Thursday, 3 July 2025

சு.கோபாலகிருஷ்ணன்


தொலைந்துபோனவர்கள்தானா நண்பர்கள்? 

பல ஆண்டுகளுக்கு முன் தூர்தர்ஷனின் (சென்னை) "தொலைந்துபோனவர்கள்" என்றொரு தொடர் ஒளிபரப்பானது. சா.கந்தசாமியின் நாவலைத் தழுவி அமைக்கப்பட்ட தொடர். ராஜேஷ் நாயகனாக நடித்திருந்தார். வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, தனது இளமைப் பருவத்து நண்பர்களை ராஜேஷ் சந்திக்கப் முற்படுவதுதான் கதை. இவருக்குதான் நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று ஆர்வம் இருக்குமே தவிர, அந்த நண்பர்களுக்கு இவரைச் சந்திப்பதில் துளியும் ஆர்வம் இருக்காது. காரணம் ராஜேஷ் அளவுக்கு அவர்கள் வசதியானவர்கள் அல்ல. ஏதோ சுமாரான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பார்கள். 

இந்தத் தொடரின் தலைப்பு என்னை நிறையவே யோசிக்க வைத்தது. அது கூறுவது ஓர் உண்மையைத்தான் என்று உணர்ந்திருக்கிறேன். நம் நண்பர்கள் அனைவரும் நம் வாழ்க்கை முழுவதுமாக நம்மோடு இருப்பதில்லை; நம்மைத் தொடர்வதில்லை. நம் வாழ்க்கையிலிருந்து தொலைந்துபோய்விடுகிறார்கள். ஆனால், உறவினர்கள் அப்படி இல்லை. அவர்கள் நம் வாழ்க்கை முழுவதுமாக நம்மோடு இருக்கிறார்கள். 

நான் பள்ளியில் படித்த காலத்திலும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படித்த காலத்திலும், அதே போல வேலை பார்த்த நிறுவனங்களிலும் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். காலப்போக்கில் அந்த நண்பர்கள் என் வாழ்க்கையில் இருந்து ஒருவர் ஒருவராக மறைந்துபோய்விட்டார்கள். இது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்காக ஒன்றும் செய்வதற்கில்லை. 

பல நண்பர்களின் தொலைபேசி எண்கள் என் அலைபேசியில் இருந்தன. அந்த அலைபேசி பழுதானபோது, என் நண்பர்களின் தொலைபேசி எண்கள் அத்தோடு போய்விட்டன. அவர்களின் முகவரிகள் என்னிடம் இல்லை. அவர்களை எங்காவது தற்செயலாகச் சந்தித்தால்தான் உண்டு.  ஆனால் அது அபூர்வமாகவே நிகழும். 

வயதான காலத்தில் அனைத்து நண்பர்களையும் சந்திக்க வேண்டும், அவர்களுடன் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் என்னைச் சந்திப்பதில் விருப்பம் இருக்குமா என்று தெரியவில்லை. இன்று ஓரிரண்டு நண்பர்களுடன் தான் எனக்குத் தொடர்பு இருக்கிறது. அவர்களுடன் தினமும் வாட்சப்பில் "குட் மார்னிங்" மட்டுமே சொல்லிக்கொள்கிறேன். மற்ற விஷயங்களைப் பற்றி எப்போதாவது ஓரிரு வரிகள் வாட்சப்பில் பேசிக்கொள்வதுண்டு. அவ்வளவுதான். 

எனவே, சா.கந்தசாமி சொல்வதை போல நண்பர்கள் என்பவர்கள் நம் வாழ்க்கையிலிருந்து "தொலைந்துபோனவர்களே"!

-சு.கோபாலகிருஷ்ணன்

No comments:

Post a Comment