Tuesday, 29 July 2025

94


#Reading_Marathon2025
#25RM055

Book No:94/100+
Pages:-136

மருந்தென வேண்டாவாம்
-மருத்துவர் கு.சிவராமன்

மருந்தென வேண்டாவாம் என்னும் திருக்குறளின் பொருள்.. முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. நாகரீகம் என்ற முறையில் துரித உணவு வந்த பிறகு நோய்களும் வயோதிகமும் கொள்ளை புறம் வந்து வட்டது. அதனை களைவது குறித்தும் ,உணவில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மருத்துவர் கு சிவராமன் தனக்கே உரிய பாணியில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். முழுக்க முழுக்க உணவு குறித்தும் உணவு முறை குறித்தும் மருந்தாக பயன்படும் உணவுகள், ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற உணவுகள் என 29 தலைப்புகளில் இந்த நூல் வெளிவந்துள்ளது.

மகனுக்கு பிடித்த உணவுகளையும் சத்தான உணவினை ஊட்டுவதிலும் அன்னை தான் முதல் ஆசான். அன்னையின் இதயம் தான் நமக்கு முதல் பள்ளிக்கூடம். அக்கறையுடன் சத்தான உணவினை அவர்தான் நமக்கு முதன் முதலில் அளித்தார். வயோதிகத்தில் முதல் மருந்தாக உணவு தான் நமக்கு பயன்படும் என்பது குறித்து விரிவாக சொல்லி இருப்பார் அதேபோன்று குழந்தை பருவம் என்பது வாழ்நாள் எல்லாம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடிப்படை அவர்கள் குழந்தை பருவத்தில் சாப்பிடும் உணவு வகைகள் தான் உள்ளது. குழந்தைக்கு உணவு ஊட்டுவது என்பது அறிவியல் இல்லை, ஒரு கலை எனக் கூறி ,வாழைப்பழத்தில் பொட்டாசியம் இருக்கிறது என்று குழந்தைக்கு தெரியாது. அதனை அவர்களுக்கு கொடுக்க வேண்டிய புத்தி பெற்றோர்களுக்கு தன் அறிந்திருக்க வேண்டும் என்கிறார்.

மழைக்காலம் ஊரெல்லாம் மழையினால் மன உளைச்சல் நேரும்போது வீட்டில் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு அதிகரிக்கும். அப்போது நெற்றியில் நீர் கோவை மாத்திரையோ அல்லது சுக்குப்பற்றோ போட்டு விடுவது நல்லது. இருமல் துவங்கி விட்டால் ஒரு ஸ்பூன் தேனில் 2-3 மிளகை பொடி செய்து போட்டு அதை இளஞ்சூடாக்க வேண்டும். தேன் திரிந்து பொங்குகையில் 15 மில்லி தண்ணீரில் கலந்து ஒரு பாலாடையில் வைத்து குழந்தைக்கு கொடுக்க இரவில் இருமல் வராது .கோழையாக இருப்பின் வாந்தியாக சளி உடனே வந்து விடும் என்று மருத்துவ குறிப்பும் சொல்கிறார்.

உணவு அறிவு என்பது இனிவரும் நாட்களில் அத்தியாவசியமானது என்பதை எடுத்துரைக்கிறார். தண்ணீர் கோடையின் முதல் மருந்து. ஐந்து சதவீதம் நீர் இழப்பு நமக்கு மரணத்தை தருவிக்கும். இரண்டு சதவீதத்துக்கு மேல் நீர் இழப்பு வருகையில் தாகம் அதிகரிக்கும். ஆனால் இந்த தாக உணர்வு குழந்தைக்கு முதியோருக்கும் அதிகம் இருக்காது. கோடையில் மூன்றை முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்துவது மிக மிக அவசியம். ஏனென்றால் நாம் 600 கிலோ கலோரி உடல் செயல்திறன் பெற உடல் ஒரு லிட்டர் வியர்வையை வெளியேற்றுகிறது. தாகம் தணிக்க வாயு ஏற்றப்பட்ட பன்னாட்டு குளிர்பானங்கள் நல்லதல்ல .அவை பசியை கெடுத்து குடல் புண் உண்டாகி எலும்பு வன்மையையும் சிதைக்கிறது. ஆகவே உள்ளம் கேட்க வேண்டியது கோடையில் மோர்.. அதன் சிறப்பு அம்சங்களை விரிவாக சொல்லி இருக்கிறார்.

கண்ணாடியில் எப்போதும் இல்லாமல் வெள்ளை வெளேர் எனறு கொஞ்சம் தெரிய ஆரம்பித்தால் அழகு சாதன பொருட்களினால் ஏற்பட்ட மகிமை அல்ல உடலில் அணிமியா என்னும் இரும்புச்சத்து குறைபாடு ஆகும் அதனை பெறுவதற்கு இரும்புச்சத்தை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம். புலால் உணவு கீரைகள் முருங்கைக் கீரை பொறியல் கம்பு ராகி என எடுத்துக் கொள்ளலாம். வெள்ளை அரிசியைவிட கைக்குத்தல் புழுங்கலில் இரும்பு சத்து அதிகம். இரும்புச்சத்து உடலில் சரியாக உட்கிரகிக்கப்பட விட்டமின் சி சத்தும் போலிக் அமிலமும் அவசியம். ஆதலால் அடிக்கடி நெல்லிக்காய் சாறு நெல்லிக்காய் சாப்பிடுவது இரும்பை உடலில் பத்திரமாய் சேர்க்க உதவிடும் எனக் கூறுகிறார். உங்களுக்கு தேவையான இரும்புச்சத்தை அதை காந்தமாய் உணவில் இருந்து கவர்ந்திழுக்க செய்தால் போதும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் என்கிறார் வள்ளுவர். உணவு தேவை இல்லாமல் விருந்தாகி தேவை அதிகமாக செல்லும்போதுதான் மருந்தின் அவசியம் துவங்குவதை உணர்த்தி இருப்பார். இன்றைக்கு ஒரு நாள் தானே என்ற சமாளிப்புடன் அடிக்கடி அரங்கேறும் விருந்துகள் தரும் உடல் நல கேடுகள் ஏராளம்.

சமீபத்தில் வெளியான ஒரு செய்தியில் வட மாநிலத்தில் ரீல்ஸ் மோகத்தில் குழந்தையை பசு காம்பின் வழியே நேரடியாக பால் குடிப்பதை ஒருவர் பகிர்ந்து இருந்தார். மருத்துவர்கள் அதில் பல நுண்ணுயிரிகள் உள்ளன என்றும்.. பசும்பாலை பொருத்தவரை காய்ச்சி குடித்தால் மட்டுமே பாக்டீரியாக்களை நுண்ணுயிரிகளை அகற்றிவிட்டு சத்தான பால் நமக்கு கிடைக்கும். இல்லை எனில் அதுவே நமக்கு தீங்காக அமைந்து விடும் என்று கூறியுள்ளனர். அதேபோல் அப்படியே சாப்பிடலாமா கட்டுரையிலும் இதே போன்ற பல உணவு வகைகளை அப்படியே சாப்பிடலாமா என்பது குறித்து விளக்கி இருக்கிறார்.

தண்ணீர் உடலின் ஆரோக்கியத்தை காண அடிப்படை சுத்தமான பாதுகாப்பான தண்ணீரை தேடி சரியான அளவில் தினசரி அருந்துவது நமது கடமை பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை சேமித்து வைத்து அருந்துவது நல்லதல்ல சில வகை பிளாஸ்டிக் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் பாட்டில் செய்யும் போது பயன்படுத்தப்படும் ரசாயனத்தை மிக நுண்ணிய அளவு அதில் கரைகின்றன என்று செய்திகள் வருகின்றன. பிளாஸ்டிக் பாட்டிலை தவிர்ப்பதும் கூட நல்லது தான் என்கின்றனர் .தற்போது குழந்தைகள் பெருமளவில் சில்வர் பாட்டிலுக்கு மாறி உள்ளன என்பது ஆரோக்கியத்திற்கான பிள்ளையார் சுழி எனலாம்.

ஒவ்வொரு கட்டுரைகளிலும் ஆரோக்கியத்திற்கான ஆணிவேர் இருக்கிறது. அதனை முறையாக படித்து பயன்படுத்தும் போது நாம் செய்ய தவறிய நல்ல விஷயங்களும் செய்து கொண்டிருக்கும் தவறுகளையும் அருகில் அமர்ந்து சுட்டிக்காட்டியுள்ளார் கட்டுரைகளில் 

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment