Thursday, 31 July 2025

141


#கற்கை_நன்றே_141

நாம் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் அடையலாம். அதை அடையும் வரை விடாது முயற்சி செய்தால்

-ஹெலன் கெல்லர்

ஒரு ஜென் குரு ஆசிரமத்தில் செடிகளுக்கு நீர் நிரப்ப சீடனை பணித்தார். அவனும் இரு வாளிகளில் கொண்டுவந்து.. நீர் நிரப்பிய பின்பும் அதில் சிறிது நீர் இருந்தது.அதனை அருகில் விசிறியடித்தான்.அப்போது பின்னாலிருந்து குரு முதுகில் ஒரு அடி போட்டார்.கோபத்துடன் குருவிடம் நான் இந்த சிறிதளவு தண்ணீர் ஊற்றாததால் செடி பெரிதாக வளருமா? என்றார்..

குரு சொன்னார்.. நான் உன்னை அடித்தது செடியின் வளர்ச்சிக்காக அல்ல..உன்னுடைய வளர்ச்சியை மனதில் வைத்துதான்.சிறிதளவு நீரைக் கூட வீணாக்கும் நீ.. நாளை சிறு காரியத்திலும் கவனமின்றி வீணடித்துவிடுவாய்.எந்த ஒரு சிறியதையும் முக்கியமானது போல் நினை என்றார்.

நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு, அல்லது மூன்று சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்திருப்பீர்கள். 

மற்றச் செயல்கள் எல்லாம் கவனமின்றி, உங்கள் மனம் ஒருமுகப்படாமல் செய்யப்பட்டவையாக இருக்கும். வேலை மும்முரத்தில் இருப்பதை விட குருட்டுச் சிந்தனையில் இருக்கும் நேரமே அதிகம் என்கிறார்கள். 

மனித மனம் மிகப் பெரும் சக்தி வாய்ந்தது. அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டு விட்டீர்களென்றால், அற்புதமான பல செயல்களைப் புரிவீர்கள். நேரம் என்பது இரண்டாம் பட்சம்தான். இப்போது கிடைக்கும் நேரத்தின் பெரும்பகுதியில் என்ன செய்கிறோம் என்பதையே உணராமல் செய்து கொண்டிருப்பதால் சரியான பலனின்றிப் போகிறது.

ஆண்ட்ரூ கார்னகி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருந்தவர். அவர் மிகக் குறுகிய காலத்தில் பணக்காரரானது அமெரிக்க அரசுக்கு சந்தேகத்தை உண்டு பணணியது.புலன் விசாரணைகள் நடத்தியும் அவர்களால் குற்றங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை நேரடியாகச் சந்தித்தனர். எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் சேர்த்தீர்கள்? என்று கேட்டனர்.கார்னகி சொன்னார், என்னால் தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தி வைத்திருக்க முடியும். உங்களால் முடியுமா என்றுபாருங்கள்!
அவர்கள் முயற்சி செய்தார்கள், தோற்றுப் போனார்கள்.

கார்னகி சொன்னார் ,உங்களால் ஐந்து நிமிடம் கூட மனதை ஒருமுகப்படுத்தி வைக்க முடியவில்லை.நீங்கள் சொன்னதிலிருந்து தவறாமல், முழுமையாகச் செயல்பட உங்கள் மனதைத் தயார்ப்படுத்திவிட்டால், எந்தத் தொழிலையும் எந்த சிரமும் இல்லாமல், மிக எளிதாக செய்து முடிக்க இயலும் என்றார்.

ஒளியிலிருந்து கற்றுக்கொள்ள 
எதுவும் இல்லை.
எல்லாவற்றையும் ஒளி
இருளிடமிருந்துதான்
கற்றுக்கொண்டிருக்கிறது என்பார்
வண்ணதாசன்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment