Sunday, 27 July 2025

137



#கற்கை_நன்றே_137

“பெரிய மனிதர்கள், சிறிய மனிதர்களைத் தாங்கள் நடத்தும் விதத்தின்மூலம்தான் தங்கள் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றனர்,”  -கார்லைல் 

விமர்சனங்கள் இந்த நாகரிக உலகில் தவிர்க்க முடியாதது. ஆனால் விமர்சனம் என்ற போர்வையில் அவதூறும் காழ்ப்புணர்வும் அதிகம் வெளிப்படுவது அதிகரித்து வருகிறது.நேர்மையான விமர்சனம் என்பது அக்கறையில் சொல்லப்படுவது. அது தற்போது குறைந்து வருகிறது.நண்பர்களை பெறுவது எப்படி எனும் புத்தகத்தில் விமர்சனம் எவ்வாறு இருக்க வேண்டும் என உதாரணம் காட்டபட்டுள்ளது..

விமர்சனம் வீணானது. ஏனெனில், அது ஒருவரைத் தற்காப்பு நிலைக்கு இட்டுச் செல்வதோடு, வழக்கமாகத் தன்னை நியாயப்படுத்தவும் தூண்டும். விமர்சனம் ஆபத்தானது. ஏனெனில், அது ஒருவரது பொக்கிஷமான பெருமிதத்தைக் காயப்படுத்தி, அவரது முக்கியத்துவத்திற்கு ஊறு விளைவித்து, அவரது கோபத்தைத் தூண்டுகிறது.

1842ம் ஆண்டின் இலையுதிர்காலத்தில், ஜேம்ஸ் ஷீல்ட்ஸ் என்ற, போர்க் குணம் கொண்ட ஓர் அரசியல்வாதியை லிங்கன் கேலி செய்தார். ‘ஸ்பிரிங்ஃபீல்ட் ஜர்னலி’ல் தன் பெயரை வெளியிடாமல் அவர் ஜேம்ஸ் ஷீல்ட்ஸைப் பற்றி ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தார். அதைப் படித்த ஸ்பிரிங்ஃபீல்ட் நகரமே சிரிப்பால் அதிர்ந்தது. எளிதில் உணர்ச்சிவயப்படும் குணமுடைய ஷீல்ட்ஸ், கோபத்தால் கொதித்தார். அக்கடிதத்தை எழுதியது லிங்கன் தான் என்பதை ஷீல்ட்ஸ் கண்டுபிடித்து சண்டைக்கு அழைக்கிறார். லிங்கன் சண்டையிட விரும்பவில்லை. அவர் அத்தகைய சண்டைகளை எதிர்த்தார். 

ஆனால் அவரால் இதிலிருந்து வெளியேற முடியாத சூழல். அவருக்கு விருப்பமான ஆயுதத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு லிங்கனுக்குக் கொடுக்கப்பட்டது. அவரது கைகள் மிகவும் நீளமாக இருந்ததால், குதிரைப் படையில் பயன்படுத்தும் அகன்ற வாளை அவர் தேர்ந்தெடுத்தார். வெஸ்ட் பாயின்ட் பட்டதாரி ஒருவரிடம் வாட்சண்டைப் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

 குறிப்பிட்ட நாளன்று, மிஸ்ஸிஸிப்பி நதிக் கரையில் சாகும்வரை சண்டையிடுவதற்கு இருவரும் தயாராக இருந்தனர். ஆனால் கடைசி நிமிடத்தில், அவர்களது சகாக்கள் தலையிட்டு அச்சண்டையை நிறுத்தினர். லிங்கனின் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த மிகவும் மோசமான சம்பவம் அதுதான். மக்களைக் கையாளும் கலையில் ஒரு விலைமதிக்க முடியாத படிப்பினையை அது அவருக்குக் கற்றுத் தந்தது. அதன் பிறகு, பிறரை அவமதிக்கும் கடிதங்களை அவர் ஒருபோதும் எழுதவில்லை, யாரையும் கேலி செய்யவில்லை. அப்போதிலிருந்து அவர் யாரையும் எதற்காகவும் விமர்சிக்கவும் இல்லை.

கேலியோ கிண்டலோ பிறர்மனதை நோகடிக்க செய்யக்கூடாது. அவ்வாறு கேலி செய்ய நேர்ந்தால் தன்னைத் தானே பகடி செய்து கிண்டல் செய்தால் யாருக்கும் எந்த வருத்தமும் ஏற்படாது.நல்ல நட்புகளை பெறுவோம்..அதை எந்த நாளும் இழக்காமல் காப்போம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment