதிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் சொந்த சாத்தியக்கூறுகள் உங்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை. 

ஒரு நிறுவனம் என்ற முறையிலும் சரி, ஒரு தனிநபர் என்ற முறையிலும் சரி, முதல் சுற்றில் யார் வேண்டுமானாலும் என்னை வழிநடத்திச் செல்லட்டும். இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று, . . . என்று எத்தனை சுற்றுக்கள் வேண்டுமானாலும் அவர்கள் என்னை வழிநடத்தட்டும். ஆனால் ஏதோ ஒரு சுற்றில் நான் முன்னேறிச் சென்று, அதுவரை என்னை வழிநடத்தியவர்களை அச்சுற்றிலிருந்து நான் வழிநடத்துவேன் என்று நான் நம்ப வேண்டும்.

 நம் மேலதிகாரிகளைக் காட்டிலும் நாம் சிறந்தவர்களாக ஆக முடியும். நாம் பார்த்துப் பிரமிக்கும் ஒருவருக்கு எத்தனை வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் ஏற்படுகின்றனவோ, நமக்கும் அத்தனை சாத்தியக்கூறுகளும் அவற்றுக்கு அதிகமானவையும் வெளிப்படும். ஒருவருக்குச் சாத்தியப்படுவது அனைவருக்கும் சாத்தியம். ஒருவன் செய்ய முடிவதை எல்லோராலும் செய்ய முடியும். இன்னும் சொல்லப் போனால், சிறப்பாகவே செய்ய முடியும். எல்லாரும் ஐ.ஏ.எஸ் ஆகமுடியாது. ஆனால் ஐ.ஏ.எஸ் ஆகக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

கிரகாம் பெல் இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அவர் ஒரு பத்திரிகையாளரிடம் கூறிய கூற்று கூர்ந்து கவனிக்கத் தக்கது. "எந்த ஒரு மனிதர் தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிக்கின்றாரோ, அப்படிக் கூர்ந்து கவனித்த விஷயத்தை தன் நினைவில் தொடர்ந்து நிறுத்துகிறாரோ, ஒவ்வொரு விஷயமும் ஏன் நடக்கிறது?எப்படி நடக்கிறது ? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடைகாண முயல்கின்றாரோ, அவருடைய சிந்தனைகள் ஒருபோதும் வீணாவது இல்லை" என்று கூறினார்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment