Tuesday, 15 July 2025

131


#கற்கை_நன்றே_131

ஒரு நாட்டை நிர்வகிக்கும்போது
எது எதிர்பார்க்கப் படுகிறதோ
அதைத் தலைமை செய்ய வேண்டும்.ஒரு போரை வெல்வதற்கு எது எதிர் பார்க்கப்படுவதில்லையோ
அதைச் செய்ய வேண்டும்

-தாவோ

எப்பொழுதாவது ஒரு சூழலில் தலைமைப் பொறுப்பு கிடைத்தால் பலரும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.எதுக்கு வம்பு பேசாம சிவனேனு இருப்போம் என பொறுப்புத் துறப்பு விளம்பரதாரர் நிகழ்ச்சி போல் தான் பலர் நடந்து கொள்கிறோம்.ஏன் எனில் தலைமைப் பண்பு என்பது பொறுமை, விரைந்து சிந்தித்து முடிவெடுக்கும் திறனில் இருப்பதால் பலர் ஏற்பதில்லை.பேர் புகழ் கிடைத்து ரிஸ்க் இல்லையெனில் அனைவ்ரும் தயார்.ஆனால் ரிஸ்க் இருப்பது தெரிந்தால் பின் வாங்கிவிடுவோம்.

உண்மையான தலைமைப் பண்பு என்பது பாராபட்சமின்றி எல்லோரும் பாராட்டும்படி நிறைவாக அழகாக முடிப்பதில் உள்ளது.தலைமைப் பண்புகள் நான்கு விதங்களில் அமைவதாக இறையன்பு குறிப்பிடுகிறார்..

முதலாவது, சர்வாதிகாரப் போக்கு. யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தாங்களாகவே தன்னிச்சையாக முடிவெடுத்து அதை அமல்படுத்துவது. இது ஆபத்தான போக்கு. வெறுப்பையும், ஈடுபாடின்மையையும் ஏற்படுத்திவிடும். இத்தகைய தலைவர்கள் தொடக்கத்தில் சிறந்தவர்களைப்போல தோன்றுவார்கள். நாளடைவில் எடுபடாமல்போய் வீழ்ச்சியடைவார்கள். 

இரண்டாவது, கண்டுகொள்ளாத தலைமை. யார் என்ன செய்தாலும் கவலைப் படாமல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் விட்டேத்தியாக இருப்பது இப்படிப்பட்ட தலைமை முறை. இது ஒரு கட்டத்தில் மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தி விடும். தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் ஆகிவிடுவார்கள். இறுதியில் நிர்வாகமே சீர்குலைந்துபோய்விடும். ஆற்றலற்ற ஒருவர்தான் இப்படிப்பட்ட பொறுப்பற்ற தலைமையை விரும்புவார்.

மூன்றாவது, தன்னைச் சற்று உயர்வாகத் தந்தையைப்போல நினைத்துக்கொண்டு பணியாற்றுவது. இதையும் மக்கள் விரும்புவதில்லை. சரிசமமாகத் தங்களை நடத்துவதைத்தான் விரும்புவார்களே தவிர தான் மட்டும் உயர்ந்தவர்போல எண்ணிக்கொண்டு ஏதோ நன்மை செய்வதைப்போல ஒவ்வொன்றையும் கையைப் பிடித்துக் கற்றுக்கொடுப்பவர்களை மக்கள் விரும்புவதில்லை. தனக்கான பரப்புவெளியை அனைவரும் விரும்புகிறார்கள்.

நான்காவது, ஜனநாயக முறைப்படி தலைமைப் பொறுப்பைச் செயல்படுத்துவது. அனைவரையும் கலந்தாலோசித்து, அவர்கள் சொல்லும் தீர்வுகளிலிருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுத்து, அது சிறந்தது என அனைவரையும் ஒப்புக்கொள்ள வைத்தல், பிறகு எல்லோரும் ஒருமனத்தோடு அந்தத் தீர்வைச் செயல்படச் செய்தல் ஆகிய கூறுகளின் மூலம் இத்தகைய தலைமைப் பொறுப்பு வெற்றிகரமாகத் திகழ்கிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு உரையில் தெரிவித்தது ''மனிதர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் குறுகியது. இதை நினைவில் கொண்டு இந்த வாழ்க்கையை வீணடிக்காதிருங்கள். உங்களது வாழ்க்கையை வாழ்வதற்குப் பதிலாக அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்தும், அடுத்தவர் சிந்தனையின் சாராம்சத்தையே சிந்தித்தும் வாழ்க்கையை வீணடித்துவிடாதீர்கள். பிறரது கருத்துக்களின் வீச்சுக்களுக்கு மத்தியிலே உங்களது உள்ளுணர்வின் வார்த்தைகளைக் கவனமாகக் கேட்க மறந்து விடாதீர்கள். உங்களது இதயமும், உள்ளுணர்வும் கூறுவதைக் கூர்ந்து - கவனமாகக் கேட்டு அதன்படி வாழுங்கள் ;சாதிக்க வேண்டும் என்ற பேராவலோடு இருங்கள்; அறிவுப் பசி எப்போதும் உங்களை ஆட்கொண்டிருக்கட்டும்!'என்றார்.

தலைமைப் பண்புக்கு தயக்கம் வேண்டாம்.அடுத்த திருப்பத்தில் கூட தலைமைப் பண்புக்கான வாய்ப்பு வரும்.அப்போது நாம் தயாராய் இருக்க வேண்டும்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment