#கற்கை_நன்றே_133
கனவு ஓர் அதிசயக் கண்ணாடி;
அதில் மனிதன் எதை மறைக்கிறானோ அதைக் காண்கிறான்
-உருது கவிதையில்
வாழ்வில் கனவு காண்பது இயல்பு. பலர் அதனை வெளிப்படுத்துவார்கள். ஆனால் சிலர் சொல்லாமல்.அதற்கான முயற்சியில்.தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இரையை கவ்வும் உன்னிப்பு இருக்கும் மிருகம் போல.. நாள் தோறும் தங்களை வலுப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.ஜெயித்ததும் சொல்வார்கள்.சிலர் நிறைவேறவில்லை யெனில் தங்கள் நெருக்கமானவர்களிடம்.மட்டும் புலம்புவார்கள்.இது குறித்து இணையத்தில் படித்த ஒரு கதை..
ஒரு ஓநாய் கூட்டம் இருந்தது. அந்த கூட்டத்திலேயே மிக பலவீனமான ஓநாய் சொன்னது - "ஒரு நாள் நான் மிகவும் வலிமையானவன் ஆவேன்."
இதைக் கேட்டு அந்த கூட்டத்திலிருந்த எல்லா ஓநாய்களும் சிரித்தன - ஒரே ஒரு ஓநாயைத் தவிர. சிரிக்காத ஒரு ஓநாய் - அந்த கூட்டத்தின் மிக வலிமையான ஓநாய்.
ஏனென்றால், வலிமையான ஓநாய்க்குத் தெரியும் - மகத்துவம் என்பது மனதிற்குள் ஒரு சிறிய கனவாகவே துளிர் விடும். வெளியே ஒரு கர்ஜனையாக அல்ல.
கனவுகள் வலிமை வாய்ந்தவர்களுக்கு மட்டுமே உரியவை அல்ல. அவை கவனிக்கப்படாதவர்களின் நெருப்பு, குறைவாக மதிப்பிடப்பட்டவர்களின் தீப்பொறி.
ஒரு கனவு காண்பவரைச் சாதிப்பவரிடமிருந்து பிரிப்பது வலிமை அல்ல — நம்பிக்கை. ஒரு மனம் தளராத நம்பிக்கையும், அமைதியான நெகிழ்வுத்தன்மையும், அந்த கனவை அடைந்தே தீருவேன் என்கிற ஸ்திரத்தன்மையும் மட்டுமே கனவு காண்பவரை அந்த கனவைச் சாதிப்பவராக மாற்றுகிறது.
ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் உத்வேகத்துடன் எழுந்து, வெறியோடு போராடி, காயமடைந்து, வடுப்பட்டு, அவமானப்பட்டு, மொத்த கவனத்தையும் ஓரிடத்தில் செலுத்தி உழைக்கும் பிரமாண்டமான குணம் அது.
ஆகவே ஏளனமாகச் சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்.நீங்கள் அவர்களைத் தவறு என்று நிரூபிக்க இங்கே இல்லை.
நீங்கள் உங்களைச் சரி என்று நிரூபிக்க இங்கே இருக்கிறீர்கள்.
உங்களை நீங்களே தொடர்ந்து கட்டமையுங்கள், உங்களை நீங்களே தொடர்ந்து நம்புங்கள்.
ஏனென்றால் ஒரு நாள், நீங்கள் மட்டுமே எப்போதும் அறிந்திருந்த மிக வலிமையான ஓநாயை இந்த உலகம் பார்க்கும் - பார்த்து மிரண்டு போகும்.
செய்யும் பணி எதுவானாலும் அதில் கரைந்து போய் உச்சத்தைத் தொடவேண்டும், மிகச் சிறந்த விளைவுகளைப் பெறவேண்டும் என்கிற கனவை வளர்த்துக்கொள்ளுங்கள். மிகச் சிறந்ததைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம் என்னும் மனநிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்பார் பா.ரா
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment